ஈழம்

ஈழம்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 09]

சுமார் 1900 வருடங்கள் அடிமைகளாக, அகதிகளாக, உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்த யூதர்கள் இறுதியில் ஒரு விடுதலையைப் பெற்று தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொண்டார்கள்.
எப்படி அவர்களால் அது முடிந்தது?


யுதர்களின் விடுதலையில் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினைகள் என்ன? -இவை பற்றித்தான் இந்தத் தொடரில் நாம் விரிவாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

யூதர்களுடைய விடுதலைக்கான அடையாளங்கள் என்று பல விடயங்களை கூறலாம். அவற்றில் முக்கியமானது அவர்களுடைய மொழி.

யூதர்கள் தமக்கென்று ஒரு மொழியைக் கொண்டிருக்கின்றார்கள். எபிரேயு பாஷை என்று பைபிளில் குறிப்பிடப்படுகின்ற ஹீப்று (ர்நடிசநற.) மொழியை யூதர்கள் தங்களுக்கென்ற ஒரு தனித்துவமான அடையாளமாக பல ஆயிரம் வருடங்களாகப் பேணி வருகின்றார்கள்.

புராதனமான செமிட்டிக் மொழிகளுள் ஹீப்று மொழியும் ஒன்று. யூதர்களின் வேதாகமமான தோரா ஹீப்று மொழியில்தான் எழுதப்பட்டது. இயேசுக் கிறீஸ்து பிறப்பதற்கு சுமார் 1200; வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட, எழுதப்பட்ட ஹீப்று மொழியானது, பொனிஷியன் (Phழநniஉயைn) போன்ற சில செமிட்டிக் மொழிகளுடன் பெருமளவு ஒற்றுமை கொண்டு காணப்பட்டது.

காலப்போக்கில் இந்த ஹீப்று மொழி பலவிதமான அழிவுகளை, மாற்றங்களை, சீர்திருத்தங்களைக் கண்டு, கி.மு. மூன்றாம் நுற்றாண்டளவில் யூதர்கள் பேசிய ஹீப்று ஆதி மொழியில் இருந்து பல மாற்றங்களைத் தன்னகத்தே கொண்டதாகவே காணப்பட்டது.

காலப்போக்கில், அரேமிய, கிரோக்க மொழிகளின் தாக்கங்கள் உள்வாங்கப்பட்டு, பல்வேறு மாற்றங்களுடனனேயே ஹீப்று யூதர்களால் பேசப்பட்டது. (இயேசுக் கிறிஸ்துவைப்பற்றி யூதர்களால் எழுதப்பட்ட பைபிளியின் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் கிரேக்க மொழியானலேயே எழுதப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது)

தற்பொழுது யூதர்கள் உபயோகிக்கின்ற ஹீப்று மொழியின் வரி வடிவம் கி.மு. முதலாம் நுற்றாண்டில் நடைமுறையில் இருந்தது தான். வலமிருந்து இடமாக (அரேபிய எழுத்து நடை போன்று) எழுதப்படும் வரி வடிவம்.

அந்தக் காலத்தில் யூதர்களின் மொழியாக ஹீப்று இருந்ததே தவிர அது யூதர்களின் ஒரு தலையாய அடையாளமாக கருதப்படவில்லை. மத நூல்கள் மாத்திரமே ஹீப்றுவில் எழுதப்படும் என்றும், அத்தகைய புனிதமான பிரதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தத்தக்க மொழி அது என்பதாகவும் ஒரு கருத்து இருந்தது.

இதனாலேயே காலப்போக்கில் படிப்படியாக ஹீப்று இறக்கத் தொடங்கியது.

உலகெங்கும் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக, அகதிகளாக யூதர்கள் சிதறி வாழ்ந்த காலப்பகுதிகளில் தமது தேசிய மொழியான ஹீப்றுவை அவர்கள் தமது அடுத்த சந்திக்கு வீடுகளில் வைத்து போதிக்க முடிந்ததே தவிர, அந்த மொழி பற்றிய நீண்ட ஆராய்சிகளைச் செய்வதற்கோ, அந்த மொழி அழிந்துவிடாமல், சிதைந்துவிடாமல் பாதுகாப்பதற்கோ நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே இருந்து வந்தது.

உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வந்த யூதர்கள் தமக்கென்று ஒரு தேசத்தை அமைக்கும் நிலையை நோக்கி நகர ஆரம்பித்த 19ம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில்தான், யூதர்கள் தமது மொழியை ஒரு அரிய புதையல் போன்று தோண்டிய எடுத்தார்கள்.

யூதகுலம் அழியாமல் தடுக்க ஒரு தேசத்தை அமைக்க அவர்கள் பாடுபடத்தொடங்கிய பொழுதுதான், தமது இன மற்றும் தேசிய அடையாளங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு ஹீப்று மொழி முக்கிய தேவை எனத் தோன்றியது.

1880ம் ஆண்டு உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்த யூத இனத்துப் பண்டிதர்கள் ஒன்று கூடி ஹீப்றுவில் எழுதப்பட்ட பழைய பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள்.

அரேபியர்கள் அதிகம் வாழ்ந்த பாலஸ்தீன தேசத்தில் மீண்டும் யூதர்கள் குடியேறும்படியான நகர்வுகளை அவர்கள் ஆரம்பித்த உடனேயே, மெல்ல மெல்ல அங்கு ஹீப்று மொழிப் பள்ளிக் கூடங்களை ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஒன்று இரண்டு ஹீப்று மொழிப் பள்ளிக்கூடங்கள் என்று ஆரம்பித்து, படிப்படியாக அவற்றை அதிகரித்து 1913ம் வருடத்தில் பலஸ்தீனத்தில் உள்ள பாடசாலைகளில் ஹீப்றுவே போதனா மொழி என்கின்ற அளவுக்கு அதன் தாக்கத்தை யூதர்கள் அதிகரித்திருந்தார்கள். 1948 இல் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்ததும் ஹீப்று மொழியே அந்த நாட்டின் தேசிய மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

இன்றைக்கு இஸ்ரேல் தேசத்தின் உத்தியோகபூர்வ பாஷை ஹீப்று.

எழுதுவது போவவே அதன் பேச்சு நடையும் இருக்கும். அதாவது பேச்சுவழக்கு என்கின்ற வகையில் தமது மொழியை சிறிதும் சிதைப்பதற்கு யூதர்கள் விரும்பவில்லை.

இன்று மொழி என்பது யூதர்களின் ஒரு முக்கிய அடையாளம். அவர்களைப் பொறுத்தவரையில் அது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அடையாளம். ஜேருசலேம் நகரைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் பிரமாண்டமான சுவரைப் போல யூதர்கள் தமது அடையாளச் சுவராகத் தம் மொழியைக் கொண்டிருக்கின்றார்கள்.

மொழி மட்டுமல்ல, பண்பாடு, கலாச்சாரம், வழிபாடு, வாழ்க்கை முறை என்று எல்லாவற்றிலும் தமது மூதாதையர்கள் கடைப்பிடித்த முறையையே இன்றுவரை பின்பற்றி வருபவர்கள் அவர்கள்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையிலும், அவர்களை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய விடயமாக இன்றும் என்றும் தமிழ் மொழியே இருந்துவருகின்றது. அவர்களுடைய பாரம்பரிய வாழ்விடங்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர்கள் தங்களுடைய மதம் என்று பல்வேறு மதங்களை அடையாளப்படுத்தி வருகின்ற போதிலும், அவர்கள் பல்வேறு நாடுகளின் பிரஜைகளாக இருந்து வருகின்ற போதிலும், அவர்களை ஒன்றுபடுத்தும் ஒரே விடயம் அவர்களது தாய் மொழியான தமிழ் மொழிதான்.

அந்த வகையில் என்றோ ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு - யூதர்கள் போன்று நீண்ட காலம் காத்துக்கிடக்கிடவேண்டிய ஈழத் தமிழர்கள், தமது மொழி அழிந்துவிடாமல் பாதுகாப்பதும், புலம்பெயர்ந்த எம்மிடையேயான மொழிப்பற்று குறைந்துவிடாமல் பாதுகாப்பதும், எமது அடுத்த சந்ததி அதற்கு அடுத்த சந்ததியினர் தமிழ் மொழியைக் கற்பதையும் கற்பிப்பதையும்;, நாம் நிச்சயம் உறுதிப்படுத்தியேயாகவேண்டும்.

ஒரு பெரிய தொலைநோக்கில் விடுதலைப் புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் மேற்கொண்டு வருகின்ற தமிழ் மொழிப்பாடசாலைகள் செயற்பாடுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை.

இளைய தலைமுறையினர் தமிழ் மொழி அறிவில் வளர்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்தும் காரியங்கள் புலம்பெயர் மண்ணில் நிச்சயம் தமிழ் மக்களால் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.
தமிழ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு தொடர்பாக அரசியலைக் கடந்து நோக்கிய விடுதலைப் புலிகளின் மத்திய குழுவின் பார்வையும் பாராட்டத்தக்கது.

யூதர்கள் அகதிகளாக புலம்பெயர்ந்த வாழ்ந்த காலப்பகுதிகளில் நவீன வசதிகள் எதுவுமே கிடையாது. அவர்கள் விரும்பிய மொழியைப் பேசுவதற்கான அனுமதி கூட பல நாடுகளில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தமது தாய் மொழியை தமது பிள்ளைகளுக்கு வீடுகளில் வைத்து இரகசியமாகக் கற்றுக்கொடுத்தார்கள். தமது பிள்ளைகள் அந்த மொழியை தமது அடுத்த சந்ததிக்கு கற்றுக்கொடுக்கும்படியும் அவர்கள் உற்சாகம் ஊட்டினார்கள்:

யூதர்களுக்கு இருந்த கஷ்டங்கள் நெருக்குவாரங்கள் இன்று எமக்கு இல்லை. நாம் வாழுகின்ற நாடுகளில் தமிழ் மொழியைப் பேசுவதற்கோ, கற்றுக்கொள்வதற்கோ எந்தவிடதத் தடையும் கிடையாது. பல நாடுகள் நாங்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

இன்று எமக்கிருக்கும் நவீன வசதிகள், இணையத்தளங்கள் போன்றனவற்றை பயன்படுத்தி எமது சந்ததிகளுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொடுக்கும் பணியை நாம் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும்.

யூதர்களைப் போன்று எமக்கும் ஒரு நாள் விடிவு கிடைக்கும். அந்த விடிவு இந்த தசாப்தத்தில் இருக்கலாம் அல்லது அடுத்த நூற்றாண்டில் கூட இருக்கலாம். அந்த விடிவு எமக்கு கிடைக்கின்ற பொழுது, நாம் அந்த விடிவைப் பெற்றுக்கொள்ள எம்மை இப்பொழுதிருந்தே தயார் செய்யவேண்டும்.

எமது சந்ததியினைத் தயார் செய்யவேண்டும்.

எமது இனத்தின் ஒரு முக்கிய அடையாளமான தமிழ் மொழியைப் பாதுகாப்பதிலும், அதனை வளர்ப்பதிலும், நாம் அதிக கரிசனையுடன் எம்மை ஈடுபடுத்தவேண்டும்.

எமது தாய்மொழியான தமிழ் மொழியை எமது இனம், எமது சந்ததிகள், தமது சொத்தாகப் போற்றும் ஒரு கலாச்சாரத்தை நாம் இப்பொழுது இருந்தே வளர்க்கவேண்டும்.

ஒரு விடுதலையை நோக்கிய பயணத்தில் இஸ்ரேலியர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கிய பாடம் இது.

அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us