ஈழம்

ஈழம்

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

புரட்சி என்பது வரலாற்றை நிரப்பும் வார்த்தை அல்ல. வரலாற்றைப் படைக்கும் வார்த்தை - திருப்பி அடிப்பேன்! - சீமான்! - தொடர்: 18

இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே... எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது! உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல! புலிக் குட்டி!


''அழிந்து சிதைந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு, போராடித்தான் வாழவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்துக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தத் தேசியப் பணியில் இருந்து - வரலாற்று அழைப்பில் இருந்து தமிழ் இளம் பரம்பரை ஒருபோதும் ஒதுங்கிக்கொள்ள முடியாது!''  - மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன்

இளையான்குடி சந்தையில் மிளகாய் மூட்டைகள் சுமந்துபோட்டு, மணிக்கணக்கில் காத்திருந்தால்... ஆறஅமர வியாபாரி வருவார். முதுகில் தீ
வைத்ததுபோல் பற்றிக்கொண்டு எரியும். 'இது சரிஇல்லை... அது சரி இல்லை’ என வியாபாரி அள்ளியதுபோக, எஞ்சிய மிளகாய்களை இறுகக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவேன். கல்லூரி முடித்து, கொஞ்சம் கடனும் நிறையக் கனவுகளுமாகத்தான் இந்தத் தலைநகருக்கு வந்தேன். படங்கள் எடுத்தேன். இன்றைக்கும் அதுவே கதி எனத் தொடர்ந்திருக்கலாம் திரைத் தொழிலை. ஈழத்தில் விழுந்த இழவு என்னை மட்டும்தான் உலுக்கியதா? காப்பாற்றக் கோரிய கதறல் என் காதுகளுக்கு மட்டும்தான் எட்டியதா? கையறு நிலையில் கலங்கிய சோகம் என் கண்களில் மட்டும்தான் நீராக முட்டியதா?

ஈழத்து சாவுக்காக நீயும்தான் துடித்தாய்... நெருப்புக்கு நெஞ்சுகொடுத்த முத்துக்குமாருக்காக நீயும்தான் அழுதாய்... கண்முன்னே கருவறுக்கப்பட்ட துயரத்துக்காக நீயும்தான் நிம்மதி இழந்து புலம்பினாய். உன் முன்னால் நான் வைக்கிற ஒற்றைக் கேள்வி... துடிக்கவைத்த அத்தனை துயரங்களையும் ஒரு துளிக் கண்ணீரோடு இறக்கி வைத்துவிட்டாயா நீ? கனன்று தெறிக்கும் கோபமாக, உன்னுள் இன்னும் உறைந்திருக்கவில்லையா அந்த உக்கிரம்? வாரிக்கொடுத்த துயரத்துக்கு வஞ்சம் தீர்க்கக் காலம் பார்ப்பவனாக நீ காத்திருக்கவில்லையா? எனக்கு இருக்கும் முழுக் கோபமும் உனக்கும் இருக்கிறது. ஆனால், 'என்னால் என்ன செய்ய முடியும்?’ என்கிற தயக்கம் மட்டும்தானே தம்பி உனக்குத் தடை?! தெருவில் இறங்கக் கருவிலேயே கற்றுக்கொண்ட பரம்பரையடா நாம்!

மாணவர்கள் கட்டாயம் அரசியல் அறிவு பெறவேண்டும். அரசியலில் ஈடுபடும் சூழல் வரும்போது, தயங்காமல் நேரடியாகக் களம் இறங்க வேண்டும்!’ என அப்போதே உன்னை அடுத்த கட்ட அரசியலுக்கு ஆயத்தப்படுத்திவிட்டுப் போனான் மாவீரன் பகத்சிங். தூக்குக் கயிற்றையே தோற்கடித்த அந்த வாழைக் குருத்தை நெஞ்சத்து வடிவமாக ஏந்தியிருக்க வேண்டியவன் நீ!

அரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திக்கிறார்கள். தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறார்கள். இன்றைய நிலையில் அத்தகைய தலைவர்களை அடையாளம் காண முடியவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே புழுத்துப்போய் இருக்கும் இந்த மண்ணில் நாளைய தலைவனாக வடிவெடுக்க வேண்டியவர்கள் இன்றையத் தம்பிகள்தானே? 'அரசியல் ஒரு சாக்கடை’ என யாரோ ஓர் இயலாமைக்காரன் சொன்ன வார்த்தைகளை இன்னும் எத்தனை நாளைக்கு நாம் சொல்லிக்கொண்டு இருப்பது? உளத்தூய்மையோடு ஒவ்வொருவரும் அரசியலில் அடியெடுத்துவைத்தால், இன்றைய சாக்கடை... நாளைய பூக்கடை!

இறையாண்மை மீறல்’ பாய்ந்து கோவை சிறையில் நானும் அண்ணன் கொளத்தூர் மணியும், பெ.மணியரசன் அய்யாவும் அடை​பட்டுஇருந்த நேரம். 'ஈழத்துக் கோரங்கள் இளைய தலைமுறையின் மனதை உலுக்கவில்லையா?’ என்பதுதான் எங்களைத் துடிக்கவைத்த ஆதங்கம். நாங்கள் வெளியில் வந்த வேளையில்தான் தம்பி முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தி உலகத்தையே உலுக்கினான்.

பக்கம் பக்கமாக அவன் அடுக்கி இருந்த ஆதங்கத்தைப் படித்து, 'நம்மோடு நம்மாகத் திரிந்த ஒரு மூர்க்க அறிவாளன் இப்படிக் கருகிவிட்டானே...’ எனக் கதறியதும், 'அவன் விதைத்த தீ, லட்சோப லட்சம் இளைஞர்களைத் திரட்டும்’ எனக் கருதி கண்ணீரை உதறியதும் காலத்திலும் மறக்க முடியாதது. முத்துக்குமாரின் மரணம் பொறுக்காமல் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, 'இனி கவலை இல்லை... அடக்குமுறை வெறி பிடித்த இந்த அரசாங்கத்தால் நம் குரலைத்தான் அடக்க முடியும். இந்தக் கூட்டத்தை என்ன செய்ய முடியும்?’ என நம்பிக்கையோடு நிமிர்ந்தேன்.

ஆனால், அடுத்த சில தினங்களிலேயே மாணவர்களின் போராட்டம் பொசுங்கிப்போனது ஏன்? முத்துக்குமாரின் சிதையில் தீயாய்த் திரண்ட மாணவக் கூட்டத்தை 'கால வரையற்ற விடுமுறை’ என்கிற ஒற்றை வார்த்தை சிதைத்தது. பொங்கி வெடித்தவர்கள் விடுமுறை அறிவிப்பைக் கேட்டதும் பொழுதைக் கழிக்கப் போனது ஏன்? 'விடுமுறை’ அறிவிப்பின் மூலமாக ஒரு விடுதலைப் போராட்டத்தையே முடக்கிய பெருமை இந்த அரசாங்கத்தையே சேரும்!

இன்றைய மாணவ சமுதாயமும் இளைய தலைமுறையும் கைகோத்து களத்தில் நின்று இருந்தால், நிச்சயம் தமிழ் ஈழம் இத்தனை துயரத்துக்குள் தள்ளப்பட்டு இருக்காது. பிரமிடுகளின் தேசத்தில் இன்றைக்கு வெடித்திருக்கும் பிரளயம் இளைய தலைமுறையின் கொந்தளிப்பால்தான் என்பது தமிழகத் தலைமுறைக்கு மட்டும் புரியாதது ஏன்? புரட்சி என்பது வரலாற்றை நிரப்பும் வார்த்தை அல்ல. வரலாற்றைப் படைக்கும் வார்த்தை. 'எது புரட்சி?’ என்கிற கேள்வி தந்தை பெரியாரிடம் வைக்கப்பட்டபோது, பொட்டில் அடித்தாற்போல் அவர் சொன்னது... 'வெறும் காலோடு நடந்தவன் செருப்பு அணிந்து நடந்தது புரட்சி; அதைச் செய்தவன் புரட்சியாளன்!’ மக்களின் திரட்சியே மாற்று அரசியலுக்கான புரட்சி. அத்தகைய திரட்சியை உருவாக்கவேண்டியவன் இளைஞன்.

தேர்தல் பாதை திருடர் பாதை’ என்கிற சபிப்புகளும், 'என் ஒருவனுடைய ஓட்டுதான் மாற்றத்தை உண்டாக்கப் போகிறதா?’ என்கிற சகிப்புகளும்தான் அரசியல் களம் அசிங்கம் சுமந்து நிற்பதற்கான காரணம். வெறும் 50 சதவிகித வாக்குகள் மட்டுமே இந்தத் தேசத்தின் அரசியலைத் தீர்மானிக்கிறது என்றால், 'நாட்டில் என்ன நடந்தால் நமக்கு என்ன?’ என நினைக்கிறவர்களின் கூட்டம் பெருகிவிட்டதாகத்தானே அர்த்தம்? உரிமையை வறுமைக்கு விற்கும் ஏழைகளுக்கும், உரிமைகளால் ஒன்றும் ஆகாது எனப் புறக்கணிக்கும் கோழைகளுக்கும் என்ன வித்தியாசம்?

அடி கொடுத்தவனும் - மடி அறுத்தவனும் இங்கே கொடி பிடிக்கிறான். வலை அறுத்தவனும் முலை அறுத்தவனும் இங்கே வசதியாக வந்துபோகிறான். கைகட்டி நின்றவனும், பொய் கொட்டி வென்றவனும் மீண்டும் 'கை’கோத்து நிற்கிறான். கூட்டால் குலை அறுத்தவனை, வாக்குச் சீட்டால் வஞ்சம் தீர்க்கக்கூடிய சூழல் வாய்த்திருக்கிறது தமிழா! ஆயுதம் கொடுத்து, ஆலோசனை கொடுத்து, ஆயிரக்கணக்கில் கோடிகள் கொடுத்து தமிழ் ஈழத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு தன்மானத் தமிழன் பதிலடி கொடுக்கும் காலம் இதுதான்.

பீகாரில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி எனச் செய்தி வந்தபோது, 'காங்கிரஸுக்கு ஏன் இந்த இழிநிலை?’ என்கிற கேள்வி எழுந்ததே... அதுபோல், தமிழகத்தில் ஒற்றை இடத்தில்கூட வெல்ல முடியாத அளவுக்கு காங்கிரஸ் வீழ்த்தப்படும்போதும், 'ஏன்?’ என்கிற கேள்வி எழும் அல்லவா? அன்றைக்குச் சொல்வோம்... 'கட்சியைச் சிதைத்ததற்கே இப்படிக் கதறுகிறீர்களே... எங்களின் கருவையே சிதைத்தபோது நாங்கள் எப்படிக் கதறி இருப்போம்?’ என்று! தமிழன், தகிப்பான உமிழன் என்பது வினையாளிகளுக்கும் துணையாளிகளுக்கும் அன்றைக்குத்தானே புரியும்.

இரண்டு முறை என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளிய அரசாங்கம் என் மீதான குற்றச்​சாட்டை நிரூபிக்க முடியாமல் தோற்றுப்போனது. காரணம்... உணர்வு மிகுந்தாலும் - உள்ளம் சினந்தாலும் நாம் உண்மை என்கிற நெறியிலேயே நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறோம். அலட்சியப்படுத்தப்படும் கண்ணீர் ஆயிரம் ஆயுதங்களை உற்பத்தி செய்யும். அதை நிகழ்த்தப்போவது நாம்தானடா தம்பிகளே!

தி.மு.க. கூட்டணியில் எத்தனைத் தொகுதிகள் எனத் தெரிந்துகொள்ள காங்கிரஸ் காத்திருக்கிறதே... அதைவிட பல மடங்கு ஆவலோடு நான் காத்திருக்கிறேன். காங்கிரஸுக்கான தொகுதிகள் அறுபதாக இருந்தாலும் சரி... நூறாக இருந்தாலும் சரி... அத்தனை தொகுதிகளிலும் என் ஈரக்குலையின் ஈரம் இற்றுப்போகும் வரை முழங்குவேன். வாரிக் கொடுத்த கோபத்தில் காறித் துப்பும் தமிழனாக காங்கிரஸை அறைவேன். 'கதரா... கருகிய பதரா?’ எனக் கேட்கிற அளவுக்கு எங்களின் உரு அறுத்த பாவிகளைக் கருவறுப்பேன்.

இந்தக் கணத்தில், என்னை நோக்கிய சில விமர்சனங்​களுக்கும் நான் விடை சொல்லவேண்டி இருக்கிறது. முதல் விமர்சனம்... 'சீமான் பெட்டி வாங்கிவிட்டார்!’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை! இந்தப் பிரபாகரனின் தம்பி பிச்சை எடுத்து செத்தாலும் சாவானே தவிர, வருமானத்துக்காக இனமானத்தை அடமானம் வைப்பவனாக ஒருபோதும் இருக்க மாட்டான்!

அடுத்த விமர்சனம்...'சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கலாமா?’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே... கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. 'இதைச் செய்யாதே?’ எனச் சொன்னால் 'எதைச் செய்வது?’ என்கிற கேள்வி எழுவது மனித இயல்பு. அதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டுமே தவிர, 'யாருக்கோ போடுங்கள்’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.

அடுத்து, தனித்து நிற்பது... அது யானைகளின் காலடிகளில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது! இல்லையேல், 'தேர்தலைப் புறக்கணியுங்கள்!’ எனச் சொல்வது. அது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம்! குடுகுடுப்பைத்தனமோ, கோழைத்தனமோ கூடாது என்பதால்தான், காங்கிரஸை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன்.

கிடைக்கிற ஆயுதத்தைக்கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம். இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே... 'உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா?’ என நேதாஜியிடம் கேட்க முடியுமா?

இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே... எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது! 'காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் ஆதரிப்பேன்’ என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து, 'அவர்போல் ஆகிவிடுவார்... இவர்போல் ஆகிவிடுவார்... சுண்ணாம்புச் சுவர்போல் ஆகிவிடுவார்’ என எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல; புலிக் குட்டி!

அலை எழுத்தில் ஓய்ந்தது! எண்ணத்தில் ஓயாது!


திருப்பி அடிப்பென் தொடரும்...

நன்றி - விகடன்

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us