ஈழம்

ஈழம்

சனி, 26 மார்ச், 2011

சிங்கள பூமியாக மாற்றிவிட்டார்களே!:அந்தோணியார் கோயிலில் அழுத ஈழத் தமிழர்கள்!

இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனா​லும், அங்குள்ள தமிழர்களின் இன்னல்கள் இன்னும் ஓயவில்லை. அதன் பிரதிபலிப்பு, இந்த ஆண்டு நடந்த கச்சத் தீவுத் திருவிழாவிலும் எதிரொலித்ததுதான் கொடுமை!

இந்தியா வசம் இருந்த கச்சத் தீவு, 1974-ல் இலங்​கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. ஆனாலும், அங்கு உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில், இரு நாட்டு பக்தர்களும் தடைகள் இன்றிப் பங்கேற்றனர். 83-ல் தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில், இந்த விழா தடைப்பட்டது. அதன் பிறகு தமிழக பக்தர்கள் பங்கேற்க, இந்திய அரசு அனுமதிக்கவில்லை. கடந்த 2009-ம் ஆண்டு, புலிகள் இயக்கத்துடனான போர் முடிவுக்கு வந்ததும், சென்ற ஆண்டு கச்சத் தீவுத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் பெருமளவில் கலந்து​கொண்டனர். இந்த ஆண்டுக்கான திருவிழாவும் கடந்த 19, 20-ம் தேதிகளில் நடந்தது. அப்போது கச்சத் தீவு அந்தோணியாரிடம் தங்கள் துயரங்களை முறையிட வந்திருந்த ஈழத் தமிழர்கள் சிலரிடம் பேசினோம்.

ஊர்க் காவல் துறையைச் சேர்ந்த ஒரு மீனவர் நம்மிடம், ''பிரச்னை முடிஞ்சு பல காலமாகியும் எங்கட கஷ்டம் மட்டும் இன்னும் தீரலை. முள்ளி வாய்க்கால் சண்டையின்போது பிடி​பட்ட சனங்களில் பல ஆயிரம் பேர், இன்னும் முகாமில்தான் இருக்காங்க. விசாரணை என்ற பெயரில் எங்கட சகோதரர்கள் ஏராளமானோர் இன்னும் வதை முகாம்களில்தான் அடைபட்டு இருக்காங்க. ஆனா, உலக மக்களை ஏமாத்தும் விதமா, இலங்கையில் தமிழர்கள் சந்தோ​ஷமா இருப்பதாகப் பொய் பரப்பு​றாங்க. உண்மையில், இன்னும் நாங்க இரண்டாம் குடிமக்களாவே நடத்தப்​படுறோம். சண்டை முடிஞ்சு இவ்வள காலமாயிட்டதுதானே... இன்னும் எங்கட மக்களைத் தங்களோட சொந்த இடங்களுக்கு அனுப்பலையே... எங்கட இடத்துல எல்லாம் 'இது எங்கட பூர்வீக பூமி’னு சொல்லி சிங்கள மக்களைக் குடியமர்த்தும் வேலையை ஆர்மியும் அரசாங்கமும் நடத்துது. 
எதிர்த்துக் குரல் கொடுத்தா, ராத்திரியோட ராத்திரியா வீடு புகுந்து அந்த ஆளைப் பிடிச்சுட்டுப் போய், கொன்னு போட்டுடறாங்க!

டக்ளஸ், பிள்ளையான், கருணா போன்ற எங்கட ஆட்களோட, முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி-யான ரிசாட் பயதுல்லா மற்றும் மலையகத் தமிழாட்களையும் சேர்த்துக்கொண்டு எங்களுக்கு எதிரா இலங்கை அரசாங்கம் இயங்குது. சமீபத்தில் நடந்த உள்​ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி போட்டியிட்டது. இதுக்கு எதிரா தமிழர் கூட்டமைப்பு இயங்குது. ஆனா 'சைக்கிள் கொடுக்குறோம், தையல் மெஷின் கொடுக்குறோம், கடல் தொழில் பாக்க சிலிண்டர் கொடுக்குறோம்’னு சொல்லி ஓட்டு கேக்குறாங்க. ஏற்கெனவே எங்கட மக்கள் ஆர்மியோட தாக்குதல்ல கை, கால் இழந்துகிடக்காங்க. கை இழந்தவனுக்கு சைக்கிளையும், கால் இழந்தவங்களுக்கு தையல் மெஷினும் கொடுக்குறதால என்ன கிட்டும்? எங்கட கோரிக்கை எல்லாம் இப்ப இதுதான்... எங்கட மக்கள அவங்க சொந்த இடத்துல குடியேற அனுமதி கொடுக்கணும்! அவங்க ஆட்களுக்குக் கொடுக்​குற உரிமைகளையும் சலுகைகளையும் எங்கட மக்களுக்கும் கொடுக்கணும்! வதை முகாமில விசாரணைக் கைதியா இருக்கிறவங்களை (அவங்கள்ல எத்தனை பேர் இப்ப உயிரோட இருக்காங்கன்னே தெரியல) விடுதலை செய்​யணும். இது நடந்தாத்தான் எங்கட பிரச்னை தீர்ந்ததா சொல்ல முடியும்!'' என்றார் சோகமாக.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி அவர்களிடம் கேட்​டோம். ''பிரபாகரன் கொல்லப்பட்டார்னு இலங்கை ஆர்மி சொல்றதை ஏத்துக்க முடியாது. நேருக்கு நேர் சண்டை நடக்கும்போது எதிராளிகளை ஊடறுத்துச் செல்லும் வலிமைகொண்டவங்க விடுதலைப் புலிகள். அதனால், அரசியல் தீர்வுக்கான ஆட்களைக் களத்தில விட்டுட்டு, மறைவா இருக்கார் பிரபாகரன். அரசியல் தீர்வு கிட்டலைன்னா... நிச்சயம் ஆயுதப் போர் மீண்டும் நடக்கும்!'' என்றவர், ''என்னோட போட்டோவை மட்டும் போட்டுறாதிங்க!'' என்ற வேண்டுகோளுடன் முடித்தார்.


அந்தோணியார் திருவிழாவின்போது சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் உரையாற்றிய இரு நாட்டுப் பங்குத் தந்தையர்கள் 'இழப்பு, துயரம், நம்பிக்கை’ போன்ற தலைப்புகளை மையமாகவைத்துப் பேசியது, இலங்கை மக்களின் மனநிலையைச் சொல்வதாகவே இருந்தது. இதுபற்றி நம்மிடம் பேசிய முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், ''அரசுகளின் ஆதரவின்றி ஏதோ ஒரு குற்றச் செயல்போல் நடந்து வந்தது கச்சத் தீவுத் திருவிழா. தற்போது அந்த நிலை மாறி, இரு நாட்டு அரசுகளின் பங்களிப்புடன் இந்த விழா நடக்கிறது. திருப்பலியில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்கள் ஒருவித பயத்துடனேயே காணப்பட்டனர். இலங்கையில் இருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள் இரண்டு விஷயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். முதலாவது, இன்னும் ஈழத் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்பது. இரண்டாவது, தமிழக மீனவர்களால் ஈழத்து மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் பாதிப்பு. இதை சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதி கிடைக்கும்!'' என்கிறார்.


புத்தனின் பூமியில் இருந்து... யேசுவின் திருவடியில் வைக்கப்படும் இந்தப் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்!

நன்றி:விகடன்

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us