குன்றென நின்றவனே
குடையெனப் பணிந்தவனே
மன்றினில் உயர்ந்தவனே - மக்கள்
மனதினில் பதிந்தவன் நீ.
கறையில்லாப் புகழ் கண்டவனே
கலங்காத உள்ளம் கொண்டவனே
சந்தன மரத்தைப் போன்று - நீ
தேய்ந்து பிறர்க்கானாய்.
துன்பக் கடலைக் கடக்கவல்ல
தோணியாக எம்முன் நின்றவனே - நீ
தொட்டவை எல்லாம் தொழிலாய் மலர்ந்தன
பட்டவை எல்லாம் பசுமை எய்தின.
நல் காப்பியங்களை நாடிப் படித்தவனே
தொல் காப்பியனுக்கும் சூத்திரம் சொல்பவன் நீ.
இமயம் வரைக்கும் உன்பெயர் தெரியும்
குமரிக் கடலும் உன் குணம்சொல்லிக் குமுறும்
எமக்காக வெங்கொடுமைக் களமாடினாய்
எமக்காக செங்குருதியில் நீ குளித்தாய்
நாம்கண்ட எம்ஈழ உயிர்ஆயுதமே
ஆயிரம் யுகம்சொல்லும் உன் போர்வீரமே.
நன்றென நினைப்பவற்றை
நடத்திவிட்டாய் உன் துணிவால்
அன்றைய நிலைகாண விரும்பாமல்
அக்கணமே எமைவிட்டு அகன்றுவிட்டாய்.
தமிழீழ மண்எங்கும் உன் சுவாசமே
தமிழர்கள் மனதெங்கும் உன் நேசமே
விதைத்தவன் நீ பூமியிலே உறங்கிடலாம் - அந்த
விதைகள் பூமியிலே உறங்குவதில்லை
விடுதலையைக் காணாது தமிழர்மனம் ஓய்வதுமில்லை.
பிரிவுத் துயருடன்
யேர்மன் திருமலைச்செல்வன்.