ஈழம்

ஈழம்

வியாழன், 19 மே, 2011

சமர்க்களங்களின் சரித்திர நாயகன் மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீர வரலாறு.


சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன்.

ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு - பகல் பாராது ஓடியோடி உழைத்து - வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன்.

ஆனால் இந்த வீரதீர பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த புலிவீரர்களில் ஒருவரை நான் கண்டிருக்கின்றேன். அது பால்ராச் அவர்கள் தான்.

கெரில்லா வீரனாக போராட்டத்தில் இணைந்து, சண்டைகளின் வளர்ச்சிக்கேற்ப தன்னையும் வளர்த்து, சிங்களப் படை முகாம்கள் மீது பெருந்தாக்குதல்களைத் தலைமையேற்று நடாத்தி-மரபுப்போர்களையும் வெற்றிகரமாக நடாத்தி வீரநாயகனாக பிரிகேடியர் பால்ராஜ் வலம் வந்திருந்தார்.

சண்டைகளுக்கு பால்ராச் அவர்கள் தலைமை தாங்குகின்றார் என்றால், களத்தில் நின்று போராளிகளுடன் ஒரு போராளியாகச் சண்டையிட்டபடி தலைமை கொடுப்பது அவரின் தனித்துவமான பாணி. களத்தில் அவர் நிற்கின்றார் என்றால் அங்கே இருக்கும் போராளிகள் அனைவருக்கும் இறக்கை முளைத்தது போல் உற்சாகத்தின் உச்சியில் நிற்பார்கள்.

தமிழீழப் போரரங்கில் காட்சி மாற்றங்களை தமிழினத்திற்குச் சார்பாக ஏற்படுத்திய களங்களின் அதிபதியாக பால்ராஜ் இருந்தார் என்பது வரலாற்று உண்மை.

எமது இயக்கம் நடாத்திய பாரிய படைத்தள அழிப்பான மாங்குளம் படை முகாம் தகர்ப்பில் இருந்து - ஆனையிறவுப் படைத் தளத்தின் அழிவுக்கு வித்திட்ட இத்தாவில் பெட்டிச் சண்டை வரை பிரிகேடியர் பால்ராச்சின் வீரச் செயற்பாடுகள் ஒரு வீரவரலாறாக விரிந்து செல்லும்.

தலைவரின் போரியல் திட்டங்களை போரியல் சிந்தனைகளை அச்சொட்டாக களத்தில் நடைமுறைப்படுத்திக்காட்டி ஒரு முன்னுதாரண வீரனாக - முன்னுதாரணத் தளபதியாக சாதித்துக் காட்டியவர்.

வெற்றியைத் தவிர வேறெதற்கும் இடமில்லாத சண்டைக் களங்களை வழி நடாத்த ஒரு தளபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் எழுந்தால் தலைவரின் தேர்வாக எப்போதும் பால்ராச் அவர்கள் இருப்பார். தலைவர் சொன்னதை பால்ராச் செய்து காட்டுவார்.

*****

பால்ராஜ் அவர்களையும் - அவரின் வீரத்தையும் நான் முதன்; முதலில் அறிந்து கொண்டது 1986 இல். அப்போது கிளிநொச்சியில் இருந்த படைமுகாமை நாம் முற்றுகைக்குள் வைத்திருந்த காலம். ஒருநாள் திருநகர் பக்கமாக சிங்களப்படை ஒரு நகர்வைச் செய்து எமது முற்றுகையை உடைக்க முயற்சி எடுத்தது.

முற்றுகையை காவல் காத்த எங்களால் எதிரியின் நகர்வைத் தடுக்கமுடியாமல் போக - பசீலன் அண்ணையின் தலைமையிலான முல்லைத்தீவுப் படையணி உதவிக்கு வந்தது.

நகர்ந்த படையினர் மீது பசீலன் அண்ணை தலைமையிலான அணி வேகமான முறியடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. ஒரு கவச வாகனம் சிதைக்கப்பட்டு சில படையினர் கொல்லப்பட சிங்களப் படை மீண்டும் முகாம்களுக்குள்ளே தஞ்சம் புகுந்தது.

சண்டை முடிந்ததும் பால்ராஜ் என்ற பெயர் எல்லோர் வாய்களிலும் உச்சரிக்கப்பட்டது. அவரது முகம் தெரியாத நிலையிலும் அவரது பெயர் எனது மனதில் பதிந்து விட்டது. அந்தச்சண்டை வெற்றிக்கு பசீலண்ணையுடன் பால்ராச்சும் சேர்ந்து வெளிப்படுத்திய வீரம் தான் முக்கிய காரணமாக இருந்தது.

பசீலன் அண்ணை தான் தனக்கு சண்டை பழக்கியதாக பால்ராச் அவர்கள் அடிக்கடி சொல்வார். பால்ராச் என்ற வீரன் பசீலன் என்ற வீரனின் சண்டைத் திறனைப் புகழ்ந்து பேசும்போது இந்த வீரனும் - அந்த வீராதி வீரனும் எங்களது மனங்களில் புகுந்து நிலையெடுத்துக் கொள்வார்கள்.

இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்தில் சண்டையைத் தொடங்கிய போது பசீலன் அண்ணை தலைமையிலான முல்லைத்தீவு மாவட்டப் படையணி யாழ்ப்பாணம் வரவழைக்கப்பட்டது. அந்த அணியில் பால்ராச் அவர்களும் ஒருவராகச் சென்றார்.

கோப்பாய் சண்டைக்களம் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் களத்தில் இந்தியரின் டாங்கி ஒன்று அழிக்கப்பட்டது. இந்த டாங்கி அழிப்பிற்கு பால்ராஜ் அவர்கள் காரணமாக இருந்தார் என்று நான் கேள்விப்பட்டேன்.

இந்தக் கோப்பாய்ச் சண்டைக்களத்தின் கடுமையை இந்தியப்படையின் கட்டளைத்தளபதி மேஐர் nஐனரல் கர்க்கிரத்சிங், தான் எழுதிய நூலிலும் சிறப்பிடம் கொடுத்துக் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பாய் சமரை முடித்துக்கொண்டு பசீலன் அண்ணை தலைமையிலான அணி முல்லைத்தீவு திரும்பியது. முல்லைத்தீவிலும் இந்தியப்படையுடன் ஒரு நேரடிச் சண்டை தொடங்கியது.

முல்லைத்தீவில் முகாம் அமைத்திருந்த இந்தியப்படைகள் நந்திக்கடலோர வெளிகளைத்தாண்டி தண்ணீர் ஊற்று மக்கள் குடிமனைக்குப் புக முயற்சி செய்த போது பசீலன் அண்ணை தலைமையிலான அணியினர் நடாத்திய மறிப்புச்சண்டைக் கதை விறு விறுப்பானது. அந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் மேஐர் பசீலன் வீரச்சாவடைந்து விட்டார். படைத்தளபதியை இழந்த நிலையிலும் சண்டை அதே விறுவிறுப்புடன் நடந்துகொண்டிருந்தது. பசீலனின் இடத்தைப் பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள் அந்தக்களத்தில் காட்டிய தலைமைத்துவ ஆற்றலும் சண்டைத்திறனும் ஒரு வீரத்தளபதியைத் தலைவருக்கு இனங்காட்டியிருந்தது.

மேஜர் பசீலன் வகித்த முல்லைத்தீவு மாவட்டத் தளபதி என்ற பொறுப்பை பால்ராஜ் ஏற்றார். முல்லைத்தீவு - கிளிநொச்சி - வவுனியா என்ற மூன்று மாவட்டங்களில் முல்லைத்தீவில் தான் இந்தியப் படைக்கெதிரான தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்தன. அதற்கு பால்ராஜ் அவர்களின் முயற்சியும் ஆர்வமும் தான் காரணம். பால்ராச் அவர்களிடம் இருந்த இந்தத் தலைமைத்துவ ஆற்றல் தலைவரை வெகுவாகக் கவர்ந்தது.

தனது இடத்திற்கு அவரை அழைத்த தலைவர் அவர்கள் இந்தியப் படைக்கெதிரான தாக்குதல்களை வன்னியெங்கும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு - போரியல் ஆலோசனைகளையும் வழங்கி வன்னி மாவட்டத்தின் தளபதியாக பால்ராச்சை நியமித்தார்.

முல்லைத்தீவு - வவுனியா - கிளிநொச்சியை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ஒரு நடைப்பயணத்தைத் தொடங்கினார் பால்ராச்.

இந்தியப்படைக் காலத்தில் வாகனங்களில் போராளிகள் பயணிக்கக்கூடாது என்பது தலைவரின் கண்டிப்பான கட்டளை. தேவையற்ற வகையிலான இழப்புகளைத் தவிர்க்கவே அந்த உத்தரவு இதை பால்ராஜ் முழுமையாக நடைமுறைப்படுத்தினார்.

மணலாற்றின் மையப்பகுதியில் தலைவரைச் சந்தித்துவிட்டு முல்லைத்தீவு கிளிநொச்சி - வவுனியா என்று நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து - அவர்களை ஊக்கப்படுத்தி - தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து - தலைவரின் கட்டளைகளையும் நினைவூட்டி ஒரு பம்பரம் போல் அவர் சுழன்று திரிந்தார்.

அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பகிடி கதைப்பது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வும் தெரிவதில்லை, களைப்பும் தெரிவதில்லை.

படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து - திட்டமிட்டுத் தாக்குவது ஒரு போரியல் வழமை. போகுமிடங்களில் எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம்.

ஆனால் இது கடினமானது தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து.

வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு; அக்கராயன் காட்டுப்பகுதியில் தரித்திருந்த ஒரு அணியைச் சந்திக்க அவர் தன் மெய்ப்பாதுகாவலர் அணியுடன் வந்திருந்தார். கொக்காவிலுக்கும் ஐயன்கன்குளப் பகுதிக்குமிடையே இந்தியர்களின் ஒரு ரோந்து அணியை எதிர்கொள்ள வேண்டி வந்தது. அந்த எதிரி அணிமீது தாக்குவோம், என்று பால்ராச் அவர்கள் புறப்பட்டார்.

பால்ராஜ் அவர்களின் மெய்க்காப்பாளர் தவிர நாங்கள் நான்கு, ஐந்து போராளிகள் மட்டும் அங்கு இருந்தோம். பால்ராஜ் அவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு அவரின் மெய்க்காப்பாளர் அணியை சண்டைக்கு எடுக்க நான் விரும்பவில்லை, சண்டையைத் தவிர்த்து எமது பயணத்தைத் தொடர்வோம் என்று அவருக்கு கூறினேன்.

ஆனால், அந்த ரோந்து அணி மீது தாக்குதல் நடாத்தியே தீரவேண்டும் என்று அவர் விரும்பினார். தானும் சண்டைக்கு வருவதாகக் கூறினார். ஆனால் அவரைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருந்ததால் நான்; மாற்றுத் திட்டம் ஒன்றை அவருக்குக் கூறினேன்.

இரண்டு மூன்று பேருடன் பால்ராச் அவர்கள் பாதுகாப்பாக நிற்க மற்ற அனைவரும் ஒரு அணியாகி பதுங்கித்தாக்குதலை நடாத்துவது என்ற முடிவெடுக்க பால்ராச் அவர்களும் சம்மதித்தார்.

வெற்றிகரமாகப் பதுங்கித் தாக்குதலை நடாத்தி 15 படையினரைக் கொன்று ஆயுதங்களையும் கைப்பற்றினோம். எங்களில் ஒருவர் வீரச்சாவு. நானும் காயப்பட்டு விட்டேன்.

அப்போது கொக்காவில் பகுதியில் இருந்து இந்திய அணியொன்று தனது அணிக்கு உதவவென விரைவாக மக்கள் மூலம் தகவல் கிடைக்க அந்த உதவிப் படையைத் தான் பார்த்துக் கொள்வதாகவும்; எமது அலுவல்களை விரைவாக முடிக்கும் படியும் பால்ராஜ் அவர்கள் தொலைத்தொடர்புக் கருவி மூலம் எமக்கு அறிவித்தார்.

பதுங்கித்தாக்குதலில் ஈடுபடுவது சில வேளைகளில் அவருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று கருதி நாங்கள் அவரைப் பாதுகாக்க, அவரோ அதைவிட அபாயகரமான வழிமறிப்புத் தாக்குதலில் அதுவும் இரண்டு மூன்று போராளிகளுடன் தானே இறங்கிவிட்டார்.

ஆனாலும், அந்த எதிரிக்கான உதவி அணி வரவில்லை. அவ்விதம் வந்திருந்தால்; அந்த எதிரி அணியை அழித்தொழித்திருப்பார். அல்லது சண்டையில் இவர் வீரச்சாவடைந்தபின் அந்த எதிரி அணி வந்திருக்கும்.

எதிரி அணிவராமல் விட்டது இந்திய அணியின் அதிஸ்டமோ எங்களது அதிஸ்டமோ தெரியவில்லை.

படை முகாம் மீதான ஒரு தாக்குதல் திட்டத்தைத் தலைவர் கொடுத்துவிட்டார் என்றால் பால்ராச் ஓய்வு - உறக்கம் கொள்ளமாட்டார். அதே சிந்தனையுடன் திரிவார். முற்தயாரிப்புகள் சரியாக நடைபெறுகின்றனவா என்று நேரே தேடிச்சென்று பார்ப்பார்.

வேவு நடவடிக்கைகளில் ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும், அந்த வேவுத் தகவலை உறுதிசெய்ய தானே ஒரு வேவு வீரனாகிக் கடமைக்குச் செல்வார். ஒரு கட்டளைத்தளபதி எதிரி முகாமின் கம்பிவேலி வரை இரவில் சென்று வேவுத் தகவல்களை உறுதிப்படுத்தும் தேவை ஏற்படும் போது பிரிகேடியர் பால்ராஜ் அதையும் செய்தார்.

ஒரு படைமுகாம் மீதான தாக்குதலுக்கு முன் நூற்றுக்கணக்கில் தயார்ப்படுத்தல் வேலைகளைச் செவ்வனே செய்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலைகளில் தாமதம் ஏற்பட்டால் அல்லது தவறுகள் ஏற்பட்டால் தூக்கம் மறந்து அவற்றைச் சீர்செய்ய உழைப்பார்.

முல்லைத்தள அழிப்பிற்காகத் தயார்ப்படுத்தல் கால வேளைகளில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உறக்கம் துறந்து ஓடியோடி உழைத்ததை நான் கண்டேன். நான்காம் நாள் அதிகாலை அவரை நான் கண்டபோது அவரின் முகத்தில் சோர்வு தென்படவேயில்லை. நித்திரை கொண்டு எழும்பியது போல சுறுசுறுப்புடன் காணப்பட்டார். நான் இவர் மீது கொண்ட ஆச்சரியங்களில் இதுவுமொன்று.

இந்தியப்படை வெளியேறிய பின் 1990 யூன் மாதம் சிங்களப் படைகளுடன் சண்டை தொடங்கியது. முதலில் மாங்குளம் முகாம் மீது தாக்குதலை நடாத்தினோம். அந்த முகாமின் ஒருபகுதி எம்மிடம் வீழ்ந்தது. எனினும் முழுமையாக முகாம் வரவில்லை. எமக்குப் பாதகமாக சண்டை நிலைமை இருந்ததால்; தாக்குதலில் இருந்து பின்வாங்கினோம்.

அன்று இரவே அங்கிருந்த போராளிகளை கிளிநொச்சிக்கு இடம் மாற்றினார். கிளிநொச்சி படை முகாம் மீது தாக்குதலை நடாத்த முடிவெடுத்தார். அடுத்த நாளே தாக்குதல் தொடங்கியது. இங்கேயும் அதே கதைதான். மாங்குளம் கிளிநொச்சி முகாம் தகர்ப்புகள் தோல்வியில் முடிந்துவிட்டன. எனவே, கொக்காவில் முகாமை எப்படியும் தாக்கியழித்துக் கைப்பற்ற வேண்டுமென்ற வேட்கையுடன் இருந்தார்.

வன்னி மாவட்டத்தின் தளபதியாக அவர் இருந்தபோது நான் துணைத் தளபதியாக இருந்தேன். கொக்காவில் படைமுகாம் தாக்கி அழிக்கப்பட வேண்டும் அல்லது நாங்கள் இருவரும் வீரச்சாவடைய வேண்டும். இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்று ஓர்மத்துடன் கூறினார். கொக்காவில் படைமுகாமை வெற்றியும் கொண்டார்.

களத்தில் உள்ள போராளிகளுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டால் அல்லது தாக்குதலில் வெற்றி தாமதப்பட்டால் தளபதிகளுக்கு உரித்தான போர் மரபை உதறிவிட்டு அவர் களத்தில் இறங்கிவிடுவார். அத்தகைய வேளைகளில் அவரை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது.

கொக்காவில் படைத்தள அழிப்பிலும் அதுதான் நடந்தது. அந்த முகாம் தாக்குதலில் தானும் சண்டை அணிகளுடன் இறங்க முடிவெடுத்தார். எப்படியோ அவரைத் தடுத்துவிட்டு நான் அதைச் செய்தேன். முதல்நாள் தாக்குதலில் முகாமின் சில பகுதிகள் மட்டுமே எம்மிடம் வீழ்ந்தன. காயமடைந்த போராளிகளுள் நானும் ஒருவன். எனவே, இரண்டாம் நாள் தாக்குதலில் தானே இறங்கிவிட்டார்.

களத்தினுள்ளே நின்றபடி சண் டையை நடாத்தினார். சில அரண்களைத் தாக்குவதில் அவரும் பங்கேற்றார். களத்தினுள்ளே நின்றபடி கொக்காவில் படை முகாமைத் துடைத்தெறிந்தார். வரலாற்றுச் சாதனை படைத்தார்.

அவ்விதம் பின்னர் மாங்குளம் படை முகாம் கரும்புலி போர்க்கின் வீரத் தாக்குதலுடன் அழித்தொழித்தார். 'வன்னி விக்கிரம" படை நடவடிக்கையின் போதும் அது நடந்தது.

ஓமந்தை முன்னரங்கப் பகுதியிலிருந்து கொக்காவில் நோக்கிய படை நகர்வாக அது இருந்தது. மரபு வழியில் படையினர் படை நகர்த்தினர். டாங்கிகள் - கவச வாகனங்களுடன் சிங்களப்படை நகர்ந்தது.

பனிக்கநீராவிப்பகுதியில் எதிர்த்தாக்குதல் பால்ராச் அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. சண்டை கடுமையாக நடந்தது. எமது போராளிகள் எதிர்கொண்ட பாரிய மரபுச்சமர் அது. எதிரியின் சூட்டுவலுவைக் கண்டு போராளிகள் திகைப்படைந்தனர். அப்போது பால்ராச் களத்தில் இறங்கினார். சண்டையிட்டபடி கட்டளைகளை வழங்கினார். அது போராளிகளை உற்சாகம் பெற வைத்தது. எதிர்த் தாக்குதலை ஓர்மத்துடன் தொடுத்தனர். வன்னிவிக்ரம படையை ஓமந்தைக்குள் விரட்டியடித்தனர்.

'யாழ்தேவி" சமரிலும் அதுவே நடந்தது.

ஆனையிறவிலிருந்து கிளாலி நோக்கி நீரேரிப் பக்கமாக ஒரு படை நகர்வைச் சிங்களப்படை செய்தது. அதை முறியடிக்கும்படி பால்ராச்சிற்கு தலைவர் ஆணையிட்டார். வன்னி மாவட்டப் படையணி அங்கே விரைந்தது.

சண்டைத் திட்டத்தை பால்ராச் விளக்கினார். நகரும் படையணியை ஒரு வெட்டவெளியில் வைத்துத் தாக்குவது பிரதான திட்டம். துணிகரமானதும் - ஆபத்துக்கள் நிறைந்ததுமான அந்த பிரதான தாக்குதல் அணிக்கு நான் தலைமையேற்றேன். நாங்கள் தாக்குதலைத் தொடங்கியதும் இருபுறத்தின் பக்கவாட்டாலும் இரண்டு தாக்குதல் அணிகளை இறக்கத் தயாரிப்புகள் செய்திருந்தார்.

இரவு 2.00 மணிக்கு அந்த இடத்திற்கு விரைந்த எமது அணியினர் அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக குழிகள் வெட்டி உருமறைப்புச் செய்தபடி அந்த வெட்டவெளியில் அணிவகுத்தனர்.

அணிகள் சரியாக நிலையெடுத்துள்ளனவா! என்று பரிசோதிக்க பால்ராச் வந்தார். எனது நிலைக்கு வந்தவர் என்னிடம் சொன்னார், 'தீபன் நீ இதை கவனமாகப்பார். நான் அடுத்த முனையில் எனது கட்டளைப்பீடத்தை நிறுவுறன்" என்று ஒப்பீட்டளவில் காப்பான ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் சண்டை தொடங்கினால் அவர் அதில் நின்று கட்டளையிடமாட்டார். களத்தில் இறங்கியே கட்டளையிடுவார் என்று எனக்குத் தெரியும்.

அவரைக் களத்தினுள் இறங்க விடாது தடுக்கும்படி பால்ராச் அவர்களின் மெய்க்காப்பாளரிடம் கூறினேன். அது அவர்களால் முடியாது என்று தெரிந்தும் கூறினேன்.

காலை 7.30 க்கு சண்டை தொடங்கியது. ஒரு டாங்கிப் படையுடன் எதிரி நகர்ந்ததால் சண்டை கடுமையாக நடந்தது. வெட்டவெளிகளில் உருமறைப்புச் செய்யப்பட்டிருந்த குழிகளில் இருந்து போராளிகள் திடீரென முளைத்தெழுந்து - தாக்கிய போது படையினர் மிரண்டுவிட்டனர். டாங்கிகளை அழித்தபடி நாங்கள் சண்டையில் ஆதிக்கம் செலுத்தினோம்.

அப்போது வந்த செய்தி ஒன்று என்னை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் கோபத்திற்குள்ளாக்கியது. பால்ராஜ் காயப்பட்டுவிட்டார், என்பதே அந்தச் செய்தி.

கட்டளைப்பீடத்திற்குள் இருந்த பால்ராச் சண்டை தீவிரம் பெற்றதும் களத்தினுள் இறங்கி - போராளிகளை உற்சாகப்படுத்தியபடி கட்டளைகளை வழங்கியிருக்கிறார். அதில் காயப்பட்டார். பல்வேறு களங்களில் அவர் அடைந்த விழுப்புண்களில் இது பெரியது. அவரை ஆறு மாதங்கள் வைத்தியசாலையில் முடக்கியது.

களத்தினுள் நின்றபடி சண்டைகளை வழிநடத்துவது பால்ராச் அவர்களின் தனித்துவமான இயல்பு. அது ஆபத்தானது என்று அந்தப் பெருந்தளபதிக்கு நன்கு தெரியும். வெற்றிக்காக அதை விரும்பிச் செய்தார். இவ்விதம் செய்ய வேண்டாமென்று தலைவர் அவருக்கு அறிவுறுத்தியதை நான் அறிவேன்.

'சிறிய அணிகளுடன் களத்தில் நின்ற படி வெற்றிச் சண்டைகள் பல நீ செய்து விட்டாய். இனிமேல் பெரிய அணிகளை நெறிப்படுத்திச் சண்டைகளை வழிநடத்து. தேவை ஏற்படும் போது நான் சொல்வேன். அப்போது களத்தினுள் இறங்கிச் சண்டை செய்" என்று பால்ராச்சிடம் பல தடவைகள் தலைவர் சொல்லியுள்ளார். அதற்கான தருணங்களும் வந்தன.

சத்ஜெய என்ற பெயரில் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி வரை நகர்ந்து நிலம் விழுங்கிய சிங்களப் படைகள் அங்கே நிலைகொண்டிருந்தனர். ஒரு விமானக் குண்டைப் போன்ற வடிவத்தில் அந்த ஆனையிறவு - பரந்தன் - கிளிநொச்சி படைத்தளம் நீண்டு - ஒடுங்கி இருந்தது. அதைக் குறுக்கறுத்து கிளிநொச்சித் தளத்தை அழித்தொழிக்க தலைவர் ஒரு அற்புதமான போர்த்திட்டத்தை வகுத்தார்.

பரந்தனுக்கும் - கரடிப்போக்கிற்கும் இடையே ஒரு குறுக்கறுப்புத் தாக்குதலை நடாத்துவது, கிளிநொச்சித் தளத்தை அழிப்பது என்று இரண்டு தாக்குதற் திட்டங்களை தலைவர் வகுத்தார்.

குறுக்கறுப்புத் தாக்குதலை பால்ராச்சிடம் கொடுத்தார். மற்றையதை என்னிடம் தந்தார்.

குறுக்கறுப்புத் தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததும் - அபாயம் நிறைந்ததுமாகும். பால்ராஜ்சால் அதைச் செய்யமுடியும் என்பது தலைவரின் நம்பிக்கை. அதை திறமையாகச் செய்தார் பால்ராச்.

குறுக்கறுத்து உட்புகுந்த அணிகளுடன் பால்ராச் அவர்களும் சென்றார். அங்கே புகையிரதப்பாதை இருந்த இடத்திலுள்ள ஒரு மதகுக்குள் தனது கட்டளைப்பீடத்தை வைத்தார். அவரையும் அவரது அணியையும் வெளியேற்ற சிங்களப்படை பெரும் முயற்சி செய்தது. மரத்தில் அறைந்த ஆப்புப்போல அசையாது இருந்து அந்த நீண்ட தளத்தை இரண்டு துண்டுகளாகப் பிளப்பதில் வெற்றிகண்டார். பிளந்த துண்டில் ஒன்றை (கிளிநொச்சியை) நாங்கள் வெற்றிகரமாகத் துடைத்தழித்து 1200 சிங்களப்படையினரையும் கொன்று பெருந்தொகை ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றினோம். ஒரு வெற்றி வீரனாக பால்ராச் அவர்கள் வெளியில் வந்தார். அவருக்கு கைலாகு கொடுத்துப் பாராட்டினார் தலைவர்.

பால்ராச் அவர்களின் வீரத்திற்கு மகுடம் சூட்டியது போல் வந்தது இத்தாவில் பெட்டிச்சண்டை.

1991 இல் ஆனையிறவுத் தளத்தை அழித்தொழிக்க முற்பட்டு அறுநூறு போராளிகள் வீரச்சாவடைந்தும் அதைக் கைப்பற்ற முடியாமல் போன இயலாமைக்கு ஒரு சரியான பதிலடி கொடுக்கத் தலைவர் திடசங்கற்பம் பூண்டிருந்தார்.

ஆனையிறவுத் தளத்தின் பூகோள அமைவிடம் நேரடியாக முட்டி மோதி வெல்லத்தடையாக இருந்தது. ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் கண்டறிந்து பயன்படுத்திய அந்தத் தற்காப்பிடத்தை சிங்களப்படைகளும் உபயோகித்துக் கொண்டன.

ஆனையிறவுப் பெருந்தளத்தை நேரடியாகத் தாக்காமலே அதைக் கைப்பற்ற தலைவர் திட்டம் போட்டார். அது எவருமே கற்பனை செய்து பார்க்காத துணிச்சலான திட்டம். அபாயமும் - வெற்றியும் ஒருங்கு சேர்ந்திருந்த ஆளுமையான திட்டம். புலிகளா! - சிங்களப்படைகளா! யார் வீரர்கள் என்பதை உறுதிசெய்வது போலிருந்த சவால்த் திட்டம்.

5 கிலோமீற்றர் நீளத்திற்கு படகின் மூலம் கடலால் போய் குடாரப்பில் தரையிறங்கி - அங்கே இரு புறமுள்ள படைமுகாம் பகுதிகளுக்கு இடையேயிருந்த சதுப்புநிலப் பகுதிகள் ஊடாக 10 கிலோமீற்றர் தூரம் நடந்து - கடந்து இத்தாவில் பகுதியில் பெட்டி வடிவில் வீரர்களை நிறுத்திவிட்டு ஒரு கிலோமீற்றர் நீளமும் ஒரு கிலோமீற்றர் அகலமும் கொண்ட அந்தப் பெட்டியின் நடுவில் அகழிவெட்டி நின்றார் பால்ராஜ். எதிரியின் இரண்டு கண்களுக்கும் நடுவே நெற்றிப்பொட்டில் கூடாரமடித்துக் குடிபுகுவது போல அது இருந்தது.

பால்ராச் அவர்களையும் அவர்களுடன் இருந்த 1200 புலி வீரர்களையும், அந்தப் பெட்டிக்குள் வைத்துச் சமாதிகட்டக் இணைவதும் பிரிவதுமாக எங்கள் போராட்டப் பயணம்.

2001 மார்ச் 25 எங்கள் நட்பு எங்கே பலமாகியதோ அந்தப் படைத்தளத்தை வீழ்த்தும் சுழற்பொறியை செயற்படுத்தும் பொறுப்பை தலைவர் அவர்கள் பால்ராச்சிடம் ஒப்படைக்க நாம் கட்டைக்காடு.... வெற்றிலைக்கேணி... சுண்டிக்குளம் கடற்கரை வெளிகளில் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம்.

போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க குடாரப்புத் தரையிறக்கம். கடலினூடான ஒரு பலப்பயணம். பால்ராச் உட்பட ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட போராளிகளையும் படையப் பொருட்களையும் தரையிறக்க வேண்டிய பொறுப்பு என்னிடம். போராளிகளோடு தரையிறங்கி ஆனையிறவை வீழ்த்த வேண்டிய பொறுப்பு பால்ராச்சிடம்.

ஒருவேளை ஒன்றாக அந்த வெற்றிலைக்கேணி கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்திருந்து கிடந்த உணவுப் பொதியைப்; பிரித்து ஒன்றாக உணவருந்தி எத்தி... எத்தி மேலெழுந்த அந்த அலைகளின் மடியில் மிதந்த சண்டைப் படகில் பால்ராச்சையும், ஏனைய படகுகளில் போராளிகளையும் ஏற்றி வழியனுப்பிவைத்தோம். பால்ராச் எப்போதும் போல இப்போதும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு.

குடாரப்பில் தரையிறங்கிய பால்ராச் இத்தாவில் பகுதியில் பெரும் சமரை வழிநடத்திக் கொண்டிருந்தார். எதிரி ஏவிய பல ஆயிரக்கணக்கான அந்த எறிகணை மழைக்கு மத்தியிலும் எப்போதாவது ஒரு சிறு பொழுதில் களம் அமைதி பெறும் பொழுதில் தொலைத்தொடர்புக் கருவியினூடாக என்னுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு களத்திற்கு வெளியில் நிற்பவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் உரையாடினார்.

முப்பத்து நான்கு நாட்களின் முடிவில் எமது நம்பிக்கைக்கு எந்தப் பழுதுமில்லாது பால்ராச் மீண்டும் திரும்பி வந்தார். இலங்கைத் தீவை மட்டுமல்ல உலகத்தையே விழி திறந்து பார்க்கும் படி களத்தில் சாதித்துவிட்டு.

மீண்டும் சந்தித்தோம் பிரிந்தோம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்......

******

தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியைக் களத்தில் கழித்த தளபதி பால்ராச் மக்களின் மீது பரிவு கொண்டவராகவும், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட நெருக்கடிகள் உடனடியாகவே களையப்பட வேண்டுமென்பதில் அதிக விருப்புக் கொண்டவராகவும் காணப்பட்டார்.

முன்பொரு முறை அளம்பில் பகுதி மக்களுக்கும் செம்மலை பகுதி மக்களுக்குமிடையே சிறிய அளவில் ஊர்ப்பிணக்கு ஒன்று ஏற்பட்டுவிட அதனைக் களைவதற்காகத் தன்னுடைய கடமைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டு தன்னுடைய ஒரு முழுநாள் பொழுதையும் அந்த மக்களுக்காக செலவிட்டு அந்தப் பிணக்கைத் தீர்த்து வைப்பதில் முன்னின்றதை என்றும் மறக்கமாட்டார்கள்.

அந்தளவுக்கு மக்களின் மீது ஆழமான அன்பை தளபதி பால்ராஜ் செலுத்தினார்.

உண்மையில் தளபதி பால்ராச் தன்னுடைய இலட்சியத்தில் எவ்வளவு தெளிவு கொண்டிருந்தாரோ அப்படித் தான் மக்களையும் நேசித்தார். அத்தோடு எங்கள் மக்கள் மீதான படை நடவடிக்கைகளை வழிநடத்திய எதிரிப் படைத்தள பகுதிகளையும் அவர்களின் பலம் - பலவீனம் என்பவற்றையும் அறிந்து அதற்கேற்ற வகையில் படை நடத்தும் சிறப்பாற்றலை அவர் கொண்டிருந்தார்.

எதிரிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும்; அவர்கள் குறித்த அறிவைப் பெருக்கிக்கொள்வதற்காகவும்; அதிகளவான நேரத்தை அவர் செலவிடுவார். இவரின் இந்த இயல்பு பல தளங்களில் அவர் சிறப்பாக செயற்பட உதவியது.

பின்னர் கடமைகளின் நிமித்தம் வேறு வேறு களங்களில் நாங்கள் இயங்கிக் கொண்டிருந்தோம். அதனால் பால்ராச்சை அடிக்கடி சந்திக்க முடியவில்லை. சுகவீனமுற்றிருந்த பால்ராச் அப்போதும் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருந்தார். சந்திப்போம் என்ற நம்பிக்கை இருந்ததால் எங்களுக்கிடையேயான அந்த பிரிவு எனக்கு பெரிதாகத் தெரியவில்லை.


22-05-2008 பால்ராச் சாவடைந்துவிட்டார். என்ற செய்தி எங்கும் பரவியது.

பல களங்களில் ஒன்றாக நடந்த அந்தப் பெருவீரன் பிரிந்துவிட்டான். என்பதை நம்ப முடியாமலிருந்தது நாம் பலமுறை பிரிந்தோம். ஆனால் மீண்டும்.... மீண்டும் சந்தித்திருந்தோம்.

ஆனால், 22-05-2008 இல் ஏற்பட்ட பால்ராச்சுடனான பிரிவு மீண்டும் எப்போதுமே நாம் சந்திக்கப்போகாத பிரிவு, அதனால் தான் என்னவோ சொல்லாமலே பிரிந்துவிட்டார் பால்ராச்.

-கேணல் தீபன்-

நன்றி: விடுதலைப்புலிகள்.





இவ் வீரத்தளபதிக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாளில் வீரச்சாவடைந்த தளபதிகளுக்கும் ஏனைய போராளிகளுக்கும் எமது இணையம் சார்பாக மீண்டும் ஒரு முறை வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.




இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us