ஈழம்

ஈழம்

புதன், 25 மே, 2011

தமிழக தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய செந்தமிழன் சீமான் அவர்களுக்கு, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் வாழ்த்து கடிதம்.

அன்பு தம்பி செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர்
கதவு எண்.8.மருத்துவமனை சாலை,
செந்தில் நகர்,
போரூர்- 600 116, சென்னை
தமிழகம், இந்தியா.


கரு : காங்கிரசை வீழ்த்தியதற்கு செந்தமிழன் சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்திற்கு வாழ்த்துகள்

அன்புடையீர்,

கடந்த மே 13 தேதி வெளியான தமிழக தேர்தல் முடிவுகளானது, உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு காரணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை இனவெறி அரசு,  ஈழத்தில் காவுக்கொள்ள துணைப்போன காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் வாங்கிய பலத்த அடிதான். தமிழனை அழிக்க துணைப்போன காங்கிரஸ் கட்சி, இப்பொழுது தமிழ்நாட்டில் அழிந்து போகும் நிலை வந்துள்ளது.

தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளில், 58 தொகுதிகளில் தோல்வியை கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிரிந்ததால்தான், அந்த 5 தொகுதிகளில் கூட காங்கிரஸ் வென்றுள்ளது. தமிழக மண்ணில், காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள இந்த மிகப்பெரும் சரிவுக்கு காரணம், அக்கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளே. காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோத போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் உண்மையான முகத்திரையை தமிழக மக்கள் முன் கிழித்ததில் நாம் தமிழர் அமைப்புக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், அக்கட்சியின் தமிழர் விரோத போக்கிற்கு உடந்தையாக இருந்த திமுகவும் நடந்து முடிந்த  தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் நடந்த மிகப்பெரும் அமைதிப் புரட்சிக்கு காரணம் 2- ஜி காற்றலை ஊழல் விவகாரம் தான் என்பது போன்ற ஒரு தோற்றத்தை முன்வைத்து, தமிழீழ விவகாரமும், நாம் தமிழர் இயக்கம் மற்றும் தங்களின் அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவை எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயலலாம். இருப்பினும், தமிழக தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு தமிழருக்கும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அனைவருக்கும் தெரியும் தமிழகத்தில் நடந்த முடிந்துள்ள அமைதிப்புரட்சியில் தங்களின் பங்கும், நாம் தமிழர் இயக்கத்தின் பங்கும் என்னவென்பது.

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கயிருக்கும் இத்தேர்தலுக்கு பிறகு, தமிழீழ விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை உலகதமிழர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இலங்கையில் நடந்தது இன அழிப்பு போர் என்றும், அவ்வின அழிப்பை போரை முன்னெடுத்த மகிந்த இராஜபக்சே, கோத்தபய இராஜபக்சே மற்றும் இராணுவ உயரதிகாரிகள் போர் குற்றவாளிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றபட வேண்டும் என்பதே உலகத்தமிழர்களின் ஒருமித்த கருத்தாகும். அத்தீர்மாணம் நிறைவேற்றப்படுவதற்கு, தாங்களும் நாம் தமிழர் இயக்கமும் அழுத்தம் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன். எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால், உங்களையும் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகளையும் கண்டிப்பாக வந்து சந்திக்கின்றேன்.

எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய தம்பி செந்தமிழன் சீமான் அவர்களே, உங்கள் தமிழின சேவை என்றென்றும் தொடர எனது உள்ளம் நிறைந்த வாழ்துகள். நன்றி

இங்கனம்,
பேராசிரியர் இராமசாமி
பினாங்கு மாநில துணை முதல்வர், மலேசியா

நன்றி : நாம் தமிழர் இணையம்.

Image Hosted by ImageShack.us


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us