ஈழம்

ஈழம்

ஞாயிறு, 5 ஜூன், 2011

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

(குமுதம் இதழுக்காக சீமான் எழுதும் விறுவிறுப்பு அதிரடித் தொடர்)

சீமான் இப்போது ‘நாம் தமிழர்’ அமைப்பை கட்டமைக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். நடிகர் விஜயை இயக்கும் ‘பகலவன்’ பட வேலைகளும் அவரை பரபரவென சுழற்றி வருகிறது. இதற்கிடையில் குமுதம் வாசகர்களுக்காக சீமான் எழுதும் பரபரப்புத் தொடர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி அதிகாலை இரண்டு மணிவரை உறக்கம் இல்லை. புரண்டு புரண்டு படுக்கிறேன். இத்தனைக்கும் முதல் நாள் களைப்பில் படுக்கையில் விழுந்த கணமே நான் உறங்கியிருக்க வேண்டும். அசதியோ, களைப்போ என் கண்களில் தூக்கத்தை வார்க்கவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து என் அலுவலக மாடியில் இருக்கும் தனி அறைக்குப் போகிறேன். ‘யாரு?.’ என அதட்டுகிறது பாதுகாப்பாகப் படுத்திருக்கும் தம்பியின் குரல். அருகே வந்து முகம் பார்த்து, ‘அண்ணே, தூக்கம் வரலியா?’ என்கிறான் அந்தத் தம்பி. ‘இந்த அண்ணனுக்கு ஏதும் ஆகிடுமோன்னு நீ எப்படி உறங்காமல் கிடக்குறியோ... அதே மாதிரி இத்தனை நாள் அடை காத்த கனவுக்கு ஏதும் ஆகிடுமோன்னு பதற்றமா இருக்குப்பா...’ என்றேன்.

கவலை, கண்ணீர், ஏக்கம், எதிர்பார்ப்பு, வெற்றி, வீம்பு எதுவானாலும் அதனை நான் இறக்கி வைக்கும் இடம் என் அலுவலகத்தின் மாடியிலுள்ள தனியறைதான். மாவீரனாய் என் அண்ணன் அந்த அறையில் சிரித்துக் கொண்டிருப்பான். அவன் ஈழத்தில் எப்படி மரங்களாலும் கூரைகளாலும் அறை அமைத்திருந்தானோ... அதேபோலத்தான் என் தனி அறையையும் அமைத்திருந்தேன். என் ஆழ்மன ஆங்காரத்தைப் போலவே என் அறையையொட்டிப் படர்ந்திருந்த மாமரம் பெருங்காற்றில் இரைச்சலோடு அசைந்தது. அண்ணனின் முகத்தில் இருக்கும் சிரிப்பு ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டது. வெற்றி என்றால் நெற்றி வியர்வையைப் போல சுண்டி எறியவும், தோல்வி என்றால் தோளில் சுமக்கவும் கற்றறிந்த சிரிப்பு அது.

அண்ணன் எவ்வளவு பெரிய அசாத்தியன் என்பது அவன் முன்னால் சிறு உயிரியைப் போல் நான் சில்லிட்டுக் கிடக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது. ‘உனக்கான கடமையை நீ செய்து விட்டாய். விளைவு என்னவாக இருந்தாலும் எதிர்கொள்!’ மனதுக்குள் அண்ணன் தைரியம் வார்ப்பது போலிருந்தது.

சிறு மரக்கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட இருக்கையில் அமர்கிறேன். அதுதான் என் சிம்மாசனம். எனக்கு மிக நெருங்கிய பத்திரிகையாளர் தம்பி ஒருவரை அலைபேசியில் அழைக்கிறேன். “என்னண்ணே... இந்த நேரத்தில்?”

“ஒண்ணுமில்லப்பா... இன்னிக்கு தேர்தல் முடிவு. நான் மட்டும் இல்லை ஆயிரமாயிரம் அண்ணன் தம்பிங்க உக்கிரமும் ஒப்பாரியுமா கதறியிருக்கோம். இதையும் மீறி காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றாலும் நமக்கு அவமானம்டா தம்பி. அதான் இருப்புக் கொள்ளலை” பெருவலியோடு பிரசவத்துக்குத் துடிக்கும் ஒரு தாயைப் போல் என் காத்திருப்பைச் சொல்கிறேன்.

எதிர்முனையில் சத்தம் போட்டுச் சிரித்த அந்த தம்பி, “கருணாநிதி, ஜெயலலிதா கூட இந்த நேரத்தில் நிம்மதியா தூங்கிட்டு இருப்பாங்க. உங்க அளவுக்கு பதற்றமா இருக்க மாட்டாங்க. நிம்மதியா படுங்கண்ணே...” என்கிறான். தொடர்பைத் துண்டிக்கும் வரை அவனுடைய சிரிப்புச் சத்தம் கேட்கிறது.

அண்ணனின் சிரிப்பும் என் அன்பு மாமரத்தின் அசைவும் என்னை மர நாற்காலியிலேயே உறங்க வைக்கின்றன.

“அண்ணே...”

நான்கு மணி வரை விழித்திருந்தவன் எப்படி கண் அசந்தேன்? மணிகாலை 7.30 குளித்துவிட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்கிறேன். தம்பிகள் புடை சூழ நிற்கிறார்கள். 8, 9, 10 என கடிகார முட்கள் சுழலச் சுழலத்தான் எனக்கொரு உண்மை புரிந்தது. நான் மட்டும் அல்ல நாடி நரம்புகளில் தமிழன் என்கிற அடையாளத்தைச் சுமக்கும் அத்தனை பேரும் இன்றைய விடியலுக்காக தவிப்போடுதான் காத்திருந்திருக்கிறார்கள்.

சாதிமதக் கூறுகளைக் கூறுபோட்டு விட்டு தமிழன் என்கிற சங்கிலிக்குள் ஒன்று திரண்டு காங்கிரஸின் சங்கறுக்க எல்லோரும் காத்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.

நடந்து முடிந்தது எல்லோருக்கும் தேர்தல் களம்; ஆனால் நமக்கு அது யுத்தகளம். நாம் வீழ்த்தியது காங்கிரஸ் என்கிற கட்சியை அல்ல. ஆண்டாண்டு காலமாக தமிழனின் தலையில் மிதித்த கொடூர சக்தியை. காங்கிரஸின் செவிட்டில் அறைய அப்போதே தடி எடுத்தவர் தந்தை பெரியார். ‘காங்கிரஸ் ஒரு நாசகார சக்தி’ எனச் சொல்லி வேரறுக்க கங்கணம் கட்டியவர் அண்ணல் அம்பேத்கர். தேசத்துக்கு விடியலை வாங்கித் தந்த அண்ணல் காந்தியே ‘காங்கிரஸ் இனியும் தொடர்வது நாட்டுக்கு நல்லது அல்ல?’ என்றுதான் முழங்கினார். பேரறிஞர் அண்ணா காங்கிரஸை ஒழிப்பதையே கனவாகக் கொண்டார். 

ஆனால் அண்ணாவின் தம்பிகள் அதே காங்கிரஸுடன் கைகுலுக்கி நின்றார்கள். அண்ணாவின் தம்பிகள் செய்யத் தவறியதை அண்ணாவின் பேரப்பிள்ளைகள் இந்த அன்னை மண்ணில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம். சின்னத்தைத் தூக்கி வீசிவிட்டு எண்ணத்தில் ஒருமித்து நின்றதால்தான் இந்த வெற்றி!

பணத்தை வீசினால் இனத்தைக் காட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என தமிழர்களைத் தரக்குறைவாக நினைத்தவர்களுக்கான தண்டனை. உறவுகளைக் கருவறுத்தவர்களின் முகத்தில் நாங்கள் உமிழ்ந்த எச்சில்! கையறு நிலையில் கதறியவர்கள், வெறும் விரல்களாலேயே வீழ்த்திக் காட்டிய விந்தை! மொத்தத்தில் சாதுவின் மிரட்சி... சாய்க்கப்பட்டவர்களின் புரட்சி!

முதல் சுற்றிலேயே எதிரியின் முகத்தைப் பிளந்துவிட்டோம் உறவுகளே. காயங்களையும் தழும்புகளையும் மட்டுமே தாங்கி வளர்ந்தவர்கள் முதல்முறையாய் திருப்பி அடித்திருக்கிறோம். தமிழனின் சக்தி உச்சந்தலை ஆணியாய் காங்கிரஸை உலுக்கி இருக்கும் நிலையில் உங்களோடு நிறையப் பேச நினைக்கிறேன் உறவுகளே.

இந்த நேரத்தில் அண்ணன் காசி ஆனந்தனின் வரிகள் என் நெஞ்சுக்குள் உருமியாய் முழங்குகின்றன.

இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்
செய்யக் களம் வாடா, கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!
‘இருப்பாய் தமிழா நெருப்பாய்’

என்கிற வார்த்தைகளை என் தொடருக்குத் தலைப்பாக வைத்திருப்பது ஏன் தெரியுமா?

நெருப்பு ஒன்றுதான் எதனோடு சேர்ந்தாலும் அதன் சுயத்தை இழக்காமல் இருக்கும்.

நெஞ்சுக்கூட்டுக்கு நெருப்பு வைத்து மரித்த தமிழர்களின் வயிற்றில் தரித்த தமிழர்களாக நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நெருப்பாய் தகிக்கிறது!

(பொறி பறக்கும்)
நன்றி: குமுதம்

Image Hosted by ImageShack.us


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us