ஈழம்

ஈழம்

புதன், 21 செப்டம்பர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-08

அத்தியாயம்-08


தற்கொலைக் குண்டுதாரியின் போட்டோ லீக் ஆகியது!


மே மாதம், 24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்தது. அந்த நிமிடத்திலிருந்து தமிழக போலிசாரிடமிருந்து ராஜிவ்காந்தி கொலை வழக்குப் புலனாய்வுப் பணியை அதிகாரபூர்வமாக சி.பி.ஐ. தமது கரங்களில் எடுத்துக் கொண்டது.

ஆனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட 21ம் தேதி இரவு 10 மணிக்கும்,  24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கும் இடையே வழக்கு தமிழக போலிஸிடம் இருந்த காலப் பகுதியில்,   பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்று விட்டன.

சில தடயவியல் ஆய்வுகளை தமிழக போலிஸ் செய்து முடித்திருந்தது. அத்துடன், இந்த வழக்கின் மிக முக்கிய துப்புக்கள் அடங்கிய கேமராவும் (குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஹரிபாபு வைத்திருந்த கேமரா) , அதற்குள் இருந்த பிலிம் ரோலும் சில கைகள் மாறிவிட்டிருந்தன!

வழக்கு சி.பி.ஐ.யின் கன்ட்ரோலுக்கு வந்த உடனே, தமிழக காவல்துறை கிரைம் பிராஞ்சிலிருந்து வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் வந்து சேர்ந்தன.

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் சிதறிக் கிடந்த பச்சை-ஆரஞ்சு வண்ண சல்வார் கமீஸ் அணிந்திருந்த அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் பாகங்களை மார்ச்சுவரியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தது,  தமிழக காவல்துறை. அவற்றையும் தம்வசம் எடுத்துக் கொண்டது சி.பி.ஐ.

அந்தப் பெண்ணின் தலை, இடது கை, 2 தொடைகள், கால்கள் ஆகிய உடல் உறுப்புகள் ஓரளவுக்கு முழுமையாக இருந்தன. அத்துடன்,  அந்தப் பெண் அணிந்திருந்த,  குண்டுவெடிப்பில் கந்தலாகச் சிதறிப்போன துணிகளில் ஒட்டிக்கொண்டிருந்த தசைத் துண்டுகள் மற்றும்,  சிதறிய உடல் உறுப்புகள் ஆகியவையும்,  சிறிய பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவை அனைத்தையும், டி.என்.ஏ. (மரபணு) சோதனைக்காக அனுப்ப முடிவு செய்து,  ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு அணுக்கள் உயிரியியல் மையத்துக்கு அவற்றை அனுப்பியது சி.பி.ஐ.

இந்தியா முழுவதிலுமிருந்து முக்கிய புலனாய்வுகளின் டி.என்.ஏ. சோதனைகளுக்காக,  ஹைதராபாத்தில் உள்ள உயிரியியல் மையத்தையே அந்த நாட்களில் அணுகுவது வழக்கம்.  இதனால் அங்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் சாம்பிள்களின் முடிவு வந்துசேர, நீண்ட கால அவகாசம் எடுக்கும்.

இந்த கேசின் முக்கியத்துவம் குறித்து சி.பி.ஐ. ஏற்கனவே ஹைதராபாத் மையத்துடன் பேசியிருந்ததால்,  ரிசல்ட் உடனே வந்து சேர்ந்தது.

ரிசல்ட் என்ன? சிதறிய உடல் உறுப்புகளின் திசுக்களும், மின் ஒயர்கள் வைத்துத் தைக்கப்பட்ட துணியில் ஒட்டியிருந்த திசுக்களும் ஒரே நபருடையவைதான் எனச் சோதனையில் தெரியவந்தது.

அதாவது, பச்சை-ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் உடையணிந்து, கையில் சந்தனமாலை வைத்திருந்த அந்தப் பெண்தான் மனித வெடிகுண்டாக செயற்பட்டு ராஜிவ் காந்தியைக் கொன்றார் என்பது,  அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.  ஆனால் யார் அந்தப் பெண்?  அந்தப் பெண் பற்றிய எந்த அடையாளமும் (ஐடென்டிட்டி)  சி.பி.ஐ. குழுவிடம் இல்லை.

இந்த இடத்தில்தான், தமிழக போலிஸிடம் இருந்து சி.பி.ஐ. பெற்றுக் கொண்ட  ஹரிபாபுவின் கேமரா, ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றது.

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து தமிழக காவல்துறை  இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகவனின் உத்தரவின்பேரில் அந்த  சினான்  கேமரா எடுத்துப் பத்திரப் படுத்தப்பட்டது என்று எழுதியிருந்தோம்.  அதன் முக்கியத்துவம் புரியாமல் அதை எடுத்த ஒரு கான்ஸ்டபிள், சிறிது நேரம் அதைக் கையில் வைத்திருந்தார்.  அதை யாரிடம் கொடுத்துப் பத்திரப் படுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை.

காரணம்,  இப்படியான ஒரு தடயம் கிடைத்தால் அது தடயவியல் துறையின் ஆட்களிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும்.  ஆனால்,  குண்டு வெடிப்பு நடைபெற்ற பின்,  இந்த கேமரா எடுக்கப்பட்ட நேரத்தில்,  தடயவியல் துறையின் ஆட்கள் யாருமே அங்கு வந்திருக்கவில்லை.

கேமராவைச் சிறிது நேரம் தனது கையில் வைத்திருந்த கான்ஸ்டபிள், அதை  யாரிடம் கொடுத்தார் தெரியுமா? குண்டு வெடிப்பை போட்டோ எடுப்பதற்காக வந்திருந்த போலிஸ் போட்டோகிராபரிடம்! (கிடைத்தது கேமரா.  இவர் டிப்பார்ட்மென்ட் போட்டோகிராபர் என்ற லாஜிக்கில் கொடுத்திருக்கலாம்)

கேமராவில் அடங்கியிருந்த போட்டோக்களின் முக்கியத்துவமும் தெரிந்து, அது சரியான கைகளிலும் கொடுக்கப்பட்டிருந்தால், இந்த கேமரா பலத்த பாதுகாப்புடன் தடயவியல் துறை லேப்புக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.  ஆனால்,  போலிஸ் போட்டோகிராபர்,  கேமராவை  தனது பையில் போட்டுக்கொண்டு, தனது வேலையில் மூழ்கி விட்டார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் எடுக்க வேண்டிய போட்டோக்கள் அனைத்தையும் எடுத்து முடித்தபின்,  வீட்டுக்கு கிளம்பினார் போலிஸ் போட்டோகிராபர்.  போகும் வழியில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கேமராவின் நினைப்பு வரவே, அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக  அருகில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றுக்குள் நுழைந்தார்.

இது நடைபெற்றது 1991ம் ஆண்டு!  அந்த நாட்களில் தற்போது உள்ளதுபோல டிஜிட்டல் கேமராக்கள் ஏதும் கிடையாது. பிலிம் போட்டு படம் எடுக்கும் கேமராக்கள்தான் இருந்தன.  அவற்றினால் எடுக்கப்பட்ட போட்டோக்களை,  டெவலப் பண்ணி பிரின்ட் போட்டுக் கொடுக்க போட்டோ ஸ்டூடியோக்கள் ஆங்காங்கே இருந்தன.

அந்த நாட்களில் கலர் போட்டோ என்பதும் பெரிய விஷயம். இதனால், தமிழகத்தில் இருந்த அநேக போட்டோ ஸ்டூடியோக்கள், கறுப்பு-வெள்ளை பிலிமையே டெவலப் பண்ணும் வசதி பெற்றிருந்தன.  கலர் போட்டோ டெவலப் செய்ய பெரிய ஸ்டூடியோக்களுக்கு செல்ல வேண்டும்.

போலிஸ் போட்டோகிராபர் சென்ற உள்ளூர் ஸ்டுடியோவில், கலர் பிலிம்  டெவலப் செய்ய இயலாது என்று அந்த ஸ்டுடியோக்காரர், சொல்லிவிட்டார்.  டார்க் ரூமில் வைத்து பிலிம் ரோலை திறந்து பார்த்த ஸ்டுடியோக்காரர்,  அந்த பிலிம் ரோலில் சில பகுதிகள் வெளிச்சம் பட்டு வீணாகப் போய்விட்டன என்று தெரிவித்தார்.

அதன்பின்,  வெளிச்சம் பட்ட பகுதியைக் கத்தரித்துவிட்டு, எஞ்சிய பிலிம் ரோலை போலிஸ் போட்டோகிராபரிடம் அளித்தார்.

கேமராவும், பிலிம் ரோலும் மீண்டும் போலிஸ் போட்டோகிராபருடன்  பயணித்தது.  லோக்கல் போலிஸ் ஸ்டேஷனில் விசாரித்தபோது, அதை தடய அறிவியல் துறை லேபில் ஒப்படைத்து விடும்படி கூறினார்கள். ஆனால், அதுவும் உடனே அனுப்பப்படவில்லை.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதை அடுத்து,  இந்தியா முழுவதும் சட்டம்-ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலும், பல இடங்களில், கடையுடைப்புகள்,  தீவைப்புகள் என்று பதட்டமான நிலை இருந்தது.  காவல்துறை இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியிருந்தது.  அதனால்,  இந்த கேமராவை யாரும் கவனிப்பாரில்லை.

கொலை நடைபெற்ற மறுநாள்,  கொலையாளி யார் என்ற கேள்வியே இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஊடகங்கள் முதல், காவல்துறை வரை அனைவரும்,  கொலையாளி யார் என்று அறிய தலைகீழாக முயன்றுகொண்டிருந்தார்கள்.  டில்லியிலுள்ள மத்திய அரசும் இதே கேள்வியுடன்,  தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையே இந்த அத்தியாயத்துடன் தொடர்பற்ற மற்றொரு விஷயத்தையும் ஓரிரு வரிகளில் கூறுகிறோம். இதே கேமராவை வேறு சிலர் மும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தனர்!  அவர்கள், ராஜிவ் காந்தி கொலையைத் திட்டமிட்ட ஆட்கள்.

கொலை நடைபெற்ற இடத்தில் நடப்பவற்றை போட்டோ எடுக்க அவர்களால் அனுப்பப்பட்ட ஹரிபாபுவும் குண்டு வெடிப்பில் எதிர்பாராமல் இறந்து, கேமராவும் கொலை நடந்த இடத்தில் சிக்கி்க் கொள்ளவே அவர்கள் உஷாராகினர். அந்த கேமராவை எப்படியாவது மீட்க வேண்டும் என்று ஆட்களை அனுப்பி வைத்தனர்.  அவர்களால் அனுப்பப்பட்ட ஆட்களுக்கு,  இந்த கேமரா எங்கே போனது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

இவர்கள் அனைவருக்கும் பதில் கொடுக்கக்கூடிய கேமராவும் பிலிம் ரோலும்,  தமிழக காவல்துறையின் ஸ்டோரேஜ் தட்டு ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்தது.

மே 23ம் தேதி பிற்பகல் வரை, அந்த பிலிம் ரோல் தமிழகத் தடய அறிவியல் லேபுக்கு போய்ச் சேரவில்லை.

ஒருவழியாக லேபுக்கு போய்ச்சேர்ந்த பிலிம்ரோல், 23ம் தேதி மாலையில் டெவலப் செய்யப்பட்டது. முதலில் பிரிண்ட் செய்யப்பட்ட புகைப்படங்கள் சீலிடப்பட்டு, சோதனைக் கூடத்திலேயே வைக்கப்பட்டன. மொத்தம் 10 போட்டோக்கள் இருந்தன.

இந்த போட்டோக்களின் முக்கியத்துவம்,  லேபில் இருந்த ஒருவருக்குத்தான் முதலில் தெரிய வந்தது.

ஆனால், அதை காவல்துறை மேலதிகாரிகளுக்கு உடனே அறிவிக்க முடியாதபடி, அப்போது இரவாகிவிட்டது. இதனால், மறுநாள் காலையில்தான் இந்த போட்டோக்கள், மேலதிகாரிகளின் கைகளை முதல் முறையாகச் சென்றடைந்தன.


ஹிந்து பத்திரிகையில் வெளியான ‘எடிட் செய்யப்பட்ட’ போட்டோ
இந்த இடத்தில் யாரும் எதிர்பாராத மற்றொரு திருப்பம்!

அன்று இரவோடு இரவாக, இந்த போட்டோக்கள் லேபிலிருந்து வெளியே வந்தன.  அவை போய்ச் சேர்ந்த இடம், சென்னையிலிருந்த ஹிந்து ஆங்கிலப் பத்திரிகையின் அலுவலகம்!

மறுநாள் காலை ஹிந்து பத்திகையின் முதல் பக்கத்தில் இந்த போட்டோதான், பரபரப்பான டாபிக்!

பத்திரிகையில் பிரசுரமான போட்டோவில், கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண் ஒருவர்,  கையில் சந்தன மாலையுடன் நிற்கிறார். அவருக்கு இருபுறமும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் லதா கண்ணனும், அவரது மகள் கோகில வாணியும் (கோகிலா)  நின்றிருந்தனர்.

அந்தப் படத்துக்காக ஹிந்து பத்திரிகை கொடுத்திருந்த விளக்கத்தில் “ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை இரவு ராஜிவ் காந்தி வருகைக்காக மாலையுடன் காத்திருந்த இளம்பெண்தான் கொலையாளி எனச் சந்தேகிக்கப்படுகிறது!” என்று பிரசுரமாகியிருந்தது.

இதுதான் ஒரிஜினல் போட்டோ. மூவரிடமிருந்து சற்று விலகியே சிவராசன் நிற்கிறார்
அத்துடன், சல்வார் கமீஸ் பெண்ணின் உடல் உறுப்புகள் சேர்க்கப்பட்டிருந்த மற்றொரு படமும் ஹிந்து பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அந்தப் படத்திற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஹிந்து பத்திரிகையில் வெளியான முதலாவது போட்டோ பற்றிய முக்கிய விஷயம் ஒன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஹிந்துவில் பிரசுரிக்கப்பட்ட  போட்டோவில்,  சல்வார் கமீஸ் பெண்,  காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் லதா கண்ணன், அவரது மகள் கோகிலா ஆகியோரே இருந்தனர்.

அதன் ஒரிஜினல் போட்டோவில், வேறு ஒருவரும் இருந்தார்.  இந்த மூவருக்கும் சற்று தொலைவில்,  குர்தா பைஜாமா அணிந்திருந்த நபர் ஒருவர் நிற்பது ஒரிஜினல் போட்டோவில் இருந்தது. அவர்தான் சிவராசன்.

‘ஒற்றைக் கண் சிவராசன்’ என்று பின்னாட்களில் அறியப்பட்டவர்.  ராஜிவ் கொலைத் திட்டத்தின் சூத்ரதாரியும், அதை நிறைவேற்றி வைத்தவரும் இவர்தான் என்கிறது புலனாய்வு அறிக்கை.  இவரைப் பிடிப்பதற்குத்தான், சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழு, பின்னாட்களில் மிகவும் கஷ்டப்பட்டது.  அவர்களது கைகளில் அகப்படும் முன்னர் சிவராசன் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்.

ஹிந்து பத்திரிகை முதல்முதலில் இந்த போட்டோவை வெளியிட்டபோது, அதிலிருந்த சிவராசன் யார் என்பதோ, அவருக்கு உள்ள முக்கியத்துவமோ,  யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

குறிப்பிட்ட போட்டோவை ஹிந்து பத்திரிகையில் லே-அவுட் செய்யும் ஒருவரிடம் கொடுத்து,  அதை முதல் பக்கத்தில் பிரசுரிக்கும்படி கூறினார் அலுவலகத்திலிருந்த உதவி ஆசிரியர் ஒருவர். லே-அவுட் செய்பவர் போட்டோவைப் பார்த்தார். அதில் மூன்று பெண்கள் நெருக்கமாக நிற்கின்றனர்.  இந்த மூவருக்கும் சற்று தொலைவில்,  குர்தா பைஜாமா அணிந்திருந்த நபர் ஒருவர் நிற்கிறார்.

படம் அழகாக பிரசுரமாக வேண்டும் என்பதே லே-அவுட் செய்பவரின் ஒரே குறிக்கோள். அவர் என்ன செய்தாரென்றால், போட்டோவில் விலகி நின்றிருந்த குர்தா பைஜாமா அணிந்திருந்த நபரை படத்திலிருந்து வெட்டிவிட்டு, லே-அவுட் செய்தார்! அதுவே பத்திரிகையிலும் பிரசுரமானது!

போட்டோக்களை புலனாய்வு உயரதிகாரிகள் பார்ப்பதற்கு முன்பே, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பே, ஒரு போட்டோ ஹிந்து நாளிதழில் வெளியானது, புலனாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடையே ஒருவித பீதியை ஏற்படுத்தியது!

(09ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)


நன்றி.
விறுவிறுப்பு.கொம்


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us