அத்தியாயம்-11
சென்னை பத்திரிகையாளர், சுபா சுந்தரத்தைத் தொடர்பு கொண்டு, குர்தா-பைஜாமா நபரைப் பற்றி விசாரித்த போது, ஆரம்பத்தில் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை.
சென்னை பத்திரிகையாளர், சுபா சுந்தரத்தைத் தொடர்பு கொண்டு, குர்தா-பைஜாமா நபரைப் பற்றி விசாரித்த போது, ஆரம்பத்தில் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் சுபா சுந்தரமோ, “குர்தா- பைஜாமா நபர் எனது பார்ட்னர் அல்ல. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது” என்று கூறியபோதுதான், பத்திரிகையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதில் ஏதோ மர்மம் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அதையடுத்தே சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரை அவர் தொடர்பு கொண்டிருந்தார்.
அந்த நாட்களில் பத்திரிகையாளர் மத்தியில் சுபா சுந்தரம் பிரபலமானவர். பத்திரிகை உலபோடும், சினிமா உலகோடும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர். அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்புடனும், அவருக்கு இருந்த நெருக்கமான தொடர்புகள், பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.
சில பத்திரிகைகள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் யாருடைய பேட்டி தேவையென்றாலும், சுபா சுந்தரத்தை நாடும் அளவுக்கு அவர் புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர்.
இங்குள்ள மற்றொரு விஷயம், 1990ன் ஆரம்பத்தில் சுபா சுந்தரம் யாழ்ப்பாணம் சென்று திரும்பியிருந்தார். அவரை அங்கே அழைத்துச் சென்றவர்கள் விடுதலைப் புலிகள். அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் சந்தித்திருக்கிறார்.
இந்த விஷயங்கள் பல பத்திரிகையாளர்களுக்கு தெரிந்திருந்தது. இந்தத் தொடரில் குறிப்பிடப்படும் சென்னை பத்திரிகையாளருக்கும் தெரிந்திருந்தது. அத்துடன், சுபா சுந்தரத்தின் ஆள்தான் ஹரிபாபு என்பது அந்தப் பத்திரிகையாளருக்குத் தெரியும்.
சென்னை பத்திரிகையாளர் தெரிவித்த தகவல்கள் புலனாய்வுக் குழுவுக்கு புதிய கதவு ஒன்றைத் திறந்து விட்டன.
புலிகளுடன் நெருக்கமான சுபா சுந்தரத்தின் ஆள்தான் ஹரிபாபு. அந்த ஹரிபாபு, தனது நண்பராகவும், சுபா சுந்தரத்தின் பார்ட்னராகவும் அறிமுகப்படுத்திய குர்தா- பைஜாமா நபரை யாரென்றே தெரியாது என்கிறார் சுபா சுந்தரம். குர்தா- பைஜாமா நபர், ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் மாயமாக மறைந்து விட்டார்.
இந்தத் தரவுகள் எல்லாமே, சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளன.
குண்டுவெடிப்பில் இறந்த (கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும்) சல்வார் கமீஸ் பெண், இறந்த புகைப்படக்காரர் ஹரிபாபு, காணாமல்போன குர்தா- பைஜாமா நபர் ஆகிய மூவருக்கும்இடையே இருந்த தொடர்பு என்ன? அதைக் கண்டுபிடித்தாலே, கொலைக்கான காரணம் தெரியவந்துவிடும் என்று நம்பியது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு.
ஆனால், அது சுலபமாக இல்லை.
சல்வார் கமீஸ் பெண், குர்தா- பைஜாமா நபர் ஆகிய இருவரது பெயர்கள்கூட தெரியாது. அடையாளம் தெரிந்த ஒரே நபரான ஹரிபாபு இறந்துவிட்டார். சுபா சுந்தரத்துக்கு ஓரளவுக்கு விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், அவரை உடனடியான அணுக விரும்பவில்லை புலனாய்வுப் பிரிவு.
காரணம், சுபா சுந்தரம் மிக இலகுவில் இந்த விவகாரத்துக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று கூறிவிடலாம். “ஹரிபாபுவை மாத்திரம்தான் தெரியும், மற்றைய இருவரையும் தெரியாது. அவர்கள் ஹரிபாபுவின் நண்பர்களாக இருக்கலாம்” என்று கூறிவிட்டால், எதுவும் செய்ய முடியாது.
இதனால், சுபா சுந்தரத்தை உடனடியாக அணுகுவதில்லை என்றும், அவரைக் கண்காணிப்பது என்றும் முடிவாகியது.
கேஸில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், சென்னைக்கு வந்த சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரன், புலனாய்வுக்கான சில நெறிமுறைகளை அளித்தார். அவற்றை வைத்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஒரு செக்-லிஸ்ட்டை தயாரித்தது.
1. ராஜிவ் காந்தி கொலைக்கு நிச்சயமாக ஒரு நோக்கம் இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள், அல்லது சீக்கிய விடுதலை அமைப்புகள், அல்லது பிற தீவிரவாத அமைப்புகளுக்கு இதில் தொடர்பு உண்டா?
2. புலனாய்வாளர்களைவிட, சில பத்திரிகையாளர்களுக்கு அதிக விஷயங்கள் தெரிந்திருக்கிறது. புலனாய்வுப் பிரிவிடம் போட்டோ போகும் முன்னரே, ஹிந்து பத்திரிகையில் வெளியாகிறது. ஹரிபாபு, சுபா சுந்தரம் என்று பத்திரிகைத் துறையுடன் சம்மந்தப்பட்ட ஆட்களின் பெயர்கள் இதில் தொடர்பு படுகின்றன. அதற்கு காரணம் என்ன?
3. சென்னை, டில்லியிலிருந்து வரும் அனைத்துப் பத்திரிகைகளிலும் ராஜிவ் தொடர்பாக வரும் செய்திகளை படித்து ஆராய்ந்து, முக்கிய பகுதிகளைச் சேகரிக்க வேண்டும். தொடர் அம்சங்களுக்குரிய செய்திகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
4. ராஜிவ் கொலை நடந்த இடத்தில், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார் எடுத்த புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் ஏதாவது உள்ளனவா? இருந்தால் அவற்றைச் சேகரித்து, வழக்கு தொடர்பான தடயங்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.
5. குண்டுவெடித்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்களை, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி குற்றவாளிகளை அடையாளம் காணக்கூடிய ஏதாவது தடயம் உண்டா எனப் பார்க்க வேண்டும்.
6. கொலை நடந்த இடத்தில், சம்பவத்திற்கு முன்பும், சம்பவத்தின்போதும், சம்பவத்திற்குப் பின்னரும் இருந்த அனைத்து நபர்களையும் அடையாளம் கண்டறிந்து, அவர்கள் அங்கே இருந்ததற்கான காரணங்களை விசாரித்து அறிய வேண்டும்.
7. சம்பவத்துக்குச் சற்று முன்பும், பின்பும், சென்னையிலிருந்து பேசப்பட்ட சர்வதேச தொலைபேசி அழைப்புகள் மற்றும் சென்னைக்கு வந்த சர்வதேசத் தொலைபேசி அழைப்புகள் விவரத்தைக் கண்டறிந்து, இந்த அழைப்புகளுக்கும், ராஜிவ் காந்தி கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
இவைதான் அவர்கள் தயாரித்த செக்-லிஸ்டின் முக்கிய பகுதிகள்.
இவற்றின் அடிப்படையில், புலனாய்வு நடாத்துவதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒரு குழு, ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோ சகிதம், ஆட்களைச் சந்திக்க அனுப்பப்பட்டனர். ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களில் எத்தனை பேரிடம் விசாரிக்க முடியுமோ அத்தனை பேரிடம், குறிப்பாக காயமடைந்தவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்பது இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணி.
ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் அன்று இருந்த சிலரிடம் சொல்வதற்கு விவரம் இருந்தும், அவற்றை வெளியிட அஞ்சினர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களின் நிலை அதற்குத் தலைகீழாக இருந்தது. அவர்களை பத்திரிகையாளர்கள் மொய்த்தவண்ணம் இருந்தனர்.
‘குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் வழங்கிய பேட்டி’ என்ற தலைப்பில் தினம் ஒரு பேட்டியாவது பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்தப் பேட்டிகளில் சில நேரங்களில் மனம்போனபடி கட்டுக்கதைகள்கூட இருந்தன.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் பற்றிய செய்திகள்தான், பிரதானமாக இருந்தன. ‘இந்த நூற்றாண்டின் முக்கியத்துவம் வாய்ந்த படுகொலை’ என சிலர் வர்ணித்தனர்.
இந்தக் கொலையை யார் செய்திருக்கலாம் என்ற ஊகங்கள், கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிகைகளாலும் செய்யப்பட்டிருந்தன.
இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளியான ஆரம்பகால ஊகங்கள் எதுவுமே, விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி சீரியசாக குறிப்பிடவில்லை. ராஜிவ் காந்தி மீது சீக்கியர்களுக்கும் இருந்த வெறுப்பைப் பற்றியே அநேக வெளிநாட்டுப் பத்திரிகைகள் குறிப்பிட்டன.
சில பிரிட்டிஷ் பத்திரிகைகள், ஹிந்துத்துவ தீவிரவாதிகளையும் தங்கள் ஊகங்களில் குறிப்பிடத் தவறவில்லை. ‘பரம்பரையின் மரணம்’ என்ற தலைப்பில் ‘இண்டிபென்டெண்ட்’ பத்திரிகை ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது.
மொத்தத்தில், மிகக் குழப்பமான காலப்பகுதியாக அது அமைந்திருந்தது. பல்வேறு ஊகங்கள் நிலவின. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காயமடைந்தவர்களின் பேட்டிகள் தினந்தோறும் பத்திரிகைகளில் வெளியாகின. ஒவ்வொருவரும் இந்த வழக்கை வெவ்வேறு திசைகளுக்குத் திருப்பும் வகையில் கருத்துகளைக்கூறிக் கொண்டிருந்தனர்.
கொலைக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது எமக்குத் தெரியும் என்று கூறி அமெரிக்காவில் இருந்துகூட மர்மத் தொலைபேசி அழைப்புகள் வந்தன.
இந்தச் சமயத்தில்தான், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிரசுரிக்கப்படும் ‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசிய நபர், ராஜிவ் காந்தி கொலை குறித்துதமக்கு முக்கியமான விபரம் ஒன்று தெரியும் என்றார்.
புலனாய்வுக் குழுவினரைப் பொறுத்தவரை, அந்தத் தகவல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகதான் இருந்தது. அந்தத் தகவலோடு புலனாய்வின் தன்மையையே திசை திருப்பியது. அதை அடுத்த வாரம் பார்க்கலாமா?
(12ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)
நன்றி.
விறுவிறுப்பு.கொம்