ஈழம்

ஈழம்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-12

அத்தியாயம்-12


கிட்டுவுக்கு இதில் உள்ள தொடர்பு அநேகருக்கு தெரியாது!

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வில் சி.பி.ஐ. குழு சென்னையில் தடயங்களைத் தேடிக்கொண்டிருக்க, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்  பிரசுரிக்கப்படும்  ‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

தொலைபேசியில் பேசிய நபர்,  ராஜிவ் காந்தி கொலை குறித்து தமக்கு முக்கியமான விபரம் ஒன்று தெரியும் என்றார்.

“என்ன விஷயம்?” என்று அந்தப் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் கேட்டபோது, எதிர்பாராத பதில் ஒன்று வந்தது. “ராஜிவ் காந்தியைக் கொலை செய்தது எமது அமைப்புதான். நாங்கள் அந்தக் கொலைக்கு உரிமை கோரவுள்ளோம். உங்களுடைய பத்திரிகைக்குதான் இதை முதலில் தெரிவிக்கின்றோம்”

“உங்கள் அமைப்பு என்பது எது? அதற்கு என்ன பெயர்?”

“தமிழீழ விடுதலைப் புலிகள்” என்று கூறிவிட்டு எதிர்முனை நபர் போனை கட் பண்ணி விட்டார்.

‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் கிறுகிறுத்துப் போனார்கள். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விஷயம் குறித்து தமது பத்திரிகைக்கு எதற்காக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ரமென்டோ நகரில் இருந்து வெளியாகும் சிறிய பத்திரிகை அது. சக்ரமென்டோ நகரில் அந்த நாட்களில் வசித்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தது.

இது நிஜமான ஒரு உரிமை கோரலாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவு.

ஆனால், இதிலுள்ள ஆச்சரியமான விஷயத்தைக் கவனியுங்கள். இந்த தொலைபேசி அழைப்பு வந்த சில நாட்களின் பின்னரே, ராஜிவ் கொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு அறிவித்தது.

புலிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்பதை புலனாய்வுப் குழு எஸ்டாபிளிஷ் பண்ணும் முன்னரே, பல்லாயிரம் கி.மீ. தொலைவில் அமெரிக்காவில் உள்ள,  ஈழத்தமிழர் அதிகம் வசிக்காத பகுதியிலுள்ள, அதிகம் பிரபலமற்ற பத்திரிகை ஒன்றுக்க, கொலைக்கான உரிமை கோரல் செல்கின்றது!

மிகவும் ஆச்சரியமான சம்பவம் இது அல்லவா?

அதேபோல, மற்றொன்றையும் பாருங்கள்.

ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு, மே 21ம் திகதி மாலை 4 மணி அளவில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கேட்ட கேள்வி, “ராஜிவ் காந்தி உயிருடன் இருக்கிறாரா?” என்பது!

ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்னரே வந்த அழைப்பு என்பதால், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி, அதை ‘முட்டாள்தனமாக யாரோ உளறுகிறார்கள்’ என்று நினைத்து ஒதுக்கி விட்டார்.

ஒருவேளை கொழும்பு தூதரக அதிகாரி இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சின் ஊடாக மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தால், ஒருவேளை ராஜிவ் காந்திக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கும்.

இதுவும் ஆச்சரியமான ஒரு சம்பவம் அல்லவா?

மற்றொன்றையும் பாருங்கள். ராஜிவ் காந்தி கொலை நடந்த மறுநாள் காலையே,  ஸ்ரீலங்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை, “கொலையின் பின்னணியில் இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம்தான்” என்று அடித்துக் கூறியது.

விசாரணையே தொடங்குமுன் இந்தப் பத்திரிகைக்கு எப்படித் தெரியும்?

பின்னாட்களில் குறிப்பிட்ட பத்திரிகையை அதுபற்றி விசாரித்த போது, ராஜிவ் காந்தி கொலையிலும், தற்கொலைத் தாக்குதல் (மனித வெடிகுண்டு) நடந்துள்ளதால், இக்கொலையின் பின்னணியில் புலிகள் இருக்கக் கூடும் என்ற ஊக அடிப்படையில் செய்தி வெளியிட்டதாகக் கூறிவிட்டார்கள்.

ஆனால், செய்தி எழுதப்பட்ட விதம், ஊக அடிப்படையில் இருக்கவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட தன்மையிலேயே இருந்தது! மற்றொரு விஷயம், குறிப்பிட்ட கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை, எந்தவொரு காலத்திலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பத்திரிகையாக இருக்கவில்லை.

இதுவும் ஆச்சரியமான சம்பவம் தான், இல்லையா?

இத்துடன் தொடர்பான வேறு ஒரு விஷயத்தையும் இங்கே கூறலாம். இது தனி ட்ராக்கில் ஓடிய விவகாரம் என்பதால், தொடரில் இருந்து சற்றே விலகிச் சென்றுவிட்டு மீண்டும் வரலாம், வாருங்கள்.

ராஜிவ் காந்தி கொலை நடைபெற்ற தினத்துக்கு மறுநாள், லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சர்வதேசச் செயலகத் தலைவர் சதாசிவம் கிருஷ்ணகுமார் (கிட்டு), ”இதில் தங்கள் இயக்கத்துக்குத் தொடர்பு இல்லை” என்று அறிவித்தார்.

கிட்டு கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகும் முன்னர், இந்திய உளவுத்துறை றோவுக்கு, கிட்டுவால் நேரில் கூறப்பட்டிருந்தது. அதை றோவும் நம்பியது. கிட்டுவின் கூற்றை றோ நம்புவதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

அதுதான், வில்லங்கமானது!

இந்த இடத்தில் மற்றொரு உண்மையையும் கூறிவிடலாம்.  இந்திய உளவுத்துறைக்கு ஏற்பட்ட மகத்தான சறுக்கல் என்பதால், நாம் கூறப்போகும் விஷயம் பல வருடங்களாகவே அடக்கி வாசிக்கப்பட்டது.

ராஜிவ் கொல்லப்படுவதற்கு முன்பே, விடுதலைப் புலிகள் அமைப்பில் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமாக இருந்த தளபதி கிட்டு. அவரது பிரபல்யம் உச்சத்தில் இருந்தபோது, அவர்மீது, யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டுவீச்சு ஒன்று நடைபெற்றது. (ராணுவமோ, வெளி ஆட்களோ செய்யவில்லை. புலிகள் இயக்கத்தின் உள் விவகாரம் அது. அதைப்பற்றி இங்கே வேண்டாம்)

அதில் காயமடைந்த கிட்டு தனது ஒரு காலை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின் மருத்துவச் சிகிச்சைக்காக அவர் சென்ற இடம், தமிழகம்! தமிழகத்தில் கிட்டு தங்கியிருந்த காலத்தில், அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது இந்திய உளவு அமைப்பு றோ.

ஒரு கட்டத்தில், கிட்டுவை தமது ஆளாகவே நினைத்துக் கொண்டது றோ. இதில்தான் ஏற்பட்டது இந்திய உளவுத்துறையின் மகத்தான சறுக்கல். கிட்டுவை தமது நிரந்தர இன்போர்மராக வேலையில் சேர்த்துக் கொண்ட றோ, அவருக்கு மாதா மாதம் சம்பளமும் வழங்கியது.

கிட்டுவை லண்டனுக்கு அனுப்புவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு செய்தபோது, றோவுக்கும் அதில் சந்தோஷமே. புலிகளின் வெளிநாட்டு டீலிங்குகள் பற்றிய முழு விபரங்களும் கிட்டு மூலமாகத் தமக்கு தெரியவரும் என்று நினைத்துக் கொண்டது இந்திய உளவுத்துறை.

கிட்டு லண்டனில் இருந்தபோதும், றோவினால் மாதாமாதம் வழங்கப்பட்ட சம்பளம் அவருக்கு போய்க் கொண்டு இருந்தது.

இப்படியான நிலையில்தான், ராஜீவ் காந்தி கொலை நடைபெற்றது!

இந்திய உளவுத்துறை றோ உடனடியாகவே, தமது இன்போர்மர் கிட்டுவைத் தொடர்பு கொண்டது. ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டார் றோவில் கிட்டுவுக்கான ஹான்டிலர். தான் தகவல் அறிந்து சொல்வதாக கூறிய கிட்டு, அடுத்த சில மணி நேரத்தின் பின், றோவின் அதிகாரியை போனில் தொடர்பு கொண்டார்.

“நான் விசாரித்து விட்டேன். இதில் புலிகளுக்கு எந்த தொடர்பும் கிடையாது” என்றார் கிட்டு.

“இது மிகவும் முக்கியமான விஷயம். மீண்டும் ஒருமுறை உங்கள் தொடர்புகளிடம் நன்றாக விசாரியுங்கள். ராஜிவ் கொலையை, இந்தியாவில் தங்கியுள்ள  புலிகளின் உறுப்பினர்கள் யாராவது செய்திருப்பார்களா என்று கேட்டுப் பாருங்கள்” என்று  வற்புறுத்தினார் றோ அதிகாரி.

அதற்கு கிட்டு கூறிய பதில்தான் கிளாசிக்!

“நான் விசாரித்ததே புலிகளின் தலைமையிடம்தான் (பிரபாகரன்) அவரது அனுமதி இல்லாமல் இப்படியான பெரிய காரியம் ஏதும் புலிகள் இயக்கத்தில் நடக்க முடியாது. இதில் புலிகளின் தொடர்பு இல்லை என்று அவர் அடித்துக் கூறுகின்றார் தலைவர். உண்மையைச் சொல்லப் போனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு அவரே அதிர்ந்து போய் இருக்கிறார்” என்பதே கிட்டு கூறிய பதில்!

கிட்டுவின் பதிலுடன், ராஜிவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்று  கன்வின்ஸ் ஆகியது றோ.

சி.பி.ஐ.யின் விசேட புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடங்கியபோது, இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் உளவுத்துறை என்ற வகையில் றோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு றோ கூறிய பதில், “இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லை” என்பதே!

இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். எமது தொடருக்கு அவ்வளவுதான் தேவை. ஆனால், கிட்டு விவகாரம் இத்துடன் முடிவடையவில்லை.   மிகுதியையும் ஓரிரு வரிகளில் கூறிவிடுகிறோம்.

தமது ‘இன்போர்மர்’ கிட்டுவின் சேவையில் முழு திருப்தியடைந்த றோவின் கண்கள் எப்போது திறந்தன என்றால், ராஜிவ் கொலை வழக்கில் புலனாய்வு விரிவடைந்து செல்ல, அதில் சிவராசனின் (குர்தா-பைஜாமா நபர்) பங்கு தெரியவந்த போதுதான்! (சிவராசனுக்கும், கிட்டுவுக்கும் உள்ள தொடர்பு பற்றி, இந்த தொடரின் பின் பகுதியில் விளக்கமாக கூறுவோம்)

அப்போதுதான் றோவுக்குப் புரிந்தது, கிட்டு தம்மை நன்றாக ஏமாற்றியிருக்கிறார் என்ற விஷயம். கிட்டு நிஜமாகவே தமது விசுவாச இன்போர்மராக இருக்கவில்லை, அப்படி இருப்பதுபோல நடித்தார் என்று புரிந்து கொண்ட றோ, கிட்டுவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

இந்த இடத்தில் நிறுத்தி விடுவோமா? வேண்டாம், இன்னமும் ஒரேயொரு வாக்கியம்.

கிட்டு தம்மை ஏமாற்றிய வடுவை நீண்ட காலம் மனதில் வைத்திருந்த றோ, பின்னாட்களில் என்ன செய்தது? கிட்டு கப்பல் மூலம் வன்னி செல்கையில் இந்து சமுத்திரத்தில் வைத்து இந்திய கடற்படையால் தடுக்கப்பட்டார். நடுக்கடலில் நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகளின்பின்,  கிட்டு சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க வைத்து, கப்பலையும் அழித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், றோவும் முக்கிய பங்கு வகித்தது.

சரி. இனி மீண்டும் சரியான ட்ராக்குக்கு வருவோம்.

ராஜிவ் கொலையில் தமக்கு சம்மந்தம் இல்லை என்று, விடுதலைப் புலிகள் அமைப்பு கிட்டு மூலம் தெரிவித்திருந்தது.  ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.எல்.எப்.) தலைவர் அமானுல்லாகான், ராவல்பிண்டியிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் தங்கள் இயக்கத்துக்குத் தொடர்பு இல்லை என மறுத்தார். இதேபோல, சீக்கிய தீவிரவாதத் தலைவர் ஜகஜித்சிங் சௌகான், இந்தக் கொலை தமது அமைப்பின் வேலை அல்ல என்று, லண்டனிலிருந்து அறிக்கை விடுத்தார்.

இந்தக் கட்டத்தில், எல்லோருக்கும் குழப்பம். ராஜிவ் காந்தியை யார்தான் கொலை செய்தது?

இப்படி குழப்பமான இடத்தில் மீண்டும் காட்சிக்குள் வருகின்றது ‘தி ஹிந்து’ பத்திரிகை. ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன், அவரை ரகசியமாகச் சந்தித்த ஒருவரைப் பற்றி செய்தி வெளியிட்டு, மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, ஸ்கூப் அடித்தது தி ஹிந்து...

(13ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)



நன்றி.
விறுவிறுப்பு.கொம் 

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us