அத்தியாயம்-14
சி.ஐ.ஏ.தான் ராஜிவ்வை கொலை செய்தது என்ற குற்றச்சாட்டு!
ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்பது பற்றி பத்திரிகைகள் எல்லாம் முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, மற்றொரு பத்திரிகையாளர் டீம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்குச் சென்று, ராஜிவ் கொலையில் உபயோகிக்கப்பட்ட வெடிப்பொருள் பற்றி பேட்டி கண்டது.
பேட்டி அளித்த வி்ஞ்ஞானி, “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டு இருந்தாலும் பயனில்லை. காரணம், இந்தக் குண்டில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிப்பொருளை, மெட்டல் டிடெக்டர் சோதனையில் கண்டுபிடிக்க முடியாது” என்று கூறியதாக அந்தப் பேட்டி வெளியாகியது.
இந்தப் பேட்டி முற்று முழுதாக ஒரு விஷயத்தை வலியுறுத்துவதாகவே இருந்தது. அது என்னவென்றால், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது பாதுகாப்பு குறைபாடு காரணமாக அல்ல. எவ்வளவு டைட்டான செக்யூரிட்டி போடப்பட்டு இருந்தாலும், மனித வெடிகுண்டு ராஜிவ் காந்தியை நெருங்குவதை தடுத்திருக்க முடியாது”
விஷயம் தெரிந்தவர்களுக்கு, இந்த பேட்டி மத்திய ஏஜென்சி ஒன்றின் ஏற்பாட்டில் வெளியானது என்பது புரிந்து போனது.
“பிளாஸ்டிக் ஒயரினால் மின்சாரம் கொடுக்கப்பட்ட 5 கிலோ டி.என்.டி. வெடிப்பொருள் சக்தி வாய்ந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில், ஒரு நபரையும், அவரைச் சுற்றி சில மீட்டர் தொலைவில் உள்ள சகல ஆப்ஜெக்ட்களிலும் சேதத்தை விளைவிக்க, இந்த அளவு வெடிபொருள் போதுமானது” என்றும் அந்தப் பேட்டியில் விஞ்ஞானிகள் கூறினார்கள்.
“ராஜிவ் காந்தியைக் கொன்ற வெடிகுண்டைத் தயாரிக்க உபயோகித்த வெடிப்பொருளை மைக்ரோ சிப்பில் உள்ள கருவி ஒன்றால் எளிதாக இயக்கி வெடிக்கச் செய்யலாம்” என்றும் தெரிவித்த இந்தப் பேட்டி ஹைலைட் பண்ணிய மற்றொரு விஷயம், ‘டிஸ்கவர்’ என்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில், உலகம் முழுவதும் பயங்கரவாத அமைப்புகள்தான் இந்த ரகத்திலான வெடிப்பொருளைப் பயன்படுத்துவதை விரும்புகின்றனர்”
குறிப்பிட்ட சஞ்சிகைக் கட்டுரை, லெபனானில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றியது. அந்தத் தாக்குதல்களில் நேர்ந்த பல்வேறு உயிரிழப்புகள், போராளி அமைப்புகளின் தற்கொலைக் குண்டுதாரிகளால் விளைந்துதான்.
இந்தப் பேட்டி, இதில் ‘வெடிகுண்டு தயாரிப்பில் மிகவும் தேர்ச்சி பெற்ற தீவிரவாத இயக்கம் ஒன்றைத் தவிர வேறு யாராலும் இதைச் செய்திருக்க முடியாது’ என்பதை, விஞ்ஞானிகளின் வார்த்தைகளுடன் வலியுறுத்தியது. கிட்டத்தட்ட ஒரு ‘ஒப்பினியன் செட்டிங்’ ரகத்திலான பேட்டி அது. மிகத் திறமையாக டிசைன் பண்ணப்பட்டிருந்தது.
பேட்டியில் குறிப்பிடப்பட்ட சகல டிஸ்கிரிப்ஷனுடன் தமிழகத்தில் அப்போது நடமாடிக்கொண்டிருந்த ஒரேயொரு தீவிரவாத இயக்கம், விடுதலைப்புலிகள் இயக்கம்தான்!
இதற்கிடையே கொழும்புவில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையில் மற்றொரு செய்தி வெளியாகியிருந்தது. “இரு மாதங்களுக்கு முன், மட்டக்களப்பு நகரில் (தமிழீழத்தின் கிழக்கு மாகாணம்) சிறப்பு அதிரடிப்படை ரோந்து சென்றபோது, நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு, ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அதே பாணியில்தான் இருந்தது.
மட்டக்களப்பில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு டிரான்ஸ்சிஸ்ட்ர் வானொலி அளவிலான ரிமோட் கண்டரோலை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினர். அதைப் போன்ற ரிமோட்டை ஸ்ரீபெரும்புதூரிலும் பயன்படுத்தியிருக்கக் கூடும். இந்த வகையில் பார்த்தால், ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னணியில் இருந்தது விடுதலைப்புலிகள் இயக்கம்தான் என்று ஸ்ரீலங்கா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினார்கள்” என்று கொழும்புச் செய்தி கூறியது.
இந்தச் செய்தியை மொழிபெயர்த்து ஒரு தமிழக பத்திரிகை வெளியிட, மற்றைய பத்திரிகைகள் அதை ஆதாரமாக வைத்து மேலதிக செய்திகளை வெளியிட்டன. சிறிய அளவிலான பிளாஸ்டிக் வெடிப்பொருளை பூங்கொத்தில் எளிதாக மறைத்து வைக்கலாம். சுமார் 1000 மீற்றர் தொலைவிலிருந்து டிரான்ஸ்சிஸ்ட்ர் வானொலி அளவிலான ரிமோட் மூலம் இயக்கிக் குண்டு வெடிக்கச் செய்யலாம் என்றும் செய்தி வெளியிட்டன.
இந்த மீடியா அலை, ராஜிவ் காந்தியின் கொலையின் பின்னணியில் இருந்தது விடுதலைப்புலிகள் இயக்கம்தான் என்ற ஒரு தோற்றத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக ஏற்படுத்தியது.
இதற்கிடையே சென்னையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை, மற்றொரு ஸ்கூப் அடித்தது.
“ராஜிவ் காந்தியைக் கொலை செய்த மனித வெடிகுண்டு பெண், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகரின் விருந்தினர்” என்றது அந்தப் பத்திரிகை. “மரகதம் சந்திரசேகரின் இல்லத்தில்தான் அப்பெண் தங்கியிருந்தார். மரகதம் சந்திரசேகரின் மகள் லதா பிரியகுமார், இலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை மணந்துள்ளார்” என்றும் அந்தச் செய்தி கூறியது. (பிரிய குமார என்பது, பொதுவான ஒரு சிங்களப் பெயர்)
இதை மரகதம் சந்திரசேகரின் மகள் லதா பிரியகுமார் மறுத்தார். இந்த லதா பிரியகுமார்தான், ராஜில் கொலை நடந்த தினத்துக்கு சிறிது நாட்களின்பின் தமிழகத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்.
இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும். லதா பிரியகுமார் கூறியது உண்மைதான். உண்மையில் லதா பிரியகுமாரின் கணவர் இந்தியர்தான். ஆனால், அவர்களது குடும்பத்துக்குள் ஒரு சிங்கள கனெக்ஷன் இருந்தது வேறு விஷயம். லதாவின் சகோதரரின் பெயர் லலித். இவர் ஒரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்திருந்தார்.
குறிப்பிட்ட பத்திரிகை இதைத்தான் சொல்ல வந்திருக்க வேண்டும். ஆனால், அப் பத்திரிகையில் நிருபர்கள் தங்களது ‘புலனாய்வு’ அவசரத்தில் தவறான தகவலை கட்டுரையாக்கி விட்டனர். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் சாதாரணமாக விசாரிக்கக்கூட இல்லை.
இதனால், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பமும், பிரச்சினைகளும் ஏற்பட்டன.
எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல மற்றொரு செய்தி, சென்னைப் பத்திரிகை ஒன்றில் மே 25ம் தேதி வெளியானது. ‘கொலையாளியின் அடையாளத்தை மறைக்க முயற்சிகள்’ என்பது அந்தச் செய்தியின் தலைப்பு.
“ராஜிவ் காந்தி கொலை வழக்கில் புலனாய்வு மேற்கொண்டுள்ள சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழு, கொலைக்குக் காரணமானவரின் அடையாளத்தை மறைக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கொலையாளி யார் என்று தெரிந்தால், 1984ல் (மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்) நடந்ததைப் போன்ற பெரும் கலவரம் தமிழகத்தில் வெடிக்கும் என்பதே இதற்குக் காரணம்” என்றது அப் பத்திரிகைச் செய்தி.
இந்தக் குழப்பங்கள் போதாது என்று இன்னொரு பத்திரிகை, ஸ்ரீலங்கா பற்றிய தமது ‘மிகச் சுமாரான’ அறிவுடன், “யார் இந்த பேகம்?” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது! அவர்களது நியூஸ் ஸ்டோரியின்படி, பேகம் என்று அழைக்கப்படும் சிங்களப் பெண்தான் கொலையாளி (ஸ்ரீலங்காவில் சிங்களப் பெண்கள் பேகம் என்று அழைக்கப்படுவதில்லை)
ஓர் இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட அப்பத்திரிகை, “மெல்லிய உடல்வாகுடைய, 20 வயதைத் தாண்டாத இந்தப் பெண்தான், சந்தன மாலையைக் கையில் ஏந்தியவாறு, ராஜிவ் காந்தி அருகே லதா கண்ணனுக்கும், கோகிலாவுக்கும் நடுவில் நின்றிருந்தார். இந்த மூவரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்துவிட்டனர்.
இங்குள்ள (தமிழகத்தில்) இலங்கைத் தமிழர்களிடம் இந்த புகைப்படத்தைக் காட்டியபோது, அவர்கள் இந்தப் பெண் ஸ்ரீலங்காவின் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்த சிங்களப் பெண்களின் முகச் சாயலுடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டது அப்பத்திரிகை.
தமிழ் பத்திரிகைகள் இப்படி கன்னித்தீவு ஸ்டைலில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்க, ஆங்கிலப் பத்திரிகைகள் ஓரளவுக்கு சென்ஸ் ஏற்படுத்தக்கூடிய ஊகங்களை செய்தியாக்கிக் கொண்டிருந்தன.
ஒரு ஆங்கிலப் பத்திரிகை, ராஜிவ் காந்தி படுகொலையில், ‘அன்னியத் தலையீடு’ என்றது. “பிளாஸ்டிக் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஜேர்மனியில் மட்டுமே உள்ளது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ‘வெயிஸ்ட் ஜாக்கெட்’ வெளிநாட்டில் கைதேர்ந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது” என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு ஆங்கிலப் பத்திரிகை, “சி.ஐ.ஏ.யின் கைவரிசையா?” என்று கேட்டது. ‘கொடூரப் படுகொலைக்குப் பின்னணியில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.’ என்று அச்செய்திக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
“பாரதிய ஜனதா கட்சிக்கு நன்மை செய்வதற்காகவே (!) சி.ஐ.ஏ. ஜாதி, மத, பிராந்திய அரசியலை வைத்து சித்து விளையாட்டு நடத்துகிறது. அரசியல் சாராத நடுத்தர வகுப்பு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஜாதி, மத, வன்முறைகள் இல்லாத சென்னைக்கு அருகே உள்ள இடத்தைப் படுகொலை செய்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. இதைச் செய்தது சி.ஐ.ஏ. மட்டுமாகத்தான் இருக்க முடியும்” என்றும் அந்தச் செய்தி புதுவிதமான லாஜிக் ஒன்றைக் கூறியது.
(சி.ஐ.ஏ.யை இழுத்து எழுத வேண்டும் என்றால், அதை நம்பும் வகையில் வேறு விதமாக எழுதியிருக்கலாம் என்பது, பாவம் இந்தப் பத்திரிகைக்கு தெரிந்திருக்கவில்லை. ராஜிவ் கொலை பற்றி அப்படியொரு அட்டகாசமான கட்டுரை பிரிட்டிஷ் பத்திரிகையான ‘தி கார்டியனில்’ வெளியாகியது)
இத்தகைய தகவல்கள், கற்பனைகள், தனிப்பட்ட வெறுப்புகளுடன் வெளியான பத்திரிகைச் செய்திகளுக்கு இடையே, ராஜிவ் காந்தி கொலை வழக்கு புலன் விசாரணை தொடங்கியது. பத்திகைச் செய்திகளால் ஏற்கனவே குழப்பத்தின் உச்சியில் இருந்த பொதுமக்களுக்கு சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு ஒரு வேண்டுகோள் விடுத்தது.
இதுதான், ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றி முதன்முதலில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.
மே 29ம் தேதி (ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டு 8 நாட்களுக்குப் பின்) தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக பொதுமக்களுக்கு சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு விடுத்த வேண்டுகோள் என்ன? அதை அடுத்த வாரம் பார்க்கலாமா? …..
(15ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)
நன்றி.
விறுவிறுப்பு.கொம்