ஈழம்

ஈழம்

சனி, 5 நவம்பர், 2011

மாவீரர் நாளின் பிரமாண்டமே எமது பலத்தின் வெளிப்பாடு!

மாவீரர் நாள், உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்நாளில் புதிதாக இணைக்கப்பட்ட ஒரு பாரம்பரிய நினைவுநாள். தம்முயிர் தந்து எம்முயிர் காத்த தெய்வங்களை பூசிக்கும் நாள். மானம் பெரிதென்று கண் முன்னால் களமாடி காவியமான எம் உறவுகளின் நினைவுநாள்.
மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும், தமிழன் இன்று புலமெங்கும் பணத்தோடும் செல்வத்தோடும் வாழ்கிறான் என்றால் அதற்கு அடிப்படை காரணம் எம் மண் மீதான அடக்குமுறையும் அதை எதிர்த்து களமாடிய மாவீரருமே. அதனால் நாம் அவர்களை என்றைக்கும் மறக்கமுடியாது, மறந்தால் நாம் மனிதரில்லை!. தமிழீழம் கிடைத்த பிறகும் என்றைக்கும் எம் மக்கள் மறக்க முடியாத ஒரு மாபெரும் நாள்.

நாம் எவ்வளவு எம் மாவீரரை நேசிக்கிறோம் என்பதை, நாம் எவ்வளவு உறுதியோடு அவர் பாதையில் பயணிக்கிறோம் என்பதை இந்த நாளில் நாம் ஒன்றாக நின்று எமது பலத்தை, உலகுக்கு எடுத்து காட்டுதல் அவசியம்.

அதுவும் மண்ணை கைப்பற்றியாகிவிட்டது, போராட்டம் தோற்றுவிட்டது என சிங்களம் கொக்கரிக்கும் நாளில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் நாள். இந்த நாளில்தான் எமது உறவுகள் எல்லோரும் கேட்காமலே கூடுவது வழமை. அதன் பிரமாண்டத்தை காட்ட நாங்கள் பிரித்தானியாவில் நடத்தும் இடம் பிரித்தானியாவின் மிகப்பெரிய உள்ளக அரங்கான எச்செல் என்பது எமது பலத்திற்கு கிடைக்கும் ஒரு பெரும் அங்கீகாரம். சிங்கள அரசு பலமுறை தடை செய்ய கேட்டும் அதில் கூடும் தமிழர்களின் பலத்தை பார்த்து பிரித்தானிய அரசு அந்த நிகழ்வு மேல் கைவைத்து கிடையாது.

அதை விட பிரித்தானிய அரசியல்வாதிகள் என்றைக்கும் போட்டிபோட்டு பேசவரும் ஒரு நிகழ்வாக இது அமைந்தது என்பதுவும் உண்மை. 2009 இல் இன்டிபென்டன் பத்திரிகையின் நிருபர் என்னிடம் கேட்டார் "போராட்டம் தோற்று விட்டது நீங்கள் இம்முறையும் எச்செல் செல்வீர்களா? மக்கள் வருவார்களா?" என்று. நான் கூறினேன் "போராட்டம் என்பது ஆயுதம் தூங்கி சண்டை பிடிப்பது மட்டுமல்ல, இங்கே நாங்கள் பல வழிகளில் போராடுகிறோம். அதில் முக்கியமான போராட்டம் ஆயுத போராட்டமாக இருந்தது ஆனால் நீங்கள் உண்மையிலேயே நினைகிறீர்களா முப்பத்தேழு வருட போராட்டம், இப்படியே அடங்கி விடும் என்று? "என்னுடைய செவ்வியை முடித்துவிட்டு மாவீரர் நாளை பார்க்க வந்த அந்த நிருபர் கடைசியில் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்" கூட்டத்தை பார்த்தேன் வாயடைத்து போனேன்! தமிழர்கள் விடப்போவது இல்லை என்பது தெளிவு".

இப்படி ஊடகங்கள் தொட்டு பிரித்தானிய அரசாங்கம் வரை வாயடைத்துப் போன அந்த நிகழ்வின் பலமே விதையாகிப் போன மாவீரர்களைத் தமது நெஞ்சங்களில் சுமந்து வந்து அஞ்சலி செய்யும் மக்கள் கூட்டம்தான். அது என்றைக்கும் குறையவில்லை. ஆனால் இன்று அந்த பலம் தலைமைகளின் கருத்து வேறுபாட்டால் சிதைவடையும் நிலைமை. தீர்கதரிசனம் அற்ற காலத்தின் தேவையை உணராத, மாவீரர் நாளில் முக்கியத்துவத்தை காணத் தவறுதலின் வெளிப்பாடே அதை பல இடங்களில் நடாத்த முற்படுதல். ஆனால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பெரியோர்கள் உணர்வாளர்கள் இளையோர் நிச்சயம் இதன் முக்கியத்துவத்தை உணரவேண்டும்.

ஒரே இடத்தில நடாத்தவேண்டிய தேவையும் உணரப்பட வேண்டும். தம்முயிரை தந்தவரின் நினைவு நாளில் எமக்கு கருத்து வேறுபாடு ஏற்படுவது நிச்சயம் தவறே. அதை விட கண்ணுக்குள் என்னை விட்டு பார்த்து கொண்டு இருக்கும் சிங்களத்துக்கு இது ஒரு தீனியாகே அமையும். நாளையே, புலத்து தமிழ் மக்கள் தமிழீழத்தை கைவிட்டு விட்டார்கள், மாவீரர்களை மறந்து விட்டார்கள், முன்னர் பெருமளவில் வந்தவர்கள் இன்று சிறு குழுகளாகி விட்டனர் என் பிரச்சாரம் செய்வதற்கு வழிவகுக்கும்.

கட்டமைப்புக்களின் வேறுபாட்டை மறந்து மக்களாக நாங்கள் ஒருமுகப்பட்டு நிகழ்வுக்கு வந்து எமது பலத்தை உலகுக்கு காட்ட முன்வரவேண்டும். பலவித பிரச்சாரங்கள் விவாதங்கள், கருத்து மோதல்கள் இணையமூடாக வந்தாலும் நாம் ஒரு முகப்பட்டு எமது அறிவை வைத்து முடிவு எடுக்க வேண்டும். ஒரு இடத்தில் பிராமாண்டமாக நடாத்துதலின் தேவை உணரப்படவேண்டும். அதன் முக்கியத்துவம் உணரப்பட்டு வேறு கதைகளை பார்க்காமல், தெரிந்தவர் தெரியாதவர் என்று முகத்தைப் பார்த்து பின் நிற்காமல் தமிழீழ விடுதலைப் பயணத்தில் எமது பங்கு என்ன என்பதை நாமே தீர்மானிப்போம். எமக்கு என்ன வேண்டும் என்பதை நாமே முடிவெடுப்போம். எமக்காக தம்மை தந்தவர்களின் தாகத்தை தீர்த்து வைக்க நாமாகவே முடிவுகளை எடுப்போம். நாமாகச் சென்று நாம் என்றும் மாவீரரை பூசித்து பயணத்தை தொடர்வோம் என உலகிற்கு உரக்கக் கூறவேண்டும்.

தலைவர் போராட்டத்தை புலம் பெயர் "மக்களிடம்" தான் கொடுத்தார். அதனால் யார் என்ன கூறினாலும் நாங்கள் தலைவரின் ஆணையை மதிக்குமாறு கோருவோம். இது புலத்து மக்களின் போராட்டம் இனி. புலத்து மக்கள் எப்படி செயல்படப் போகிறோம் என தீர்மானிக்கும் நேரம். இங்கே நாங்கள் ஒற்றுமையாக நின்றால் நிச்சயம் எம்மை பிரிக்க முயலும் யாவரும் ஒதுங்குவர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, பிரதானிய தமிழர் ஒன்றியம், தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு என்பன இணைய வேண்டும் என்றால், நாங்கள், இதை வாசிக்கும் நீங்கள் முடிவெடுங்கள். நான் இணைந்து நிற்பேன், சகலரையும் இணைத்து வைப்பேன் என சபதம் எடுங்கள். நிச்சயம் எம்மால் முடியும்!

மீண்டும் ஒருமுறை மாவீரர் நாளில் எச்செல் அரங்கம் அதிர, ஐம்பதினாயிரம் குரல்கள் ஒன்றை மீண்டும் உரக்க கூறட்டும் அதுவே எங்கள் தாரகமந்திரம்.



தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

நன்றி.
-ஜெய் தரன்

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us