ஈழம்

ஈழம்

வியாழன், 15 டிசம்பர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-15

அத்தியாயம்-15


பத்மநாபா கொலை, ராஜிவ் வழக்கில் கொடுத்த தடயங்கள்!

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட 8 நாட்களுக்குப் பின், அதாவது மே 29-ம் தேதி, தமிழகத்தில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக, ‘பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த வேண்டுகோள் மே 30ம் தேதி தமிழகம் எங்கும் விளம்பரமாக வெளிவந்தது.

விளம்பரத்தில் இரு போட்டோக்கள் இருந்தன. மனித வெடிகுண்டு என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணின் போட்டோ ஒன்று. குர்தா- பைஜாமா அணிந்திருந்த, அடையாளம் தெரியாத நபரின் போட்டோ இரண்டாவது. “இவர்களைப் பற்றிய அடையாளம் தெரிந்தவர்கள் தகவல் அளிக்க்கவும்”  என்ற வாக்கியங்களும் இடம்பெற்றிருந்தன. தகவல் கொடுப்பதற்கு வசதியாக, புதிதாக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தொலைபேசி எண்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

“அடையாளம் தெரியாத மேற்கண்ட இருவர் பற்றித் தகவல் தெரிவிப்பவர்கள் யார் என்ற ரகசியம் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படும்” என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் வெளியான உடனே, யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், விளம்பரத்தில் வெளியான போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர் ஹரிபாபுவுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும்  தொடர்புகள் இருக்கக் கூடும் என பத்திரிகைகள் தமது ஊகத்தை செய்தியாக்கின.

முதல்நாள் இந்தச் செய்திகள் வெளியாக, மறுநாள் ஹிந்து பத்திரிகை அதற்கு தலைகீழான செய்தி ஒன்றைப் பிரசுரித்தது. ஹரிபாபுவுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லையென ஹரிபாபுவின் தந்தை மறுத்ததாக அந்தச் செய்தி வெளியானது.

இதற்கிடையே தமிழகத்தில் இந்த விளம்பரங்கள் வெளியான அதே நாளில் (மே 30) சி.பி.ஐ. டீம் ஒன்று கொழும்புவுக்கு புறப்பட்டுச் சென்றது. அதுவும் சாதாரண அதிகாரிகளை அனுப்பவில்லை. சி.பி.ஐ. இயக்குனர் விஜய் கரன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அந்த டீமில் இருந்தனர்.

ராஜிவ் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு சம்மந்தம் உள்ளது என்று எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில், சி.பி.ஐ. முக்கியஸ்தர்கள் அடங்கிய டீம் கொழும்புவில் ஆதாரங்களைத் தேடிச் சென்றது ஆச்சரியம்தான்.

கொழும்பு சென்ற டீம், தாம் விளம்பரமாகக் கொடுத்திருந்த போட்டோக்களையும் எடுத்துச் சென்றிருந்தது. ஸ்ரீலங்கா சி.ஐ.டி. பிரிவு அதிகாரிகளைச் சந்தித்த இவர்கள், இந்த போட்டோக்களை அவர்களுக்கு காட்டினார்கள். ஸ்ரீலங்கா அதிகாரிகள், “மனித வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்பட்ட பெண்ணின் உடலமைப்பு, ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ் பெண்களின் உடலமைப்பை ஒத்திருக்கின்றது” என்றார்கள்.

அத்துடன், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விதமும், வெடிகுண்டு வைக்க கையாண்ட முறையும், இந்தக் கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு உள்ளது என்பதைக் காட்டுகின்றது”  என்று கூறிய ஸ்ரீலங்கா அதிகாரிகள், “ஸ்ரீலங்காவில் விடுதலைப் புலிகளால் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சிலரது கொலைச் சம்பவங்களுடன், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விதம் ஒத்துப் போகின்றது” என்றும் தெரிவித்தார்கள்.

இது நடைபெற்ற காலப்பகுதியில், விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசும் எதிரெதிர் அணிகளில் இருந்தனர். (அதற்கு சில மாதங்களின் முன், இந்திய அமைதிப்படையை ஸ்ரீலங்காவில் இருந்து வெளியேற்றுவதற்காக ஒரே அணியில் இருந்தனர்)

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் டீம் கொழும்பில் இருந்து திரும்பியபோது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் மீதான பல்வேறு ஆய்வு முடிவுகள் வந்துவிட்டன. இந்த ஆய்வு முடிவுகள் எதுவுமே, தமிழகத்தில் இதற்குமுன் நடைபெற்ற குற்றச் செயல்களுடன் பொருந்திவரும் விதத்தில் இருக்கவில்லை. எல்லாமே புதிதாக இருந்தன.

அதையடுத்து சிறப்புப் புலனாய்வுக்குழு மற்றொரு கோணத்தில் இந்தத் தடயங்களை ஆராய முடிவு செய்தது.

1980களில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு ஈழவிடுதலைப் போராளி இயக்கங்கள் இயங்கி வந்தன. அவர்கள் தமிழகத்தில் இருந்தபோது அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள், அவர்களது செயல்முறைகள், தமிழகத்தில் செய்யப்பட்ட குற்றச் செயல்களில் ஆகியவை தொடர்பான பழைய பைல்களை ஆராய்வதே புதிய கோணம்.  அவற்றில் ஏதாவது, ராஜிவ் கொலை தடயங்களுடன் ஒத்துப் போகின்றதா என்று பார்ப்பதே இதன் நோக்கம்.

பழைய சம்பவங்களில் முக்கியமானதும், பெரியதுமான சம்பவம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா கொல்லப்பட்ட சம்பவம்.

ஈ.பி.ஆர்.எல்.எப். என்பது, 1980-களில் பிரபலமாக இருந்த ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்று. அதன் தலைவர் பத்மநாபாவும் பல்வேறு ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னணித் தலைவர்களும் 1990, ஜூன் 19-ம் தேதி, சென்னை ஜகாரியா காலனியில் இருந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

கொலையாளிகள் கையெறி குண்டுகளையும், ஏ.கே. 47 ரைபிள்களையும் பயன்படுத்தித் தாக்கியதால் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் தப்பிக்க வழியேதும் இல்லாமல் போனது.

கொலையாளிகள் அன்று காலை 6.30 மணியளவில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்துள்ளனர். இவர்கள் நடத்திய தாக்குதலில் அவ்வழியே சென்ற அப்பாவிகள் சிலரும் உயிரிழக்க நேரிட்டது. தாக்குதல் நடத்தியவுடன் கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். தமிழக காவல்துறையினரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.

அவர்கள் வந்த வெள்ளை நிற அம்பாசிடர் காரை தேடிக் கொண்டிருந்தது தமிழக காவல்துறை. அந்தக் காரில் தப்பித்துக்கொண்டு அவர்கள் வேதாரண்யம்வரை செல்வார்களா? இந்தக் கேள்விக்குப் பதில் மறுநாளே கிடைத்தது. மறுநாள் இதே கொலையாளிகள், விழுப்புரம் அருகே ஒரு மாருதி வேனை கடத்தியது தெரியவந்தது.

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவன அதிகாரி, அவரது தாயார் மற்றும் டிரைவர் ஆகியோர் இந்த மாருதி வேனில் திருச்சி நோக்கிச் சென்றபோது,  கடத்தல் நிகழ்ந்தது. டிரைவரை தாக்கியதுடன் மற்ற இருவரையும் சாலையோரத்தில் இறக்கிவிட்டு, மாருதி வேனை கடத்திக்கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

கீழே இறக்கிவிடப்பட்டவர்களை போலீஸ் விசாரித்தபோது, கடத்திய குழுவில் ஆறு பேர் இருந்ததாக கூறினார்கள். வேனை பறிகொடுத்த அதிகாரி, “கடத்திய ஆறு பேரில் நால்வர் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் வெள்ளை நிற அம்பாசிடர் காரிலிருந்து இறங்கி வந்தே எமது வேனை மறித்து நிறுத்தினர்” என்று தெரிவித்தார்.

“நவீன ஆயுதங்கள் மட்டுமின்றி வாக்கி-டாக்கிகளையும் வைத்திருந்தனர். வாக்கி-டாக்கி மூலமே அவர்களிடையே தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர். இந்த விடயத்தை நானோ, என்னுடன் வந்தவர்களோ காவல் துறையிடம் தெரிவித்தால், கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துவிட்டு சென்றனர்” என்றும் அவர் சொன்னார்.

இவ்வளவு விபரங்கள்தான், பத்மநாபா கொலை புலனாய்வு பைலில் இருந்தன. அதற்குமேல் இந்த கேஸில் மூவ் பண்ணுவது பற்றி அப்போதைய காவல்துறை தலைமை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

இது நடைபெற்றபோது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கொலைகளில் அதிகளவில் இன்வோல்வ்மென்ட் காட்டுவது அரசியல் ரீதியாக சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்து, கேஸை இழுத்து மூடிவிட்டிருந்தார்கள் அவர்கள். அதுபற்றிய வேறு ஒரு ரகசிய டீல் உண்டு என்பதாகவும் ஒரு பேச்சு அந்த நாட்களில் இருந்தது.

பின்னாட்களில் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, ‘சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்ற காரணமே பிரதானமாகக் கூறப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பட்டியலில் இந்தக் கொலைகளும் இருந்தது தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட பூமராங்!

(தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அட்டகாசமாக இருந்ததா? அட, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதே, இந்த கவர்னர் ஆட்சியில்தான்!)

இந்த பைலைப் பார்த்த ராஜிவ் கொலை வழக்கு புலனாய்வுக்குழு, இதில் தமக்கு பெறுமதி வாய்ந்த தடயங்கள் இருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டது.

பத்மநாபாவைக் கொன்ற முறைக்கும் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட முறைக்கும் நேரடிச் சம்மந்தம் கிடையாதுதான். ஆனால், இரண்டுமே தமிழகத்தில் நடைபெற்ற அசாதாரண ஹை-டார்கெட் கொலைகள். இரண்டிலுமே பயன்படுத்தப்பட்ட முறைகள் தமிழகத்தின் சாதாரண குற்றவியல் சம்பவங்களைவிட மிக உயர்ந்த திட்டமிடலுடன் இருந்தன.

இதனால், பத்மநாபா கொலை வழக்கில் கொஞ்சம் கிளறிப் பார்க்க முடிவு செய்தது சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக் குழு.

பத்மநாபா கொல்லப்பட்ட நேரத்தில் தமிழக காவல்துறை திரட்டிய சில தடயங்களை மீண்டும் ஆராய்ந்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். பத்மநாபா குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதான அலுவலகம் இருந்தது. அதற்குள் வைத்துத்தான் அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த அலுவலகத்தின் மரக்கதவுகள் மீது உலோகத்திலான சிறு குண்டுகள் பாய்ந்திருந்தன. அந்தக் குண்டுகள் பற்றி தமிழக காவல்துறையின் தடயவியல் நிபுணர் எழுதியிருந்த குறிப்புகளை முதலில் படித்தது சி.பி.ஐ. தமிழக காவல்துறை பத்திரப்படுத்தி வைத்திருந்த இந்த குண்டுகளையும் தம்வசம் எடுத்துக் கொண்டார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

தமிழக காவல்துறை பத்மநாபா கொலை நடந்த இடத்தில் கிடைத்த மற்றொரு பொருளையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தது. அது, பத்மநாபா குழு மீது தாக்குதல் நடந்தபோது வீசப்பட்டு, ஆனால் வெடிக்காமல் கிடந்த ஒரு வெடிகுண்டு. இந்த வெடிகுண்டில், SFG-87 என்ற எழுத்துக்கள் பெறிக்கப்பட்டிருந்தன.

உங்களுக்கு இந்த விவகாரங்களில் பரிச்சயம் இருந்தால், சென்னை சூளைமேட்டில் கிடைத்த வெடிகுண்டில் பொறிக்கப்பட்டிருந்த SFG-87 என்பதன் விரிவாக்கம், சிங்கப்பூர் ஃபிராக்மென்டேஷன் கிரானைட்-87 என்பது தெரிந்திருக்கும்! …

(16ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)

நன்றி.
விறுவிறுப்பு.கொம் 

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us