ஈழம்

ஈழம்

சனி, 28 ஜனவரி, 2012

இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!

'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!'
என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல.

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறுதிவரை புலிகளுடன் இருந்து, போர் முடிவுக்கு வந்த நாளில் தன் பணியைத் தொடர்வதற்காக ஈழ மண்ணிலேயே சிங்களம் அமைத்த முள்வேலி முகாம் சித்திரவதைகளையும் அனுபவித்து, ஈழத்து மக்களின் அத்தனை துயரங்களின் சாட்சியாக அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தவர். அண்மைக் காலமாக தமிழீழ மண்ணில் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்திருக்கும் விடுதலைக் குரல்களின் மொத்த வடிவமாக தமிழ்க் கவி தமிழகத்தில் தன் உச்சக் குமுறலைக் கொட்டித் தீர்த்துள்ளார். இதுதான் ஈழத் தமிழர்களது உண்மையான குரல். அவர்களது விடுதலை வேட்கையின் வெடி மருந்து. பாரதப் போர் முடிந்து, அதில் கௌரவர்களும், பின்னர் பாண்டவர்களும் மண்ணை விட்டு அகன்றபோதும், அந்தப் போர்க் களத்தில் கண்ணன் உபதேசித்த கீதை மட்டும் காலங்கள் கடந்தும் வாழ்வது போலவே, தமிழ்க் கவி அவர்களது வார்த்தைகளும் இன்னொரு கீதையாக, எங்கள் தேசத்தினதும், இனத்தினதும் விடுதலைக்கு உரமூட்டும் என்பது உறுதி. ஆயுத பலம் மட்டுமே மக்களது முடிவுகளைத் தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அந்த நம்பிக்கை கோழைகளுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழீழ வீர மறவர்களுக்கு அது இன்னொரு விளையாட்டுக் களமாகவே இருக்கும்.

இப்போது உருப் பெருத்துள்ள சிங்களத்துப் படைகளும், பெருக்கி வைத்துள்ள படைக் கருவிகளும் எப்போதும் அவர்களைக் காப்பாற்றும் என்றால், உலகில் ஒருபோதும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க முடியாது. பிரித்தானியாவின் ஆயுத பலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நீடித்து நிலைக்கவில்லை. சோவியத் யூனியனின் அசுர பலம் அதிலிருந்து பல தேசங்கள் உதிர்ந்து போவதைத் தடை செய்ய முடியவில்லை. ஆயுத பலத்தால் உலகை ஆள விரும்பிய ரோம ராஜ்ஜியம் இத்தாலிக்குள் சுருங்கிக்கொண்டதும் வரலாறு கற்றுத் தரும் பாடம். எனவே, ஆயுதங்கள் கோழைகளின் தற்காப்புக் கவசம் மட்டுமே. வீரர்கள் கோபம் கொள்ளும்வரையே அது அவர்களைக் காப்பாற்றும். அதன் பின்னர் காட்சிகள் மாறிவிடும்.

தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் அவரிடம் இருந்தது துருப்பிடித்த பழைய 'பிஸ்டல்' எனப்படும் துப்பாக்கி ஒன்று மட்டுமே. ஏற்கனவே, நடைபெற்று முடிந்த ஜே.வி.பி. கிளர்ச்சியின் அனுபவங்களுடன் சிங்கள இராணுவம் ஏ.கே.47, கவச வாகனங்கள் என்ற பருத்த பலத்துடனேயே பவனி வந்துகொண்டிருந்தது. தலைவர் அவர்களது விடுதலை இலட்சியத்திற்கும், உறுதிக்கும் முன் அவை எல்லாமே அவருக்கு வேட்டைப் பொருட்களாகவே தெரிந்தன. விடுதலைப் புலிகளது ஆயுத பலத்திற்கு, சிங்களப் படைகளிடமிருந்து அடித்துப் பறித்த ஆயுதங்களே பெரும் பங்கை வகித்தன. இப்போதும் நிலமை அதுவே. பருத்துக் கொழுத்த படைகளின் பலவீனங்களை அறிந்துகொண்டால், சிங்களப் படைகளின் ஆயுதங்கள் தமிழர் படைகளின் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எனவே, சிங்களப் படைகளின் பிரமாண்டத்தைக் கண்டு யாரும் திகைப்படைந்து போக வேண்டிய அவசியம் கிடையாது. சிங்கள தேசம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்த காலங்களில், அவற்றில் பாதியாவது விடுதலைப் புலிகளிற்கானதாகவே இருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது. எங்களுக்கான எங்களது போர்க் கருவிகளை இப்போது அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவேதான்.

இதற்காகத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதே இலட்சியம் என்பதல்ல. எதிரியின் நோக்கம் எங்களை அச்சத்துள் வாழ விடுவது என்பதே. எதிரியின் அந்த நம்பிக்கையை நாம் சிதறடிக்க வேண்டும். எங்கள் தேசமும், எங்கள் தேசத்து மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நாம் எதிரியின் சதிக்குள் சிக்கிவிடக் கூடாது. அச்சப்படுதலிலிருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டால், ஆயுதம் ஏந்தியவன் சலித்துவிடுவான். இப்போது சில தமிழர்களும் எதிரியின் அச்சப்படுத்தல்களுக்குள் தமிழர்களைப் புதைத்துவிட முயல்கிறார்கள். சிங்களத்தைத் தோற்றடிக்கப்பட முடியாத பிரமிப்பாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காகவே, தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளையும், ஆரோக்கியமற்ற கருத்துக்களையும் விதைக்கின்றார்கள். அது புலம்பெயர் தேசங்கள் வரை வியாபிக்கப்படுகின்றது.

உலகத் தமிழர்களது மக்கள் தொகையில், சிங்களம் மடுவளவு. உலகத் தமிழர்களது பொருளாதார பலத்தில் சிங்களம் சிறு கல்லளவு. உலகத் தமிழர்களது கற்றறிவில் சிங்களம் கடுகளவு. இத்தனை பிரமாண்டங்களையும் கொண்ட தமிழர்களால் சிங்களத்திடமிருந்து தமிழீழத்தை மீட்க முடியாதா? ஆம், முடியும்! நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். அதற்கு எங்கள் பொது எதிரியை நோக்கி, நாங்கள் ஒன்றுபட வேண்டும். தமிழீழத்திற்கு வெளியே தமிழர்கள் ஒன்றுபட்டுவிடுவார்களோ? என்ற பயத்துடன் சிங்களத்து ஒற்றர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளார்கள். நல்லவர்கள் போலவும், வல்லவர்கள் போலவும் எங்கள் மத்தியில், எங்கள் அருகே, எங்களுடன் இருந்துகொண்டே குழிபறித்து வருகின்றார்கள். இதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கள் தேசத்தை மீட்கும் போராட்டத்தில் எங்களில் யாரும் பிளவுபட்டு நிற்க முடியாது. எங்களுக்குள் இரண்டு துருவங்கள் எப்போதும் சாத்தியமாகாது. இரண்டு மாவீரர் தினம் எதனைச் சாதித்தது? தமிழீழ போர்க் களத்தில் எத்தனையே படைகள் இருந்தது போல், எத்தனை அணிகளும் உருவாகலாம். ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க் களம் ஒன்றேதான். அதற்கான போர்ப் படைகளாகவே அத்தனை அணிகளும் இயங்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. மக்களை இருதுருவப்படுத்தும் சிந்தனைகள் இனியும் வேண்டாம். பெப்ரவரி 04, சிங்கள தேசத்தின் சுதந்திர நாளைக் கரிநாளாக ஒன்றாக இணைந்து புறக்கணிப்புப் முற்றுகையை நடாத்துவோம்! மார்ச் 05, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா முருகதாசன் திடலில் போராட்டம் நடாத்துவோம்! தமிழீழத்தின் விடுதலையையும், தமிழினத்தின் விடுதலையையும் மட்டுமே மனதில் கொண்ட தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைவோம்!


இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!

- இசைப்பிரியா

Image Hosted by ImageShack.us


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us