ஈழம்

ஈழம்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

தலைவர் பிரபாகரன் அவர்களின் மனைவி மதிவதனி அக்காவின் போராட்ட குணம்.

அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து தன்னுடைய 'சுதந்திர வேட்கை' என்ற நூலில் குறிப்பிடும் போது, ''மதியைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்தது, தலைவர் பிரபாகரனுக்குக் கிட்டிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.
திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில், மிகவும் சோதனையான இடர் படிந்த காலங்களில்கூட நிலையான மற்றும் ஆழமான அன்பையும், இனிமையான குடும்ப வாழ்வையும் பிரபாகரனுக்கு மதி வழங்கியிருந்தார். எனினும், திருமண வாழ்வு என்பது மதிவதனிக்கு மலர்ப்படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி, எத்தனையோ தடவை மிகவும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தலைவர் பிரபாகரனின் போராட்டப் பணிகள் காரணமாக, இருவருக்கும் இடையில் நீண்டகாலப் பிரிவுகள் ஏற்பட்டதுண்டு. திருமணமான புதிதில் தனிமைத் துயரை அனுபவிக்கும் கொடுமைக்கு உள்ளானார் மதி. இந்திய இராணுவம் புலிகளுடன் பெரும் போரைத் தொடங்கிய காலத்தில் மதி இவ்விதமான துன்பங்களுக்கு ஆளானார். இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் தொடங்கியதும், நல்லூர் கந்தசாமி கோயிலில் தன் பிள்ளைகளுடன் அகதியாகத் தஞ்சமடைந்தவர்களுள் மதியும் ஒருவர். பின்னர் பிள்ளைகளை தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, முல்லைத்தீவின் அளம்பில் காடுகளுக்குள் களமாடிக் கொண்டிருந்த தன் காதல் கணவர் பிரபாகரனுடன் இணைந்தார்.

அளம்பில் முகாமின் மீது தொடர்ந்த ஷெல்லடிகள், பீரங்கித் தாக்குதல்கள், விமான குண்டு வீச்சுகளுக்கு மத்தியில், பிள்ளைகளைப் பிரிந்த ஓர் இளம் தாய், பிரிவுத் துயரிலும் கணவனோடு அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார். துன்பச் சூழலில் ஆறுதலாக இருந்த தன் தம்பி பாலச்சந்திரனையும் அந்தப் போரில் இழந்த மதி, குழந்தைகளோடு சுவீடனுக்குப் பயணமானார். முன்பின் அறிமுகமில்லாத கலாசாரம், இடையறாத ஆபத்து நிறைந்த போர்க்களத்தில் நிற்கும் கணவனைப் பிரிந்த சோகம், சென்ற நாட்டிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள இயலாத சூழலில் நேர்ந்த துன்பமான தனிமையுடன் பிரபாகரனுக்கும் அவருக்குமான பிரிவு முடிவுக்கு வந்தது.

பிரேமதாசாவுடன் 1989-ல் புலிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியபோது, மதி இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை பாலா (அன்டன் பாலசிங்கம்) செய்தார். மதி கொழும்பு சென்றடைந்ததும், அங்கிருந்து அளம்பில் காடுகளுக்குச் செல்ல உலங்குவானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் பிரேமதாசா. 1989-ல் மதி கணவரோடு சேர்ந்து கொண்டார்.

திருமணமான நாளில் இருந்து மதிக்கு நிரந்தரமான ஒரு வீடும் இல்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்வும் இல்லை. இருந்தபோதிலும், ஒரு கெரில்லாப் படைத் தளபதியின் மனைவிக்கு உரிய கண்ணியத்தோடும் துணிச்சலோடும் ஒரு நிலையான வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்! என விரிவாக சொல்லியிருக்கிறார்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு பிரபாகரனோடு சேர்ந்த மதி, இந்த இருபதாண்டுக் காலத்தில் பிரபாகரனை விட்டு எங்குமே விலகியதில்லை!



புலிகளின் பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி, சில நிகழ்வுகளைக்கூட அவர் முன்னெடுத்திருக்கிறார். 1984 அக்டோபரில் திருப்போரூரில் மணமுடித்து, தங்கள் முதல் மகனைக் கருவுற்றபோது, ஜெயவர்த்தன அரசாங்கம் 'ஓபரேஷன் லிபரேஷனை' தொடங்கியிருந்தது.

சுற்றிவளைப்புகளுக்கு மத்தியிலும், பீரங்கி விமானத்தாக்குதலுக்கு மத்தியிலும் முதல் மகன் பிறந்த நேரத்தில் பிரபாகரன் தன் தளபதிகளோடு களத்தில் நின்றார். சில நாட்கள் கழித்தே மகனைத் தொட்டுப் பார்க்க முடிந்தது. அந்தப் பிள்ளைக்கு இலங்கை இராணுவ மோதலில் கொல்லப்பட்ட தன் தொடக்க கால நண்பனான சார்ள்ஸ் அன்டனி (சீலன்) யின் பெயரையே சூட்டினார்கள் இருவரும். அடுத்து பிறந்த பெண் குழந்தைக்கு வீரச்சாவடைந்த துவாரகாவின் பெயரை வைத்தார்கள். கடைசியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்த மகனுக்கு இந்திய இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்ட தன் தம்பி பாலச்சந்திரனின் பெயரை வைத்து அழகு பார்த்தார் மதிவதனி.

இந்த இருபதாண்டுகளில் போருக்கும் சமாதானத்துக்கும் இடையில் வதைபட நேர்ந்த வாழ்க்கை குறித்து மதிவதனி கவலைகள் எதுவும் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளதெல்லாம் ஒரே ஒரு வருத்தம்தான். இப்போதும் அவர் பிள்ளைகளைப் பிரிந்து இருக்கிறார். இன்று மதிவதனி தாய்லாந்தில் இருப்பதாகவும், கனடாவில் இருப்பதாகவும் சொல்லப்படும் சூழலில், இக்கட்டான எந்தச் சூழலிலும் அவர் பிரபாகரனைப் பிரிந்ததில்லை என்பதுதான் அந்தப் போராளிப் பெண்ணின் குணம்.


Image Hosted by ImageShack.us

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us