ஈழம்

ஈழம்

திங்கள், 9 ஏப்ரல், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 04]

தமது சொந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு பல நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்த இஸ்ரேலிய மக்கள் அங்கு தமது வளங்கள் தாம் பெற்ற பலன்கள் அனைத்தையும் தனது இனத்தின் விடுதலைக்காவே பயன்படுத்திக்கொண்டது பற்றி கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.

அகதிகளாக பல நாடுகளிலும் அவல வாழ்க்கை வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள் கஷ்டப்பட்டுத் தங்களை வளர்த்துக்கொண்டார்கள். அவ்வாறு தங்களை வளர்த்துக்கொண்டார்கள் நன்றாக வாழ்ந்தார்கள்
தங்களை நல்ல நிலைக்கு வளர்துக்கொண்ட இஸ்ரேலிய மக்கள் தங்களது திறமைகள் செல்வங்கள் பெறுபேறுகள் அனைத்தையும் தமது விடுதலைக்காகவே பயன்படுத்தினார்கள்.

தாங்கள் வாழ்ந்த நாடுகளுக்கு உதவிசெய்தார்கள் அப்படி உதவிகள் செய்ததன் ஊடாக கிடைத்த பலாபலன்களை தங்களுடைய இனத்தின் விடுதலைக்காகவே பயன்படுத்தினார்கள்.

1900 வருடங்களுக்கு மேலாக அகதி மற்றும் அடிமை வாழ்க்கை வாழ்ந்துவந்த இஸ்ரேலியர்கள் தமக்கான விடுதலையைப் பெற்றுக்கொண்டதன் பின்னால் உள்ள ஒரு முக்கிய இரகசியம் இதுதான்.

இஸ்ரேலியர்கள் என்றால் யார் அவர்களுக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது இஸ்ரேலியர்களின் சரித்திரம் என்ன போன்ற விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு முன்னதாக புலம்பெயர் நாடுகளில் இஸ்ரேலியர்களின் விடுதலைக்கு வித்திட்ட முக்கியஸ்தர்கள் பற்றிப் பார்ப்பது இந்த காலத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இஸ்ரேலியர்களின் விடுதலை என்று நாம் ஆராய்கின்ற பொழுது அந்த விடுதலைக்கான வித்துக்களை புலம்பெயர் நாடுகளில் நல்ல அந்தஸ்த்தில் இருந்த கல்விமான்கள்தான் இட்டிருந்தார்கள் என்பதை வரலாற்றில் காணக்கூடியதாக இருக்கின்றது.

அகதிகளாக இருந்த யூதர்களை ஒரு விடுதலையின் பாதையில் பயணிக்கும்படி தூண்டியவர்களும் அந்த விடுதலையின் பாதையில் வழி நடாத்திச் சென்றவர்களும் யார் என்று பார்க்கின்ற பொழுது அவர்கள் கல்விமான்களாகவும் புலம்பெயர் நாடுகளில் உயர் பதவி வகித்த யூதர்களுமாகவே இருந்திருக்கின்றார்கள்.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் கல்விமான்கள் உயர் பதவி வகிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எமது இனத்தினது தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்க முன்வரும் சந்தர்பங்கள் மிக மிக் குறைவு என்றுதான் கூறவேண்டும். தங்களது திறமைகளையும் தங்களது அறிவையும் தனக்காவும் தனது குடும்பத்திற்காகவும் மாத்திரமே பயன்படுத்துகின்ற ஒரு போக்குத்தான் ஈழத் தமிழ் இனத்தின் புத்திஜீவிகள் மத்தியில் பெரும்பாலும் காணப்படுகின்றது.

(அப்படி விதி விலக்காக போராட்டத்தின் பாதையில் தம்மை உள்நுழைக்க முனையும் அறிஞர்களையும் ஓரங்கட்டி துரோகிகளாக்கி ஒதுக்கிவைக்கும் பழக்கத்தையும் நாம் எமதாகக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் இந்த இடத்தில் நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்).

ஆக மொத்தத்தில் புத்திஜீவிகள் அறிஞர்கள் துறைசார் வல்லுனர்கள் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தலைமைதாங்க முன்வருவது அரிது அப்படி முன்வருபவர்களை அந்தச் சமூகம் ஏற்றுக்கொண்டு உள்வாங்குவதும் அரிதிலும் அரிது.

தமது விடுதலையின் பாதையில் பயணம் செய்த யூதர்கள் அப்படி அல்ல. தமது இனத்தின் விடுதலைக்காக அறிஞர்கள் புத்திஜீவிகள் போராட முன்வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்கள் பின்னால் யூதர்கள் அணிதிரண்டு விடுதலையை விரைவுபடுத்தியிருந்தார்கள்.
இதற்கு சரித்திரத்தில் பல உதாரணங்கள் இருந்தாலும் இரண்டு உதாரணங்களை மாத்திரம் இந்த வாரம் பார்ப்போம்.

1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி என்பது உலகம் முழுவதும் அகதிகளாகப் பரவி வாழ்ந்து இஸ்ரேலியர்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறைகள் ஆரம்பமான காலம் என்று கூறலாம். உலகமே இஸ்ரேலியர்களை வேண்டப்படதாத ஒரு இனமாக வெறுப்புடன் நோக்கிய காலப்பகுதி அது.

இந்தக் காலகட்டத்தில்தான் இஸ்ரேலியர்கள் தமக்கென்று ஒரு நாடு அமைக்கப்படவேண்டும் அதுவும் அந்த நாடு உடனடியாக அமைக்கப்படவேண்டும் என்று உணர்ந்த காலப்பகுதி.
1800 களில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக உலகத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பொக்ரொம்ஸ் (Pogroms) என்று சரித்திரவியலாளர்களால் அழைக்கப்படடுகின்றது. இஸ்ரேலிய மக்களின் வாழ்வாதாரங்கள் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் வியாபார நிலையங்கள் கல்வி ஸ்தானங்கள் என்று குறிப்பாக திட்டமிட்டு இந்த வன்முறைகளை மேற்கொள்ளப்பட்டன.

1800களின் ஆரம்பத்தில் பல நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்களுக்கு எதிரிகான மேற்கொள்ளப்பட்ட Pogroms வன்முறைகளினால் பல இஸ்ரேலியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இஸ்ரேலியருக்குச் சொந்தமாக உடமைகள் சேதமாக்கப்பட்டன. பலர் தாம் நீண்டகாலமாக வாழ்ந்துவந்த நாடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பல இஸ்ரேலியர்கள் இஸ்லாமியர்களாலும் கத்தோலிக்கர்களாலும் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டார்கள்.

சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அகதிகளாகச் சென்ற இடத்தில் இருந்து விரட்டப்பட்ட நிலையில் உலகம் முழுவதாலும் வெறுத்து ஒத்துக்கப்பட்ட நிலையில் இனிப் போவதற்கு இடமில்லை என்ற நிலையில்தான் தமக்கென்று ஒரு அரசினை ஸ்தாபித்துக்கொள்ளும் எண்ணம் இஸ்ரேலியர்களுக்கு ஏற்பட்டது.

அதுவும் தமக்கான ஒரு அரசினை யூதர்களது சொந்த மண்ணான பலஸ்தினத்தில் ஸ்தாபிக்க அவர்கள் ஆரம்பத்தில் நினைக்கவில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் இஸ்ரேலியர்களின் தாயகமான பலஸ்தீன தேசம் துருக்கிய ஒட்டோமான் பேரரசின் கீழ் இருந்தது. யூதர்களின் முதன்மை எதியான இஸ்லாமியர்களின்; ஆழுகையின் கீழ் இருந்த பலஸ்தீன தேசத்திற்குச் சென்று தமது யூத அரசினைத் தாபித்துக்கொள்வதென்பது அந்த நேரத்தில் தற்கொலைக்கு ஒப்பானதாகவே இருந்தது. எனவே யுதர்களுக்கான அரசை தாம் அகதியாக வாழ்ந்த தேசம் ஒன்றில் உருவாக்கிக் கொள்ளத்தான் புலம்பெயர் இஸ்ரேலியர்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள்.

தற்பொழுது ஈழத் தமிழர்கள் தமது சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தமது அடிப்படை அரசியல் அபிலாசைகள் பற்றிச் சொந்த நாட்டில் பேசக்கூட முடியாத நிலையில்- எப்படி புலம்பெயர் நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்களோ அதே வகையிலான ஒரு முயற்சியைத்தான் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலியர்கள் மேற்கொண்டார்கள்.

1838ம் ஆண்டு மோசஸ் மொன்டிபயர் (Moses Montefiore) என்பரே முதன் முதலில் யூத அரசொன்றை பலநாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகின்ற இஸ்ரேலியர்கள் இணைந்து ஸ்தாபிக்கும்படியான திட்டத்தை பிரேரித்தார்.

மோசஸ் மொன்டிபயர் பற்றிய சரித்திரப் பதிவுகளைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது.

1784 இல் இத்தாலியில் பிறந்த இவர் பின்னர் பிரித்தானியாவில் மிகப் பெரிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் லன்டனின் மிகப் பெரிய செல்வந்தராகவும் பிரமுகராகவும் வளர்ச்சி அடைந்த இவர் லண்டனில் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பல வியாபார நிறுவனங்களையும் நிறுவியிருந்தார். லண்டன் நகரின் செரிப் (Sheriff of London.) ஆகவும் இவர் பதவி வகித்தார். இப்படியான ஒரு நிலையில் இவர் இருக்கும் பொழுதுதான் தனது இனத்தின் விடுதலை பற்றி இவர் சிந்தித்தார் தமது இனத்தின் விடுதலைக்கான விதையை இவர் விதைத்ததும் கூட இப்படியான ஒரு உயர்ந்த நிலையில் இவர் இருந்த காலகட்டத்தில்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரது திட்டம் தொடர்பாக வாதிப் பிரதிவாதங்கள் இருந்தாலும் யூதர்கள் தமக்கென்று ஒரு அரசை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்கின்ற விடயத்தில் உலகமெல்லாம் சிதறிவாழ்ந்த யூதர்கள் ஒரே மனதாகவே இருந்தார்கள்:

இந்தக் காலப்பகுதியில் மொஷெட் என்னும் நகரில் இருந்து சகல யூதர்களும் பலவந்தமாக இஸ்லாம் மதத்திற்கு மதம்மாற்றப்பட்ட ஒரு சம்பவம் இடம்பெற்றது. இவ்வாறான கொடுமைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்தான் லியோன் பின்ஸ்கர; (Leon Pinsker) என்பவர். போலந்தில் பிறந்த இந்த யூதர் ஒரு சிறந்த கல்விமான். ஓடெஸ்கா பல்கலைக் கழகத்திற்கு முதன்முதலில் சென்ற யூதர்களில் இவரும் ஒருவர். சட்டத்துறையில் இவர் கல்வி கற்றிருந்த போதிலும் இவரால் சட்டத்துறையில் பணியாற்ற முடியவில்லை. அந்த நாட்களில் யூதர்கள் சட்டவாளர்களாக பணியாற்றமுடியாது என்று சட்டம் இருந்தது. அதனால் மொஸ்கோ பல்கலைக் கழகம் சென்று மருத்துவக் கல்வி கற்று மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் யூதர்களுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு கொதித்த இவர் Auto Emancipation என்ற நூலை எழுதினார்.

யூத மக்களுக்கு என்றொரு தாயகம் இருந்தால் மாத்திரமே யூதர்கள் அவர்களுக்கு எதிராக பரவலாக இடம்பெற்று வருகின்ற இனத்துவேஷ வன்முறைகளில் இருந்து விடுபட முடியும். யூதர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உள்ள ஒரே மார்க்கம் இதுதான் என்பதுதான் அவரது நம்பிக்கையாகவும் கனவாகவும் இருந்தது. அவர் எழுதிய அந்தப் புத்தகம் அனாமதேயமாக ஜேர்மனி ரஷ்யா உட்பட பல நாடுகளிலும் வெளியிடப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்த பல யூதர்களை விழிப்படைய வைத்தது. ஒரு அணியில் அவர்களைத் திரள வைத்தது.

இதேபோன்று புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்களில் கல்விமான்களும் புத்திஜீவிகளும் உயர் பதவி வகித்தவர்களும்;தான் தமது இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வந்தார்கள். உலகத்தை அறிந்த உலகத்தின் வழிகளுக்கேற்;ப தனது இனத்தை வழி நடாத்தக்கூடிய தலைவர்களின் வழிநடத்தல்களில் பயணித்ததால்தான் புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்களால் ஒரு விடுதலையை நோக்கிப் பயணிக்க முடிந்தது.

பல்வேறு நாடுகளில் அகதிகளாக நின்றுகொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் யூதர்களிடம் இருந்து கற்கவேண்டிய மற்றொரு முக்கிய பாடம் இது.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us