ஈழம்

ஈழம்

ஞாயிறு, 20 மே, 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 05]

சுமார் 1900 வருடங்கள் அகதிகளாக, அடிமைகளாக உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வந்த யூத இன மக்களால் தங்களுக்கென்று ஒரு தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ள முடிந்தது? தமது விடுதலையை இஸ்ரேலியர்கள் எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள்?


தமது விடுதலைக்காக அவர்கள் அமைத்த வியூகங்கள் என்ன? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்ன? – இவை பற்றித்தான் இந்தத் தொடரில் நாம் விரிவாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.

இஸ்ரேல் தேசம் என்பது இஸ்ரேலியர்களை மிக மோசமாக விரோதிக்கின்ற அரபு நாடுகளை அயல்நாடுகளாகக் கொண்டுள்ளது. எகிப்து, யோர்தான், லெபனான், சிரியா என்று இஸ்ரேலை விழுங்கி ஏப்பமிட்டுவிடத் துடிக்கும் நாடுகளை தனது அயல் நாடுகளாகக் கொண்டு, எந்த நேரத்திலும் ஆபத்துக்களை எதிர்கொண்டபடி இருக்கின்ற ஒரு தேசம்தான் இஸ்ரேல் தேசம்.

ஈரான், ஈராக், லிபியா, சவுதி அரேபியா என்று இஸ்ரேல் மீது எந்த நேரமும் பாயக் காத்திருக்கும் நாடுகளை மிக அருகில் கொண்ட ஒரு நாடுதான் இஸ்ரேல்.

குவைத் – ஈராக் பிரச்சனைகளின் பொழுது எங்கோ இருந்த இஸ்ரேல் மீது குரூஸ் ஏவுகணைகளை ஈராக் அதிபர் சதாம் குசைன் ஏவியதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

இஸ்ரேலிய வீசா ஒருவருடைய கடவுச்சீட்டில் இருந்தால், அந்த நபர் சவுதி அரேபியா உட்பட பல இஸ்லாமிய நாடுகளுக்குள் நுழைய முடியாது. அந்த அளவிற்கு இஸ்ரேல் மீது விரோதம் பாராட்டும் தேசங்கள்தான் இஸ்ரேலுக்கு அருகில் இருக்கின்றன.

எகிப்தினதும், யோர்தானிதும், சிரியாவினதும், லெபனானினதும், பலஸ்தீன அரேபியர்களினதும் நிலங்கள் என்று கூறப்படுபவைகளை அபகரித்து, தனது தேசத்துடன் இணைத்துக்கொண்டு பல முனைகளிலும் யுத்தங்களை எதிர்கொண்டபடி இருக்கும் ஒரு தேசம்தான் இஸ்ரேல் தேசம்.

அதாவது எந்த நேரமும் வெடித்துவிடக்கூடிய ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருப்பதை ஒத்ததான நிலையில்தான் இஸ்ரேல் இன்று இருந்து கொண்டிருக்கின்றது.

அப்படி இருந்தும் கூட, இஸ்ரேலினால் எப்படி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிகின்றது என்று பார்க்கின்ற பொழுது, சர்வதேச மட்டத்தில் தங்களுக்கென்று ஒரு பாதுகாப்பு வலயத்தை வெற்றிகரமாக இஸ்ரேல் உருவாக்கிக் கொண்டது தான் அதற்குக் காரணம் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இஸ்ரேலிய மக்கள் தங்களுக்கொன்று ஒரு விடுதலையைப் பெற்றதன் பின்னணியிலும், பல அரபுநாடுகளின் தொடர் தாக்குதலில் இருந்து தம்மைக் காத்துக்கொண்டிருப்பதன் பின்னணியிலும், பல காரணங்கள் இருந்தாலும், அவர்கள் தங்களுக்கு என்று ஒரு நட்பு வலயத்தை உருவாக்கிக்கொண்டதுதான் முக்கியமான காரணம் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

நான் சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட பொழுது, டெல்அவிவ் நகரத்திலும் ஜெருசலேம் நகரத்திலும் சில வாசகங்களை தெருக்களில் காணக்கூடியதாக இருந்தது. அதாவது „அமெரிக்காவே கவலைப்படாதே. இஸ்ரேல் என்றைக்கும் உங்களின் பின்னால் நிற்கும்“- என்பதான வாக்கியங்கள் இஸ்ரேலின் முக்கிய தெருக்களில் காணக்கூடியதாக இருந்தது.

இஸ்ரேல் தனது நட்பு வலயத்தில் அமெரிக்காவை உள்ளடக்கியுள்ளதென்பது, இஸ்ரேல் தேசத்தினுடைய ஒரு முக்கிய பலம் என்றே கூறவேண்டும்.

இன்று இஸ்ரேலுக்கு எப்படியான ஆபத்துக்கள் ஏற்பட்டாலும், எப்படியான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், கைகொடுக்கின்ற முதல் நாடு அமெரிக்காவாகவே இருக்கின்றது.

இஸ்ரேல் எப்படியான அடாவடித்தனங்களைச் செய்தாலும், அதனைப் பாதுகாக்கின்ற நாடாகவும் அமெரிக்காவே இருந்து வருகின்றது.

இஸ்ரேலுக்கு ஒரு பெரும் பாதுகாப்பு அரணாக அமெரிக்கா இருக்கின்றது என்று கூறினால் மிகையாகாது.

இப்படியாக தன்னைச் சுற்றி ஒரு மிகப் பலமான பாதுகாப்பு வலயத்தை இஸ்ரேலினால் எப்படி உருவாக்கிக்கொள்ள முடிந்துள்ளது? அமெரிக்கா போன்ற இந்த நுற்றாண்டின் தன்னிகரற்ற வல்லரசை எப்படி இஸ்ரேலினால் தனது நண்பனாக்கிக்கொள்ள முடிந்தது?

இதற்கு கிறிஸதவர்களின் புனித நூலான பைபிள்தான் காரணம்.

யூதர்கள் இயேசுக் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்காக இரங்கவேண்டும், ஜெருசலேமுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்பது, பைபிளில் கூறப்படுகின்ற முக்கியமான கட்டளைகள்.

ஒருவன் எருசலேமை மறப்பதென்பது அவனது வலதுகை தன் தொழிலை மறப்பதற்கு சமனானது என்று பைபிள் கூறுகின்றது. இஸ்ரேலை நேசிப்பவர்கள், இஸ்ரேலுக்காக பிரார்த்தனை செய்பவர்கள் சுகித்திருப்பார்கள் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகின்றது.

பைபிளில் உள்ள வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் அதி தீவிரத்தைக் காண்பிக்காத கத்தோலிக்கர்கள் யூதர்களுக்கு உதவும் விடயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

ஆனால் பைபிளில் உள்ள வார்த்தைகளை மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் ‘இரட்சிக்கப்பட்ட புரொட்டஸ்டான்ட் கிறிஸ்தவர்கள்‘ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்காகப் பிரார்த்தனை செய்வதை தமது அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இஸ்ரேலுக்கு உதவி செய்வதை தமது கடமைகளில் ஒன்றாகவும் நினைத்துச் செயற்படுகின்றார்கள். இந்தப் பிரிவுக் கிறிஸ்தவர்கள் தங்களை ‘ஆவிக்குரிய யூதர்கள்” என்றே கூறிக்கொள்ளுகின்றார்கள்.

இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாவது வருகை என்பது – இஸ்ரேலியர்கள் தமது தேசத்திற்குத் திரும்பியதைத் தொடர்ந்தும், இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேமில் தேவாலயம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்துமே இடம் பெறும் என்று திடமாக நம்பும் இரட்சிக்கப்பட்ட புரொட்டஸ்டான்ட் கிறிஸ்தவர்கள், இஸ்ரேலியர்களுக்காக பல வழிகளிலும் உதவி செய்யும் வழக்கத்தை தமது கடமையாகக் கொண்டுள்ளார்கள்.

உதாரணத்திற்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் பெரும்பாலானவர்கள் இந்த புரொட்டஸ்டான்ட் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள்.

அமெரிக்காவில் 159 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் அனேகர் யூதர்களுக்கு உதவுவது தமது கிறிஸ்தவக் கடமை என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருகின்றார்கள்.

அமெரிக்கா வருடம் ஒன்றிற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இஸ்ரேலுக்கு வழங்கி வருகின்றது. அதை விட அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ அமைப்புக்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் தனிப்பட்ட ரீதியிலும் பெரும் நிதியை சேகரித்து மாதா மாதம் இஸ்ரேலியர்களின் பாதுகாப்புக்காகவென்று அனுப்பி வருகின்றன.

இதேபோன்று பிரித்தானியாவும் இஸ்ரேலுக்கான ஒரு சக்திவாய்ந்த நேச சக்தியாக இருந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசத்தின் உருவாக்கத்திற்கே, கிறிஸ்தவர்களின் இஸ்ரேல் தொடர்பான நிலைப்பாடே காரணமாக இருந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.

பால்பர் பிரகடனம் (Balfour Declaration) பற்றி இந்தத் தொடரில் முன்னர் ஒரு அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.

யூதர்கள் தமது தேசத்தில் சென்று குடியமர்வதற்கு உரித்துடையவர்கள் என்று பிரித்தானியாவின் வெளியுறவுக் காரியதரிசியான ஆர்தர் ஜேம்ஸ் பால்பர் (Arthur James Balfour) என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனம்தான் இந்த பால்பர் பிரகடனம்.

இந்த பால்பர் பிரகடனத்தைச் செய்த பால்பர் பிரபு, 1848ம் ஆண்டு ஸ்கொட்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர். அவரின் தாயார் மிகவும் பத்தியுள்ளவராகவும், பைபிளை தினமும் படித்து அதன்படி வாழ்ந்துவந்த ஒருவராக இருந்திருக்கின்றார். பைபிளில் கூறப்பட்டுள்ளதான யூதர்கள் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லுதல், இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை போன்றன பற்றி அந்த தாயார் பால்பருக்கு தொடர்ந்து போதித்து வந்துள்ளார். இஸ்ரேலைக் குறித்தும், இஸ்ரேல் தொடர்பான தீர்க்கதரிசனங்கள் குறித்தும், நன்றாக அறிந்து வைத்து, இஸ்ரேலுக்காக தினமும் பிரார்த்தனை செய்துவந்த பால்பரின் தனி முயற்சியால்தான், இஸ்ரேலியர்கள் மீண்டும் தமது தாயகத்துக்குத் திரும்பிச் செல்லும் காரியம் நடை பெற்றது. இஸ்ரேலியர்களுக்குச் சார்பாக பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இந்த பால்பர்தான்.

இதேபோன்று கிறிஸ்தவர்களிடம் ஆழமாகக் காணப்படுகின்ற பைபிள் நம்பிக்கை இஸ்ரேலியர்கள் தங்களுக்கென்று ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிக்கொள்ள எப்படி காரணமாக அமைந்துவருகின்றது என்பதை பல சந்தர்பங்கள் நிருபித்து நிற்கின்றது. (வேறு சில சம்பவங்களை அடுத்த வாரம் பார்ப்போம்)

ஒரு விடுதலைக்காகப் போராடும் ஒரு இனம் தனக்கென்று ஒரு நட்பு வலயத்தை உருவாக்கிக்கொள்வது அவசியம் என்கின்ற ஒரு தந்திரோபாயத்தை இஸ்ரேலியர்கள் கைக்கொண்டதையும், இந்த விடயத்தை ஈழத் தமிழர்கள் தவறவிட்டதையும் இந்த இடத்தில் நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.

கிறிஸ்வர்கள் என்கின்ற சக்திவாய்ந்த பாதுகாப்பு வலயத்தை தன்னைச்சுற்றி அமைத்ததன் ஊடாக, இஸ்ரேலியர்களால் ஒரு விடுதலையைப் பெற முடிந்தது மாத்திரம் அல்ல அந்த விடுதலையை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளவும் அவர்களால் முடிகின்றது. ஆனால் ஈழத் தமிழர்களோ தங்களுக்குச் சார்பான ஒரு நட்பு வலயத்தை உருவாக்கிக் கொள்ளாதது மாத்திரமல்ல, தமக்குப் பாதுகாப்பு பலமாக இருக்கக் கூடிய பல அம்சங்களை சரியாகக் கையாளாமல் கோட்டை விட்டதே, ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் இத்தனை மோசமாக பின்னடைவைச் சந்திக்கப் பிரதான காரணம்.

இந்த இடத்தில் உங்களிடம் சில கேள்விகள் எழலாம்.

இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே- ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்?

ஈழத் தமிழர்களின் நேச சக்திகள் என்று யார் எமக்கு இருக்கின்றார்கள்?

எப்படி எங்களுக்கான ஒரு பாதுகாப்பு வலயத்தை எங்களால்; உருவாக்கிக்கொள்ள முடியும்?

ஈழத் தமிழருக்கான பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிக்கொள்ள நிச்சயம் எங்களால் முடியும்.

இஸ்ரேலியர்களுக்கு உள்ளது போலவே எங்களுக்கும் பல நேச சக்திகள், மதக் குழுமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த நேச சக்திகளை நாம் சரியான முறையில் எங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே தவிர, நேச சக்திகளே எங்களுக்குக் கிடையாது என்று நாம் கூறிவிட முடியாது.

இஸ்ரேலியர்களுக்கு உள்ளது போன்று ஈழத் தமிழருக்கு உள்ள நேச சக்திகள், இன-மதக் குழுமங்கள் என்ன, இஸ்ரேலியர்களைப் போன்று ஈழத் தமிழர் எப்படி தமக்கென்று ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிக்கொல்லலாம் என்று அடுத்தவாரம் விரிவாக ஆராய்வோம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us