ஈழம்

ஈழம்

செவ்வாய், 29 மே, 2012

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.


புலிகளின் குரல் வானொலியில் நாட்டுப்பற்றாளர் நடேசன் நினைவூட்டல் ஒலி வீச்சு.


யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.

நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.

இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.

20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், 'நெல்லை நடேசன்' என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.

மட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.

இனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார்.

எதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.

பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன்.

மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தல் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்ரங்களையும் வெளிக்கொண்டு வந்தவர்.

பல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது.

நாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும்.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர்.

இவர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களுடன் (தொலைபேசி ஊடாக) இணைந்து பணியாற்றியதால் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்கும், ஊடக அறிவிற்கும் அவரது இந்த நினைவுநாளில் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, அவரது இழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, என இதயபூர்வ அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

ஊடகத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த தந்தையை இழந்து துடிக்கும் நடேசன் அண்ணாவின் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்து துயரப்படும் அவரது மனைவிக்கும், மீண்டும் ஒரு தடவை ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

தமிழீழ மக்களுக்காக ஊடக பணி செய்து கொண்டிருந்த வேளையில்  எதிரிகளால் சுட்டு கொள்ளப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் ஐயாவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us