ஈழம்

ஈழம்

வியாழன், 28 ஜூன், 2012

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் கில்மன் நினைவு நாள்.

லெப்.கேணல் கில்மன்/காந்தன் 
வேலாயுதம்பிள்ளை சிவகுமார் 
தமிழீழம்(கிளிநொச்சி மாவட்டம்)
தாய் மடியில்-21.06.1970
மண் மடியில்-28.06.1995

திருகோணமலை மாவட்டத்தில் 28.06.1995 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன் (கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது.

பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்களை நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது.

காட்டுப்பகுதியில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்கா படை உயர் தளபதிகளின் திட்டமிடலில் ”ராமசக்தி - 03” பெயரில் திரியாய் காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கை விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏதுமின்றி முறியடிக்கப்பட்டது.

அந்நடவடிக்கையை வழிநடாத்திய கேணல் காமினி பெர்னாண்டோ உட்பட பல படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துமிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகள் அனைத்து சாள்ஸ் அன்ரனி படையணியால் முறியடிக்கப்பட்டன.

படை நடவடிக்கை முறியடிப்பு, வலிந்த தாக்குதல் நடவடிக்கையென அனைத்தையும் வெற்றிகரமாக வழிநடாத்திய தளபதி லெப்.கேணல் கில்மன் திருமலை மாவட்டத்தில் இழக்கப்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தியதுடன் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேலும் விரிவடையாது படையினர் மீதான தாக்குதல்கள் மூலம் கட்டுப்படுத்தினார்.

இந்நிலையில் 28.06.1995 அன்று திருமலை முதன்மைச் சாலையில் வைத்து சிறிலங்கா படை உயர் தளபதி ஒருவர் மீதான பதுங்கித் தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் இரு போராளிகளுடன் லெப்.கேணல் கில்மன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

லெப்.கேணல் கில்மன் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் தீபன் அவர்களின் உடன்பிறப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

லெப்.கேணல் கில்மன் அவர்களுடன் இவ்வெடிவிபத்தில்,

மேஜர் வரன் (கலைவாணன்) (நாகராசா தவரத்தினராசா - முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு)

லெப்டினன்ட் அன்பன் (அழகன்) (நடராசா சிறிக்குமார் - செட்டிக்குளம், வவுனியா)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us