ஈழம்

ஈழம்

புதன், 11 ஜூலை, 2012

மாமனிதர் பேராசிரியர் துரைராசா அவர்களின் வீரவணக்க நினைவு நாள்.

மாமனிதர்
அழகையா துரைராசா
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
வீரப்பிறப்பு - 10.11.1934
வீரச்சாவு - 11.06.1994



தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவீகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர் அவர்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் -


பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்றார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியற் கற்கை நெறியை நிறைவு செய்தார். அன்றைய காலத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்திலேயே பொறியியற்பீடம் இயங்கியது.

தன்னுடைய பட்ட மேற்படிப்பை கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் 1962ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்துடன் நிறைவு செய்தார். ‘துரை விதி’ என்னும் மணல் துறை சார்ந்த விதி ஒன்றையும் நிறுவினார். இன்றும் கூட குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்பட்டது.

தொடர்ந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கும் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.

பின்னர் 1988ம் ஆண்டு புரட்டாதி மாதத்திலிருந்து 1994ம் ஆண்டு சித்திரை மாதம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தராக கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஒன்று நிறுவப்படும் என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதி மொழியையடுத்தே பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். ஆனால் இன்று வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்படவேயில்லை.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. சிங்களப் பேராசிரியர் ஒருவரின் சவாலை ஏற்று மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.

நாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிய போது உடுப்பிட்டியிலிருந்து ஏறக்குறைய முப்பது கிலோ மீற்றர்கள் தூரமுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார்.

போர் மேகங்கள் வடமராட்சிப் பகுதியை அதிகமாகச் சூழ்ந்திருந்த அந்தக் காலப்பகுதியிலும் வல்லை வெளியினூடாகப் பயணம் செய்து தன்னுடைய பணியைத் தவறாது செய்தார். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் ஒழுக்க சீலர். அதனால் எல்லோருக்குமே பேராசிரியர் துரைராசாவை மிகவும் பிடிக்கும்.

இவரைக் கெளரவிக்கும் முகமாக தேசியத் தலைவர் இவருக்கு ‘மாமனிதர்’ பட்டம் வழங்கிக் கெளரவித்தார். ஈழ வரலாற்றிலே முதன் முதலாய் மாமனிதர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது பேராசிரியருக்கே.

தமிழரின் போராட்டத்துக்காக அளப்பரிய சேவைகள் செய்த மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனி மாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில் இந்தப் போட்டித் தொடரை எல்லோரும் ‘துரையப்பா கிண்ணம்’ என்றே அழைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ‘பேராசிரியர் துரைராசா கிண்ணம்’ என்றே அழைக்கப்பட வேண்டும். (துரையப்பா என்பவர் யாழ் நகர மேயராக இருந்தவர் - யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் இவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.) தமிழர்களாகிய நாம் உண்மையை மறைக்காமல், பெயர்களை மருவ விடாது, சரியான வகையில் நினைவு கூருவதன் மூலமே இந்நாட்டில் தமிழ் நிலைக்கவும் தமிழர்கள் நினைவு கூறப்படவும் வழி வகைகள் செய்யலாம். இனி மேலாவது சரியான சொற்களைப் பழக்கத்திற்கு எடுத்துக் கொள்வோமா?

படத்தில் அழுத்திப் பெரிதாகப் பார்க்கவும்.


பேராசிரியர் துரைராஜா: மனதை விட்டகலாத மாமேதை!
யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியி யல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரிய ராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய எமது பேராசிரி யரை இத்தினத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும்.

பேராசிரியர் தாய், தந்தைக்கு நல்ல பிள்ளை, சகோதரர்களுக்கு நல்ல முன்னோடி, தனது குடும்பத்திற்கு நல்ல தலைவன்,தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தை. மனைவிக்கு நல்ல கணவன். அவர் குடும்ப வாழ்வு யாழ்ப்பாண கந்த புராண கலாசார வாழ்வுக்கு நல்லதொரு உதாரணம். பெரியோரை மதித்தல், ஆசிரியரை மதித்தல்,சமயவாழ்வில் குடும்ப வாழ்வை ஒன்றிணைத்தல்,தமிழர் கலாசாரத்தில் ஒன்றிப் போதல், கலாசார வாழ்வைத் தனது பெருமையாகக் கொள்ளல், அடுத்து வரும் சந்ததிக்கு தமிழர் வாழ்வியலின் பெருமைகளைக் கையளித்தல் போன்றவை அவர் வாழ்வின் இயல்புகளாகும். பேராசிரியர் துரைராஜா யாழ்ப்பாணச் சமூகத்தை வலுவூட்டுவ தற்காக அயராது உழைத்தவர்.தனது பொறியியல் கல்வியை தனது மாணவர்களுக்கு விருப்புடன் கற்பித்தவர்.தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அவரை நல்ல குருவாக, நல்லாசானாக மதித்து வந்தனர்.

பேராசிரியரின் மாணவன் என்று சொல்வதால் தங்களைத் தாங்களே தர முயர்த்திக் கொண்டவர்கள் பலர். அவர் மாணவர்களின் பெருமைக்குரியவர் என்பதுடன் மட்டும் நின்றுவிடாது மாணவர்களுக்கும் பெருமை சேர்த்தவர். எல்லோரையும் அறிவுடையவர்களாகவும் வினைத் திறனுடையவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற அவாவுடன் செயற்பட்டவர். அவரின் கல்விசார் வரலாற்றை அவர் மாணவர்களே உலகெங்கும் பரப்பி நிற்கின்றனர் என்றால் அவர் பெருமையை பறைசாற்ற வேறு யார் வேண்டும்.

தமிழர் வாழ்விடங்களின் அபிவிருத்திக்காக திட்டமிட்டு செயற்பட்டவர். உதாரணமாக பொருளாதாரத் தடையில் அமிழ்ந்து போன யாழ்ப்பாணத்தை மீட்டெடுக்க எல்லா தரத்திலான,எல்லா வகையிலான கல்வியாளர்களையும், தொழில்நுட்பவியலாளர்களையும், தொழி லாளர்களையும், நிர்வாகிகளையும், சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடலை மேற்கொண்டவர். யாழ்ப்பாண மக்கள் பொருளாதாரத் தடை காரணமாக இழந்த வசதிகளை மீண்டும் பெற அவர் அயராது உழைத் தவர். இடர்கால யாழ்ப்பாணத்தவரின் பொருளாதார வாழ்வியலையே தனது வாழ்வியலாகவும் மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அக்கால வாழ்வில் வடமராட்சியிலிருந்து சாதாரண மனிதர்கள் சைக்கிளில் வந்தபோது தானும் சைக்கிளில் யாழ்ப்பாணம் வந்து துணைவேந்தராகப் பணியாற்றியவர். அக்காலத்தில் யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களின் முறையையே தனது குடும்ப வாழ்க்கையை முறையாகவும் மாற்றிக்கொண்டவர். துணைவேந்தர் பதவிக்கான வசதிகளைப் புறந்தள்ளி மக்களில் ஒருவராக தன்னை வரித்துக் கொண்டு வாழ்ந்து காட்டிய பெருமகன்.

தமிழர் நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழகக் கல்வி முறையில் தொழிலாளர் கல்வி, வெளிவாரிக் கற்கைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, யாழ்ப்பாணச் சமூகத்தை பல்கலைக்கழகம் வரை கொண்டு வந்தவர். வடக்குக் கிழக்குத் தமிழர்களில் பெரும்பான்மையோர் விவசாயிகளாகவும், மீன்பிடியாளர்களாகவும் இருப்பதால் விவசாயபீடத்தை கிளிநொச்சியில் நிறுவினார். மீன்பிடிக்கற் கைக்கான திட்டங்களைத் தீட்டினார். விவசாய விளைநிலங்களுக்கிடையே விவசாயபீடம் இருப்பது போல எதிர் கால அபிவிருத்திக்கு வன்னிப் பெரு நிலப்பரப்பே மையமானது, பாதுகாப்பானது என்று கருதி பொறியியல் பீடம் ஒன்றை வன்னியில் நிறுவத்திட்ட மிட்டுச் செயற்பட்டவர். இவரின் இம் முயற்சிகள் இடம், காலம், தேவையறிந்து செயற்பட்டவர் என்பதற்கு நல்ல எடுத் துக்காட்டுக்கள்.
ஒடுக்கப்பட்டவர்களிடத்தும், ஏழைகளிடத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளிடத்தும் அன்பும் ஆதரவும், பரிவும், கருணையும் கொணடு விளங்கிய பேராசிரியர் துரைராஜா என்றும் எம் மனதை விட்டகலா மேதையாகவே உள்ளார்.

பேராசிரியர் துரைராசா தங்க பதக்கம் - யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர் துரைராசா தங்க பதக்கம் - அறிவியல் பிரிவு


மாமனிதர் பேராசிரியர் துரைராசா அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேராசிரியர் ப.சிவநாதன், தலைவர், பொருளியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us