ஈழம்

ஈழம்

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 10]

2000 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அகதிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துவந்த இஸ்ரேலியர்களால் தமது தேசத்தின் விடுதலையை எவ்வாறு வென்றெடுக்க முடிந்தது என்று இந்தத் தொடரில் சற்று ஆழமாக ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.


இஸ்ரேலியர்களது விடுதலையின் வெற்றியில் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன என்றும் இந்த தொடரில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இந்தச் சந்தர்பத்தில் இஸ்ரேலியர்கள் தொடர்பான ஒரு முக்கிய விடயத்தை மீட்டுப் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

இஸ்ரேலியர்கள் என்றால் யார்?

அந்த இனக் குழுமத்திற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

ஏன் அவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்?

அவர்களது வரலாறு என்ன?

இஸ்ரேலியர்கள் ஏன் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றும் அவர்கள் மீண்டும் எவ்வாறு தமது தேசத்தை விடுவித்தார்கள் என்றும் நாம் பார்ப்பதானால், முதலில் இஸ்ரேலியர்கள் என்றால் யார் என்று பார்ப்பது அவசியம். அவர்களது உருவாக்கம், வரலாறு, அந்த வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள், அவர்களது வாழ்க்கைமுறை- இவைகளை அடிப்படையாகக் கொண்டுதான் தமக்கான விடுதலையை அவர்கள் வெற்றெடுத்திருந்தார்கள். அதனால் இந்த விடயங்கள் பற்றி நாம் நிச்சயம் அறிந்திருப்பது அவசியம்.

இவை பற்றித்தான் இந்த வாரம் முதல் நாம் சற்று விரிவாக ஆராய இருக்கின்றோம்.

இஸ்ரேலியர்களுடைய வரலாற்றின் பக்கங்களை உலகின் பெரும்பாண்மையான மக்கள் நம்புகின்றார்கள். ஏற்றும் கொள்கின்றார்கள்.

எவ்வாறு என்றால், இஸ்ரேலியர்களுடைய வரலாறு பற்றி கூறப்படுகின்ற விடயங்கள் கிறிஸ்வர்களின் பைபிளிலும், இஸ்லாமியர்களின் திருக்குரானிலும், யூதர்களின் வேதாகமமான தோறாவிலும் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலியர்களுடைய தோற்றம், அவர்களது வரலாறு அனைத்தும் இந்த மூன்று மதங்களின் புனித நூல்களிலும் கிட்டத்தட்ட ஒரேமாதியாகவே கூறப்பட்டுள்ளது.

அத்தோடு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் போன்றவர்களின் புனித நூல்களில் கூறப்படுகின்ற இஸ்ரேலியர்கள் தொடர்பான கதைகள் சம்பவங்களுக்கான ஆதாரங்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. எனவே பைபிள், குரான், தோரா போன்ற புனித நூல்களையும், உலக சரித்திரங்களின் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து இஸ்ரேலியர்களது தோற்றம், வரலாறு பற்றி ஓரளவு உறுதியாக எம்மால் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இஸ்ரேலியர்களுடைய உருவாக்கம்- சரித்திரம் பற்றி அறிந்துகொள்வதானால் ஆபிரகாம் என்ற மனிதனின் வாழ்க்கை பற்றி முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆபிரகாம் என்ற தனி மனிதனின் வாழ்க்கையில்தான் இஸ்ரேலியர்கள் என்ற பெயரில் இன்று உலகத்தைக் கலக்கிக்கொண்டிருக்கின்ற இனம் உருவாகியது.

இஸ்ரேலியர்களுடைய மாத்திரம் அல்ல இஸ்லாமியர்களுடையதும் கிறிஸ்தவர்களுடையதும் முற்பிதாவாக இந்த ஆபிரகாம் என்ற மனிதனே இருக்கின்றார் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

இந்த ஆபிரகாமின் வாழ்க்கையில் இருந்துதான் யூத, கிறிஸ்தவ, அரேபிய குழுமங்கள் தோன்றியிருந்தன.

எனவே இன்றைய உலகில் மிக அதிகமான மக்கள் கூட்டத்தினால் மிக முக்கியமான ஒருவராக அடையாளப்படுத்தப்படும் ஒரு மனிதர் இந்த ஆபிரகாம்.

ஆபிரகாம் என்ற இந்த மனிதன் (இஸ்லாமியர்கள் இவரை இபுராகிம்-அலை என்று அழைக்கின்றார்கள்) 'ஊர்" என்ற இடத்தில் (அதாவது மோசபடோமியாவில் யூப்ரடிஸ் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையேயான பிரதேசம்- தற்போதைய ஈராக் தேசம்) வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காணான் என்ற இடத்தில் போய் வாழ ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.

(இஸ்ரேலியர்களுடைய வரலாற்றுக்கு முன்னரே பல பெரிய இராஜியங்களும், நாகரீகங்களும் இருந்துள்ளன. இவற்றில் சுமேரியா, மெசபதோமியா, எகிப்த்து, பபிலோனியா போன்ற ராஜயங்கங்கள் குறிப்பிடத்தக்கவை.)

இயேசுக் கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் ஆபிரகாம் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆபிரகாம் வாழ்ந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் முதல் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை வரை தற்பொழுதும் இருப்பதால், ஆபிரகாம் என்ற மனிதன் ஒரு கற்பனைக் கதாபாத்திரமோ அல்லது ஒரு புராதன கடவுள் கரெக்டரோ அல்ல என்பது மாத்திரம் உண்மை.

(படம்: ஆபிரகாமின் கல்லறை)


சரி இனி இந்த ஆபிரகாமின் கதைக்கு வருவோம்.

அப்பொழுது ஆபிரகாமுக்கு 85 வயது.

முதியவர். சொத்துப்பத்து உள்ள மனிதர். ஆனால் அவருக்கு குழந்தைகள் கிடையாது. மிகவும் கடவுள் பக்தியுடன் ஒரு நேர்த்தியான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தார்.

அந்த நேரத்தில் கடவுள் ஆபிரகாமுடன் பேசினார்.

'நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நானும் ஆசீர்வதிப்பேன். உன்னைச்

சபிக்கிறவர்களை நானும் சபிப்பேன்: பூமியிலுள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்".

ஆபிரகாமுக்கு கடவுள் கூறிய வார்த்தைகள் இவைதான்.

உடனே ஆபிரகாம் தனது வீடு, தேசம், இனத்தார் அனைத்தையும் விட்டுவிட்டு, தனது குடும்பத்துடன் கடவுள் காண்பித்த காணான் தேசத்திற்குப் புறப்பட்டான்.

கடவுளுடைய கட்டளையின்படி நடந்த ஆபிரகாமுக்கு தனது வாக்குத்தத்தத்தை அடிக்கடி உறுதிப்படுத்தினார் கடவுள். அது மாத்திரமல்ல ஆபிரகாமுடன் கடவுள் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதாகவும் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய புனித நூல்கள் கூறுகின்றன.

'நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்ன வென்றால் நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

உனக்கும் உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் நான் தேவனாய் இருக்கும்படிக்கு எனக்கும் உனக்கும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாகவரும் சந்ததிக்கும் நடுவே என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையை ஸ்தாபிப்பேன்.

நீ பரதேசியாய்த் தங்கி வருகிற கானான் தேசம் முழுவதையும்; உன் பின்வரும் சந்ததிக்கு நித்திய சுதந்திரமாகக் கொடுத்து நான் அவர்களுக்கு தேவாயிருப்பேன்"

கடவுள் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்த இந்த கட்டத்தில் ஆபிரகாமுக்கு குழந்தை எதுவும் கிடையாது. வயதோ முதிர்வயது. அவரது மனைவி சாராளும் வயது முதிர்ந்த பெண். கடவுள் கட்டளைப்படி காணான் தேசம் வந்த ஆபிரகாம் கிட்டத்தட்ட ஒரு அகதி வாழ்க்கைதான் கானான் தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தான்.

இந்த நேரத்தில்தான் கானான் தேசத்தை அவனது சந்ததிக்கு நித்திய சுதந்திரமாகக் கொடுக்கப் போவதாக கடவுள் ஆதாமுடன் உடன்படிக்கை செய்கின்றார்.

அந்த காணான் தேசம்தான் இன்றைய இஸ்ரேல் தேசம்.

அந்த தேசத்தை- அகதியாக அந்த தேசத்திற்குச் சென்ற ஆபிராமின் சந்ததிற்கு நித்திய சுதந்திரமாக அவர்கள் வணங்கும் கடவுள் வழங்கியதாகவே அனைத்து யூதர்களும் கூறுகின்றார்கள்: 
சரி, விடயத்திற்கு வருவோம்.

இஸ்ரேலியர்கள் என்ற பெயர் ஆபிரகாமின் சந்ததிக்கு எவ்வாறு வந்தது? இங்கு இஸ்லாமியர்கள் எங்கே வருகின்றார்கள்? அவர்கள் ஏன் ஆபிரகாமை தமது மூற்பிதாவாகப் பார்க்கின்றார்கள்? இப்படி பல கேள்விகள் உங்களிடம் தோன்றலாம்.

அடுத்துவரும் வாரங்களில் இவை பற்றித்தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அது மாத்திரமல்ல. யூதர்களும், இஸ்லாமியர்களும் இன்று பரம வைரிகளாகவும், ஒருவரை ஒருவர் வெறுத்து மோதிக்கொண்டு இருப்பதற்குமான அடிப்படைக் காரணங்களையும் இந்தக் கதையில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ஒரு விடுதலையைப் பெறுவதில் வெற்றி பெற்ற தரப்பு என்கின்ற வகையில், அந்த விடுதலையில் முக்கிய அம்சமாக இருக்கின்ற யூதர்களுடைய உருவாக்கம், வரலாறு, வாழ்க்கை முறை- போன்றன பற்றித் தெரிந்து வைத்திருப்பது, ஒரு விடுதலையைவேண்டிப் போரடுகின்ற இனம் என்கின்ற வகையில் எமக்கு மிகவும் அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.

படம்:
ஆபிரகாமின் கல்லறை
ஆபிரகாம் பயணம் செய்ததாகக் கூறப்படும் பாதை...



அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us