ஈழம்

ஈழம்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

தலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்.

1970ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி யாழ்ப்பாணத்தில் `தமிழ் மாணவர் பேரவை' தனது ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை தரப்படுத்தியதே அப்பேரணி நடத்துவதற்குக் காரணமாகும்.


அதனை அடுத்து பாடசாலைகளுக்குச் சென்று விளக்கவுரை அளித்து வந்தேன். வல்வை-சிதம்பராக் கல்லூரியில் முதல் முதலாக தம்பியைப் பார்க்கிறேன். அடுத்து, வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் அவர் சார்ந்த இளைஞர்களுக்கு தமிழர் எதற்காக ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்பதையும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இந்நாட்டின் பூர்வீக குடிகள் என்பதனையும், அவர்கள் தமது சுயநிர்ணய உரிமையை தாமாகவே நிலைநாட்டிக் கொள்ளவேண்டும் என்பதனையும் விளக்கினேன். இன்றைய தமிழ்த் தலைர்கள் மாவட்டசபை என்றும் மாகாண சபை என்றும் பேசுகிறார்கள். அதுவல்ல எமக்குத்தேவையானது.

நாம் எமது சுயநிர்ணய உரிமையை ஈழத்தில் நிலைநாட்ட வேண்டும். அதற்குரிய ஒரே வழி சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக நாம் ஆயுதம் தூக்க வேண்டும் என்று விளக்கம் கொடுத்தேன். அதற்காக நாம் எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டேன். 1971 ஏப்பிரல் இரண்டாம் வாரம், `சேகுவேரா கிளர்ச்சி' என்று எம்மவரால் அழைக்கப்பட்ட ஜேவிபி கிளர்ச்சியின் உச்சக்கட்டம். யாழ்-கல்வியங்காட்டுக்கு என்னைத் தேடிவந்த தம்பி மிகவும் துடிதுடிப்புடன் அதேவேளை நாம் உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்றார். அத்துடன் யாழ்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று தனது யோசனையையும் முன்வைத்தார்.

ஏப்பிரல் 4ம் திகதி மாலை இலங்கை முழுவதுக்குமான அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது. அன்று கண்டியில் இருந்த நான் குருணாகல் வழியூடாக கொழும்பு சென்று 10ம் திகதி இரவு விமானமூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்தேன். அதற்கடுத்த நாள் தான் தம்பி என்னைச் சந்தித்த நாள். குருநாகல் பொலீஸ் நிலையத்தாக்குதலில் சிங்கள இளைஞர்களின் உடல்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடப்பதைக் கண்டதையும், கொழும்பில்-பம்பலப்பிட்டியாவில் உபதீச றோட்டில் கடைசியாக உள்ள மாடி வீட்டில் தங்கி இருக்கையில், இரவு வந்த இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கிருந்த சிங்கள இளைஞர்களைப் பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச்சென்று தம்மைத் தாக்க வந்த `கிளர்ச்சிக்காரர்' எனக்கூறி வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றதையும் தம்பிக்கு எடுத்துக் கூறினேன்.

சிங்களவர்களைச் சிங்களவர்களே கொலை செய்வது எமக்கு பெரிதல்ல. பொலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களை எங்கே கொண்டு வைப்பது? அதைவிட நாம் எங்கே மறைந்திருப்பது? அவ்வளவு தூரம் நாங்கள் வளர்ந்திருக்கவில்லை என்பதை விளக்கினேன். அவ்வேளையில், `ஜேவிபியினர்' தென்பகுதியைக் கைப்பற்றி விட்டார்கள், அதனால் தமிழர்களுக்கு ஆபத்து என்று யாழ்ப்பாணத்தில் ஒரு கதை பரவி இருந்தது. அதனை மறுத்த நான், நிலைமைகளை நேரில் பார்த்து வந்துள்ளேன், நாம் அமைதியைக் கடைப்பிடித்தாலே போதுமென்று விளக்கினேன். எனது பதில்கள் அவரைச் சமாதானப்படுத்தியது என்றே இன்றும் நம்புகின்றேன். ஏனெனில், விடுதலைப்புலிகள் கடந்துவந்த கரடுமுரடான பாதையும் - கடக்க இருக்கும் பாதையையும் நன்கு திட்டமிட்டு, தூரப் பார்வையுடன் செயல்படுவதொன்றே அதனை நிரூபிக்கின்றது.

தமிழை மீட்டுவதுபோல் தம்பியையும் மீண்டும் மீண்டும் மீட்டலாம். இப்போது இது போதும். ஈழத் தமிழர் வரலாற்றில் சங்கிலிய மன்னனும், பின்பு பண்டார வன்னியனும் வாளெடுத்த கதைகள் எமக்குத் தெரியும். ஆனால் பிரபாவின் பரிணாமத்தின் பின்புதான் நவீன ஆயுதங்களும், புதிய யுத்த முறைகளையும் தமிழினம் முதல் முதல் காண்கிறது. ஆயுதம் எடுத்தவன் எல்லாம் தமிழ் ஈழ விடுதலைக்காகத்தான் என்று இளைஞர்களையும், மக்களையும் ஏமாற்றி மண்ணோடு மண்ணாய் போன வரலாறு எங்களுக்குத் தெரியும். ஆனால் பிரபாகரன் எடுத்த ஆயுதம் தமிழ் ஈழத்தை அடைவதற்குத்தான் என்று தமிழ் மக்களும், தமிழ் இளைஞர்களும் அணிவகுத்து நிற்கின்றனர். உலக வரலாற்றில் விடுதலை இயக்கங்கள் பலதோன்றி இனவிடுதலைப் போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் காலம் பதிந்து வைத்திருக்கிறது.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. சமகால அரசியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப, தமிழர் மத்தியிலும் பல இயக்கங்கள் தோன்றி மறைந்தன. சனநாயக நீரோட்டத்தில் கலந்தவை - கலைந்தவை இரண்டையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தமிழினம் வாழும் மட்டும் துரோகிகள் வாழத்தான் வேண்டுமா? தமிழீழம் என்ற புனிதப் பயணத்தில் தளம்பாத தம்பிகளுடனும், தோள்கொடுக்கும் தளபதிகளுடனும் பயணித்துக்கொண்டிருக்கும் தலைவன் நீ பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்.

தமிழீழம் இப்படித்தான் அமையவேண்டும் என்ற திட்டமிட்ட கட்டமைப்பு, நிர்வாகப்புதுமை, நீதித்துறையின் நேர்மை, கல்வியில் பல்துறை வளர்ச்சி, தொழில் பயிற்சிப் பட்டறைகள் என்பன ஒரு புதிய ஆட்சிமுறைக்கு வழி வகுக்கின்றது என்பதை அறியுமா இவ்வுலகம். முடியாட்சி தொடக்கம் சனநாயகம் வரையிலான நெறிமுறைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழன் வழி தனிவழிதான் என்பதை உலகம் உனது காலத்தில் கண்டு களிக்கத்தான் போகிறது. தம்பி! தலைவா!! தமிழினம் உன்னை நம்பி இருக்கின்றது. நீ காட்டும் வழியில் வெற்றி நடைபோடுகிறது. ஐம்பதிலும் நேர்நின்று நடக்க ஆயிரமாயிரம் மாவீரர்கள் வழி சமைப்பார்கள். வாழ்க வளமுடன் என வாழ்த்தி முடிக்கிறேன்.


பொ.சத்தியசீலன்
முனைவர் (சரித்திரம், LYON பல்கலைக்கழகம்) பிரெஞ்சு அரசின் CHEVALIER விருதுபெற்றவர்

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us