ஈழம்

ஈழம்

வியாழன், 25 அக்டோபர், 2012

லெப்.கேணல் அமுதசுரபியின் வீரவணக்க நாளும் வீர வரலாறும்.

லெப். கேணல் அமுதசுரபி
சின்னப்பு நந்தினி
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில் : 23.07.1972
தாயக மடியில்:26.10.2001

யாழ்ப்பாணம், செம்பியன்பற்று தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவள் ஆளுமை மிக்கதொரு பெண் போராளியாக இருந்தவள். பெண்களுக்கென விதிக்கப்பட்ட சில வரை முறைகளிலிருந்து வெளிவரத் தயங்கிய பெண்களுக்குத் தைரியமூட்டி அவர்களையும் கடலில் இறக்கிப் பயிற்சிகள் கொடுத்து திறமை மிக்க போராளிகளாக வளர்த்தெடுத்தவள்.

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

"இந்த வாறன். இந்தா வாறன்" உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, "விடாமல் அடியுங்கோ" என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப்பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.

தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் "பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது" எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.

சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டு போய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும் வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமைமிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், "அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்" என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.

"அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்." கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.

இந்தக் காலம் எமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.

முல்லைத் தீவியிற்கு உயரே  எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்டும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.

முறியடிப்புத் நடாத்தத் தொடங்கினோம். முறையான போடு, ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.

இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில்க் காட்டியவாறு:

"அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவளுக்கு  எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவாள்." அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.

முல்லைத்தீவிற்கு உயரே நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூட, போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.

அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடாநாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்கு உயரே  'பிறைற் ஓவ் சவுத்' என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டார்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.

அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.

நாள் நேரம் எதற்கு  எத்தனை படகுகள் வழிமறித்து 'பிறைற் ஒவ் சவுத்' என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்மை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.

சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.

'பிறைற் ஒவ் சவுத்' மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுத்த சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார்படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.

கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், "அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவளால்  செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவாள். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்வாள்."

எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை...

கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு வழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணத்தவாறு.

பொருது களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்... பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்ட அசைய மறுக்க, படகை; கைவிட வேண்டிய நிலை.

எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப்பேச்சின்றி எமை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களது படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.

மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர உதிரிப்படகு வந்து அந்தப் படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.

ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்த வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.

அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ...? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ...?" இது தான் அல்பாவின் இறுதிக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.

மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.

அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப்; படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது. அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய், ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருக்க நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்...

" அமுதசுரபி " பெயர் தாங்கிய ஒரு சண்டைப் படகு தமிழீழ கடற்புலிகள் அணியில்  பல வரலாற்றுச் கடற்சமரில் பங்கு பற்றி பல வெற்றிக்கு வழி வகுத்தன பல வீரரின் தியாகத்துடன்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும்  கடலில் களமாடி தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீர தமிழச்சிக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us