ஈழம்

ஈழம்

சனி, 15 டிசம்பர், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 12]

இஸ்ரேலியர்கள் என்றால் யார் என்றும் அந்த இனக் குழுமத்திற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்றும் கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

இஸ்ரேலியர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றியும், அவர்கள் ஏன் தமது பாரம்பரிய பூமியை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது என்றும்...

.....அவர்களுக்கு உலகம் இளைத்த கொடுமைகள் பற்றியும், அவர்களது பல நூற்றாண்டு அகதி வாழ்க்கை பற்றியும், அவர்களது விடுதலைப் போராட்டங்கள் பற்றியும், அவர்களது விடுதலை பற்றியும் இந்தத் தொடரில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

அதற்கு முன்னதாக, இஸ்ரேலியர்களுடைய விடுதலைப் பயணத்தின் அங்கமான சில முக்கிய விடயங்கள் பற்றியும் சுருக்கமாகப் பார்த்துவிட்டுச் செல்வது நல்லது என்றே நான் நினைக்கின்றேன்.

முதலாவது இஸ்ரேலிய மக்கள் என்று அழைக்கப்படும் சமூகக் கூட்டத்திற்கும் யூதர்கள் என்கின்ற சமூகக் கூட்டத்திற்கும் இடையில் உள்ள ஒரு சிறிய வித்தியாசத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்வது அவசியம்.

அதேபோன்று இஸ்ரேலியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையில் இத்தனை விரோதம் வளரக் காரணமாக அமைந்த ஒரு முக்கிய விடயம் பற்றியும் இப்பொழுதே பார்த்துவிடுவது நல்லது.
ஏனெனில் தொடர்ந்து இந்தத் தொடரில் நாம் பார்க்க இருக்கின்ற, உள்வாங்க இருக்கின்ற பல முக்கிய விடயங்களுக்கு, மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு உண்மைகள் பற்றிய புரிதல் எமக்கு இருப்பது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.

இஸ்ரேலியர்கள் என்பவர்களும், யுதர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் ஒருவரே என்றே எம்மில் அனேகமானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தொடர் கட்டுரையில் கூட இந்த இரண்டு சொற்பதங்களையும் நான் அந்த இனத்திற்காகவே பாவிப்பதையும் உங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் அடிப்படையில் இஸ்ரேலியர்கள் என்ற பெயர் அடையாளத்தில் அழைக்கப்படுகின்ற அனைவருமே யூதர்கள் கிடையாது. அதில் சிறிய வேறுபாடு இருக்கத்தான் செய்கின்றது.

நாங்கள் கடந்த வாரம் பார்த்தது போன்று ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் இளைய மகன் யாக்கோப்பிற்கு கடவுள் சூட்டிய பெயரே இஸ்ரேல் என்கின்ற பெயர். முன்பு யாக்கோப்பாக இருந்து பின்னர் இஸ்ரேலாகப் பெயர் மாற்றப்பட்ட அந்த நபரின் வழித் தோன்றல்களே இஸ்ரேலியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.

ஆனால் இஸ்ரேலியர்கள் எல்லாருமே யூதர்கள் அல்ல.

அப்படியென்றால் யூதர்கள் என்றால் யார்?

இஸ்ரேல் என்று பெயர் மாற்றப்பட்ட யாக்கோப்பிற்கு பன்னிரண்டு குமாரர்களும், ஒரு குமாரத்தியும் இருந்ததாகக் கூறியிருந்தேன் அல்லவா?

ஒரு சந்தர்ப்பத்தில் காணான் தேசம் இஸ்ரேலிய வம்சத்தாரால்; ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேலிய ஆட்சி உருவானதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் (யாக்கோபின்) பன்னிரண்டு குமாரர்களது கோத்திரத்தாரே இந்த தேசத்தை தமக்குள் பகுதி பகுதியாகப் பிரித்தெடுத்து நிர்வகித்தார்கள். (எப்படி இஸ்ரேலியர்கள் காணான் தேசத்தை கைப்பற்றி இஸ்ரேலாக மாற்றி ஆட்சி புரிந்தார்கள் என்பது பற்றி பின்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்)

இஸ்ரேல் என்ற யாக்கோபின் பதினொராவது குமாரனது பெயர் யூதா( யோசேப்பு).

யூதாவின் கோத்திரத்தார் இஸ்ரேலின் தென் பகுதியை நிர்வகித்து ஆட்சி செய்து வந்தார்கள். இந்தப் பிரதேசம் யூத இராட்ஜியம் என்று அழைக்கப்பட்டது. இஸ்ரேல் என்ற யாக்கோப்பின் கடைசிக் குமாரனாகிய பெஞ்சமின் கோத்திரமும் இந்த யூத இராட்சியத்திலேயே தமது நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தார்கள். இவர்கள்தான் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

இஸ்ரேல் தேசத்தின் தலைநகரான ஜெருசலேம் நகர் இந்த யூத கோத்திரத்தார் நிர்வகித்த பகுதியிலேயே இருந்ததால், மற்றைய கோத்திரங்களைப் பார்க்கிலும், யூத கோத்திரம் சற்று மேலோங்கிய நிலையிலேயே இருந்தார்கள். காலப்போக்கில் இஸ்ரேலின் பல்வேறு கோத்திரங்களும், வேறு இனங்கள், மதங்களுடன் கலந்து தமது அடையாளங்களை இழந்து போயிருந்த நிலையில் யூதா கோத்திரம் (யூதர்கள்) தமது அடையாளத்தை மிகவும் கடுமையாகப் பேணி வரலாறானார்கள்.

இதுவே காலப் போக்கில் இஸ்ரேலியர்கள் என்றால் யூதர்களே என்றாகிப் போகக் காரணமானது. (ஈழம் என்றால் யாழ்ப்பாணம் மாத்திரம்தான் என்று இன்று சிலர் நினைத்துச் செயற்படுவது போல..??)

ஒரு இனம் தன்னுடைய வரலாறு பற்றி மிகத் தெளிவான விளக்கத்தை தன்னகத்தே கொண்டிருப்பதென்பது அதனது மிகப் பெரிய பலம் என்றுதான் கூறவேண்டும். தனது இனத்தின் வரலாறு, வரலாற்றுச் சம்பவங்கள், அந்தச் சம்பவங்களுக்கான ஆதாரங்கள், அந்த இனத்தின் வழித் தோன்றல்கள், பரம்பரைகள் என்று பல விடயங்கள் பற்றிய அறிவையும் தெளிவையும் ஒரு இனம் நிச்சயம் கொண்டிருக்கவேண்டும். உலகத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு இந்த அறிவும் தெளிவும் மிக மிக அவசியம்.

யூதர்களுக்கு இனது இனத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அறிவும் தெளிவும் மிக அதிகமாகவே இருக்கின்றது. தமது இனத்தின் வலாறு பற்றிய அறிவு இல்லாத யூதர்களே இல்லை என்று கூறலாம். யூதக் குழந்தைகள் கூட தமது இனம் பற்றி, தமது மொழி பற்றி, தமது மதம் பற்றி மிக மிக விரிவான அறிவைத் தமதாகக் கெண்டவர்களாக இருக்கின்றார்கள். யாருக்கு யார் பிறந்தது. தமது சந்ததி என்ன? 3000, 4000 வருடங்களுக்கு முன்னர் தமது இனத்தை ஆண்ட அரசர்கள் யார், அவர்களது சந்தியினர் யார் என்ற வரலாறு ஆதாரங்களுடன் யூதர்கள் கரங்களில் இருக்கின்றது.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் எம்மிடம் - எம்மில் பலரிடம் இருக்கின்ற ஒரு மிகப் பெரிய குறை இதுதான்.

தமிழின் வரலாறு எமக்கு தெரியாது. ஆரியர்களுடைய வரலாற்றைத்தான், அவர்கள் புனைந்த கதைகளைத்தான் நாம் தமிழின வரலாறாக கூறிக்கொண்டிருக்கின்றோம்.

ஒரு தமிழ் அரசன் ஆரியர்களால் அழிக்கப்பட்ட தினத்தை ஆரியர்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த கொண்டாட்டத்தை விளக்கம் தெரியாமல் நாமும் கொண்டாடுகின்றோம்- தீபாவளியென்று. (முள்ளிவாய்க்காலில் சிங்களவர்கள் பெற்ற வெற்றியை எதிர்காலத்தில் சிங்களவர்களுடன் சேர்ந்து எமது சந்ததிகள் கொண்டாடுவதைப் போன்றதுதான் இது)

தமிழர்களின் வரலாறு பற்றிய அறிவை நாம் கொண்டிருக்கவேண்டும்.

தொல்காப்பியம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் நாம் தெரிந்திருக்கவேண்டும். ஆத்திசூடி எங்களில் எத்தனை பேருக்கும் தெரியும்?

எமது இனத்தின் பெருமைகள் பற்றி ஒவ்வொருவரும் அடிக்கடி பேசிக்கொள்ளவேண்டும். எமது அடுத்த சந்ததிக்கு கூறி வைக்கவேண்டும்.

ஒரு இனம் விடுதலையை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால், அந்த இனத்திற்கான உலக அங்கீகாரம் மிக மிக அவசியம்.

சரி இனி இஸ்ரேலியர்களின் வரலாறு பற்றிப் பார்ப்போம்.

இஸ்ரேலியர்களுடைய வரலாறு மற்றும் அந்த வரலாற்றில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் பற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, மற்றொரு அடைப்படை விடயத்தையும் பார்த்துவிடுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

அதாவது, இஸ்ரேலியர்களுடைய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள அரேபியர்களுடைய வரலாறு பற்றியும் சுருக்கமாக நாம் பார்ப்பது நல்லது.


அரேபியர்களுடைய வரலாறு, பல நூற்றாண்டுகளாக அவர்கள் யூதர்களை மிக மோசமாக வெறுப்பதற்குக் காரணமாக அமைந்த விடயங்கள் என்பன பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்