ஈழம்

ஈழம்

திங்கள், 10 டிசம்பர், 2012

தலைவர் பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு.

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே

நவம்பர் 27

(மாவீரர் நாள்)

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று வணக்கத்துக்குரிய நாள்.

சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத்தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.

இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.

சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.

(2005)
மாவீரர்கள் அபூர்வ மனிதர்கள்

எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இழப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்கு சக்தியாக அமைந்துவிட்டது.

இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்காக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமானது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்¬. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சியத் தீ என்றுமே அணைந்து
விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பி விடுகிறது.

(1990)
தமிழன்னையின் கருவூலத்தில் மாவீரர்கள்

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.

தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது, முற்றுப்பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்
கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.

(2006)
மாவீரர்கள் வணங்கா மன்னர்கள்

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனித மலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நிற்கின்றனர்.

ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.

(2007)
சிங்களத்தின் கனவு நிச்சயம் கலையும்

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக, கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாளச் சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது. தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன.

ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

(2008)
அடிபணிவு என்ற பேச்சுக்கு இடமில்லை

இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை சிங்கள அரசு இன்னும் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற ஆதிக்க வெறி இன்னும் சிங்கள ஆளும் வர்க்கத்திடமிருந்து அகன்று போனதாகத் தெரியவில்லை.

இராணுவ ஆதிக்கத்திற்கும், அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக்கொடுத்ததேயில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை. எமது இயக்கத்தின் இந்த உறுதிப்பாட்டை உலகத்தின் மிகப்பெரிய இராணுவமே பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டது. சிங்கள இராணுவமும் இந்த வரலாற்றுத் தவறை சந்திக்கத்தான் நேரிடும்.

(1991)
நாம் போர்வெறியர்கள் அல்ல

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சியவல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம்.

அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண். பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது.

நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்குபற்றிவந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

(2008)
வல்லரசுகளின் எதிர்மறையான தலையீடு

எமது பிராந்தியத்திலே உலகப் பெருவல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.

இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது.

சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

(2007)
குறிவைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள்

இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.

எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன. எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற் சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.

(2007)
முடிவில்லாத துன்பியல் நாடகம்

முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.

தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டன. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப் போயின. இதனால் தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கிறது.

(2003)
நிறைவேற்றப்படாத மாவீரர்களின் கனவு

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட கனவு இன்னும் நிறைவுபெறவில்லை.

எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலைபெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை. தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்து வரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாது அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள்.

எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்த சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு ஓர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்பு நிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.

மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்து ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

…இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்தும் வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.

(2004)
தமிழீழ தாயகம் அடிப்படையானது

எந்தவோர் அரசியற் தீர்வுத் திட்டத்திற்கும் தமிழரின் தாயகம் அடிப்படையானது. தமிழரின் நிலமானது தமிழரின் தேசிய வாழ்விற்கும் தேசிய தனித்துவத்திற்கும் ஆதாரமானது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயக நிலத்தை அங்கீகரிக்காத எந்தவொரு திட்டமும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.

(1998)
நாம் எதற்காகப் போராடுகின்றோம்?

நாம் எதனைக் கேட்கின்றோம்? எதற்காக நாம் போராடி வருகின்றோம்? நாம் எமது மண்ணில், வரலாற்று ரீதியாக எமக்குச் சொந்தமான நிலத்தில், நாம் பிறந்து வாழ்ந்த எமது தாயகப் பூமியில், நாம் நிம்மதியாக, கௌரவமாக, எவரது தலையீடுகளுமின்றிச் சுதந்திரமாக வாழ்வதற்கு விரும்புகின்றோம்.

நாமும் மனிதர்கள். மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு மனித சமூகம். தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட ஒரு தனித்துவமான இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் நாம். எம்மை ஒரு மனித சமூகமாக, தனித்துவப் பண்புகளைக் கொண்ட மக்களாக ஏற்குமாறு கேட்கிறோம். எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும்வகையில் ஒரு ஆட்சிமுறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம்.

(1997)
மகாவம்ச மனவுலகில் சிங்களம்

சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்துபோய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்களமக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப் போவதில்லை.

இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.

தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத்தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ்மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்துபோகவில்லை.

மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது. தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை.

இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் உறுதியான இலட்சியமாக இருந்து வருகிறது.

(2005)
தமிழீழத் தனியரசே ஒரே தீர்வு

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்துசென்றாலும் எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்களத் தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும் தமிழருக்கு நீதிகிடைக்கப்போவதில்லை என்பதும் இன்று தெட்டத்தெளிவாகியிருக்கிறது.

எனவே, நடக்கமுடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது.

எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவுசெய்திருக்கிறோம். எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.

உலகத் தமிழினத்தின் எழுச்சி

தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.

(2006)
இலட்சியத்தை நிச்சயம் அடைவோம்

இன்று உலகம் மாறி வருகிறது. உலக ஒழுங்கும் மாறி வருகிறது. உலக நாடுகளின் உறவுகளும் மாறி வருகின்றன. மனித சமுதாயம் முன்னென்றும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கின்றது. இன்றைய உலக நிதர்சனத்தை, அதன் யதார்த்தப் புறநிலைகளை நாம் உதாசீனம் செய்ய முடியாது. இன்றைய காலத்தையும், இக் காலத்தில் கட்டவிழும் சூழலையும் நாம் ஆழமாகப் புரிந்து, காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப, எமது விடுதலைப் பாதையை செப்பனிடுவது அவசியம். இன்றைய காலத்தின் தேவை அது. உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்னகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே.

…அமைதி வழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்று வருகின்றோம். காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை.

சத்தியத்தின் சாட்சியாக நின்று, எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.

(2002)
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.

தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”



புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us