ஈழம்

ஈழம்

திங்கள், 11 பிப்ரவரி, 2013

கிழக்கில் உதித்த தேசியச் சுடர் லெப்டினட் பரமதேவா.

எமது தேசத்தின் ஆன்மாவில் மாவீரர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு. -தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்-

தமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால் தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 25 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமதேவா கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.

1975ம் ஆண்டு வைகாசி மாதம் 22 ம் திகதி சிறிலங்கா குடியரசு தினத்தை பகிஸ்கரித்து மாணவர்களை அணிதிரட்டி போராடியதற்காக சிங்கள அரசாலும் அந்நாளில் சிங்களத்தின் அடிவருடியாக செயற்பட்ட இராஜன் செல்வநாயகம் போன்றவர்களின் முயற்சியாலும் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பரமதேவா பின்னர் வடக்கு கிழக்கெங்கும் பரமதேவாவின் இடைநிறுத்தத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மாணவர் எழுச்சிப் போராட்டத்தினைத் தொடர்ந்து மீண்டும் பாடசாலையில் இணைக்கப்பட்டார்.

இயல்பாகவே திறமையான மாணவனான பரமதேவா தனது கல்வி தனது எதிர்காலம் என்று மட்டும் சிந்தித்து இருந்தால் ஒரு வைத்தியராகவோ பொறியியலாளராகவோ போயிருப்பார். அந்த சிறுவயதிலேயே தமிழர்களை தமிழை நேசித்தமையால் கல்வி கற்கின்ற காலத்திலேயே பல இன்னல்களை அடையவேண்டி ஏற்பட்டது.

மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான பல அகிம்சைப் போராட்டங்களைத் தமிழர்கள் பலர் முன்னெடுத்தனர். இவ் அகிம்சைப்போராட்டங்கள் எவ்வித பயனையும் தராதென உணர்ந்த பரமதேவாவும் அவரைப்போல தீவிர எண்ணங்கொண்ட தமிழ் உணர்வான இளைஞர்களும் சிங்களத்திற்கெதிராக தம்மாலான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனால் 1977ம் ஆண்டிலிருந்தே பரமதேவா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டி இருந்தது. அக்கால கட்டத்திலே தமிழர் தாயகப்பகுதியெங்கும் சிங்களத்திற்கெதிரான எதிர்ப்பு பல வழிகளிலும் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான நடவடிக்கைகளிற்கு தேவையான பணத்தைப் பெறுவதற்காக 1978ல் செங்கலடி மக்கள் வங்கிப்பணத்தைப் பிறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா அச்சம்பவத்தில் பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் கையில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

காலங்காலமாகவே தமிழர்க்கு எதிராக செயற்படும் சிங்களத்தின் நீதித்துறை தமிழினத்தின் விடுதலையை நேசித்த குற்றத்திற்காக 1981ல் பரமதேவாவிற்கு 8 வருட கடுங்காவல்த் தண்டணையை வழங்கியது. எதுவித பதற்றமோ குழப்பமோ இல்லாது புன்னகை சிந்திய முகத்துடன் இத்தண்டணையை ஏற்ற பரமதேவா தாய் மண்ணிற்கான போராட்டத்தில் நீண்டகால சிறைவாசத்தை அனுபவித்தார். போஹம்பர, வெலிக்கடை, நியூமகசீன், மகர ஆகிய சிறைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா 1983 யூலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரச காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.
மட்டக்களப்பு சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையை உடைத்துக்கொண்டு தப்பி ஓடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்காக மட்டக்களப்பை சேர்ந்தவராகப் பரமதேவா இருந்ததனால் அவரிடமே அதிக உதவிகளை எல்லோரும் எதிர்பார்த்தனர். 1983 புரட்டாதி 22ம் திகதி பரமதேவாவின் பெரும் பங்களிப்புடன் மட்டு சிறையை உடைத்து தமிழ்க்கைதிகள் தப்பி ஓடினர். தனது தண்டனைக்காலம் முடிவடைய குறுகிய காலமே இருந்த போதும் அனைத்துத்தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதற்காக சிறையுடைப்பில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்தி தானும் தப்பிப்போனார் பரமதேவா.

சிறையிலிருந்து மீண்ட பரமதேவா தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் மீதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தின் மீதும் அந்த ஆயுத போராட்டத்தின் மூலமே தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியும் என்று மிகத்திடமாக நம்பியதால் தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று ஒரு விடுதலைப்போராளியாக தனது வாழ்வைத் தமிழ் மண்ணில் தொடங்கினார். இந்தியாவிலே முதலாவது அணியில் பயிற்சியை முடித்த பரமதேவா ஒரு கொரில்லா வீரனாகத் தமிழீழம் திரும்பினார்.

தாயகம் திரும்பிய பரமதேவா ஒட்டிசுட்டான் பொலிஸ்நிலையம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல், கொக்கிளாயில் இராணுவத்தின் மீதான கொரில்லா தாக்குதல் போன்றவற்றில் முன்னின்று பணியாற்றினார்.
இதைத்தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல்ப்பிரிவு தளபதியாக மட்டக்களப்பு சென்ற பரமதேவா விசேட சிங்கள பொலிஸ் கொமோண்டோக்களைக் கொண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலிற்கு தலைமை தாங்கி உறுதியுடன் முன்னணியில் நின்று போரிட்டு அக்களத்திலேயே அவ்வீரன் வீரச்சாவை அணைத்துக்கொள்கிறார். அவருடன் சேர்ந்து இத்தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கொரில்லா போராளியும் வீரச்சாவடைந்தார்.

1983 புரட்டாதி 23ல் தாம் கற்பனையில் மேற்கொண்ட சிறை உடைப்பிற்காக சிலர் அதன் ஓராண்டு நிகழ்வுகளை ஆரவாரப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சிறையுடைப்பில் பெரும் பங்காற்றிய பரமதேவா ஒரே வருடத்திற்குள் தன்னை ஒரு முழுமையான போராளியாக மாற்றி தாய் மண்ணிற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்கிறார். ஒரு மனிதன் பிறந்து சாதாரணமாக வாழ்ந்து இறந்து போகின்றான் அவனின் வாழ்வு அத்துடன் முடிவடைகிறது.
ஆனால் ஒரு மனிதன் போராளியாக வாழ்ந்து இறந்து போனால் அவர்கள் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள், யாராவது அந்த போராளிகளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று பரமதேவா கூறுவாராம். மனிதவாழ்வு பற்றிய புரிதல் பரமதேவாவிற்கு எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதுபற்றி இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொலிஸ் நிலையத் தாக்குதலில் பொலிசாரின் குண்டுபட்டு காயப்பட்ட பரமதேவாவைத் தூக்குவதற்காக சென்ற போராளியிடம் எனது அம்மாவிடம் சொல்லுங்கள் உங்கள் மகன் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது வீரச்சாவடைந்து விட்டார் என்று சொல்லி இருந்தாராம். இறக்கும் தறுவாயிலும் அந்த வீரனுக்கு இருந்த உறுதியும் வீரமும் எப்போதும் மெய் சிலிர்க்க வைக்கும். சிங்களத்தின் தமிழர்கள் மீதான அடக்கு முறையும் இன சுத்திகரிப்பும் கிழக்கில் தமிழ்மக்களை எப்போதும் மிக மோசமாக பாதித்தே வந்துள்ளது.

குறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டத்தில் சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூர வன்தாக்குதல்கள் அம்மக்களிற்கு சுதந்திரத்தின் பெறுமதியையும் விடுதலையின் மீதான வேட்கையையும் எப்போதும் உணர்த்தியே வந்துள்ளது. அதுவே பல உன்னதமான விடுதலைப்போராளிகளை தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மட்டு மண் வழங்கக் காரணமாக இருந்துள்ளது.

1984 புரட்டாதி 22ம் திகதி மட்டு மண்ணின் முதல் விதையாக மண்ணில் விழுந்த பரமதேவாவின் விடுதலைக்கனவை சுமந்தபடி விடுதலை போராட்டம் இன்று மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. மட்டு மக்களால் வளர்க்கப்பட்ட விடுதலைப்பயிரில் சில விசச்செடிகளும் மறைந்து வளர்ந்து இன்று தமது விசக்குணத்தை மக்களிற்கு காட்டுகின்றது. மட்டுமண்ணின் பல்லாயிரம் போராளிகளின் தியாகத்தாலும் குருதியாலும் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட தமிழரின் உரிமைப்போர் பணத்திற்கு விலைபோன கயவர்களால் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டு மக்கள் சொல்லெர்னாத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இம்மக்களின் துன்பங்கள் நீங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழீழமே தமிழர்க்கான தீர்வு என்பதை அனைத்துலகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் மிக விரைவில் வரும்.


காட்டிக்கொடுக்கும் கயவர்களை அழித்து எதிரிப்படைகளை ஓடவிரட்டி எமது மாவீரர்களின் கனவை நிறைவேற்ற தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று இன்னும் ஆயிரம் ஆயிரம் பரமதேவாக்கள் மட்டக்களப்பில் உருவாகுவார்கள்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us