ஈழம்

ஈழம்

செவ்வாய், 12 மார்ச், 2013

வெற்றிகளின் ஆணிவேர். ஓயாத அலைகள் வெற்றிநாள்.

இன்று விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படை முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.


இத்தாக்குதல் நடத்தப்பட்ட கால கட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை) சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.

ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித் தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.


இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணி நேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முல்லைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.

கடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முல்லைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்கும் அதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.

அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்து கொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டு விட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்து விட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.

எங்கே ஓடுவது? திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.

தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை; தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.

அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற் பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)

இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.

இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முல்லைத்தீவுதான்.

முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின்போது.

இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.

ஓயாத அலைகள் என்ற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.

முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது இதயஅஞ்சலிகள்.

இதையொட்டிய சம்பவமொன்று:

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).

கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்.

கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.

*************

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓயாத அலைகள் நடவடிக்கை 1996

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓயாத அலைகள் நடவடிக்கை
ஈழப் போர்
காலம் 1996 ஜூலை 18-
இடம் வன்னி பெருநிலப்பரப்பு
முடிவு புலிகள் முல்லைத்தீவைக் கைப்பற்றல்
தொடர்ச்சி ஓயாத அலைகள் இரண்டு
அணிகள்
இலங்கை அரசு -தமிழ்ப் புலிகள்

ஓயாத அலைகள் 1 என்பது 1996 இல் இலங்கை வன்னிப் பகுதியின் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்த இலங்கை அரசபடையினரின் படைத்தளத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயராகும்.
பொருளடக்கம்

1 பின்னணி
2 தாக்குதல்
3 தரையிறக்கமும் எதிர்ப்புச்சமரும்
4 இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்

பின்னணி

1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. விடுதலைப்புலிகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி வன்னிப் பகுதியைத் தமது தளமாகக் கொண்டு செயற்பட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடை கருதியது. அதேநேரம் விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனப்பட்டுப் போய்விட்டனர் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாடு அரசபடையினரால் கைப்பற்றப்பட்டு மூன்று மாதத்தில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப்படை முகாம் மட்டுமே வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் துருத்திக்கொண்டிருந்த ஒரேயொரு படைமுகாம் ஆகும்.

தொடக்கத்தில் மிகச்சிறிய முகாமாக இருந்து, பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஒரு படைநடவடிக்கை மூலம் இம்முகாம் பெருப்பிக்கப்பட்டிருந்தது. தரைவழியாக தனித்துவிடப்பட்ட இப்படைத்தளம் குறிப்பிடத்தக்களவு நீளமான கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் வழியாகவும் வான்வழியாகவும் படையினருக்கான வினியோகத்தைச் செய்துகொண்டிருந்தது. வன்னியின் புகழ்பூத்த வற்றாப்பளை அம்மன் கோயில் இப்படை முகாமுக்கு மிகமிக அண்மையில் இருக்கும் கோயிலாகும்.
தாக்குதல்

1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்றுநாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
தரையிறக்கமும் எதிர்ப்புச்சமரும்

முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு திரிவிட பகர என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது.

தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சிலநாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேறவிடாது மறித்துவைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு ‘ஓயாத அலைகள் – ஒன்று’ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

தரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் ‘ரணவிறு’ என்ற தாக்குதல் கலமொன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில் :

மேஜர் பதுமன்,
மேஜர் கண்ணபிரான்,
மேஜர் மிதுபாலன்,
மேஜர் பார்த்தீபன்,
மேஜர் செல்லப்பிள்ளை

ஆகியோருட்பட ஏழு கடற்கரும்புலிகள் கொல்லப்பட்டனர்.

இப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர்.
இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்

இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு படையினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார்.

புலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது.

பலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us