ஈழம்

ஈழம்

புதன், 15 மே, 2013

தமிழீழ தேசிய தலைவர் மேற்கொண்ட சாகும்வரையிலான உண்ணாவிரதம்.

இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தளபதி, சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர், ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ம் நாள் தொடங்கினார்.
அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்து கொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப் பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.


பத்திரிகையாளர்-உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமே, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள்.

தலைவர் பிரபாகரன்

உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவே தான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்” என்றார்.

பெங்களுர் மாநாடு

இதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் ஜனாதிபதி ஜே.ஆர். ஐயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம் என்று ஜே.ஆர். ஐயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தலைவர் பிரபாகரனோ “வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்க வேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது, இரண்டை நாலாக கூறு போடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?” என்று கூறி நிராகரித்து விட்டார்.

அத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான், தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக ஜே.ஆர்.ஐயவர்த்தனா இந்திய அரசு கூடாக தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் “இது ஒரு மாயவலை, தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை. அதிகாரங்கள் எதுவுமற்ற, நினைத்தால் ஜனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்ய முடியாத பொம்மைப் பதவி தான் முதல் மந்திரிப் பதவி” என்று கூறி அதனைத் தூக்கி எறிந்துவிட்டார்.

தமிழீழம் திரும்புதல்

தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேச வரும் போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும் வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ம் ஆண்டு தை 3ம் நாள் தமிழீழம் திரும்பினார்.

தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில், இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் “இரட்சகர்” என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.

1987 வைகாசி 1ம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில், “நாம் போராடி, இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசு தான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்” என்றார்.




பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us