ஈழம்

ஈழம்

ஞாயிறு, 2 ஜூன், 2013

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 13]

இஸ்ரேலிய இனம் எதற்காக தமது தேசத்தை விட்டுப் புறப்பட்டார்கள், மீண்டும் தமது விடுதலையை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்று பார்ப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலியர்களுடைய வாழ்க்கை வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மற்றொரு விடயம் பற்றி இந்த வாரம் பார்க்க இருக்கின்றோம்.

அதுதான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான உறவு.

இஸ்ரேலியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையில் காணப்படுகின்ற உறவு நிலை பற்றியும், இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் இத்தனை விரோதம் வளரக் காரணமாக அமைந்த விடயம் பற்றியும் இந்த வாரம் பார்ப்போம்.

இஸ்ரேலியர்களுடைய வாழ்க்கை வரலாறு ஆபிரகாம் என்ற ஒரு மனிதனில் இருந்துதான் ஆரம்பமானது என்று கடந்த வாரங்களில் பார்த்திருந்தோம்.

ஆபிரகாமின் கதையையும் பார்த்திருந்தோம்.

அரேபியர்களின் வரலாறும் இந்த ஆபிரகாம் என்ற மனிதனில் இருந்துதான் ஆரம்பமாகின்றது.

இன்றைய ஈராக்கின் ஒரு பகுதியில் வசித்துவந்த ஆபிரகாம் என்ற மனிதருடன் பேசிய கடவுள் நெடுந்தொலைவில் உள்ள காணான் தேசத்தை அவரது சந்ததிக்குத் தருவதாகக் கூறியதாக கிறிஸ்வர்களின் வேதாகமம், இஸ்லாமியர்களின் திருக்குரான், யூதர்களின் தோரா போன்ற மத நூல்கள் கூறுகின்றன. கடவுளின் கட்டளைப்படி தனது தேசம், சொந்த பந்தங்களை விட்டுப் புறப்பட்ட ஆபிரகாம், பல நூறு மைல் தொலைவு பிரயாணம் செய்து காணான் தேசம் வந்து சேர்ந்தார்.

அன்றைய அந்தக் காணான் தேசம்தான் தற்போதைய இஸ்ரேல்.

ஆபிரகாமின் சந்ததியை பூமியில் உள்ள மணல்களைப்போல் பெருக்கி ஆசீர்வதிப்பதாக கடவுள் ஆபிரகாமிடம் கூறிவிட்டார். ஆனால் ஆபிரகாமுக்கோ பிள்ளைகள் கிடையாது.

அவருக்கு அந்த நேத்தில் 85 வயது. மனைவி சாராளும் ஒரு 75 வயது மூதாட்டி. பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பமில்லை. இனி எங்கிருந்து அவருக்கு சந்ததி உருவாகி, அந்தச் சந்ததி விருத்தியாகி, ஆசீர்வதிக்கப்படுவது?

சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து, அதாவது ஆபிரகாமுக்கு 100 வயதும் மனைவி சாராளுக்கு 90 வயதும் ஆக இருந்த போது, கடவுள் கொடுத்த வாக்கின்படி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்த பிள்ளையின் பெயர் ஈசாக். அந்த ஈசாக்கின் இளைய குமாரன் இஸ்ரேல். அவரது சந்ததிதான் இஸ்ரேலியர்கள். இந்த விடயங்கள் எல்லாம் நாம் முன்னர் விரிவாகப் பார்த்திருந்தோம்.

இதில் அரேபியர்களுடைய உதயம் என்பது, ஆபிரகாமிற்கு 85 வயதிற்கும் 100 வயதிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்றிருந்த ஒரு சுவாரசியமான சம்பவம்.

உன் சந்ததியைப் பெருக்குவேன்- அதுவும் பூமியில் உள்ள மணல்களைப் போல் பெருக்குவேன்" என்று கடவுள்பாட்டுக்கு ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். ஆபிரகாமுக்கோ அந்த நேரத்தில் 85 வயது. சாராளுக்கோ 75 வயது. பிள்ளை பிறப்பதற்கான சந்தர்ப்பமே இல்லை. ஆபிரகாம் தலைமைப் போட்டு பிய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு பொறுக்காத அவரது மனைவி சாராள், ஆபிரகாமுக்கு ஒரு ஐடியா கொடுத்தாள்.

நீங்கள் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து அந்தப் பெண் மூலமாக உங்களது சந்ததியைப் பெருக்கலாமே - இதுதான் சாராள் கொடுத்த ஐடியா.

ஆபிரகாமுக்கு அதில் பெரிய உடன்பாடு இல்லை. அவரது மனைவி சாராள் மீது அவருக்கு மிகவும் பிரியம். ஆனாலும் கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்தைச் சுவீகரிப்பதானால் எதையாவது செய்துதான் ஆகவேண்டும். சாராளுக்கோ 75 வயது. இனி பிள்ளை பெற்றுக்கொள்ள சான்சே இல்லை. கடைசியில் சாராளின் ஐடியாவை ஆபிரகாம் ஏற்றுக்கொண்டார்.

ஆபிரகாம் வீட்டில் இருந்த எகிப்து தேசத்தைச் சேர்ந்த அடிமைப் பெண்ணுடன் ஆபிரகாமைச் சேர்ந்து குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்படி சாராள் யோசனை கூறினாள்.
ஆபிரகாமும் அப்படியே நடந்தார்.

அந்த எகிப்திய அடிமைப் பெண்ணின் பெயர்: ஆகார் (இஸ்லாமியர்கள் இந்தப் பெண்ணை ஹஜிரா என்று அழைக்கின்றார்கள்)

சாராளின் யோசனைப்படி, எகிப்திய அடிமைப் பெண்ணாகிய ஆகார் உடன் ஆபிரகாம் சேர்ந்து ஒரு குமாரனைப் பெற்றெடுத்தான்.

அவனது பெயர் இஸ்மவேல் (இஸ்மாயில்)

அதாவது கடவுளின் கட்டளைப்படி ஆபிரகாம் தனது உண்மையான மனைவி சாராளுடன் இணைந்து பிள்ளையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக, அவசரப்பட்டு தமது சொந்த மூளையின்படி செயற்பட்டு, அதனால் பிறந்த ஒரு குழந்தைதான் இந்த இஸ்மவேல்.

இந்த இஸ்மவேலின் சந்ததிகள்தாம் இன்றைய அரேபியர்கள்.

கொஞ்சம் கொச்சையாகக் கூறுவதானால், இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரையில் அரேபியர்கள் 'வைப்பாட்டியின் பிள்ளைகள்", 'முறைகேடான பங்காளிகள்", 'தமது அடிமைப் பெண்ணின் வாரிசுகள்.

ஆனால் அரேபியர்களைப் பொறுத்தவரையிலோ 'தாம் ஆபிரகாமின் முதல் வாரிசுகள் ", 'தமது தந்தையாகிய ஆபிரகாமிற்கு கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்தை சுவீகரிக்கும் உரித்துடையவர்கள்".

இப்படிப்பட்ட மாறுபாடான எண்ண ஓட்டங்களைத் தமதாகக் கொண்ட இந்த இரண்டு தரப்பினரும் எப்படித்தான் ஒற்றுமையாக வாழ்வது?

இன்று மத்திய கிழக்கில் இடம்பெறுகின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் இதுதான்.

இதற்கிடையில் பைபிளிலும், யூதர்களின் தோராவிலும், இஸ்லாமியர்களின் திருக்குரானிலும் சிறிய சிறிய மாற்றங்களுடன் காணப்படுகின்ற இந்தக் கதையில் மற்றொரு சுவாரசியமான சம்பவமும் இருக்கின்றது.

ஆபிரகாமிற்கும் எகிப்திய அடிமைப் பெண்ணான ஆகாருக்கும் இடையில் ஆபிரகாமின் உண்மையான மனைவி சாராள் பிணைப்பை ஏற்படுத்தியிருந்தால் அல்லவா?- அந்த நேரத்தில் இடம்பெற்ற சம்பவம் இது.

ஆபிரகாமுடன் ஆகார் சேர்ந்து இருக்க ஆரம்பித்ததும், அவள் கொஞ்சம் பெருமைப்பட ஆரம்பித்திருந்தாள். கொஞ்சம் தலைக்கனமும் அவளுக்கு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஆகார் தனது அடிமைப் பெண்தானே என்று அவளை சாதாரணமாக நினைத்திருந்த சாராளுக்கு பொறாமை.

சக்களத்தி போட்டி தவிர்க்க முடியாததாகிப் போனது.

ஆகார் கரப்பம் தரித்ததும் இந்தச் சக்களத்திச் சண்டை மேலும் வலுவடைந்தது.

என்ன இருந்தலும் சாராள் ஆபிரகாமின் முதல் மனைவி. முதலாளி அம்மா. ஆகாரால் நின்று பிடிக்க முடியவில்லை.

வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட்டாள்.

வழியில் ஆகார் சென்றுகொண்டிருக்கும் போது கடவுளுடைய தூதன் அவளுக்குத் தோன்றி, அவளை திரும்பவும் ஆபிரகாம் வீட்டிற்குச் சென்று சாராளுக்கு அடங்கி வாழும்படி கட்டளையிட்டான்.

அதுமட்டுமல்ல, ஆகாரின் கருவில் இருந்த இஸ்மவேலுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதத்தையும் அந்த தூதன் வழங்கினான்.

அந்த ஆசீர்வாதம் கொஞ்சம் வில்லங்கமான ஆசீர்வாதம்.

'உன் சந்ததியை நான் பெருகப்பண்ணுவேன். அது பெருகி, எண்ண முடியாததாய் இருக்கும். தற்பொழுது கர்ப்பவதியாய் இருக்கின்ற நீ ஒரு குமாரனைப் பெறுவாய். அவனுக்கு இஸ்மவேல் (இஸ்மாயில்) என்று பெயரிடுவாய். அவன் துஷ்ட மனுசனாய் இருப்பான். அவனுடைய கை எல்லா மனுஷருக்கும் விரோதமாயும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாயும் இருக்கும். தன் சகோதரன் எல்லாருக்கும் விரோதமாகயும் அவன் குடியிருப்பான்" என்று அந்த தேவ தூதன் வாக்குத்தத்தம் கொடுத்தான்.


இஸ்மவேலின் சந்ததியினராகிய அரேபியர்கள் அந்த தேவ தூதன் வழங்கிய ஆசீர்வாதத்தின் பிரகாரம் பல்கிப் பெருகி எண்ண முடியாத சந்ததியாக இருக்கின்றார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த தேவ தூதன் கூறியதன் படி அவர்கள் துஷ்டர்களாக, எல்லா மனுஷருக்கும் விரோதமாக இருக்கின்றார்களா என்பது பற்றிப் பார்ப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.

நாம் இஸ்ரேலியர் பெற்ற விடுதலை பற்றியே இந்தத் தொடரில் ஆராய இருப்பதால், அடுத்த வாரம் முதல் அந்த விடயத்திற்குச் செல்வோம்.

அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us