ஈழம்

ஈழம்

திங்கள், 17 ஜூன், 2013

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 14]

இஸ்ரேலியருடைய உருவாக்கம்- அவர்களது கரு பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகின்றோம். இஸ்ரேல் என்று பெயர் மாற்றப்பட்ட யாக்கோப்புக்கு 12 குமாரர்கள்.

அவர்கள் தங்கி வாழ்ந்த காணான் தேசத்தில் (தற்போதைய இஸ்ரேல்) கொடிய பஞ்சம் ஏற்பட்டதால் அவர்கள் பிழைப்புத் தேடி எகிப்துக்குப் போகவேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது.


எகிப்துக்கு அகதிகளாகச் சென்ற இஸ்ரேலும் அவனது வழித்தோன்றல்களும், கால ஓட்டத்தில் அங்கு அடிமைகளாக வாழவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது..

இஸ்ரேலும், இஸ்ரேலியர்களாகிய அவரது சந்ததியும் சுமார் 400 வருடங்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்க்கை நடத்தினார்கள்.

உண்மையிலேயே இஸ்ரேலியர்களின் சந்ததி எகிப்தில்தான் வளர்ந்தது. எகிப்தில்தான் இஸ்ரேலியர்கள் பல்கிப் பெருகினார்கள். சுமார் 25 இலட்சம் இஸ்ரேலியர்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்திருக்கின்றார்கள்.

இவர்கள் எகிப்தில் வாழ்ந்த காலப்பகுதி இன்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று கணிப்பிடப்படுகின்றது.

கற்கள் செய்வது, கட்டிடங்கள் கட்டுவது என்பன தான் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரேலியர்களது பிரதான தொழிலாக இருந்திருக்கின்றது.

இஸ்ரேலியர்கள் எகிப்தில் வாழ்ந்த காலப் பகுதியில் அந்த இஸ்ரேலிய மக்களால்தான் எகிப்திய பிரமிட்டுக்களில் சில கட்டப்பட்டிருக்கலாம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள் (ஆனால் இதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் பெரிய அளவில் கிடையாது)

எகிப்தில் சுமார் 400 வருடங்கள் அடிமைகளாக இருந்த இஸ்ரேலிய ஜனங்களை (சுமார் 25 முதல் 40 இலட்சம் வரையிலானவர்கள்) மோசே என்கின்ற ஒரு மனிதன் மீட்டு, அவர்களை காணான் தேசத்தை (இஸ்ரேலை) நோக்கி வழி நடாத்திச் சென்றான்.

கடவுளின் கட்டளைப்படியே இஸ்ரேலியர்களை மோசே எகிப்தியர்களிடம் இருந்து மீட்டு காணானுக்கு அழைத்துச் சென்றதாக பைபிள் மற்றும் தோறா போன்ற நூல்கள் கூறுகின்றன.

எகிப்தில் இருந்து வனாந்திரப் பாதை வழியாக இஸ்ரேலை நோக்கிய அந்தப் பயணம் சுமார் 40 வருடங்கள் நீடித்தது.

இஸ்ரேலிய மக்களை பக்குவப்படுத்துவதற்காகவும், அவர்களை அனைத்திலும் சிறந்த ஜாதிகளாக்குவதற்காகவும், அவர்களை தெய்வ நம்பிக்கை மிக்க ஒரு இனமாக உருவாக்குவதற்காகவும் அந்தக் காலப்பகுதி பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இஸ்ரேலியர்களை சிறந்த யுத்த வீரர்களாக உருவாக்குவதற்கும் அந்தக் காலப் பகுதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இன்றைக்கு சுமார் 5000 வருடங்களுக்கு முன்னய அந்தக் காலப்பகுதியில் மனித இனத்தின் அனைத்துப் பிரிவினரும் விக்கிரகங்களை, கற்களை, சின்னங்களை வழிபடும் வழக்கத்தைத் தமதாகக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. அந்தக் காலத்தில் நரபலி செலுத்துவது என்பது அனேகமான மதவழிபாட்டு முறைகளில் சாதாரணமாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால் 40 வருடங்கள் வனாந்திரத்தில் வைத்து வளர்க்கப்பட்ட, பயிற்றப்பட்ட இஸ்ரேலியர்கள் விக்கிரக ஆராதனையில் இருந்து முற்றாக விலக்கப்பட்டார்கள். அவ்வாறு விக்கிரக ஆராதனையில் ஈடுபட்ட இஸ்ரேலிய மக்கள் மிக மோசமாகத் தண்டிக்கப்பட்டார்கள், பூண்டோடு அழிக்கப்பட்டார்கள். இஸ்ரேலியர்களுக்கு என்று சட்டங்கள், நியாயப்பிரமாணங்கள், கட்டளைகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் எப்படி வாழ வேண்டும், என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்ற பிரமாணங்கள் அவர்களுக்கு கடவுளினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த கட்டளைகளுக்கு கீழ்படிய அவர்கள் அந்த 40 வருட காலப் பகுதியில் பயிற்றுவிக்கப்பட்டார்கள்.

இஸ்ரேலியர்கள் எகிப்தில் இருந்து புறப்பட்டு காணான் தேசத்தை (இஸ்ரேல்) அடையும் வரையிலான வனாந்திரப் பகுதிகளிலும், செங்கடலை அண்டிய பகுதிகளிலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய மக்கள் அந்த பகுதிகளில் பயணம் செய்ததற்கான பல ஆதாரங்கள் தற்பொழுதும் வரலாற்றாய்வாளர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வருடத்தில் நான் மேற்கொண்ட எகிப்து மற்றும் இஸ்ரேலியப் பயணங்களின் பொழுது இந்த ஆதாரங்களைப் பார்த்து உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன்.

இப்படியான ஒரு வனாந்திரப் பகுதியில் அந்த மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று ஆச்சரியப்பட்டேன். சீனாய் மலைப் பகுதி என்பது ஒரு மிகப் பெரிய வனாந்திரப் பகுதி.

கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பாலைவனம். ஒதுங்குவதற்குகக் கூட ஒரு புல் பூண்டு கிடையாது.

சுமார் 25 முதல் 40 இலட்சம் இஸ்ரேலிய மக்கள் எப்படி அங்கு 40 வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பது ஒரு பெரிய ஆச்சரியம்தான். உணவு கிடைப்பதற்கான எந்தவித மார்க்கமுமே அங்கு கிடையாது.

ஆனால் கடவுள் அவர்களைப் போஷித்ததாக இஸ்ரேலியர்கள் கூறுகின்றார்கள். நம்புகின்றார்கள்.

உண்மையிலேயே சீனாய் வனாந்திரம், அதனை அண்டிய பாலைவனப் பிரதேசங்களைப் பார்க்கின்ற பொழுது, அந்தப் பிரதேசத்தில் சுமார் 25 இலட்சம் மக்கள் 40 வருட காலம் வாழ்வதாக இருந்தால் ஏதோ ஒரு பெரிய சக்தியின் உதவி இல்லாமல் நிச்சயம் முடியாது என்பது உண்மைதான்.

இஸ்ரேலியர்களை வழிநடாத்திச் சென்ற மோசே ஒரு சந்தர்ப்பத்தில் மரித்துவிட, யோசுவா என்கின்ற ஒரு தலைவன் அவர்களை வழி நடாத்திச் சென்று காணான் தேசத்தை அடைந்தார்கள்.

காணான் தேசத்தின் பல பகுதிகளையும் போராடிக் கைப்பற்றினார்கள்.

நீண்ட போராட்டங்கள். பலத்த இழப்புக்கள். இரத்தம் சிந்துதல்கள் கடைசியில் கடவுள் தமக்கு வாக்குத்தத்தம் பண்ணிய அந்த தேசத்தைக் கைப்பற்றினார்கள் இஸ்ரேலியர்கள்.

தாம் கைப்பற்றிய அந்த காணான் தேசத்திற்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள்.

இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கம் இப்படித்தான் ஆரம்பமானது.

ஆனால் இந்த இஸ்ரேல் தேசம் பட்டபாடு என்பது வார்த்தைகளினால் எழுத முடியாதது. உலகத்தில் எந்தத் தேசமுமே கண்டிராத இன்னல்களை அந்த தேசம் பல நூற்றாண்டுகளான அனுபவித்து வருகின்றது.

இஸ்ரேலிய மக்கள் அந்த தேசத்தைக் கைப்பற்றிய சில காலங்களின் பின் தமது தேசத்தை இஸ்ரேலியர்கள் இழக்கவேண்டி ஏற்பட்டது.

அகதி வாழ்க்கை அவர்களை மீண்டும் அழைத்தது.

சுமார் 2000 ற்கும் அதிகமான வருடங்கள் இஸ்ரேலியர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்தார்கள்.

உலகத்தின் தெருக்களில் யாராலும் விரும்பப்படாத அநாதைகளாக முடங்கிக் கிடந்தார்கள்;.

உலகின் பல நாடுகளால், பல இனங்களால் அழிக்கப்பட்டார்கள்.

ஓட ஓட விரட்டப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் மீண்டும் தமது தேசத்தை விடுவிப்பதில் வெற்றி கண்டார்கள்.

இஸ்ரேலியர்களுடைய ஆட்சி.

அதன் பின்னரான அன்னிய ஆட்சி.

இறுதியில் இஸ்ரேலியர்களின் விடுதலை.

இந்த விடயங்களில் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன.

அடுத்தவாரம் முதல் இவை பற்றிப் பார்ப்போம்.


அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்