ஈழம்

ஈழம்

திங்கள், 22 ஜூலை, 2013

கறுப்பு யூலை படுகொலைகளின் 30 வருடங்கள்...

நான் இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்

அமைதி நிலவிய அந்த நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் கம்பீரமாக நின்றிருந்த அந்த இளைஞனின் குரல் அங்கு கூடியிருந்தவர்களையே அதிர வைக்கிறது.


தனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட போகிறது என்பது தெரிந்திருந்தும் இறப்பு பற்றிய கவலையோ பயமோ இன்றி இறப்பின் பின்பும் விடுதலை பெற்ற தாயகத்தைத் தன் கண்களால் காண வேண்டும் என்ற அவனின் உன்னத வேட்கை அங்கே கொழுந்துவிட்டு எரிகிறது.

அவனுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பெழுதுகிறது. அவன் வெலிக்கடைச் சிறையில் தாயக விடுதலைக்காகத் தான் எழுதப் போகும் தியாக வரலாற்றைப் பதிவு செய்யும் நாளுக்காகக் காத்திருக்கிறான்.

1983 ஜூலை 25

கொடிய குற்றங்களுக்காகச் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளின் கூண்டுக் கதவுகள் திறக்கின்றன. கொடிய  கொலை வெறியுடன் வெளியே ஓடி வந்த அவர்களுக்கு சிறையின் பண்டகசாலை திறந்து விடப்படுகிறது. அவர்கள் இரும்புச் சட்டங்கள், கோடாரிகள், கொட்டன்கள் எனக் கைக்குக் கிடைத்தவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.

விடுதலைப் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் கொட்டடிகள் சிறைக் காவலர்களால் திறந்து விடப்படுகின்றன.

சிங்களக் கைதிகளின் கொலைவெறி ஆரம்பமாகிறது. நிராயுதபாணிகளான தமிழ் கைதிகள் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர். வெறுங்கைகளால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் தமிழ்க் கைதிகளின் முயற்சி சாத்தியமற்றுப் போகிறது.

படுகாயமடைந்து குருதி வெள்ளத்தில் துடித்த அவர்கள் சிறையின் புத்தர் சிலை முன் இழுத்துக் கொண்டு வந்து போடப்படுகின்றனர். கருணையையும் அன்பையும் போதித்த கௌதம புத்தரின் காலடியில் பிணங்கள் குவிகின்றன.

மண்டைகள் பிளக்கப்படுகின்றன. வயிறுகள் கிழிக்கப்படுகின்றன; கை, கால்கள் வெட்டப்படுகின்றன; ஆணுறுப்புகள் அறுக்கப்படுகின்றன. தமிழீழத்தைக் காண தன் தன் கண்களை இன்னொருவனுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்படுகின்றன.

குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 தமிழ் இளைஞர்கள் அங்கு சிதைக்கப்பட்ட பிணங்களாக விழுந்து கிடக்கின்றனர்.

மூன்று நாள்கள்

அத்துடன் அடங்கியதா இனவெறிக் கொலைஞர்களின் காட்டுமிராண்டித்தனம்? இல்லை,  மூன்றாம் நாள் மீண்டும் ஆரம்பமாகியது. அடைக்கப்பட்ட சிறைக் கூண்டுகளின் கதவுகளை உடைத்துத் திறந்து மேலும் 18 கைதிகளைக் கொன்று தள்ளினர்.

இவை வெலிக்கடைப் படுகொலையின் குருதி படிந்த கொடிய நினைவுகள். இனவெறிக் கொடூரத்தின் அழிக்க மடியாத பதிவுகள், வெலிக்கடைச் சிறையில் இப்படியொரு மிருகவெறிக் கொலைகள் அரங்கேற்றப்பட சிறைக்கு வெளியேயும் பிணத் திண்ணிகளின் பேயாட்டம் கோலோச்சுகிறது.

தமிழன் என அடையாளம் காணப்படும் எவனும் கொல்லப்பட்டான். தமிழர் கடைகள், இருப்பிடங்கள், சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடு மைகள் நடத்தப்பட்டன.

பொலிஸார் முன்னிலையில் ஆட்சியாளர்கள் மறைமுக அங்கீகாரம் வழங்க ஒரு பெரும் இன அழிப்பு தென்னிலங்கையில் அரங்கேற்றப்பட்டது. அந்த அரங்கேற்றம்தான் தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் கைகளில் ஆயுதம் ஏந்தியே ஆக வேண்டும் என்ற செய்தியை தமிழருக்கு உணர்த்தியது.

இந்தச் சிறைச்சாலைப் படுகொலைகளுக்கும் தென்னிலங்கை எங்கும் தமிழ் மக்கள்  நரவேட்டையாடப்பட்டமைக்கும் திருநெல்வேலியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலே காரணம் எனக் கூறப்பட்டது.

ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்குமிடையே படையினர் கொல்லப்படும் போது அதில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் மீது பழி தீர்ப்பது இலங்கையின் ஆட்சியாளர்களின் கோழைத்தனமான அரசியல் நாகரிகம்.

அதுமட்டுமல்ல 1983 ஜூலை இன அழிப்பு சிங்கள மக்கள் கொதிப்படைந்து மேற்கொண்ட எதிர்பாராத சம்பவமல்ல. அது அரச தரப்பால் நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து முடுக்கி விடப்பட்ட ஓர் அகோரத் தாண்டவம்.

ஒரு தாக்குதலில் படையினர் எவராவது இறந்தால் அவர்களின் சடலங்கள் அவர்களின் வீடு களுக்கு அனுப்பப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுவது தான் வழமையான நடைமுறை.

இனப்படுகொலை

ஆனால் திருநெல்வேலியில் சாவடைந்த படையினரின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவர்களின் உறவினர்கள் அவர்களின் சொந்த ஊர்களிலிருந்து கொழும்புக்கு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.

புறநகர்ப் பகுதிகளின் காடையர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கனத்தையில் திரட்டப்படுகின்றனர். அமைச்சர்களாக சிறிஸ் மத்யூ, அத்துலத் முதலி ஆகியோர் தலைமையில் ஒரு பெரும் இன அழிப்புக்குத் திட்டமிடப்படுகின்றது.

அதன் படி பொறளையில் உள்ள பெட்டிக் கடைகளில் பெற்றோல் கலங்கள், வாள்கள், இரும்புப் பொல்லுகள் என்பன தயாராக வைக்கப்படுகின்றன. படையினரின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் யாழ்ப்பாணத்தில் ஒரு புத்த பிக்கு உயிருடன் எரிக்கப்பட்டார் என்ற வதந்தி பரப்பப்படுகிறது.

ஒரு சில நிமிடங்களிலேயே பொறளையில் உள்ள தமிழர்களின் கடைகள் எரிகின்றன. வீதியில் சென்ற தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். பலர் கொல்லப்படுகின்றனர்.

அதேநேரத்திலேயே கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் மீதான இன ஒழிப்பு பரவுகிறது. அடுத்தநாள் விடியும்போதே தென்னிலங்கையின் முக்கிய நரங்களில் எல்லாம் தமிழர்களின் இரத்தம் ஓட ஆரம்பிக்கிறது.

பல ஆயிரம் தமிழர்கள் பலி கொள்ளப்படுகின்றனர். சொத்துகள் சூறையாடப்படுகின்றன. கடைகள் வீடுகள் எரியூட்டப்படுகின்றன. பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். சிலர் வாகனங்களுக்குள் வைத்து உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்.

தண்டிக்கப்படாத குற்றங்கள்

இந்தப் பயங்கர இன அழிப்பின் ஒரு பகுதியாகத்தான் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 25, 28ஆம் திகதிகளில் 54 தமிழ்க் கைதிகள் குதறப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிறைச்சாலை என்பது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீதித்துறையின் ஒரு முக்கிய அங்கம். அது நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றும் கடப்பாடு கொண்டது.

சிறைச்சாலை எவருக்கும் தண்டனை வழங்கிகத் தீர்ப்பளிக்க முடியாது. ஆனால் வெலிக்கடைச் சிறைச்சாலை 54 கைதிகளுக்கு எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவுமின்றி சாவுத் தண்டனை வழங்கியது.

இந்தப் படுகொலைகள் இடம்பெற்று முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. பல அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிட்டன. அன்று சிறைக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை. படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு தடுக்க முயலாத காவலர்கள் தண்டிக்கப்படவில்லை.

நேரடியாகப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்களக் கைதிகள் தண்டிக்கப்படவில்லை. இவை தொடர்பாக எந்தவொரு நீதிமன்றமும் கேள்வி எழுப்பவில்லை. இது இலங்கையின் ஜனநாயகம்.

ஆனால் அந்தக் கொலைகளில் முன் நின்று பணியாற்றிய கைதிகள் நெடுங்கேணியில் உள்ள திறந்த வெளிச்சிறைக்கு அனுப்பிக் கௌரவிக்கப்பட்டனர். அங்கு போயும் அவர்களுக்கு இரத்த வெறி அடங்கவில்லை. காட்டில் வேட்டை யாட தேன் எடுக்கச் செல்லும் தமிழர்களின் கழுத்துக்களை காத்திருந்து வெட்டிக் குருதி குடித்தனர். வருடங்கள் 30 போய்விட்டன.

மாறாத நாகரிகம்

ஆட்சிகள் மாறி மாறி அதிகாரத்துக்கு வந்தபோதும் சிறைச்சாலைக்குள் கைதிகளைப் படுகொலை செய்யும் நாகரிகம் மட்டும் மாறவில்லை. எவரும் தண்டிக்கப்படுவதுமில்லை.

இலங்கையின் சிறைக் கொலைகள் சம்பிரதாயத்தின் அடுத்த சாதனை பிந்துனுவௌப் படுகொலைகள். விடுதலைப் புலிகள் எனச் சந் தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டவர்களின் புனர்வாழ்வு முகாம் அது.

ஒரு நாள் இரவு அந்த முகாமின் கதவுகள் சிறைக் காவ லர்களால் திறந்து விடப்படுகின்றன. இந்த ஊரைச் சேர்ந்த பலர் துப்பாக்கிகள் உட்படப் பல்வேறு ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து கொள்கின்றனர்.

இளைஞர்கள் மேல் கொலை வெறியாட்டம் நடத்தப்படுகிறது. தடுப்பதற்கு எவருமே இல்லாத நிலையில் 28 இளைஞர்கள் பிணமாகச் சாய்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேன்முறையீட்டில் அவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். இதன் பின்பு சிறைச்சாலை என்பது தமிழ்க் கைதிகள் எந்த நேரமும் பலமோசமாகத் தாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பது மாற்ற முடியாத நியதியாகிவிட்டது.

ஏதோவொரு காரணம் கூறப்பட்டு தமிழ்க் கைதிகள் அடித்து நொருக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதும் அவர்களில் சிலர் இறந்துவிடுவதும் இப்போதெல்லாம் சாதாரண விடயங்களாகி விட்டன.

நீதி இல்லை

அண்மையில் வவுனியாவில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தம்மேல் வழக்குத் தொடர வேண்டும் எனக் கோரிப் போராட்டம் நடத்திய கைதிகள் தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடித்து நொருக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் உயிரிழந்தனர். இப்படியாக வெலிக்கடையில் 1983 ஜூலையில் தொடங்கிய சிறைப்படுகொலைகள் இன்றுவரை 30 வருடங்களாகத் தொடர்கின்றன.


இந்தப் படுகொலைகள் தமிழ் மக்களுக்கு ஒரு திட்டவட்டமான செய்தியைச் சொல்லி வைக்கின்றன. அதாவது இலங்கையின் ஆட்சியாளர்களிடம் தமிழர்கள் எப்போதுமே நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதுதான் அது.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்