ஈழம்

ஈழம்

வியாழன், 25 ஜூலை, 2013

மேஜர் வேணுதாஸின் வரலாற்று நினைவுகள்.

மேஜர் வேணுதாஸ் 
பொன்னுத்துரை வேணுதாஸ் 
தமிழீழம் (மட்டக்களப்பு மாவட்டம்) 
வீரப்பிறப்பு :05.11.1952
வீரச்சாவு :11.12.1991

உலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணிஅணியாகத்திரண்டு தமிழ்மானம் காத்த மாவீரர்களின் வரலாறு எமக்கு என்றும் வழிகாட்டியாகும்.


தமிழீழம் உயரிய இலட்சியக்கனவோடு சாவினை அணைத்திட்ட சரித்திரநாயகர்களின் வரலாறுகளை எமதுசந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அவர்களின் இலட்சியக்கனவுகள் அடுத்த தலை முறைக்கு நகர்த்தப்பட்டு எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்குநொக்கிய இலட்சியப்பயணத்தில் பல்வேறுதளங்களில் தங்களின் வரலாறுகளை பதிவுசெய்தநாயகர்களின் வரலாறுகளை பதிவு செய்யும் முயற்சியே புனிதச்சுவடுகள் தொடர்.

இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ்

பொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எழுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பு வாதிகளின் நிலப்பறிப்பு நடவடிக்கையினால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களின் இனவிகிதாசாரம் மாற்றப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமிழர்பெரும்பான்மையாக வாழும் நிலைமை இன்றுள்ளது. ஆங்கிலேயர்களால் இலங்கைத் தீவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் உண்மையில் சிங்களவர்களுக்குத்தான் கிடைக்கப்பெற்றது. தமிழர்கள் அன்றிலிருந்து சிங்களஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.

1972 ம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் உருவாக்கமும் தமிழ் மாணவர்களுக்குகெதிரான கல்வியில் தரப்படுத்தல் சட்டமும் தமிழ் மாணவர் பேரவை உருவாக்கத்திற்கு அடிகோலியது .1948 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசுகளின் நிலப்பறிப்பு மொழிச்சிதைப்பு என்பவற்றால் தமிழ் மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மட்டக்களப்பு நகரத்தில் 05 . 11 .1952 அன்று பிறந்த மேஜர் வேணுதாஸ் உயர் கல்வி மாணவராக இருந்தகாலத்தில் கொண்டுவரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் சட்டம் தமிழ் மாணவர்களை மிகவும் பாதித்தது. இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மாணவர் பேரவை ஈடுபட்டது. தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 1972 ல் உருவாக்கப்பட்ட புதிய அரசியிலமைப்பின் மே 22 குடியரசு தினக்கொண்டாட்டங்களையும் தமிழ் மாணவர் பேரவை உட்பட முழுத் தமிழர்களும் புறக்கணித்தனர். இப்போராட்டங்களில் மாணவராக மேஜர் வேணுதாஸ் மற்றும் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் மாவீரர் லெப்.பரமதேவா போன்றவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் மூலம் மேஜர் வேணுதாஸ் தமிழ் மக்களின் விடுதலை சார்ந்த அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஆரம்பித்தார். அன்றுதொடக்கம் இவர் வீரச்சாவடைய மட்டும் இவருடைய பணி தமிழ்மக்களின் விடுதலையையொட்டியதாகவே இருந்தது.

பள்ளிக்கூட நாட்களில் மாணவ தலைவனாகவும் இல்லத்தலைவனாகவும் பின்பு தமிழ் மாணவர் பேரவை தமிழ் இளைஞர் பேரவை போன்றவற்றின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராகவும் இவர் செயற்பட்டத்தை இன்று எண்ணிப்பார்க்கின்றபோது இவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்காது என எண்;ணத்தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் மட்டக்களப்புத் தமிழ்மக்களுக்கு அரசியலில் ஒரு உண்மை உணர்வுமிக்க தலைவனும் கிடைத்திருப்பார். அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் எமது மக்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலை கடந்தகாலங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட சம்பவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் விடுதலையில் எவ்வித சுயநலப்போக்குமில்லாத விடுதலை அமைப்பையும். அதன் தலைமையையும் ஏற்றுக்கொண்டு எமது தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தீவிர ஆதரவாளராக இருந்து பின்பு உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார் . தமிழ்மக்களின் விடுதலையில் தீவிரமாக இளைஞர்கள் செயல்பட ஆரம்பித்தகாலத்தில் உருவாக்கம்பெற்ற தமிழ் இளைஞர் பேரவையில் தீவிர செயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார்.

இவருடன் இணைந்து செயல்பட்டவர்களில் லெப். பரமதேவா, லெப். சரவணபவான் போன்றவர்களையும் குறிப்பிடமுடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் மட்டக்களப்பில் செயல்படத்தொடங்கியவேளையில் வேணுதாஸ் அவர்களின் ஒத்துளைப்பு அவர்களுக்கு பூரணமாகக்கிடைத்தன. மட்டக்களப்பு நகரில் போராளிகள் தங்குவதற்கு மறைவிடத்தை ஒழுக்கு படுத்தியதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பயிற்சிப் பாசறைக்கு மட்டக்களப்பிலிருந்து போராளிகளை அனுப்புவதற்கு குறிப்பிடத்தக்கவர்களை இணைத்து விட்டதிலிருந்து இவருடையபணி ஆரம்பமானது. இவரைப்போன்றவர்களைத்தான் மட்டக்களப்பில் நீண்டகால தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று நாம் குறிப்பிட முடியும். அது மட்டுமல்லாமல் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு மறைவிடத்தில் வைத்து சிகிச்சையளிப்பதற்கு வைத்தியர் ஒருவரையும் ஒழுக்கு படுத்திக்கொடுத்தார். இவ்வாறு பல்வேறு வழிகளில் இயக்கத்தின் போராளிகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தார்.

உள்ளுராட்சித் திணைக்களத்தில் எழுதுனராகப் பணியாற்றிய வேணுதாஸ் சட்டம் பயின்று சட்டவாளரானார். இவருடைய மனைவி ஜமுனாதேவி அரச வங்கியொன்றில் பணியாற்றினார் அவருக்கும் குடும்பத்துக்கும் வசதியான வாழ்வு கிடைத்தும் தமிழ் மக்கள் விடுதலை பெற்று தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்பதில் தீவிரமாக அவருடைய எண்ணங்கள் இருந்ததால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அப்போதைய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் தேவையான சந்தர்ப்பத்தில் ஆலோசகராகவும் செயல்பட்டதனால் இவர்களின் வழிநடத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கம் பெற்றது.

இந்தியப்படையின் வருகையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான அவர்களின் போரும் தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. தமிழ் மக்கள் தங்களுடைய தேசியவீரர்களான தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கெதிரான இந்தியப்படையின்போர் நிறுத்தப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இப்போராட்டத்திற்கான ஆதரவையும் ஆலோசனையையும் வேணுதாஸ் அவர்கள் வழங்கி வந்தார் இதனால் வேணுதாஸ் அவர்களின் வீட்டுக்குச் சென்ற இந்தியப் படையினர் அவரை மிகவும் கடுமையாகத் தாக்கினர். அகிம்சைப் போராட்டத்தின் பிறப்பிடமாகச் சொல்லப்படுகின்ற காந்தி பிறந்த மண்ணிலிருந்து தமிழீழ மண்ணுக்கு வந்திருந்த இந்தியப்படையினர் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பதற்கு தவறியதால் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அவர்கள் தற்கொடைச்சாவைத்தழுவினார்.

தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இந்தியப்படையின் ஆக்கிரமிப்புக்கெதிராக அகிம்சைப் போராட்டத்தில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த லெப். கேணல் திலீபன் அவர்களைத்தொடர்ந்து தமிழ்க் குடும்பபெண்ணான அன்னை பூபதி அவர்களின் தற்கொடைச்சாவு அப்போதைய இந்திய அரசின் உண்மையான எண்ணங்களை தமிழீழ மக்கள் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தன. இக்காலகட்டத்தில் வேணுதாஸ் அவர்கள் மீண்டும் இந்தியப்படையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இரகசியமானமுறையில் கொலை செய்வதற்குமுயற்சித்த போது அங்கிருந்து தப்பினர். ஆனால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1990 ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலை செய்யப்பட்ட வேணுதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தொழிற்சங்க சம்மேளனச் செயலாளராகக் கடமையாற்றிய இவர் 1990 ம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தை ஒழுங்கு செய்து இருந்தார். இக் கூட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். மற்றும் மட்டக்களப்பு நகரின் மாவட்டத்தின்நாலாபுறமிருந்து மக்கள் திரண்டு வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்த பிரமாண்டமான கூட்டஒழுங்குகளிலும் இவருடைய பணி குறிப்பிடத்தக்களவு இருந்தன.


வரலாறு காணத மக்கள் கூட்டம் மட்டக்களப்பு நகரில் கூடியதும்இதுவாகத்தான் இருக்க முடியும் என நம்புகின்றோம்.

இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் வேணுதாஸ் போராளிகளுடன் இணைந்து மயிலவட்டுவான் பிரதேசத்துக்குள் சென்று அங்கு மக்களுடனும் போராளிகளுடனும் தங்கியிருந்தார். இந்த வேளையில்தான் அவருடைய வாழ்க்கையில் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சின்ன ஊறணி தொடக்கம் ஓட்டமாவடி வரையிலான மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராம்மக்கள் எல்லாம் தங்களுடைய இருப்பிடங்களைவிட்டு வயலப்பிரதேசங்களில் வாழ்ந்தநேரம் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒரே இடத்தில் ஒன்றாக தங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கும் பாதுகாப்பற்ற பயணம் நிலவிய நேரம் ஜமுனாஅவர்கள் வவுணதீவு பாதைவழியாக மிதிவண்டியிலும் வயல்வரம்புகளில் நடந்தும் நரிபுல்தோட்டத்துக்கு வந்தடைந்தார். பின்பு பன்குடாவெளி வருவதற்காக தோணி மூலம் குறுக்கே ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியை கடந்து சிரமமான ஒரு பயணத்தின் மூலம் தனது கணவரைச் சந்தித்து பின்பு பிள்ளைகள் தனியாக உறவினர்களுடன் இருப்பதால் அவசரமாக செல்வதற்காக 23.12 . 1990 அன்று காலையில் செங்கலடி வழியாக சிலருடன் பயணித்தபோது இராணுவத்தினரின் துப்பாக்கி தாக்குதல் இவர்களை நோக்கி இடம்பெற்றதையும் அதற்கு பிறகு இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலையில் ஆரையம்பதியை சேர்ந்த றம்போ என்றழைக்கப்பட்ட போராளி பிரசாத்துடன் சென்ற குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தேடியபோது செங்கலடி வைத்தியசாலை வளவு கிணற்றினுள் அணிந்திருந்த நகைகள் அபகரிக்கப்பட்டு குரல்வளை அறுக்கப்பட்ட நிலையில் முதுகில் துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய காயத்துடன் கண்டெடுத்த அவரின் உடலை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குளிருந்த பன்குடாவெளிக்கு கொண்டுவந்தனர். சிங்கள இராணுவத்தினர் மாத்திரமே தங்கியிருந்த செங்கலடியில் இவ்வாறு சென்றுவருவது என்பது மிகவும் பயங்கரமான செயலாக இருந்தும் பிரசாத் அவர்களின் துணிவு அதனை சாதித்தது.

சம்பவம் நிகழ்ந்த அன்றிரவு முழவதும் வேணுதாஸ் நித்திரையின்றி ஜமுனா அவர்களைப்பற்றி கதைத்துக் கொண்டிருந்தார் . எனது வீட்டில் எல்லா விடயங்களையும் கவனித்துக்கொண்டு பிள்ளைகளையும் பராமரித்து அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் . நான் அரசியல் தமிழ் மக்களின் விடுதலை என்று வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டபோதும் ஜமுனா எந்தவித விமர்சனமு மில்லாமல் எனது செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட நல்லுள்ளம் கொண்ட ஒரு குடும்ப பெண்ணாக இருந்தார் என்று மிகவும் கவலையடைந்து கொண்டிருந்தார். இச் சம்பவம் அவருடைய கவலையை மேலும் விரிவடைய வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அர்ப்பணிப்புகள் எல்லோருடைய மனதிலும் அழியாத நினைவுகளை ஏற்படுத்தினாலும் தாயும் தந்தையுமின்றி பெண் பிள்ளைகள் வாழும் நிலை எமது பண்பாட்டைப் பொறுத்தவரை தாக்கமானதொன்றுதான். என்றாலும் இவர்களுடைய உறவினர்கள் அதையும் தாங்கிக் கொண்டார்கள்.

மட்டக்களப்பு நகரத்தில் தங்கியிருந்த இவர்களுடைய 7 வயதிலும் 4 வயதிலும் உள்ள பெண்குழந்தைகளால் தாயின் இறந்த உடலை பார்க்க முடியவில்லை. தந்தையின் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் வேணுதாஸ் அவர்களின் அர்ப்பணிப்பு அமைந்திருந்தது. இவருடன் சட்டக்கல்லூரியில் பயின்ற நண்பன் ஒருவர் வெளிநாட்டிலிருந்து இவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனைவியை இழந்த நீ பிள்ளைகளுக்காக வெளிநாடு வருவது பற்றி முடிவு எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட கருத்தையிட்டு வேணுதாஸ் அவர்கள் கூறியவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இந்த விடுதலைப் போராட்டத்தில் எனது குழந்தைகள் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இன்நிலையிற்தான் எனது மனைவியையும் நான் இழந்திருக்கின்றேன். இனிமேல் நான் ஏன் வெளிநாடு செல்லவேண்டும் எனது மனைவி இறந்ததுபோல் இந்தமண்ணில் மக்களுடன் வாழ்ந்து மடியவே நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு நீண்டகாலமாக தமிழ்மக்களின் விடுதலைக்காக செயல்பட்ட வேணுதாஸ் தான் நேசித்த மண்ணிலேயே தன்னை அர்ப்பணித்தார். மனைவியைப் பிரிந்தபோதும் இரண்டு பிள்ளைகள் இருந்தும் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முழுநேரமாக இணைத்துக்கொண்டார். நாட்டுப்பற்று இனப்பற்று மொழிப்பற்று இனத்திற்கான விடுதலை வேட்கை என்பன வேணுதாஸ் அவர்களையும் ஒரு மாவீரராக வரலாற்றில் பதிவு செய்தது. தாயும் தந்தையுமின்றி எதிர்காலத்தில் வாழப்போகும் அவருடைய இருபெண்பிள்ளைகளைப்பற்றியும் நாம் எண்ணிப்பார்க்கின்றபோது இவ்வாறான அர்பணிப்புக்களும் எமது மண்ணில் நிகழ்ந்துள்ளது என்பதை எமது மக்கள் அறிந்துகொள்ளுவதற்கு இப்பதிவு உதவும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

மயிலவட்டுவான் என்கின்ற அழகிய எழில் கொஞ்சும் சிற்றூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட வட்டத்தில் அமைந்திருந்ததால் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் சந்திப்பு இடமாகவும் அது விளங்கியது. ஆறும் வயலும் சூழ்ந்த இவ்வூரில் சுமார் 50 குடும்பங்கள் நிரந்தரமாக வாழ்த்துவந்தன. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் இவ்வூரை என்றும் எம்மால் மறக்கமுடியாது. இங்கு நாம் அநேகமான போராளிகளுடன் உறவாடி வாழ்ந்திருக்கின்றோம். களுவாஞ்சிக்குடி என்னும் ஊரைச்சேர்ந்த கப்டன் முத்துசாமி என்பவருடன் இவ்வூர்மக்கள் ஒட்டி. உறவாடியதையும் இச்சந்தப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

11 . 12 . 1991 ம் ஆண்டு அது ஒரு காலைப்பொழுது மயிலவட்டுவானில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினருடான சந்திப்பு ஒன்றுக்காக மாவட்ட அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் சத்துருக்கன் அவர்களுக்கான மொழிபெயர்ப்புச்செய்வதற்காக மேஜர் வேணுதாஸ் அவர்களும் புகைப்படப்பிடிப்புப் போராளி 2 வது லெப். ராஜா சத்துருக்கன் அவர்களின் உதவியாளர் வீர வேங்கை பிரசாந் ஆகியோர் காத்திருந்தனர்.

எப்போதும் மயிலவட்டுவானில் காலைவேளைகளில்; சன நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். ஏனெனில் பட்டிகளிலிருந்து பால்கொண்டு வருபவர்கள் வயலுக்குச் செல்பவர்கள் என எல்லோரும் அப்போதுதான் இவ்வழியாக வருவார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்தனர். சில நாட்களுக்கு முன் சந்தனமடு குடாவட்டை போன்ற வயல் வட்டங்களில் சிங்கள இராணுவத்தினரின் நடவடிக்கையினால் மக்களின் குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்தை பார்வையிடுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரை அழைத்துக்கொண்டுசென்ற சில நிமிடங்களின் பின்பு வெடிச்சத்தங்கள் கேட்டன. சிவத்தப்பாலத்திற்கு அருகாமையில் பதுங்கியிருந்த சிங்கள இராணுவத்தினர் திடீரென தாக்கியதில் நான்கு பேரும்வீரச்சாவைத் தழுவியதாக எமக்குச் செய்திகிடைத்தது . சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரின் வாகனம் திரும்ப மயில வட்டுவானுக்கு வந்து சேர்ந்தது.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்னுமிடத்தைச் சேர்ந்த மட்டு அம்பாறை மாவட்டத்தின் முதல் பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்துக்கொண்ட கப்டன் சத்துருக்கன் மட்டக்களப்பு நகரில் மக்களுக்கெல்லாம் அறிமுகமான சட்டத்தரணி வேணுதாஸ் இருதயபுரம் என்னுமிடத்தைச் சேர்ந்த ராஜா பன்குடாவெளி என்னும் ஊரைச் சேர்ந்த பிரசாந் ஆகியோருடைய வீரச்சாவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் நாளிதழில் மேஜர் வேணுதாஸ் அவர்கள் பற்றிய கட்டுரையைப்பார்த்த பின்புதான் எமது தேசியத் தலைவர் அவர்கள் வேணுதாஸ் அவர்களின் வீரச்சாவினை அறிந்துகொண்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட போராளிகளை அழைத்து வேணுதாஸ் அவர்களைப் பற்றி எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டுகூறியதை இங்கு பதிவு செய்கின்றோம். வேணுதாஸ் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலையைப்பற்றி நான் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலே அவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் பயணத்தின் பாதைகள் வேறாக இருந்தபோதும் இறுதியில் சரியானபாதையை தெரிவுசெய்து எம்முடன் இணைந்துகொண்டார். இவரைப் பற்றியும் இவருடையவாழ்வு பற்றியும் போராளிகளாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும். என்று கூறியதோடு தாயையும் தந்தையையும் இழந்த இந்த பிள்ளைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று தெரிவித்தார். இச்சந்தப்பத்தில் இன்னோர் கருத்தையும் குறிப்பிட்டார். ¨போராட்டத்தின் விளைவினால் பெற்றோரை இழக்கின்ற பிள்ளைகள் என்றும் அனாதைகள் இல்லை. நான் இருக்கும் வரை இவர்கள் எல்லோரும் நன்றாகப் பராமரிக்கப் படுவார்கள்¨. இதிலிருந்து தேசியத் தலைவர் அவர்களின் தொலை நோக்குப்பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு முன் வரவேண்டும்.

இவ்வாறு இலக்குத் தவறாத தமிழீழ தாய் நாட்டின்விடுதலைக்கானா இலட்சியப்பயணத்தில் வேணுதாஸ் அவர்களும் இணைந்துகொண்டார். இவர் காலத்தில் வாழ்ந்த எமது நெஞ்சினில் இவருடைய நினைவுகளும் என்றும் நிலைத்துநிற்கும்.


தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த மேஜர் வேணுதாஸ்  அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

- எழுகதிர்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us