ஈழம்

ஈழம்

புதன், 7 ஆகஸ்ட், 2013

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 16]

இஸ்ரேல் தொடர்பாக் வெளிவருகின்ற இந்தக் கட்டுரைத் தொடர் உலகத் தமிழர் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வேறு பல தமிழ் ஊடகங்களும் இந்தக் கட்டுரைத் தொடரை தமது தளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள்.

ஐரோப்பாவில் சிலர் இந்தக் கட்டுரையைப் பிரதிகள் எடுத்து விநியோகித்தும் வருகின்றார்கள். இந்தக் கட்டுரைத் தொடரை தாம் புத்தகமாக வெளியிட விரும்புவதாகவும் சிலர் தமது ஆர்வத்தை வெளியிட்டுள்ளார்கள்.


ஏராளமானவர்கள் இந்தக் கட்டுரைத் தொடர் பற்றி தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.  அதேவேளை சிலர் இந்தக் கட்டுரை தொடர்பாக சில விமர்சனங்களையும், கண்டனங்களையும் வெளியிட்டுள்ளார்கள். அப்படியான விமர்சனங்கள் கண்டனங்களுக்கான பதில்களைத்தான்; இந்த வாரம் நாம் பார்க்க இருக்கின்றோம்.

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ற இந்தத் தொடர் பற்றி மூன்று முக்கிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1. இன்று பலஸ்தீனர்களை மிக மோசமாக அடக்கி, மனிதத்திற்கு எதிரான மிகக் கொடுரமான அநீதிகளைப் புரிந்துகொண்டிருக்கும் இஸ்ரேலியர்களை நாம் ஒருபோதும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. (இஸ்ரேல் ஒரு தீண்டத்தகாத தேசம் என்றும், இஸ்ரேலை நியாயப்படுத்துவது 'ஹராம்" என்றும் பல இஸ்லாமிய சகோதரர்கள் என்னைக் கடுமையாகச் சாடி இருந்தார்கள். விடுதலைக்காகப் போராடும் பலஸ்தீனர்களிடம் இருந்தே உதாரணங்களை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சில இடதுசாரி அன்பர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார்கள்.)

2. இஸ்ரேலியர்களையும், ஈழத் தமிழரையும் ஒருபோதும் நாம் ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. (இஸ்ரேலியர்கள் மத்தியில் காணப்படுவது போன்ற ஒற்றுமை, ஒருமைப்பாடு, மொழிப்பற்று, விடுதலை உணர்வு ஈழத் தமிழராகிய எங்களிடம் போதியளவு கிடையாது என்று புலம் பெயர் தமிழ் புத்தி ஜீவிகள் சிலர் வாதாடுகின்றார்கள்).

கட்டுரையில் வழங்கப்படுகின்ற சரித்திர ஆதாரங்களில் சில முரன்பாடுகள் காணப்படுகின்றன.

இந்தக் கட்டுரைத் தொடர் தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டுக்கள் இவைகள்தாம்.

இந்த விமர்சனங்களுக்கான விளக்கத்தைத்தான் இந்த வாரம் தேடுவதற்கு முனைகின்றேன்.

முதலாவது, இஸ்ரேலியர்கள் இன்று பலஸ்தீன தேசம் மீதும் பலஸ்தீன மக்கள் மீதும் புரிந்துகொண்டிருக்கின்ற கொடுமைகளையும், அநீதிகளையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் சரி என்று கூறவில்லை. அதனை நியாயப்படுத்தவும் முயலவில்லை.

இஸ்ரேல் தொடர்பாக அதிகம் எழுதுவது, அதுவும் சில நியாயப்பாடுகளை முன்வைத்து நான் எழுதுவது சில இஸ்லாமிய அன்பர்களைப் புன்படுத்துவதாக இருப்பதற்கு நான் மனம் வருந்துகின்றேன்.

ஆனால் ஒரு இனவிடுதலைப் பயணத்தில் வெற்றிபெற்ற ஒரு இனம் என்கின்ற வகையில், அந்த இனத்தின் விடுதலைப் பயணம் எப்படிப்பட்டது என்றும், எப்படி அமைந்தது என்றும் ஆராய்வது, ஒரு விடுதலையின் பாதையில் தடுக்கி விழுந்து தடுமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்திற்கு ஒரு நல்ல படிப்பினை என்பதே உண்மை.

எங்களைப் போலவே சுதந்திரத்தைத் தொலைத்துவிட்டு, உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்து, அனைவராலும் ஏமாற்றப்பட்டு, நாடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்த இஸ்ரேலியர்கள் - பல வருடப் போராட்டத்திற்குப் பின்னர் எவ்வாறு தமது விடுதலையைப் பெற்றார்கள்- தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொண்டார்கள் என்பது, இன்று சுதந்திரத்தைத் தொலைத்துவிட்டு நடு வீதியில் நின்று பரிதவித்துக்கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய நல்லதொரு பாடம். ஈழத் தமிழினம் அறிந்துவைத்திருக்கவேண்டிய சிறந்த படிப்பினைகள் இஸ்ரேலியர்களுடைய விடுதலைப் பயணத்தில் இருக்கின்றன. ஒரு விடுதலையை அடைவதற்கான ஏராளமான நுனுக்கங்கள் இஸ்ரேலியருடைய விடுதலைப் பாதையில் காணப்படுகின்றன.

அவற்றை ஈழத் தமிழினம் நிச்சயம் அறிந்துவைத்திருக்கவேண்டும் என்ற என்து வாஞ்சையின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.

இதுவரை காலமும் பலஸ்தீனர்களுடைய விடுதலைப் போராட்டத்துடன்தான் நாம் எமது போராட்டத்தை ஒப்பிட்டு வந்துள்ளோம். உலகினாலும், அரபுநாடுகள் உட்பட பல்வேறு மத அமைப்புக்களாலும் ஏமாற்றப்பட்டு ஒரு தோல்விகரமான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற ஒரு தரப்பினுடைய வழியினைப் பின்பற்றுவதென்பது, எம்மை மீண்டும் தோல்வியின் பாதையில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

ஒரு பரீட்சையில் அதிக புள்ளிகள் எடுத்து பரிட்சையில் அதி விசேட சித்தி பெற்ற மாணவணைப் பார்த்துதான், அவனை உதாரணத்திற்கு எடுத்துத்தூன் நாம் எமது பிள்ளையை கற்பிக்க வேண்டும். அதி விசேட சித்தி பெற்ற மாணவன் எவ்வளவு நேரம் படித்தான். காலையில் அதிகம் படித்தானா அல்லது மாலையில் அதிக நேரம் படித்தானா? அவன் எங்கு டியூசன் எடுத்தான். ஞாபகசக்திக்கு என்ன உணவு சாப்பிட்டான் -இப்படி அந்த வெற்றி பெற்ற மாணவணைப் பார்த்து அவனது வெற்றிக்கான வழிகளைப் பின்பற்றினால்தான் நாம் எமது பிள்ளைகளையும் சித்திபெறவைக்க முடியும்.

அதை விட்டுவிட்டு பரிட்சையில் பல தடவைகள் குண்டுபோட்ட மாணவனின் வழிகளை நாம் பின்பற்றினால், எங்களுடைய பிள்ளைகளும் பூச்சியப் புள்ளிகளைத்தான் பெறுவதற்குச் சந்தர்பம் இருக்கின்றது.

எப்பொழுதுமே வெற்றி பெற்ற ஒரு தரப்பினுடைய வழிகளைக் கற்றுக்கொள்வது, வெற்றி பெற்ற தரப்பை உதாரணததிற்கு எடுத்துக்கொள்வதுதான், எம்மை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்ல உதவும்.

அந்த வகையில் இஸ்ரேல் என்பது ஒரு வெற்றிபெற்ற தேசம். தமது போராட்டத்தில் வெற்றி பெற்ற இனம்தான் இஸ்ரேலிய இனம். சுமார் 1900 வருடங்கள் போராடி தமது வெற்றியைப் பெற்றிருக்கின்றார்கள்.

அந்த 1900 வருடங்கள் இஸ்ரேலியர்கள் எப்படிப் போராடினார்கள், என்னென்ன வியூகங்களை வகுத்தார்கள், எப்படி தமது தன்னம்பிக்கையை வளர்த்தார்கள், பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த இஸ்ரேலியர்கள் எவ்வாறு தம்மை ஒருங்கிணைத்தார்கள், எப்படி நகர்வெடுத்தார்கள், இறுதியில் தமது நீண்ட இலக்கினை எவ்வாறு அடைந்தார்கள் - இவை பற்றி ஆராய்வதுதான்- எம்மை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

இரண்டாவதாக, இஸ்ரேலியர்களுடன் ஈழத் தமிழினத்தை ஒப்பிட முடியாது என்று ஒருசிலர் கூறுகின்றார்கள். அதற்கு ஈழத் தமிழினத்தினுள்ளே இருக்கின்ற முரன்பாடுகளையும், சாதிப்பிரிவினைகளையும், ஒற்றுமையீனத்தையும் அவர்கள் காரணம் காண்பிக்கின்றார்கள்.

ஒரு பாரம்பரிய மதத்தில் உறுதியாகக் கட்டப்பட்ட இஸ்ரேலியர்களுடன் ஒப்பிட முடியாத பல அம்சங்கள் ஈழத் தமிழரிடம் இருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் தமிழர்கள் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நாம் எமதாகக் கொண்டிருக்கும் வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு அடித்துக் கூறலாம். எங்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. இஸ்ரேலியர்கள் மதத்தால் ஒன்றுபட்டிருந்தால் நாம் மொழியால் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கின்றோம். தமிழ் மொழி உலகின் மிகச் சொற்பமான செம்மொழிகளுள் ஒன்று என்பது எமக்கிருக்கும் பல அனுகூலங்களுள் முக்கியமானது.

இன்று எம் மத்தியில் காணப்படுகின்ற பிரிவினைகள், சாதி வேறுபாடுகள், ஒற்றுமையின்மை என்பன பற்றிப் பேசி பேசி எம்மை நாமே பலவீனப்படுத்திக்கொண்டிருக்கின்றோம். ஒரு நீண்ட போராட்டத்தை மேற்கொண்ட இஸ்ரேலிய சமூகத்தினரிடையேயும் சாதிப் பிரிவுகளும், அந்த பிரிவுகளிடையேயான ஏற்றத் தாழ்வும் இருந்ததாகவே வரலாறுகள் கூறுகின்றன.

இஸ்ரேலியரிடையே 12 கோத்திரங்கள் இருந்ததாகவும், அந்த கோத்திரங்களிடையே பிரிவுகளும், வேறுபாடுகளும் காணப்பட்டதாகவும் வேதாகமம் முதற்கொண்டு, தோரா, வரலாற்றுப் பதிவுகள் என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலியர்களின் ஒரு அங்கமான சமாரியர்கள் வேறு இனத்துடன் உறவுகொண்டதற்காக சமாரியர்கள் இஸ்ரேலியர்களால் ஒதுக்கப்பட்டு சமூகமாகவே நடாத்தப்படுகின்றார்கள்: இஸ்ரேலியர்களின் முக்கிய கோத்திரங்களாக( எங்கட பிராமனர்கள், வெள்ளாளர்கள் வகையறாக்களைப் போல) யூத கோத்திரம், பெஞ்சமின் கோத்திரங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.

இஸ்ரேலியர்களின் விடுதலைப் பயனத்திலும் இதேபோன்ற பல பிரிவுகள் தமது போராட்டங்களை மேற்கொண்டுவந்ததையும், அவர்களிடையே பல முரன்பாடுகள், குடும்பிச் சண்டைகள் இருந்ததையும் எதிர்வரும் அத்தியாயங்களில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். பல்வேறு வேற்றுமைகளுடன் எப்படி ஒரு விடுதலையின் பயணத்தில் இஸ்ரேலியர்களால் நகர முடிந்தது என்பதுதான் நாம் இந்த தொடரில் கற்றுக்கொள்ள இருக்கின்ற முக்கிய பாடங்கள்.

கடைசியாக இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற சில சரித்திரச் சம்பவங்களில் முரன்பாடுகள் காணப்படுவதான குற்றச்சாட்டுப் பற்றியது.

வரலாற்றுச் சம்பவங்களில் முரண்பாடுகள் என்பது தவிர்க்க முடியாதது.

இதற்கு உதாரணமாக மிக மிக அன்மைய வரலாற்றுச் சம்பவம் ஒன்றைப் பார்த்துவிடுவோம்.

கடந்த நூற்றாண்டில் மிக முக்கிய போராட்டத் தலைவனாக உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருவர்தான் யாசீர் அரபாத். இவர் உண்மையிலேயே எங்கு பிறந்தார் எப்பொழுது பிறந்தார் என்பதில் கூட ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் முரன்பாடுகள் இருக்கின்றன.

உலப் பிரசித்தி பெற்ற போராட்டத் தலைவர் யாரீர் அரபாத் 1924ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 24ம் திகதி பிறந்ததாக ஒரு பதிவும், 4ம் திகதி பிறந்ததாக வேறு சில பதிவுகளும் கூறுகின்றன. யாசீர் அரபாத் இஸ்ரேலியத் தலைநகர் ஜெருசலேமிலேயே பிறந்ததாக சில பதிவுகள் கூறுகின்றன. ஆனால் அரபாத்தின் அதிகாரபூர்வ வாழ்கை வரலாற்று ஆசிரியர் அலன் ஹார்ட், அரபாத் எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலேயே பிறந்ததாக தனது ஆய்வில் தெரிவித்திருக்கின்றார்.

சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தச் சம்வத்திலேயே இத்தனை குழப்பங்கள், முரன்பாடுகள் உள்ளது என்றால், பல ஆயிரம் வருங்கள் பழமை வாய்ந்த இஸ்ரேலியர்கள் தொடர்பான வரலாற்றுச் சம்பவங்களில் முரன்பாடுகள் காணப்படுவது தவிர்க்க முடியாதது.

அடுத்ததாக இந்தக் கட்டுரைத் தொடர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள், சரித்திரங்கள், ஆய்வுகளில் இருந்து பெறப்படுகின்ற தகவல்களை அடிப்படையாக வைத்துத்தான் எழுதப்படுகின்றன

என்பதையும் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

1.History of Israel(Bright-John)
2.When Where and How it Happened(Michael Wotrh Davidson)
3.பரிசுத்த வேதாகமம்
4.இஸ்ரேல் சரித்திரம் ஓர் அறிமுகம் (ஏ.சீ.கிறிஸ்டேபர்)
5.நிலமெல்லாம் இரத்தம்(குமுதம் ரிப்போர்ட்டர்)
6.The Holy Qur - An - English Translation of the Meanings and commentary - The Presidency of Islamic Researches,
7.The Uniqueness of Israel (Lance Lambert)
8.The 5000 Year History of the Jewish People and Their Faith.
9.State of Palestine (Esam Shashaa)
10.A Historey of the Middle East – (Peter Mansfield)
11.The Politics of Dispossession (Edward Said)
12.Peace and its Discontents (Edward Said)
13.Jerusalem – (Larry Collins, Dominique Lapierre)
14.The Middle East : Yesterday and Today (David W. Miller, Clark D. Moore)
15.Umar The Great - Allamah Shibli Nu'mani (Muhammad Ashraf, Pakistan)
16.Israel and the Arabs - Israel Communications, Jerusalem
17.Ancient History of Palestine (Abu Sharar)
18.90 Minutes at Entebbe (William Stevenson)
19.Cross Roads to Israel(Christopher Sykes)
20.Palestine Refugees( Esam Shashaa)
21.Bible country-A journey through Holy Land( Kroll Woodrow)
22.Israel Information Center.
23.In the arms of a Father (Haneen al – Far)
24.UN Report, Intifada, United Nations Publication

அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us