ஈழம்

ஈழம்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 17]

இஸ்ரேல் என்கின்ற தேசம் எவ்வாறு உருவானது என்றும், அந்த இஸ்ரேல் தேசத்தினுடைய செழிப்பான வாழ்க்கை பற்றியும் முன்னர் இத்தொடரில் விரிவாகப் பார்த்திருந்தோம்.

இஸ்ரேல் தேசத்தின் பொற் காலம் என்று அழைக்கப்படுகின்ற தாவீதினதும், சாலமோனினதும் ஆட்சிக் காலம் பற்றியும் ஆராய்ந்திருந்தோம்.


இஸ்ரேல் தேசத்தை ஒரு குடையின் கீழ் சாவுல், தாவீது, சாலமோன் என்ற இந்த மூன்று மன்னர்களும் மட்டும் தான் ஆட்சி புரிந்தார்கள். இவர்களுக்குப் பின்னரான காலகட்டத்தில் இஸ்ரேல் தேசம் என்பது பிளவுபட்ட தேசமாகவும், அன்னியரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசமாகவும்தான் இருந்து வந்தது. 1948ம் ஆண்டு இஸ்ரேல் சுதந்திரம் அடைந்து ஒரு தனிநாடாக உருவாகும் வரைக்கும், இஸ்ரேல் தேசத்தை சுதந்திரமாக ஒரு இஸ்ரேலியன் ஆளுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை.

சாவுல், தாவீது, சாலமோன் மன்னர்களின் காலத்தின் பொழுது ஒரு ஐக்கிய இராஜ்ஜியமாக இருந்த இஸ்ரேல், சாலமோனின் மறைவைத் தொடர்ந்து கி.மு.931 ம் ஆண்டு வட இராஜ்யம் தென் இராஜ்ஜியம் என்று இரண்டாகப் பிரிந்தது. இஸ்ரேலிய மக்கள் மத்தியில் இருந்த கோத்திரப் பிரிவுகள், வேறு பல வேறுபாடுகள் காரணமாக இந்தப் பிரிவு ஏற்பட்டது.

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட வட இராஜயம் இஸ்ரேல் என்று அழைக்கப்பட்டது.

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட தென் இராஜ்யம் ய+தேயா என்று அழைக்கப்பட்டது.

இதில் ஜெருசலேமைத் தலை நகராகக் கொண்ட யூதேயா தேசத்து மக்கள் சமாரியாவை தலைநகராகக் கொண்ட இஸ்ரேலியரை கொஞ்சம் இகழ்ப்பமாகவே கருதி செயற்பட்டார்கள்.

இலங்கையில் குறிப்பிட்ட பிரதேசத்து மக்கள் மற்றொரு பிரதேசத்து மக்களை எவ்வாறு கொஞ்சம் இகழ்ப்பமாகப் பார்ப்பார்களோ- அதே போன்று தான் யூதேயா மக்கள் இஸ்ரேல் பிரதேச மக்களை பெரிதாக மதிப்பதில்லை. இஸ்ரேலிய மக்களின் முக்கிய அடையாளச் சின்னமாகிய ஜெருசலேம் தேவாலயம் யூதேயாவில் இருப்பது அவர்களுக்கு அப்படியான ஒரு திமிரை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு கல்வி அறிவிலும் யூதேயா தேசத்து மக்கள் சிறந்தவர்கள். யூத மத வழிபாடுகளை மிக மூர்க்கமாக பின்பற்றும் போக்கையும் யூதேயா தேசத்து மக்கள் தமதாகக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு ஒருவகைத் தடிப்பு இருக்கத்தான் செய்தது.

எப்பொழுது ஒரு இனத்தின் மத்தியில் பிளவுகள், பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றதோ, அப்பொழுதே அந்த இனம் மிக மோசமான பின்னடைவின் பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அது எப்படிப் பட்ட புத்திசாலித்தனமான இனமாக இருந்தாலும் சரி, அல்லது அது எப்படிப்பட்ட தொன்மையான இனமாக இருநதாலும் சரி, ஒரு இனத்தின் இரண்டு பிரிவுகளுக்கு இடையே அல்லது ஒரு தேசத்தின் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டு விட்டால், அந்த தேசம் வெற்றிப்பாதையில் செல்வது மிகவும் கடினம் என்பதில் சந்தேகம் இல்லை.

இஸ்ரேல் தேசம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

ஒரே இராஜ்ஜியமாக இருந்த இஸ்ரேல் தேசத்தினிடையே ஏற்பட்ட பிரிவு, இஸ்ரேலியர்களைப் பலவீனப்படுத்தியது.

வீறுகொண்ட ஒரு இனம் பலவீனமாகிவிட்டால், ஒன்றல்ல பல எதிரிகள் துணிந்து அந்த இனத்தில் கைவைப்பார்கள்.

இஸ்ரேல் மீது முதலில் கையை வைத்தார்கள் அசீரியர்கள்.

கி.மு. 722 இல் சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசத்தை ஆக்கிரமித்த அசீரியர்கள், அந்த தேசத்தில் இருந்த அனைத்து இஸ்ரேலியர்களையும் சிறைப்பிடித்தார்கள்.

அவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய மக்கள், முதியவர்கள், கைக் குழந்தைகள், பெண்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரையுமே பல மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டார்கள். இஸ்ரேல் தேசத்தின் தலைவர்கள், போர் வீரர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்காணவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். தமது தேசத்திற்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

இஸ்ரேலியர்களை அவர்களது தேசத்தில் பெரும்பான்மையாக வாழ அனுமதித்தால், காலப்போக்கில் போராட்டம், புரட்சி என்று ஏற்பட்டுவிடலாம் என்று அச்சப்பட்ட அசீரியர்கள், தாம் ஏற்கனவே ஆக்கிரமித்த வேறு தேசத்து மக்களை இஸ்ரேலுக்கு கொண்டுவந்து அங்கு குடியமர்த்தினார்கள்.

இதில் ஈழத் தமிழர் சிலருக்கு கொஞ்சம் உறைக்கக்கூடியதான ஒரு வேடிக்கை இருக்கின்றது.

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசம் அசீரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காலகட்டத்தில், ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதேயா தேசம் சுயமாக அட்சி நடாத்திக்கொண்டுதான் இருந்தது.

ஆனால் இஸ்ரேல் தேசத்தின் உதவிக்கு யூதேயா செல்லவேயில்லை.

அங்கு நடைபெற்ற யுத்தத்தில் தப்பிப் பிழைத்து யூதேயா வந்து சேர்ந்த மக்களையும் அவர்கள் உள்வாங்கவில்லை.

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசத்தவர் யூதமத அனுஷ்டானங்களை சரியாகக் கடைப்பிடிக்காத காணத்தினால் கடவுளே அவர்களை அழித்து தண்டனை வழங்கும்படியான அனுமதியை கொடுத்திருப்பதாகக் கூறி, வாளாவிருந்துவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, காலப் போக்கில் அசீரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசத்தவரை ‘சமாரியர்கள்” என்ற பெயர் அடையாளத்திலேயே அழைத்ததுடன், அவர்களை தீண்டத்தகாத கீழ் ஜாதியினராகவும் கருதிச் செயற்படத் தொடங்கினார்கள் யூதர்கள்:

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேலை ஆக்கிரமித்த அசீரியர்கள் வேறு தேசத்து மக்களை அங்கு குடியமர்த்தினார்கள் என்று முன்னர் பார்த்திருந்தோம் அல்லவா. அவ்வாறு குடியேறிய வேறு நாட்டு மக்களுடன் சமாரியாவில் தங்கிவிட்டிருந்த இஸ்ரேலியர்கள் சம்பந்தம் கொண்டதன் காரணமாக, சமாரியர்கள் பாவம் செய்த ஒரு இனமாகவும், தீண்டத்தகாத ஒரு இனமாகவும் யூதர்களால் நடாத்தப்பட்டார்கள்.

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசம் அசீரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சுமார் 140 வருடங்கள் வரைக்கும், யூதேயா பலம் மிக்க ஒரு இராஜ்ஜியமாகவே இருந்தது. அன்னியர் நெருங்க முடியாத போர்ப்படையையும், பலம்மிக்க ஜெருசலேம் கோட்டையையும், நிறைந்த செல்வத்தையும் தனதாகக் கொண்டிருந்த யூதேயா, தனது இரத்த உறவுகளை காப்பாற்றவேண்டும், மீட்கவேண்டும் என்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், பிரதேசவாதம், சாதியம் பேசியபடி காலம் கடத்தியது.

சகோதரனுக்கு துன்பம் வந்த போது வேடிக்கை பார்த்த யூதர்கள், அதே துன்பம் தனது வாசல் படிக்கு வந்த போதுதான், தமது தவற்றை உணர்ந்தார்கள்.

ஜெருசலேம் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போது தான், தம்மிடையே ஏற்பட்ட பிழவு என்பது இஸ்ரேலின் அனைத்து கோத்திரங்களையும் எத்தனை தூரம் பலவீனப்படுத்தியிருந்தது என்பதை யூதர்கள் முதன் முதலில் உணரத் தலைப்பட்டார்கள்.

பலம்மிக்க சாம்ராஜ்ஜியமாக விளங்கிய யூதேயா கி.மு. 586ம் ஆண்டு பபிலோனியரால் ஆக்கிரமிக்கப்பட்டபோதுதான் தம்மிடையேயான பிளவுகள், பிரிவுகள் எத்தனை தூரம் தம்மைப் பலவீனப்படுத்திவிட்டுள்ளது என்றும், தமக்கு ஏற்பட்ட பலவீனம் தமது இனத்தின் சுதந்திரத்தை எத்தனை நூற்றாண்டுகள் பின்தள்ளிவிட்டுள்ளது என்றும் நினைத்து வருந்தத் தலைப்பட்டார்கள்.

ஒற்றுமையின்மையினால் அன்று இஸ்ரேலியர்களுக்கும், யூதர்களுக்கும் ஏற்பட்ட பின்னடைவு என்பது அவர்கள் கஷ்டப்பட்டுக் கட்டிய தேசத்தை எதிரியிடம் இழக்கச் செய்திருந்து. அவர்கள் தமது ஒட்டுமொத்த வாழ்வையுமே தொலைக்கச் செய்திருந்தது.

பலரது தியாகங்களினூடாக அவர்கள் பெற்ற அந்தச் சுதந்திரத்தை அவர்கள் இழக்கச் செய்திருந்தது.

உலகில் எந்த ஒரு இனமும் படாத துன்பங்களை அவர்கள் அனுபவிக்கும்படி செய்திருந்தது.

மீண்டும் ஒரு விடுதலையைப் பெறுவதற்கு அவர்களை பல நூற்றாண்டுகள் காத்திருக்கும்படி செய்திருந்தது.

இஸ்ரேலிய யூதர்களின் அந்த காத்திருப்புக் காலம் என்பது இலகுவான ஒரு காலம் கிடையாது.

அந்தக் காத்திருப்பு காலத்தில் இஸ்ரேலியர்கள் பட்ட துன்பம் என்பது வாழ்த்தைகளால் கூற முடியாதது. எழுத்துக்களால் விபரிக்கவும் முடியாதது.



அவர்களின் அந்தக் காத்திருப்புக் காலம் என்பது அத்தனை கொடுமையானது.

இஸ்ரேலிய யூதர்களின் அந்த அடிமை வாழ்க்கை பற்றி அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.


அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us