ஈழம்

ஈழம்

திங்கள், 23 டிசம்பர், 2013

தமிழீழ விடுதலை புலிகளிடம் போராடி தோற்ற இந்திய படைகள் பாகம் 06

தமிழர்கள் மீது கோரத் தாண்டவம் ஆடத்தொடங்கிய ஹிந்திய அரக்கர்களை வதம் செய்த தமிழர்கள் !!!

இதை வாசித்த பின்னும் உன் குருதி கொதிக்கவில்லை என்றால் நீ தமிழனே கிடையாது...

போர் என்பது ஒரு இலக்கின் மீது, அந்த இலக்கை அழித்து விடும் நோக்கில் அல்லது அந்த இலக்கை வெற்றி கொண்டு ஆக்கிரமிக்கும் நோக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை. ஆனால் போராட்டம் என்பதோ, தம்மீது நிர்ப்பந்திக்கப்படும் ஆக்கிரமிப்பில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், தம்மீது திணிக்கப்படும் போரில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கும், ஒரு தரப்பு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை.

விடுதலைப் புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகளைப் பொறுத்தவரையில், இந்தியப் படையினர் மேற்கொண்டது போர் நடவடிக்கை.


விடுதலைப் புலிகள் மேற்கொண்டதோ போராட்ட நடவடிக்கை.

இந்தியப் படைகள் புலிகள் மீது, அவர்களை அழித்தொழிக்கும் வகையிலான ஒரு போரை திணித்திருந்தார்கள்.

புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்து அவர்களை நிராயுதபாணிகளாக்கி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்காகவும், அவர்களை அழித்தொழிக்கவும், இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைதான் புலிகளுக்கு எதிரான அவர்களது போர் நடவடிக்கை.

அதே வேளை விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இந்தியப் படையினரின் யுத்த முனைப்புக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், இந்தியாவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், அவர்கள் வேறு வழியில்லாது மேற்கொண்ட அந்த தற்காப்பு நடவடிக்கையை 'போராட்டம்' என்று குறிப்பிடலாம்.

போரும், போராட்டமும்:

இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, ஈழத்தமிழர் மீது இந்தியா திணித்திருந்த போரைப் பற்றி கடிதம் எழுதியிருந்தார். இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணித்திருந்த யுத்தத்தில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றும் படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் தனது கடிதத்தில்,  ஆயிரக்கணக்கான போராளிகள் யுத்தத்தில் மடியும் அதேவேளை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களும் இந்தியா திணித்துள்ள இந்தப் போரில் சிக்குண்டு மடியும் அபாயம் உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகள் என்பவர்கள் மக்களில் இருந்து அந்நியப்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களில் ஒரு அங்கமே விடுதலைப் புலிகள். இது ஒரு மக்கள் அமைப்பு. மக்கள்தான் புலிகள்! புலிகள்தான் மக்கள்.

எனவே எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒரு யுத்தத்தை இந்தியா ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்துள்ளது. இந்த அநியாயத்தை இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் நாட்டுத் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். தமிழ் நாட்டு மக்கள் மாத்திரம் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்பினால், எம் இனத்திற்கு எதிரான இந்தியாவின் அழித்தொழிப்பு யுத்தத்தை நிறுத்திவிடமுடியும்.

எனவே உண்மை நிலையை தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எமது மக்களின் போராட்டத்திற்கு சார்பான அலையை தமிழ் நாட்டில் உருவாக்கி எமது மக்களை இந்திய அரசின் அழித்தொழிப்பு போரில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று எழுதியிருந்தார்.

இந்தியப் படைகள் புலிகளுக்கு எதிரான போரை ஆரம்பித்த மூன்று நாட்களுக்குள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இரண்டு அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார்.

அந்தக் கடிதங்களில், இந்தியப் படைகள் ஈழத் தமிழர்கள் மீது திணித்திருந்த போரினால் 150 ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 500 ற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டவென ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படைகள் ஈழத் தமிழருக்கு எதிராக முழு அளவிலான யுத்தமொன்றில் இறங்கியுள்ளது பற்றி தனது கவலையையும், அதிருப்தியையும் அவர் தனது கடிதங்களில் வெளியிட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் மீது இந்தியா திணித்திருந்த போரை எதிர்த்து போராடுவரைத் தவிர தமக்கு வேறு எந்த வழியும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், அப்பாவி மக்கள் மீது இந்தியப்படை நடாத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகள் மீது என்று கூறி, ஈழத் தமிழர்கள் மீது இந்தியா தொடுத்திருந்த யுத்தத்தின் ஆரம்பத்திலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் எழுதியிருந்த அந்தக் கடிதங்கள், தம்மீது திணிக்கப்பட்டிருந்த போரை விலக்கிக்கொள்ளும்படி அக்கடிதங்களில் அவர் விடுத்திருந்த வேண்டுகோள்கள் அனைத்துமே, விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருடனான யுத்தத்தை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.

புலிகள் விரும்பாத ஒரு போரை இந்தியா புலிகள் மீது திணித்ததினாலேயே, வேறு வழி எதுவும் இல்லாமல் அந்தப் போரை எதிர்கொண்டு போராடவேண்டிய கட்டாயம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது.

புலிகளின் இழப்பு:

இந்தியாவிற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய போராட்டம் என்பது, புலிகளைப் பொறுத்தவரையில் அவ்வளவு இலகுவான ஒன்றாக இருக்கவில்லை.

ஏற்கனவே, விடுதலைப் புலிகளை களமுனையில் வழி நடாத்திக்கொண்டிருந்த சிரேஷ்ட தளபதிகளான பொன்னம்மான், கிட்டு, புலேந்திரன், குமரப்பா, திலீபன் என்று பல முக்கிய போராளிகள் இல்லாத நிலையிலேயே புலிகள் இந்தியாவுடனான யுத்தத்தைச் சந்தித்திக்க வேண்டியிருந்தது.

யுத்தம் ஆரம்பமான முதலாவது நாளிலேயே, புலிகள் தரப்பு பல இழப்புக்களை சந்திக்க ஆரம்பித்திருந்தது.

இந்தியப் படையினருக்கு எதிராகப் போராடக் களமிறங்கிய பெண்புலிகள் தனது முதலாவது இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.

ஒக்டோபர் 10ம் திகதி, கோப்பாய் வழியாக முன்னேற முயன்ற இந்தியப் படையினரை இடைமறித்துத் தாக்குதல் மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் பெண்கள் அணி, இரண்டாவது லெப்டினட் மாலதி (மன்னாரைச் சேர்ந்த பேதுறு சகாயசீலி) என்ற போரளியை இழந்து நின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாவீரரான முதலாவது பெண் போராளி மாலதி என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு மோதலில் புலிகள் அமைப்பின் மற்றொரு முக்கிய தளபதியான லெப்டினட் கேணல் சந்தோசமும் வீரமரணம் அடைந்திருந்தார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விஞ்ஞானபீட மாணவராக இருந்த இவர், புலிகள் அமைப்பில் இருந்த மிகச் சிறந்த போராளிகளுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவில் யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட இந்தியப் படையினருடன் நடைபெற்ற சண்டையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான பொட்டு அம்மான் படுகாயம் அடைந்திருந்தார்.

இதேபோன்று புலிகள் அமைப்பின் பல முக்கிய போராளிகளும், இந்தியப் படையினருடனான சண்டைகளில் கொல்லப்பட்டும், காயமடைந்தும் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். எக்காரணம் கொண்டும், இந்தியப் படையினரிடம் சரணடைவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

இந்தியப் படையினரிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்து, அவமானப்பட்டு மரணிப்பதைவிட, மானத்துடன் போராடி வீரமரணம் எய்துவது மேல் என்று ஒவ்வொரு புலி உறுப்பினரும் கங்கணம் கட்டிக்கொண்டு யுத்தமுனைக்குச் சென்றார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த யுத்தமுனை வெகு விரைவில் அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தது...

இந்தியப் படையின் ஆரம்ப கட்ட இழப்பு

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பமான தினத்திலேயே இந்தியப் படையினருக்கு ஏற்பட்டிருந்த பாரிய இழப்பானது, ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொள்ள இருந்த முழு நடவடிக்கையின் வெற்றியையுமே கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

எந்த ஒரு போர் நகர்விலும் முதலாவது வெற்றி என்பது மிகவும் முக்கியமானது என்றே அனைத்து போரியல் நிபுணர்களும் குறிப்பிடுகின்றார்கள். யுத்தம் ஆரம்பமான முதல் தினங்களில் ஏற்படுகின்ற வெற்றிகள், தோல்விகள் என்பன, அந்த யுத்த நடவடிக்கையின் இலக்கையும் இறுதி முடிவையும் நிர்ணயித்துவிடுவதாக போரியல் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

போராடும் படையினருக்கு உளவியல் ரீதியில் உற்சாகத்தையும், தைரியத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் இலகுவாக வெற்றிகொள்ளக்கூடிய ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதனைக் குறிவைத்துத்தான் எந்த ஒரு தலைவனும் தனது முதலாவது தாக்குதல் திட்டத்தை வகுப்பது வழக்கம்.

ஏனெனில் எந்த ஒரு யுத்த நடவடிக்கைக்கும், முதல் ஓரிரு நாட்களில் ஏற்படுகின்ற தோல்விகள், அந்த நடவடிக்கையின் இறுதி வெற்றிக்குப் பாரிய பின்னடைவைத் தந்துவிடும் என்பதே போரியல் யதார்த்தம்.

இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட ஒப்பரேஷன் பவான்| (Operation Pawan) இராணுவ நடவடிக்கையும் படுதோல்வியில் முடிவடைவதற்கு ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள்தான் காரணம் என்று போரியல் அறிஞர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.

இந்தியப் படையினர் தமது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த தினமே பாரிய இழப்புக்ளைச் சந்தித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்கு என்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் தரையிறக்கப்பட்ட துருப்பினர் அனைவருமே ஒட்டுமொத்தமாக புலிகளினால் அழிக்கப்பட்ட நிகழ்வானது, தொடர்ந்து உற்சாக மனோபாவத்துடன் போராட முடியாத வகையில் இந்தியப்படையினரின் மனநிலையைச் சிதைத்துவிட்டிருந்தது.

அதுவும், இந்திய இராணுவத்தின் அதி உச்சப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்றும், இந்திய இராணுவத்தின் சிறந்த, சாகாசம் புரியக் கூடிய வீரர்கள் என்றும், ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும் குடியிருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்கள் (Para Commandos), புலிகளின் பொறியில் மாட்டி தடுமாறிய சம்பவம், பரிதாபமாக உயிரை இழந்திருந்த சோகம் என்பன, ஒவ்வொரு இந்தியப் படையினரது மனங்களிலும் கிலேசத்தை ஏற்படுத்தியிருந்தது.

புலிகளை இலகுவாக வெற்றி கொண்டு விடலாம், இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான் இந்தச் சண்டைகள், அதன் பின்னர் புலிகள் சரனடைந்து விடுவார்கள், என்றெல்லாம் தமது தளபதிகள் கூறியதை நம்பி உற்சாகத்துடன் களமிறங்கியிருந்த இந்தியப் படை வீரர்களுக்கு, தாம் நினைத்தபடி களமுனை இலகுவான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்று முதன்முதலில் புரிய ஆரம்பித்திருந்தது.

சாதாரண இந்தியப் படை ஜவான்களின் மனங்களில் ஏற்பட ஆரம்பித்திருந்த இந்த வகை மனவோட்டம், களமுனைகளில் இந்தியத் தரப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவை பெற்றுத் தந்திருந்தது.

தொடர்ந்து நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள முடியாமல் போனதற்கும், ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியே பிரதான காரணம் என்று கூறப்படுகின்றது.

இந்தியாவின் யுத்த வரலாற்றில், அது தனது யுத்த தந்திரங்களை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகவும், யாழ் பல்கலைக்கழக தரையிறக்கம் இந்தியப் படைத்துறைத் தளபதிகளுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருந்தது.அதுமட்டுமல்ல, பின்நாட்களில் ஈழ மண்ணில் இருந்து இந்தியப் படைகள் பின்வாங்கிய பின்னரும் கூட, இந்தியப் படைத்தளபதிகளும், இராஜதந்திரிகளும் தமக்குள் பொருமிக்கொண்டும், தம்மிடையே சண்டைகள் பிடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் இருப்பதற்கு காரணமாக அமைந்த ஒரு சம்பவமாக, அன்றைய அந்தத் தரையிறக்கத் தோல்விகள் அமைந்திருந்தன.

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்:

புலிளுடனான தாக்குதலை- குறிப்பாக புலிகளிடம் அடிவாங்கிய யாழ் பல்கலைக்கழக மைதான தரையிறக்க நடவடிக்கையை நெறிப்படுத்திய இந்தியப் படை அதிகாரியின் பெயர் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்.

இந்தியப் படை நடவடிக்கை பற்றி பின் நாட்களின் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் கூறுகையில்,

முதலில் புலிகளுடன் நாம் எதற்காக மோதுகின்றோம் என்று எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை. எந்த ஒரு தாக்குதலுக்கும், யுத்தத்திற்கும் ஏதாவது ஒரு குறிக்கோள் இருப்பது அவசியம். ஆனால் புலிகளுடன் நாம் ஆரம்பித்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை.

அன்று தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் எனக்கு ஒன்பது ஹெலிகாப்டர்கள் தேவை என்று கேட்டிருந்தேன். தரையிறங்கிய துருப்பினருக்கு வானில் இருந்து தேவையான சூட்டாதரவை வழங்குவதற்கென்று இதனை நான் கோரி இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அவை மறுக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக இந்திய அமைதிகாக்கும் படையின் யுத்த நடவடிக்கைகளை வெறும் அரசியல் இராஜதந்திரியான தீட்ஷித் நெறிப்படுத்த ஆரம்பித்ததுதான் அனைத்தும் பிழையாகிப் போவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. இவ்வாறு ஹரிகிரத் சிங் தெரிவித்திருந்தார்.

கொமாண்டரின் முட்டாள்தனம்:

புலிகளை வழைத்துப் பிடிப்பதற்கு என்று கூறி இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அந்த தரையிறக்கம் பற்றி பின்நாட்களில் கருத்து தெரிவித்த முன்நாள் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீக்ஷித், அது இந்தியப் படை கொமாண்டரது முட்டாள்தனமான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார்.  மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் மேற்கொண்ட முட்டாள் தனமான தரையிறக்க நடவடிக்கையினால்தான் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. பூரண நிலவில், புலிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் ஹெலிக்கொப்டர் தரையிறக்கத்தை மேற்கொள்வதை, முட்டாள்தனம் என்று குறிப்பிடாமல் வேறு எவ்வாறு கூறமுடியும்? இந்தியப் படையினரின்; திட்டத்தை தொலைத் தொடர்பு பரிமாற்றங்களின் போது புலிகள் நிச்சயம் ஒட்டுக்கேட்டிருப்பார்கள் என்பதை இந்தியப் படை அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்கவேண்டும். மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் ஒரு நல்ல அதிகாரி கிடையாது. இலங்கையில் இந்தியப் படைக்கு கிடைத்த முதலாவது ஜெனரல் ஒரு முட்டாள் என்பது எமக்கு ஒரு பெரிய பின்னடைவே என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை.

புலிகள் மீது இந்தியப் படைகள் மேற்கொண்ட திடீர் தாக்குதல் முயற்சி பற்றி ஜெனரல் கல்கட் பின்நாட்களில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில்,

யாழ் குடாவை கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டப்படும்போது நானும் அங்கிருந்தேன். உண்மையிலேயே அது நல்லதொரு திட்டமாகவே இருந்தது. அதேவேளை நடவடிக்கைகள் பிழைத்தது பற்றி நான் கருத்துக் கூறுவது அவ்வளது நல்லதாக இருக்கமாட்டாது. ஏனெனில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்போது நான் அங்கு இருக்கவில்லை.

அன்றைய கள நிலவரங்களையும், தேவைகளையும் அடிப்படையாக வைத்துத்தான் நடவடிக்கை தொடர்பான முடிவை ஜெனரல்; ஹரிகிரத் சிங் எடுத்திருப்பார். அதனால் அந்த நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நான் தீர்ப்புக் கூறுவது பொருத்தமல்ல. ஆனால் ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். அவர் எடுத்திருந்த எந்த ஒரு முடிவையும் அவர் தனது மேலதிகாரிகளுடன் நிச்சயம் கலந்தாலோசித்திருக்கவேண்டும். யாழ்ப்பாண தரையிறக்க விடயத்தைப் பொறுத்தவரை அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் பலம், அவர்களிடமுள்ள ஆயுதங்களின் விபரங்கள் என்பன தெரியாமல் நேரடியாகச் சென்று அவர்களைத் தாக்க முற்பட்டதே எமது பின்னடைவிற்கு காரணம் என்று நான் நினைக்கின்றேன்.

அதேவேளை, இந்தியப் படையினருக்கு புலிகள் தொடர்பாக வழங்கப்பட்டிருந்த பிழையான தகவல்களும், பிழையான முடிவை நாம் மேற்கொள்ளக் காரணமாக அமைந்திருந்தது என்ற உண்மையையும் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். புலிகள் ஒருபோதும் இந்தியப் படையினரைத் திருப்பித் தாக்கமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருந்த புலனாய்வுத் தகவல்களும் எங்களை பிழையாக வழிநடத்தியிருந்தன. இவ்வாறு ஜெனரல் கல்கட் தெரிவித்திருந்தார்.

ஆகமொத்தத்தில், இலங்கை வந்த இந்திய உயரதிகாரிகள் அனைவரும் இந்தியா திரும்பியதும், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி அடித்துக்கொள்ளும் அளவிற்கு, ஈழமண்ணில் பாரிய தோல்வியை விடுதலைப் புலிகள் அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

இன்று கூட, இந்தியப் படைகளின் அந்த அக்டோபர் நடவடிக்கை பற்றி எழுதும், பேசும் அனைத்து ஆய்வாளர்களும், அறிஞர்களும், அன்றைய தினத்தில் இந்தியப் படைகளுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் எப்போதுமே ஏற்பட்டுவிடக்கூடாது என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.

இந்தியப் படையினருக்கு அந்த இரவில் ஏற்பட்ட கெட்ட கனவு அன்றுடன் மட்டும் முடிந்துவிடவில்லை.

அதுபோன்ற பல கெட்ட கனவுகளை ஈழ மண்ணில் இந்தியப் படைகள் தொடர்ந்தும் காண நேர்ந்தது.

இந்திய அரசியல்வாதிகள் ஈழத்தமிழருக்கு தொடர்ந்து செய்துவந்த துரோகங்களின் தண்டனையை, பாவம் இந்தியப் படை ஜவான்களே அறுவடை செய்ய நேர்ந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய சோகம்.


தொடரும்...


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்