ஈழம்

ஈழம்

வெள்ளி, 10 ஜனவரி, 2014

மே16 2009 இரவு வரை எம் செவிகளோடு உறவாடிய புலிகளின் குரல்.

மே 18 என்பது தமிழர் வாழ்வியலில் மறக்கப்பட முடியாத ஒரு துயர நாள் தான், அதே நாளில் அதற்கு முன்னர் நிகழ்ந்தேறிய வரலாற்றுப்பதிவுகளை மீண்டும் முன்னோக்கி பார்ப்பது பொருத்தமானதாக அமையும். அதன் ஒரு அங்கமான வன்னி ஊடகவரலாற்றில் தனி இடம் பெற்றிருந்த புலிகளின்குரல் தோற்றம் அது எதிர்கொண்ட சவால்கள் அதன் இறுதிப்பயணம் தொடர்பிலான மேலோட்டமான பார்வை.

21ஆம் நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு அன்று புலிகளின் குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கி வைக்கப்படுகின்றது. யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்து வாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்யில் அன்று புலிகளின் குரல் வானொலி இயங்கி கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலையினை சீர்குலைக்கும் நோக்கில் சில தீயசக்திகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், நாசகார வேலைகளுக்கு மத்தியிலும் புலிகளின் குரல் தனதுசெயற்பாட்டினை மக்கள் மத்தியில் முன்னெடுத்துசெல்ன்றது. அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கி ஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடகமாக அன்று புலிகளின் குரல் வானொலி தனது சேவையினை தொடர்ந்தும் நேர்த்தியுடன் செயற்படுத்தி கொண்டிருந்தது. 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை ஓடுக்க சிங்களஅரசு எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு தோல்வியையே கண்டுள்ளது. தமிழ்மக்களின் விடுதலையினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் புலிகளின் குரல் வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஊடாக மக்களுக்கான கருத்துக்கள் முன்னெடுக்கப்படுகின்றுது. அந்த வகையில்தான் தமிழ்மக்களின் கலை கலாச்சாரத்தையும் தொன்மையினையும் வரலாறுகளையும் பன்னாடுகளின் வரலாறுகளையும் எடுத்துக்கூறும் பல்வேறு நிகழ்சிகள் வானொலியில் இடம்பெற்றது,

இவ்வாறு யாழ்ப்பாணத்தை 1994 ஆம்ஆண்டு சூரியக்கதில் படைநடவடிக்கை மூலம் வல்வளைப்பு செய்த ஸ்ரீலங்காப் படையினர் அங்கிருந்த ஜந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஒர்இரவில் வெளியேற்றினார்கள்,


இந்தவேளையில் மக்களிற்கான ஒர் ஊடகமாக புலிகளின் குரல் தனது சேவையினை மக்களுக்கு ஆற்றி கொண்டிருந்தது. ,ஒலிபரப்பு நிலையத்தினை இடம் பெயர்திக்கொண்டு ஓர் நாள் கூட இடைநிறுத்தாது பனைமரங்களிலும் பாரிய உயரமரங்களிலும் தனது கோபுர செயற்பாடுகளை மேற்கொண்டு இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கான ஊடகமா செயற்பட்டுக்கொண்டிருந்த வேளையில் யாழ்பாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து செயற்பாடுகளும் வன்னிக்கு மாற்றப்படுகின்றது இன்னிலையில் கிளிநொச்சிப்பகுதிக்கு புலிகளின் குரலின் நிறுவன செயற்பாடுகள் மாற்றப்படுகின்றன.


 கிளிநொச்சிப்பகுதியில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த புலிகளின் குரல் வானொலி, ஸ்ரீலங்காப் படையினரின் வல்வளைப்புகாரணமாக மக்களும் வானொலியும் இடம்பெயர்ந்து மாங்குளம் பகுதியில் சிறிதுகாலம் இயங்குகின்றது, இவ்வாறு பல பொருட்கள் இழப்புக்கள் ஊடகத்திற்கான இலத்திரனியல் பொருட்கள் இழப்புக்களுக்கு மத்தியில் தான் புலிகளின் குரல் வானொலி மக்களுக்கான கருத்து ஊடகமாக இடைவிடாது செயற்பட்டுக்கொண்டிருந்தது, இவ்வாறு பல்வேறு பட்ட இடர்களுக்கு மத்தியில் பலதடவைகள் வானொலியின் ஒலிபரப்பு சேவையின் தளத்தினை மாற்றிஅமைக்கப்படுகின்றது,இன்னிலையில் தான் ஒட்டிசுட்டான் கூழா முறிப்பில் உள்ள உயரமான இடத்தில் தனது ஒலிபரப்பு நிலையத்தினை அமைத்து இயங்கிக்கொண்டிருந்தது. இருந்தும் இழப்புக்களை எதிர் கொண்டு இடைவிடாது மக்களுக்கு கருத்து சொல்லும் செயற்பாடுகளில் புலிகளின் குரல் வானொலி செயற்பட்டுக்கொண்டிருந்தது.


சமாதானம் வரையான காலப்பகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் புலிகளின்குரல் வானொலியினை நோக்கி நடத்தப்படுகின்றன. பத்திற்கும் மேற்பட்ட வான் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் அதன் பணி இடையறாது தொடர்ந்து நடைபெற்றது. சமாதான காலத்தில் புலிகளின்குரலின் வளர்ச்சியில் அடுத்த படிநிலையினை எட்டுகின்றது. இதில் பல்வேறு பட்ட வளர்சிகளை கொண்டு தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புலிகளின் குரல் வானொலி பண்பலையில் ஒலிபரப்பாகப்படுகின்றது, திருகோணமலையில் வெருகல் கல்லடி என்ற இடத்தில் மீள்ஒலிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து கிழக்கிற்கான வானொலி செயற்பட்டுக்கொண்டிருக்கையில் ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத செயல்கள் காரணமாக பணியினை இடைநிறுத்தி வன்னியில் இருந்துகொண்டு விரிவுபடுத்தப்பட்ட ஒலிபரப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது.


2005ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து புலிகளின் குரல் புலம்பெயர் தமிழ் மக்களும் கேட்க வேண்டும் அத்துடன் வளர்ந்து செல்லும் தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்றால்போல் புலிகளின் குரல் வானொலியும் தன்னை வளர்த்து கொண்டு இணையத்தளத்தில் ஏறி உலகம் முழுக்க ஒலித்ததுடன் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் உடனுக்குடன்பதிவேற்றம் செய்து கொண்டிருந்தது

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அறிவிப்புக்கள் உள்ளிட்ட களமுனையில் எதிரி மீதான தாக்குதல்கள்,போராளிகளின் வீரச்சாவு என்பனவற்றை உறுதிப்பட மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கையில் வன்னியில் இருந்து தனது சேவையினை விரிவு படுத்தும்நோக்கில் கொக்காவில் பகுதியில் வானொலி ஒலிபரப்பு தளத்தினை அமைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கையில் 2006ஆம் ஆண்டு09 மாதம் 18 ஆம் திகதி புலிகளின் குரலின் கொக்காவில் ஒலிபரப்பு கோபுரம் உள்ளிட்ட ஒலிபரப்பு நிலையம் தகர்த்து அழிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவம் புலிகளின் குரல் நிறுவனம் மீது நடத்தப்பட்ட பதினோராவது நேரடியான தாக்குதலாகும். 

2007ஆம்ஆண்டு 11 ஆம்மாதம், 27 ஆம் நாள் மாவீரர்நாள் ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. மாலை இடம்பெறும் தலைவர்கள் அவர்களின் மாவீரர்நாள் உரையினை தடுக்கும் நோக்கில் கிளிநொச்சி 115ஆம் கட்டைப் பகுதியில் அமைந்திருந்த வானொலியின் நடுவப்பணியகம் மீது தாக்குதல் கிபிர் விமானங்கள் மிக மோசமான தாக்குதலை நடத்துகின்றன.


இந்த வான்தாக்குதலில் அறிவிப்பாளர் இசைவிழிசெம்பியன் பொறியியல்பகுதியினை சேர்ந்த சுரேஸ்லிம்பியோ, ஓட்டுநர் தர்மலிங்கம் புலிகளின் குரல் வானொலியின் பணியாளர்கள் நாட்டுப்பற்றாளர்களாக உயிரிழந்தார்கள். (இசைவிழி செம்பியனின் பிள்ளைகள் மூவரும் தந்தையாரோடு மே 18 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் இன்றுவரை அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் வெளித்தெரியாது) கிபிர் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அதன் ஒலிபரப்பில் தடங்கல் ஏற்படவில்லை. குறித்த நேரத்தில் மாவீரர் நாள் உரை ஒலிபரப்பாகியது. இதன் பின்னான காலத்தில் எதிரியின் வல்வளைப்புகளுக்கு மத்தியில் கொக்காவில் பகுதியில் உள்ள ஒலிபரப்பு கோபுரத்தினை கழற்றி அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்வதற்கான பணியில் ஏனைய போராளிகளுடன்; ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், 12.09.2008 அன்று புலிகளின்குரல் போராளி லெப்.இசையரசன், நாட்டுப்பற்றாளர் விக்கினேஸ்வரன், ஆகியோர் உயிர் துறக்கின்றனர்.


பல்வேறு நெருக்கடிகளுக்கும் உயிரிழப்புக்களுக்கும் மத்தியியில் கிளிநொச்சியின் பலஇடங்களில் நகர்த்தப்பட்டு ஒலிபரப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு இடங்களிலும் பரந்தன் பகுதியில் இரண்டு இடங்களிலும் புலிகளின் குரலின் ஒலிபரப்புக்கள் ஸ்ரீலங்காப்படையின் அச்சுறுத்தல்கள் மாற்றப்பட்ட போதிலும் அதன் ஒலிபரப்பில் தடைகள் ஏற்படவில்லை. ஸ்ரீலங்காஅரசின் அச்சுறுத்தல்கள் காரணமாக மீண்டும் விசுவமடு தொட்டியடிப்பகுதிக்கு மாற்றப்பட்ட புலிகளின் குரல் அங்கிருந்துகொண்டு 2008ஆம்ஆண்டு மாவீரர் நாள் ஒலிபரப்பினை மேற்கொண்டு இருந்தது..


இன்நிலையில் 2008 ஆம் ஆண்டும் மாவீரர்நாள் உரை மக்களைச் சென்றடைய விடாது பரந்தனில் இருந்த புலிகளின் குரலின் ஒலிபரப்பு நிலையம் மீதும் ஸ்ரீலங்கா வான்படையால் தாக்குதல் நடத்தப்படுகின்றது. இவ்வாறு எதிரியின் பல்வேறு தாக்குதல்களுக்கு புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளரின் திட்டமிடலின் அடிப்படையில் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்கின்றது,


வன்னிமீதான போர்நடவடிக்கை காரணமாக ஸ்ரீலங்காப்படையினர் தொடரான வல்வளைப்பினை மேற்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் மக்களுக்கு ஆறுதலாக புலிகளின்குரல் மட்டுமே செயற்பட்டது.


விசுவமடுவில் இருந்து இடம்பெயர்ந்த வானொலி உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை என்று நகர்ந்து இடைவிடாது இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு உறவுப்பாலமாக செயற்பட்டுக்கொண்டிருந்தது,


மரங்களில் அன்ரனாக்கள் கட்டப்படும், அறிவிப்பு நடைபெறும் இடமும், செய்தி தொகுக்கும் இடமும் ஒரே இடமாகவே மாறிய நிலையையும் புலிகளின்குரல் எதிர்கொண்டது. ஒலிரப்பில் பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்போது செய்தித் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும், அறிவிப்பு இடம்பெறும் போது அந்த இடத்தில் அமைதி பேணப்பட முயற்சி செய்யப்பட்டாலும் போரின் ஒலி அந்த இடத்தினை வந்து சேருவதை தவிர்க்க முடியாது. இதனைவிடவும் புலிகளின் குரலின் ஒலிபரப்புக் கலையகமாக சிறிய வாகனங்களைப் பயன்படுத்திய நிகழ்வும் நிகழ்ந்தேறியது.


வாகனத்தின் இருக்கைகள் சில அகற்றப்பட்டு ஒலிப்பதிவுக் கணிணிகள், ஒலிவாங்கிகள் என்பவற்றுடன் சிறிய ஒலிபரப்பு மற்றம் ஒலிப்பதிவுக் கலையகமாகவும் புலிகளின்குரல் வாகனங்கள் சிலவற்றைப் பயன்படுத்தியிருந்தது.இந்நிலையில் இறுதியில் இடைவிடதாது மக்களுக்கான கருத்துக்களையும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களையும் ஸ்ரீலங்காப்டையினரின் தாக்குதல்களின் உயிரிழந்த உறவுகளின் விபரங்களையும் மக்களுக்கும் பன்னாடுகளுக்கும் உடனக்குடன் தெரிவத்துக்கொண்டிருந்த புலிகளின் குரல் வானொலி இறுதியில் வலைஞர்மடப்பகுதியிலும், பின்பு முள்ளிவாய்க்காளில் மூன்றிற்கு மேற்பட்ட இடத்திலும் இடம் பெயர்ந்து கொண்டு தனது சேவையினை வழங்கியது. முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் புலிகளின்குரல் செயற்பட்டுக்கொண்டிருந்த போது நடைபெற்ற எறிகணைத் தாக்குதலின் போதே அதற்கு அருகாக நின்றிருந்த விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரயன், அரசியல் துறையைச் சேர்ந்த தியாகராஜா ஆகியோரும் வானொலி அறிவிப்பாளரான அந்தணனும் காயமடைகின்றனர்.


2009ஆம்ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் தொடர்ந்தும் ஒலிபரப்பினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. ஒலிவாங்கியின் ஊடாக இராணுவத் துப்பாக்கி வேட்டொலிச் சத்தங்கள் வானொலிகளில் கேட்கின்றன. துப்பாக்கிச் சன்னங்கள் ஒலிபரப்பு சாதனங்களைத் துளையிடுகின்றன. தொடர்ந்தும் பணிசெய்யமுடியாத நெருக்கடியில் வானொலிச் சாதனங்கள் ஆவணங்கள் அனைத்தும் தீ மூட்டி அழிக்கப்பட்டதுடன் புலிகளின்குரல் என்றொரு சாம்ராஜ்ஜம் முற்றுப்பெறுகிறது.

புலிகளின்குரலை வழி நடத்தியவர் நா.தமிழன்பன் எண்பதுகளின் பிற்பகுதியில் தன்னை போராட்டத்துடன் இணைத்துக் கொண்டவர் அவர் ஜவான் என்ற பெயராலேயே நன்கு அறியப்பட்டவர். ஊடகத்துறையில் பல்துறை ஆற்றல் கொண்டவர் அவர் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் புடம்போடலிலேயே வளர்ந்தவர். அதனால் கமெராக்களைக் கையாள்தல், பத்திரிகைத்துறையின் சகல நுணுக்கங்கள், வானொலியின் ஒலிபரப்பு தொழில்நுட்பம் முதல் கவிதையின் சந்தம் வரையில் அவர் கைதேர்ந்தவராகவே விளங்கினார்.

போரில் ஒரு காலை இழந்த அவரின் வேகமான செயற்பாட்டிற்கு ஈடுகொடுப்பதென்பது மிக கடினமானவிடயம், ஆனாலும் அவரால் உருவாக்கப்பட்ட அவரால் புடம்போடப்பட்ட பல ஊடகர்கள் இன்னமும் வெவ்வேறு பகுதிகளில் இருக்கிறார்கள். அனலொக் தொழில் நுட்பத்தில் இடம்பெற்ற புலிகளின்குரல் வானொலியை டிஜிற்றல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி இணையத்தளம் செய்மதியில் வெளிவரச் செய்தமை அவரது தனிப்பட்ட உழைப்பின் வெளிப்பாடே என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.


வானொலியின் இறுதிக்கணம் வரையில் அதற்காக உழைத்த அவரும் புலிகளின்குரலுக்காக இறுதிவரை பணியாற்றிய தி.தவபாலனனும் (இறைவன்) இறுதி நாட்களில் காணாமல் போனார்கள். அவர்கள் பற்றிய தேடல் இன்னமும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன..



முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட 40.000 ற்கும் மேற்பட்ட மக்களுக்காக இப்பாடலை சமர்ப்பணமாக்குகிறோம்!


தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மக்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை நிச்சயம் தொடர்வோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us