ஈழம்

ஈழம்

வியாழன், 2 ஜனவரி, 2014

கப்டன் லோலோவின் வீர வரலாற்று நினைவுகள்.

கப்டன் லோலோ 
தம்பிராசா சுரேஸ்குமார் 
தமிழீழ யாழ் மாவட்டம் 
தாய் மடியில் :16.07.1969
தாயக மடியில் :29.12.1998

நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்த படியிருக்கும்.கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே இருந்தது. குப்பிளான் கேணியடியிலிருக்கும் எங்கள் கடைக்கு அடிக்கடி வருவான்.
தன் தோழர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவான். வசாவிளானில் சென்றியிருக்கும் போராளிகளுக்கு அம்மாவிடம் பாணும் சம்பலும் வாங்கிக் கொண்டு போவான். சிலசமயம் ஏதாவது கிறுக்கு வேலை செய்து அம்மாவிடம் பேச்சும் வாங்குவான். என்னுடன் ஏதாவது கொழுவுவான்.

வைரமுத்து வளவுப்பனங்கள்ளை அடித்தபடி இஞ்சை வாடாப்பா என்ன வந்தவுடனை ஓடுறாய் ! எனப்பிடிக்கும் அப்பாவுடன் வந்திருந்து அரசியல் பேசுவான். என்ன சடாண்ணை சனம் கதைக்குது…?சனத்தின் போராட்டம் பற்றிய அபிப்பிராயங்களைக் கேட்பான். குடியைக்கொஞ்சம் குறையுங்கோ சடாண்ணை பிள்ளையள் வளந்திட்டாளவை ஆலோசனை சொல்வான்.அதற்குப் பதிலாக அப்பா வசந்தமாளிகை வசனம் பேசிக்காட்டுவார். சேர்ந்து தானும் வசந்தமாளிகை வசனம் பேசி எல்லோரையும் சிரிக்க வைப்பான். இப்படித்தான் லோலோ எங்களிடையே உலவித்திரிந்தான்.

சிங்களப்படைகளை எங்கள் ஊர்களில் ஊழிக்கூத்தாடவிடாது காத்த பெருமை எங்கள் லோலோவுக்கும் உண்டு. 1987ஆடி 5 இன் எதிரொலி சிங்களத்துடான போர் ஓய வந்த ஒப்பந்தம் எங்களது வாழ்வில் ஒளிவருகிறது என்றுதான் எண்ணியிருந்தது எங்கள் தேசம்.

வாழைக்கன்று நட்டுத் தோரணம் கட்டிப் பன்னீர் தெளித்து இளநீர் கொடுத்து இந்தியப்படைகளை வரவேற்றது எங்கள் தேசம். ஓர்பெரும் அவலம் நிகழப்போகிறதென்பதனை யாருமே எண்ணியிருக்காத அந்த நாள் 1987 ஒக்டோபர் 10 அந்தப் பொழுது விடியாமலேயே இருந்திருக்கலாம்.

இந்திய வல்லாதிக்க அரசின் போர் டாங்கிகள் ஊர்களை உழுது கொண்டு போரில் குதித்தது. இருந்த நம்பிக்கை இளையறுந்து போக ஊர்களெங்கும் வல்லாதிக்கப் பேய்களின் ஊழித்தாண்டவம்….. யாரை…? எங்கே….? எப்போது….? சாவு காவுகொள்ளும் என்பதை ஆரூடம் சொல்ல முடியாது. அடுத்த நொடியே என்னுயிரும் இடுங்கப்பாடலாம் வீட்டில் அது நிகழலாம் வீதியில் அது நிகழலாம் இரவில் அது நிகழலாம் பகலில் அது நிகழலாம் எப்போ வேண்டுமானாலும் அது யாருக்கும் நிகழலாம். ஆம் சாவின் விழிம்பில்த்தான் எங்களது நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.

புன்னாலைக்கட்டுவன் பெற்றெடுத்த புதல்வன் கப்டன் லோலோ. இந்தியப் படைகளின் கனவையும் கலங்கடித்து அவர்களைச் சிதைத்துக் கொண்டிருந்தான். லோலோ….பெயர் கேட்டால் போதும் இந்தியப்படைகளின் துப்பாக்கிகள் அவனைத் தேடத்தொடங்கி விடும்.ஆனால் வல்லரசின் கண்ணில் மண்தூவி அவர்கள் முன்னாலேயே போய்நிற்பான். லோலோவைத் தெரியுமா….? அவனிடமே கேட்பார்கள்….கண்டாக்கட்டாயம் லோவைக் காட்டித்தாறன்….சொல்லிவிட்டுச் சாதாரணமாய் அவர்கள் கண்களுக்குள்ளேயே உலவித்திரிந்த தீ அவன்.

குப்பிளான் , ஏழாலை,மல்லாகம்,சுன்னாகம் என ஒவ்வொரு இந்தியப்படை முகாம் வாசலிலும் விசாரணைகள் நடக்கும்.இளையவர் முதியவர் பேதமின்றிப் பிடித்து அடிவிழும லோலோ எங்கே….?

நாங்களும் இடம் பெயர்ந்து கேணியடியை விட்டு சமாதிகோவிலடியில் போயிருந்தோம். அப்போதும் லோலோ இடையிடை ஒளித்து ஒளித்து எங்கள் வீட்டுக்கு வருவான். அப்பாவுடன் ஏதோ தனியக்கதைப்பான். அம்மாவுடனும் கதைப்பான். அதிக நேரம் மினைக்கெடமாட்டான். போய் விடுவான். பின்னேரங்களில் அப்பா குப்பிளான் சந்திப்பக்கம் போய் கொஞ்சம் இருட்டத்தான் திரும்பி வருவார். மீண்டும் காலை 5-30 இற்கு விடிய சுன்னாகம் யூனியனுக்குப் போவார். பின் அப்படியே வேலைக்குப் பெரிய சங்கக்கடைக்குப் போய் வருவார்.

இப்படியிருக்க கேணியடிக்குடும்பங்கள் மீண்டும் தங்கள் வீடுகளில் குடியிருக்கப் போய்விட நாமும் எங்கள் கடைக்குப் போய்விட்டோம். எங்கள் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் வைரமுத்துவின் புளியங்கூடலுக்குள் கொங்கிறீட் கற்கள் அடுக்கி சென்றியமைத்திருந்தன பேய்கள். தினமும் காலை அல்லது விடியப்பறம் அல்லது இரவில் வந்து அந்தச் சென்றிக் கூட்டில் இருப்பார்கள். விடியவில் கடைக்குப் பாண் கொண்டு வரும் கொத்தலாவலையையும் விசாரணை நடக்கும்.

போகின்ற வருகின்றவர்களைப் பிடித்து விசாரணை நடக்கும் அடி நடக்கும். ஓசிச் சிகரெட்டுக்கு அம்மாவிடம் வருவார்கள். அம்மா குடுக்கமாட்டா…சுட்டுப்போடுவம் அம்மாவின் நெற்றியை துப்பாக்கி குறிவைக்கும்….சுடடா…அம்மா துணிவாய் நிற்பா….நானும் தங்கைமாரும் அழுவோம் அம்மாவைச் சுடாதையுங்கோ…. அம்மாவைக் கெஞ்சுவோம் குடுங்கோம்மா போகட்டும்… சின்னத்தம்பி எதுவும் புரியாது முளிப்பான். பேசாமலிருங்கோடி… இடம் விட்டா உவங்கள் மடங்கட்டிப்போடுவங்கள்… பயத்தில் எங்கள் விழிகள் மிரளும். வா தங்கைச்சி சிகரெட் எடுத்துத்தா வா….வா… எங்களைக் கூப்பிடுவான் இந்தியச் சிப்பாய்.

அம்மாவைப் பார்ப்பேன். என்னை நோக்கித்துப்பாக்கி நீளும். பேசாமல் நில். பாப்பம் அவன் சுடட்டும்… சொல்வா அம்மா…. எனக்குக் கைகால்கள் உதறல் எடுக்கும். அம்மாவிடம் ஓசிச்சிகரெட் கிடைக்காது தமது மொழியில் பேசிக்கொண்டு போவார்கள். இது தினமாகிவிட்டது எமக்கு.அமைதிகாக்க வந்த லட்சணம் இப்படித்தான் இருந்தது.

அப்போது அவர்களால் லோலோ தேடப்படத் தொடங்குகிறான். லோலோவைத் தெரியுமா? தெரியாது என்பவர்களுக்கு அடியும் உதையும் நடக்கும். தெரியும் என்றால் ஏன் காட்டித் தரவில்லை என்று நடக்கும். லோலோ அவர்களின் கனவிலும் நினைவிலும் கலக்கிக் கொண்டிருந்தான். லோலோவைப் பிடித்தால் அப்படியே விழுங்கிவிடும் கொதியில் திரிந்தார்கள்.

ஒருநாள் மாலை கனநாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டுப் பின் ஒழுங்கையால் வந்து அம்மாவைக் கூப்பிட்டான் லோலோ. முன்பக்கம் முழுவதும் இந்தியப்படைகள் காவல் நின்றன. ஏதோ விபரீதம் நிகழ்ந்து விட்டது என்பதை அவர்களின் ஓட்டமும் கொதிப்பும் விளக்கியது. அம்மா மெதுவாகப் பின்பக்கம் வந்தா….!

என்ன மாதிரியக்கா நிலைமையள்…விடிய விலையிருந்து மாறிமாறி ஓடித்திரியிறாங்கள் கெதியாப்போ…. அவசரப்படுத்தினா அம்மா.அப்போதை தயிலங்கடவைத் தோட்ட வெளியுக்கை அவங்களுக்கும் எங்களுக்கும் சண்டை நடந்தது. பிறகு போட்டாங்களோண்டு பாக்கப் போன வினோதனைச்சுட்டுப் போட்டாங்களக்கா…அப்போதுதான் புரிந்தது.அவர்கள் ஏன் திரிகிறார்கள் என்பது. திரும்பி வருவன் நிலைமையளைப் பாருங்கோ….சொல்லி விட்டுப் போனான் லோலோ.

பின் கேள்விப்பட்டோம் வினோதனை அவர்கள் வடக்குப் புன்னாலைக் கட்டுவன் முகாமுக்கு எடுத்துப்போய் விட்டார்களாம். வினோதன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன்.வீட்டிற்கு ஒரே ஓரு ஆண் வாரிசு. அவன் அம்மா கனகமக்காவின் உயிரே அவன்தான். அக்காமாரின் செல்லப் பிள்ளையும் ஆசைத்தம்பியும் அவன்தான். மொத்தத்தில் அவன்தான் அவர்களுக்கு எல்லாமே. அந்தப் பிள்ளையின் உயிரைப் பிடுங்கிவிட்டது இந்தியப் பேய்கள். நாளை விடியவிருக்கும் பொழுது வினோதனின் இளவைக் கொண்டாடக் காத்திருந்தது.

பொழுது விடிய ஊர் வினோதனின் சாவைப்பற்றித்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. பகல் 10 மணிபோல் ராசரப்பு வந்து சொன்னார். வினோதனின் உடலை அவன் அம்மாவும் அக்காமாரும் இந்தியப் படைகளிடம் போய் வாங்கிவந்து வீட்டில் செத்தவீடு நடப்பதாக… மூன்று மணித்தியாலத்துள் எல்லாம் முடித்துவிட வேண்டுமாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.

வினோதனின் வீட்டைச்சுற்றி ஒரே இந்தியப் பட்டாளங்கள்தான். லோலோ அங்கு வருவான் என்று காத்திருந்தனர். வடக்குப் புன்னாலைக் கட்டுவன் ராஜேஸ்வரியம்மன் கோவிலடியில்த்தான் வினோதனின் வீடு. அங்கிருந்து தினமும் எங்கள் கடைக்கு சீனி வாங்க அரிசி வாங்க நெருப்புப் பெட்டி வாங்கவென வினோதன் வருவான். அமைதியே உருவான வினோதன் அதிகம் யாருடனும் அலட்டாத வினோதன் கனகமக்காவின் செல்லப்பிள்ளை வினோதன்…இனி…வரமாட்டான்….வல்லரசத் துப்பாக்கி அவனை மௌனமாக்கிவிட்டது.

பயந்து பயந்து சனங்கள் வினோதனின் சாவுக்குப் போய் வந்தனர். அம்மாவும் போய்வந்தா. வந்து சொன்னா பாவம் கனகமக்கா… மனிசியின்ரை சொத்தாயிருந்த பிள்ளையைச் சுட்டுப்போட்டாங்கள்….!

வினோதனின் சாவு முடிந்து பலநாட்களின் பிறகு கனகமக்கா எங்கள் கடைக்கு வருவா தன்கடைக்குட்டிச் செல்ல மகன் வினோதனைச் சொல்லிச் சொல்லி அழுவா. பாக்கப்பாவமா இருக்கும். ஒவ்வொரு காலையும் ஏதோ ஒரு சோகம் தாங்கிய காலைகளே எங்கள் மண்ணின் பிரசவங்களாயிருந்தது.

அடுத்து வந்தவொரு காலைப்பொழுது. அப்பா ஆறுப்பிள்ளை வளவுச் செவ்வரத்தையில் பிடுங்கி வந்த பூக்களை வைத்துச் சாமிகும்பிட்டுக் கொண்டு நின்றார். வடக்குப் புன்னாலைக்கட்டுவன் ராணுவ அதிகாரி சர்மா எங்கள் கடைக்கு வந்தான். அம்மா,அப்பா,எங்கள் எல்லோரையும் கூப்பிட்டான். தனக்கு அன்று பிறந்தநாள் என்றான்.

சற்று நேரத்தில் விடயத்துக்கு வந்தான். லோலோவைத் தெரியுமா…? இல்லை என்றார் அப்பா.அண்ண பொய் சொல்லாதிங்க எனக்குத் தெரியும் இஞ்சை லோலோ வாறது…மீண்டும் அப்பா இல்லை என்றார்.எங்க நீங்க வணங்கற சாமிமேலை சத்தியம் பண்ணுங்க பாப்பம் லோலோ வாறதில்லையெண்டு. அப்பா ஒவ்வொரு சாமியாகத் தொட்டுத் தொட்டுச் சத்தியம் பண்ணினார். சர்மா அப்பாவுக்குச் சொல்லி விட்டுப் போனான். ஒரு நாளைக்கு லோலோவை நாங்க சுட்டுப்போட்டு அப்ப வந்து சொல்லுவம். சர்மா போனபின் அப்பா சொன்னார் செய்துபோட்டு வந்து சொல்லடா வடக்கத்தையா…!

தினமும் லோலோவைத்தேடும் இந்தியப்படைகள் ஒவ்வொரு ஊராகச் சுற்றி வளைப்பு,சோதனை,அடி,உதை,வதை அன்றாடம்.

அந்தக்காலை வளமைபோல் விடிந்தது.ஆனால் பெரும் சோகம் எங்களுக்காகக் காத்திருந்ததை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஊர் தன் அலுவலில் மூழ்கிக் கிடந்தது. இந்தியப்படைகள் திடும் திடுமென வந்தார்கள். சிரிப்பும் அட்டகாசமும் பெரிதாக இருந்தது. ஒரு தமிழ்ச்சிப்பாய் கடைக்கு வந்து சொன்னான். உங்கடை லோலோவைச் சுட்டிட்டம்.

200ரூபாய் பணநோட்டை அம்மாவிடம் நீட்டிச் முழுவதற்கும் சிகரெட் கேட்டான். அனேகமாக ஓசிச்சிகரெட்டுக்கு அலையும் ஜென்மங்கள் எங்கள் லோவை நாங்கள் இழந்திருக்க அதைச் சந்தோசமாகக் கொண்டாட சிகரெட் வாங்கிக் கொண்டு வடக்குப்புன்னாலைக்கட்டுவன் முகாம் நோக்கிப் போனார்கள். அவர்கள் போனபின் அம்மா கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டா.

யூனியனுக்குப் போய் வந்த அப்பா சொன்னார். நேற்றிரவு அவர்களுடன் நடந்த நேரடி மோதலில் லோலோ வீரச்சாவாம்… அரைக்காற்சட்டையும் காதில் பூவும் நெற்றியில் விபூதியும் சந்தனமும் சேட்பொக்கற்றில் சிவப்பு நீலநிறப்பேனாவுடனும் சயிக்கிள்க் கரியலில் கொப்பியும்  கொண்டு இடுப்பில் பிஸ்டலும் சேட் கொலருக்குள் சயனைட்டை மறைத்த அவர்கள் முன்திரிந்த நெருப்பு தன்னினிய இன்னுயிரை தாய் மண்ணுக்கு ஈந்து 31.12.1988 அணைந்து போனது.

பேய்களுக்குப் பயந்து அந்தப் புனிதனின் புகழுடலைக்கூட நாம் காணவில்லை. காரணம் நாங்கள் அவர்களால் குதறப்படலாம் என்ற அச்சம்தான். அன்று இரவு அப்பா குப்பிளான் சந்திக்குப் போகவில்லை. வீட்டில் இருந்து அழுதார். என்ரை பிள்ளையைக் கொண்டு போட்டாங்கள். உன்னைத் தெரியாதெண்டு அவங்களுக்குச் சத்தியமும் பண்ணினனான். அவர்கள் மேலிருந்த கோபத்தை தூசணத்தால் அப்பா திட்டித்தீர்த்தார். அம்மா மௌனமாய் அழுதா. திரும்பி லோலோ வருவான் என்றிருந்தவர்கள் நம்பிக்கை வெறும் கனவாகவே போனது.அவன் வரவேயில்லை. கப்டன் லோலோவாய் எங்கள் மனங்களில் இன்றும் உலரா ஈரநினைவாய்….தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த கப்டன்  லோலோ அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “


நினைவுப்பகிர்வு : சாந்தி ரமேஷ் வவுனியன் (2003இல் எழுதப்பட்ட பதிவு)
    மின்னஞ்சல் முகவரி :- (rameshsanthi@gmail.com)

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்