ஈழம்

ஈழம்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்? மறைந்துள்ள உண்மைகள்.

வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம்? என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம்.

இதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் உடல்கள் புதைக்கப்படுவதோ, தகனம் செய்யப்படுவதோ நடந்து வந்தது. ஆனால், இனிமேல் வீரமரணமடையும் அனைத்துப் புலிவீரர்களின் உடல்களையும் புதைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். புதைக்கப்பட்ட இடத்தில் அவ்வப் போராளியின் பெயர் கூறும் கல்லறைகள் எழுப்பப்பட்டு அவை தேசிய நினைவுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும். இவைகள் காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

தாங்கள் வீரமரணமடைந்தால் தங்களுடைய உடல்களை மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைத்து அங்கே நினைவுக்கற்கள் நாட்டப்பட வேண்டும் என்பதே போராளிகளின் விருப்பமாகும். இந்த விருப்பம் மிக அண்மையில் ஏற்பட்ட தொன்றல்ல. இந்திய – புலிகள் போர்க் காலத்தில் வன்னிக் காட்டுக்குள்ளேயே போராளிகளின் இவ் விருப்பங்கள் வெளிப்படத் தொடங்கி விட்டன. பிரதானமாகத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த மணலாற்று காட்டுக்குள்ளேயே இவ் விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் செயல்வடிவங்களும் கொடுக்கப்பட்டது.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக கடும் சமர்கள் நடந்த இடம் மணலாறு என்பது தெரிந்ததே. இந்தியப் படைகளுடனான போரில் நாம் சந்தித்த வெற்றிக்கு அத்திவாரமாக இருந்தது மணலாற்றுக் காட்டில் நாம்கண்ட வெற்றிதான். இந்தச் சமர்களில் எமது போராளிகள் பெற்ற வெற்றிக்கு மணலாற்றுக்காடு உறுதுணையாக இருந்தது. இதனால் தங்களுடைய போராட்ட வாழ்வில் ஒன்றிக்கலந்து உறுதுணையாக இருந்த அந்த நிலத்திலேயே தங்களது உடல்களும் புதைக்கப்பட வேண்டும் எனப் போராளிகள் விரும்பினார்கள்.

மணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய போராளிகள் பலர் தாங்கள் எங்கேசென்று போராடி வீரமரணமடைந்தாலும் தங்களது உடல்கள் மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குள்தான் புதைக்கப்படவேண்டும் என எழுத்து மூலம், வாய் மூலம் தலைவர் பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படியே அவர்களது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டு வந்தன.

இதன் காரணமாக இன்று மணலாற்றுக் காட்டுக்குள் பெரியதொரு மாவீரர் துயிலும் இல்லம் போராட்டக் கதைகளைக் கூறிக்கொண்டே இருக்கின்றது. இதேபோன்று மற்றைய மாவட்டங்களிலும் சிறிய சிறிய அளவுகளில் காடுகளுக்குள் போராளிகளின் கல்லறைகள் காணப்படுகின்றன. இவ்விதம் தங்களது உடல்கள் சொந்த மண்ணுடன் கலக்கப்பட வேண்டும் என்ற போரளிகளது மன விருப்பத்தையும் அதன் பின்னால் இருந்த ஆத்மதிருப்தியையும் பார்த்தோம். இனி போராளிகளது உடல்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கும் இடையில் இருக்கும் மானிட உணர்வுகளையும், அதன் பிரதிபலிப்புக்களையும், மனோவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பார்ப்போம். அப்போது பாரிய உண்மைகளை நாம் கண்டுகொள்ளலாம்.

மரபு வழியாக தமிழர்களிடம் இருந்துவரும் சம்பிரதாயங்களின்படி இறந்தவர்களை தகனம் செய்வதே வழமை என அறிந்து வைத்திருக்கின்றோம். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமான வாதங்கள் வைக்கப்படுவது நாம் அறிந்ததுதான். ஆனால் அந்த வாதத்தை இம் மண்ணின் விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த போராளிகள் விடயத்தில் ஒப்புநோக்க முடியாது. போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள். ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் சிருஸ்டிகர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் வெறும் மரணநிகழ்வுகள் அல்ல. இவர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும். இந்தத் தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.

அதாவது, போராளிகளின் கல்லறைகள் மக்களின் உள்ளத்தில் சுதந்திரச் சுடரை ஏற்ற உதவும் நெருப்புக் கிடங்குகளாகவே பயன்படும். எனவேதான் போராளிகளது உடல்களைப் புதைத்து கல்லறைகளை எழுப்பி அதை என்றென்றும் உயிர்த்துடிப்புள்ள ஒரு நினைவுச் சின்னமாக நிலைநிறுத்த நாங்கள் விரும்புகின்றோம். இன்றுவரை 3750ற்கும் மேற்பட்ட புலிவீரர்கள் வீரமரணமடைந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தால் எமது விடுதலைப் போராட்டம் உயர்ந்ததொரு கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது. ஆனால் இவர்களது நினைவை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் சின்னங்கள் எம்மிடம் உண்டா? எனக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் பதில் கிடைக்கும்.

இப் போராளிகள் அனைவருக்கும் அவர்கள் பெயர் கூறும் கல்லறைகள் கட்டப்பட்டால் அவற்றைக் கண்ணுறும் அனைத்து மக்களும் சுதந்திரத்தின் பெறுமதியைப் புரிந்து கொள்வதுடன் அதை வென்றெடுக்க போராளிகள் கொடுத்த உயிர்விலையையும் உணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்வார்கள்.

அன்பிற்குரிய எமது பெற்றோர்களே, மக்களே!

எமது இயக்கத்தின் இந்த முடிவை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இந்த முடிவு காலங்காலமாக இருந்து வந்த சம்பிரதாயம், சாஸ்திரங்களுக்கு முரணாக இருக்கிறது என நீங்கள் கருதலாம். ஆனால், உங்களது பிள்ளைகளான புலிவீரர்கள் இந்தச் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இந்த நாட்டின் பொதுச் சொத்தாக, பொக்கிசமாக இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக்கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, எமது சக தோழர்கள் சிலரது வீரமரணத்தின் பின் நடைபெறும் சில சம்பவங்கள் எமது மனதைப் பாதித்திருக்கின்றன. அதாவது, பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ, உறவினர்களோ இல்லாது நடைபெறும் எமது போராளிகளின் இறுதிச் சடங்குகளை நாம் கண்டிருக்கின்றோம். என்னதான் எமது தோழர்கள் சூழ்ந்து நின்று தகன நிகழ்சியை நடத்தினாலும்கூட, அப் போராளியைப் பெற்றெடுத்து – சீராட்டி வளர்த்தெடுத்த தாய் – தந்தையரோ, அல்லது உடன் பிறந்தவர்களோ இல்லாதது எமது மனதை நெருடுகின்றது. போராட்ட சூழல் காரணமாக அவர்கள் வரமுடியாது விட்டாலும் நாளை இப் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளையின் நினைவாக நாங்கள் எதைக் காட்டப் போகின்றோம்? ஒன்றன் பின் ஒன்றாய் நுற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம்? அப்படியான சூழலில் அவர்கள் படும் துயரையும், அங்கலாய்ப்பையும் அனுபவவாயிலாக நாம் அறிந்தே இருக்கின்றோம்.

எனவேதான் தனது பிள்ளையின் உடலைப் பார்க்காது விட்டாலும் கூட அவனது உடல் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஓரளவு ஆறுதல் அடையவாவது நாங்கள் உதவி செய்வோம். அத்துடன் அடிக்கடி அக்கல்லறைக்குச் சென்று அவனது நினைவுகளை மீட்டுப் பார்ப்பதுடன் ஓர் ஆத்ம திருப்தியையும் அவர்கள் அடைந்து கொள்வார்கள்.

கல்லறைகளை அமைத்து அடிக்கடி அங்கே செல்வது சோகத்தை தொடர்ந்தும் மனங்களில் வைத்திருப்பதற்காகவா? என ஒரு கேள்வி எழலாம்.

அன்புக்குரியவர் ஒருவரின் சாவு சோகமானது தான். ஆனால் அந்தச் சோகத்தை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அவரை மறக்க முயற்சிப்பதாக இருக்க முடியாது தானே! கல்லறைக்கு மீண்டும் மீண்டும் செல்வதால் சோகம் அதிகரிக்கும் என்றில்லை. உண்மையில் அப்படிச் செல்வதால் மனம் நிம்மதி அடையும்.

எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. தகனம் செய்வதற்குப் பதிலாக புதைப்பது என்பது தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயலல்லவா? என யாராவது வினா எழுப்பலாம்.

நீண்டகாலம் தொட்டு இருந்து வரும் தகனம் செய்வது தமிழரின் பண்பாடு என எண்ணுவது தவறானது. உண்மையில் பண்டைய தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களது உடல் புதைக்கப்பட்டு நடுகல் வைக்கப்பட்டதாக போதுமான வரலாறுகள் உண்டு. புறநானுற்று இலக்கியமும் ஈமத்தாழி வடிவிலான தொல்லியல் சான்றுகளும் இதை நிரூபிக்கப் போதுமானது.
ஆனாலும் இந்த ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும், உண்மையில் இந்த முறையை ஒரு சமூக சீர்திருத்தமாக நாங்கள் செய்யவில்லை. இது போராளிகளுக்கு மட்டும் பொருந்தும். இது பொதுமக்களிற்கல்ல. எனவே இங்கே பண்பாட்டுப்பிரச்சனை எழநியாயமில்லை. அத்துடன் புதைப்பது என்ற முடிவானது வெறும் இறுதிக் கிரியை நிகழ்ச்சி அல்ல, அது போராட்டத்தை உயிர்ப்புடன் என்றென்றும் வைத்திருக்கும் ஒரு சரித்திர தியாகத்தின் சின்னம்.

சரி அப்படி புதைத்து எழுப்பப்பட்ட கல்லறைகளை இராணுவம் அழிக்காதா? அப்படி நடந்தால் வீரமரணமடைந்த போராளிகள் அவமதிக்கப்பட்டது போலாகாதா? எனவே இந்த அவமதிப்புக்கு புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா? எனவும் கேள்வி எழலாம்.
தியாகி சிவகுமாரனுக்கு உரும்பராயில் அமைக்கப்பட்ட சிலையையும் மன்னார் தளபதி லெப்.கேணல் விக்டரது கல்லறையையும் சிங்களப் படைகள் சிதைத்ததையும் மனதில் வைத்து மேற்குறித்த கேள்விகள் எழுவது நியாயமானது.

போரில் கொல்லப்பட்ட எதிரி இராணுவ வீரனது கல்லறைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது சாதாரண போர் தர்மம். ஆனால் அதை சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கும் என உறுதி கூறமுடியாதுதான். ஆக்கிரமிப்பு இராணுவமாக இங்கு செயற்பட்டு அதானால் இங்கு கொல்லப்பட்ட இந்திய ஜவான்களுக்காக இந்திய அரசு எமது மண்ணிலேயே அமைத்த நினைவுச் சின்னங்களை இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்ட பின்பும்கூட நாம் உடைத்தெறியவில்லை என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.








ஆனால், எமது மண்ணில் எமது போராளிகளுக்கு எமது மக்கள் அமைத்த நினைவுத் துண்களையும், கல்லறைகளையும் சிங்கள இராணுவம் உடைத்தெறிவதையிட்டு நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. வேண்டுமானால் அதையிட்டு சிங்கள இனம் வெட்கப்படட்டும். இறுதியாக ஒன்று சொல்கிறோம். முழுமையாகவே எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது தாய்மண்ணை விடுவிக்கும் போரில் வீரமரணமடையும் ஒரு வேங்கை கேட்பது ஆறு அடி நிலத்தை மட்டுமே.


"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us