ஈழம்

ஈழம்

வியாழன், 5 ஜூன், 2014

இந்தியாவின் அழுத்தமும் தலைவரின் உடையாத உறுதியும்...

1987 யூலை  27 ஆம் திகதி நள்ளிரவு...

புதுடில்லியில் தலைவர் தங்கவைக்கப்படிருந்த "அசோகா விருந்தினர் விடுதி"யின் அறையினுள் அழைப்பு மணி ஒலித்தது. இந்திய உள்நாட்டுப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குனர் திரு.நாராயணன் கதவிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்.
கதவு திறக்கப்பட்டபின் உள்ளே வந்து "பிரதமரின் இல்லத்திலிருந்து நேராக இங்கு வந்துள்ளேன்" என்று பேச்சை ஆரம்பித்த அவர், "பிரதமர் ராஜீவ் காந்தி உங்களை அவசரமாகச் சந்திக்க விரும்புகிறார்" என்று தலைவர் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட தலைவர் அவர்கள், திரு நாராயணன் ஒழுங்கு செய்த வாகனத்தில் ஏறி பிரதமர் ராஜீவின் இல்லம் நோக்கி விரைந்தார்.

பிரதமரின் இல்லத்தை வாகனம் சென்றடைந்ததும், முன்னே வந்த திரு ராஜீவ்காந்தி, "உம்மைப்பற்றி அறிந்திருக்கின்றேன்; நீர் ஒரு சிறந்த வீரன்" என்று புகழாரம் சூட்டியபடி, அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றார்.

சம்பிரதாயபூர்வமான நலன் விசாரிப்புகளும் முடிய, வந்த விடயம் பற்றிக் கதைப்பதற்கு இருபகுதியினரும் தயாரானார்கள்.


பிரதமர் ராஜீவ்காந்தியுடன் அவரின் செயலாளரும், மற்றும் திரு.நாராயணன், திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். தலைவர் பிரபாகரனுடன் திரு.அன்ரன்பாலசிங்கமும் உடனிருந்தார். சொற்ப நேர மௌனத்தைக் கலைத்தபடி, ராஜீவ்  காந்தி பேசத் தொடங்கினார். தான் வரைந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு மேலோட்டமான விளக்கத்தை அளித்துவிட்டு, "இந்த ஒப்பந்தம் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அதை எனக்கு விளக்குங்கள்" என்று தலைவரிடம் கேட்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இருந்து முக்கியமான குறைபாடுகள் பற்றித் தனது கருத்தை தலைவர் அவர்கள் கூறத் தொடங்கினார்.

முதலில் "தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபைத்திட்டம் ஒரு முழுமையான சுயாட்சித் திட்டமாக இருக்கவில்லை. அதாவது, உருப்படியான சுயாட்சி அதிகாரங்கள் அதனிடம் இல்லை" என்று எடுத்துக்கூறினார். மேலும் "இந்த மாகாணசபை முறையில் சிங்கள மத்திய அரசிற்கே அதிகூடிய அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன், நினைத்த உடனேயே இந்த மாகாண சபையை கலைத்துவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு" என மாகாண சபையின் கையாலாகாத்தனத்தை ராஜீவ்காந்திக்கு எடுத்து விளக்கினார். அத்துடன், "இந்த ஒப்பந்தம் தமிழரின் தாயகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  வடக்கு-கிழக்கு இணைப்பென்பது தற்காலிகமானதாகவே இருக்கின்றது. நிரந்தர இணைப்பு தொடர்பாக, கிழக்கில் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தப்படும் என்ற நிலைப்பாட்டை நாம் ஏற்கமாட்டோம். ஏனெனில் வடக்கு-கிழக்கு என்பது பிரிக்க முடியாத தமிழர் தாயகமாகும். எனவே இணைப்பு- பிரிப்பு- அதற்கான தேர்தல் என்ற ஒப்பந்த விதிகளை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்று தலைவர் ஆணித்தரமாக எடுத்துக் கூறினார். அத்துடன்  "எமது மக்களின் அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் ஒரு அரசியல் ஒப்பந்தத்தை எமது மக்களுடன் கலந்தாலோசிக்காது செய்துவிட்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக  72 மணிநேரத்தில் புலிகள் ஆயுதங்கள் ஒப்படைக்க வேண்டும் என்று கோருவதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என, ஒப்பந்தம் தொடர்பான அபிப்பிராயத்தைத் தலைவர் அவர்கள் எடுத்து விளக்கினார்.



தலைவரின் விளக்கத்தை அவதானித்துவிட்டு ராஜீவ், "வடக்கு கிழக்கை இணைப்பதற்காக கிழக்கில் அபிப்பிராய வாக்கெடுப்பு என்ற விடயத்தை நாம் எப்படியும், பின்னர் நீக்கப்பார்கின்றோம். அதேபோல அதிக அதிகராங்களை மாகாண சபைக்குப் பெற்றுக்கொடுக்க, பின்னர் முயற்சிக்கின்றோம் என்று ஆனால் இப்போது இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்" என்று தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். திரு ராஜீவ்காந்தியின் வாய்மொழி உத்தரவாதத்தை எப்படி நம்புவது எனத் தலைவர் சிந்தித்தார்.

"எழுத்தில் உள்ள ஒரு ஒப்பந்தத்தை ஏற்கின்றோம் என்று புலிகள் கையெழுத்திட்ட பின்னர் எழுதப்பட்டதற்கு முரணாக அதை நடைமுறைப்படுத்தும்படி ஸ்ரீலங்கா அரசைக்கோர  ராஜீவ் காந்திக்கு அதிகாரம் இல்லையே! அவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தாலும் எழுதப்பட்டதற்கு மேலாக தமிழர்களுக்கு அதிகளவில் உரிமை கொடுக்க, பேரினவாத ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடன்படுவாரா?"

இந்தியப் பிரதமருக்கு வெளிப்படையாகவே, தலைவர் சொன்னார், "முக்கியமான பல குறைபாடுகளைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தை எம்மால் ஏறக்முடியாது" என்றார். தலைவர் தனது முடிவை மாற்றி ஒப்பந்தத்தை ஏற்கவேண்டும் என்று ராஜீவ்காந்தி விடாப்பிடியாக வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தார். இந்தியப் பிரதமரின் வேண்டுகோளைத் தலைவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, அங்கிருந்த பண்ருட்டி இராமச்சந்திரனும் கேட்டுகொண்டார். இந்தியப் பிரதமர் எவ்வளவோ சொல்லியும் ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது என்ற நிலைப்பாட்டிலிருந்து தலைவர் கீழிறங்கி வரவில்லை. இந்த நிலையில், தலைவரிடம்  வேறொரு வேண்டுகோளை ராஜீவ் வித்தார் "நீங்கள் (தலைவர்) கூறுவதுபோல ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை, ஆனால் அதற்கு எதிராகச் செயற்படாமல் விடுவீர்களானால், உங்களுக்குச் சில நன்மைகளை நாங்கள் செய்வோம்" என்றார்.

அதாவது வடக்கு - கிழக்கில் ஒரு இடைக்கால அரசை உருவாக்கி, அதன் நிருவாகப் பொறுப்பை புலிகளிடம் ஒப்படைப்பது, அடுத்தது புலிகள் இயக்கம் ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கத்தேவையில்லை, சம்பிரதாயத்திற்காக ஒரு தொகை ஆயுதங்களை ஒப்படைத்தால் போது. அத்துடன் புலிகள் இயக்கத்தின் செலவுகளுக்காக மாதாந்தம் 50 இலட்சம் ரூபாவை (இந்திய ரூபா) இந்திய அரசு வழங்கும் என்று ராஜீவ்காந்தி உறுதி கூறிவிட்டு இதையாவது ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

ஆனாலும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்து தலைவர் மாறவேயில்லை. ஆயினும் "இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கிப் பார்ப்பதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்காது இருக்கின்றோம்.நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். ஆயினும் எமது மக்களின் நலன்களைப் பாதிக்காதவரை நாங்கள் ஒப்பந்த அமுலாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம்"என தலைவர் தெரிவித்தார்.

பின்னர் விடயங்கள் மிகவேகமாக நடந்தன. தொலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது, வெளியாருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று புலிகளிற்கு விதித்திருந்த தடைகள்  நீக்கப்பட்டன. இதேவேளை, இரண்டொரு நாளில் கொழும்புக்குப் பரந்த ராஜீவ்காந்தி, அங்கெ ஜே.ஆருடன் இணைத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, மீண்டும் இந்தியா திரும்பினார். ஜப்பசி   2ஆம் திகதி, மீண்டும் தலைவர் தமிழீழம் வந்தார்.



"சேது அணைதாண்டி வானரங்கள் போல இந்தியப் படைகள் தமிழீழத்தில் குவிந்தன."



இந்திய பிரதமருக்குக் கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் குறித்த தொகை ஆயுதங்களை ஒப்படைத்து, தனது நல்லெண்ணத்தை தலைவர் காட்டினார்.

ஆனால் வடக்கு-கிழக்கு இடைக்கால அரசை நிறுவும் விடயத்தில் ஜே.ஆர் இழுத்தடித்தார். அதற்குப் பதிலாக கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை முடுக்கிவிட்டார்; புதிய பொலிஸ் நிலையங்களைத் திறந்தார். இது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்தியப் பிரதமர் புலிகளின் முதுகில் குத்தத் தொடங்கினார். சமூகவிரோதிகளை-மக்களை அந்நியப்படுத்தப்பட்ட ஆயுதக் குழுக்களை-மீண்டும் தமிழீழத்திற்குக் கூட்டிவந்து, அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கி, புலிகளுக்கு எதிராகத் திருப்பிவிட்டார். தலைவருக்கு வாக்குறுதி அளித்தது போலல்லாது, ஜே ஆரின் அரசுக்குச் சார்பாக ராஜீவ்காந்தி நடக்கத் தொடங்கினார்.

இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலமாக்க, சாகும்வரை சாத்வீகப் போரைத் தொடுக்கத் திலீபன் முன்வந்தான்; ஆயினும் இந்திய அரசால் திலீபன் சாகடிக்கப்பட்டான். திலீபனின் தியாகச் சாவுடன் விழித்தெழுந்த தமிழ் மக்கள் இந்திய அரசுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினார். இந்தவேளையிலையே எமது தளபதிகளான புலேந்திரன், குமரப்பா உட்பட 12 போராளிகள், இந்திய-சிங்கள சதிக்குப் பலியாகினர். மக்களின் கோபாவேசத்தை வெளியுலகிற்குத் தெரியவிடாமல் தடுக்க நிதர்சனம், ஈழமுரசு போன்ற தொடர்பு சாதனங்களை இந்தியப் படைகள் நாசம் செய்தன. அத்துடன் இந்திய புலிகள் போரும் தொடங்கியது.

இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இந்த இரண்டு அரசுக்களின் நலன்களையும் நிறைவேற்றும் ஒரு வஞ்சக உடன்பாடாகும்.

இந்திய அரசின் பிராந்திய நலனைப் பாதுகாக்க இலங்கை அரசு உடன்பட வேண்டுமாயின், இலங்கை அரசின் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க இந்திய அரசு உதவவேண்டும். இதுதான், ராஜீவுக்கும்-ஜே.ஆருக்கும் இடையில் நடந்த எழுதப்படாத உடன்பாடு.

போர் விஸ்வரூபம் எடுத்தது. இந்திய படைகளால் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.இந்தப் போரை தடுத்து நிறுத்தி, சமாதான வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதற்காக, ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டுவருமாறு, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதங்கள் மூலமாகத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார். தலைவரின் கடிதங்களை ராஜீவ்காந்தி பொருட்படுத்தவேயில்லை.

தமிழ் நாட்டில் அப்போது தங்கியிருந்த எமது மூத்த உறுப்பினர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்த முரசொலிமாறனை ராஜீவ் காந்தியிடம் தூது அனுப்பி போரை நிறுத்தும்படி வேண்டினார்.பிரதமர் அலுவலகத்தில் வைத்து தன்னைச்  சந்தித்த முரசொலிமாறனிடம் ராஜீவ் சொன்னார். "பிரபாகரன் என்னுடைய காலடியில் வந்து வீழும்வரை போரை நிறுத்த மாட்டேன்" ராஜீவ்காந்தியின் எச்சரிக்கையைக் கேட்டுவிட்டு தி.மு.க தலைவர் திரு கருணாநிதி அவர்கள் கூறினார் "ஏன் இந்திய படையுடன் சண்டை இடுகின்றீர்கள்? பூண்டோடு அழிந்துவிடப் போகின்றீர்கள். உடனேயே ஆயுதங்களுடன் சரணடைந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை கூறினார்.

தலைவர் பிரபாகரனைக் கொன்று போரை வென்றுவிட்ட ஒரு வெற்றிச் செய்திக்காக, நேருவின் பேரன் டில்லியில் தவங்கிடந்தார்; ஆனால் அவர் விரும்பிய செய்தி அவரைச் சென்றடையவேயில்லை!

மிரட்டல் இராசதந்திரத்தைக் கையாண்டுபார்த்த டிக்சிற் அவர்கள் தலைவர் பிரபாகரனைத் தனது வலைக்குள் வீழ்த்த முயன்று தோற்றார். அதனால் கோபமடைந்த டிக்சிற், வார்த்தைக் குண்டுகளை அள்ளி வீசினார்; அது எந்த நன்மையையும் டிக்சிற்றுக்குப் பெற்றுக்கொடுக்கவில்லை.
அரவணைக்கும் இராசதந்திரத்தைக் கையாண்டு பார்த்து, தலைவர் பிரபாகரனைத் தனது வலைக்குள் வீழ்த்த முயன்று ராஜீவ்காந்தியும் தோற்றார்.


அதனால் கோபமடைந்த ராஜீவ்காந்தி, தலைவரைக் குறிவைத்து இந்திய படைகளை ஏவிவிட்டார். தீமையைத் தவிர அது எந்த நன்மையையும் ராஜீவ்காந்திக்குப்  பெற்றுக்கொடுக்கவில்லை.!

தகவல்: பாலா அண்ணை 
தட்டச்சு 
ஈழவேங்கை இணையத்தளத்தின் நிர்வாகி
தே.சசிதரன் 

நன்றி: படியுங்கள் அறியுங்கள் 



இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us