ஈழம்

ஈழம்

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

“எங்கட உயிரைக் கொடுத்தாவது அண்ணையைக் காப்பாற்றணும்” பிரிகேடியர் ஆதவன்

“எங்கட உயிரைக் கொடுத்தாவது அண்ணையைக் காப்பாற்றணும்” ஆனந்தபுரத்தில் பிரிகேடியர் ஆதவன் போராளிகளுக்குக் கட்டளை வழங்கினார்.

போராளிகளில் ஒருவனாக மாறி, கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் பல தடைகளை உடைத்து, தானே குறிபார்த்துச் சுட்டு, எதிரிகளை வீழ்த்திய வண்ணம் முன்னேறுகிறார் ஆதவன்.


எப்பணி ஆற்றினாலும் தலைவரை பாதுகாப்பதே தன் முதற்பணி என எண்ணும் ஆதவனால் கள நிலைமைகளை அறிந்து கொண்டு பொறுமை காக்க முடியவில்லை, தலைவர் அருகிருந்து தலைவரைப் பாதுகாப்பதில் தன்னுடைய வாழ்நாட்களில் கூடிய காலங்களைக் கழித்த ஆதவன், கதி கலங்கி நின்றார். “எம் தலைவருக்கு சிறு இன்னல் நேருமாயின் அதைப் பார்க்க நான் உயிருடன் இருக்க கூடாது ” என தன் போராளிகளிடம், தன் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறும் ஆதவனால் சினம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பகை மேல் சீற்றம் கொண்டு சீறி எழுந்தார். படைகொண்டு தடையுடைத்து எதிரியை அழித்து தலைவரை காப்பற்றினார்.

அக்களத்தில் இருந்து தலைவரைப் பாதுகாத்த    பின்பும், தான் நேசித்த மண்ணுக்காக, தான் வளர்த்த போராளிகளுக்காக அக்களத்தை விட்டு அகலாது கலங்காது போரிட்டார். போராளிகளை உற்சாகப் படுத்தி புயலாகப் போரிட்ட ஆதவன் அவர்கள் இயங்கவே முடியாத அளவுக்கு பலத்த காயம் அடைகிறார் . காப்பாற்ற முயன்ற போராளிகளைப் பார்த்து “எதிரி அண்மித்து விட்டான், என்னை விட்டுட்டுப் போங்கோ “எனக் கூறிய இறுதி வார்த்தைகளுடன் அவருடைய மூச்சு அடங்கிப் போனது.

தலைவரை உயிராக நேசித்த அந்த வீரத்தளபதி தன் இறுதி மூச்சை விடும் போது கூட தலைவரைப் பற்றியே நினைத்தார். தலைவருக்கு சிறு துன்பம் கூட  நேரக் கூடாது என எண்ணினார்.

பல காலங்கள் தலைவரோடு நின்ற அந்த அற்புதத் தளபதியின் சாதனைகள் வியக்கத்தக்கது. எப்பணி ஆற்றினாலும் அப்பணியில் அத்தனை நேர்த்தி இருக்கும் . மிகவும் கடினமான நிர்வாகப் பணியை சுலபமாக்கிய ஒரே தளபதி ஆதவன் அவர்களே. அனைத்துத் தளபதிகளுக்கும், அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும், தலைவர் கூறும் வார்த்தை “நிர்வாகத்தை எப்படிச் செய்வது என்று கடாபியிடம் படித்து விட்டு வாருங்கள். “அது போலவே போராளிகளின் திறமைகளை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்து வளர்ப்பதிலும், அவர்களுடைய உள்ளத்துச் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு செயல்ப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே. குறி வல்லுணரான ஆதவனைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. சொல்லிவைத்துச் சுடுவதில் அவருக்கு நிகர் அவரே. கரும்புலி வீரர்களை உருவாக்கி அவர்களை வழி நடத்திய அந்த அற்புதத் தளபதியும் இவரே, புதிய வீரர்களை போராட்டத்துக்குள் உள்வாங்கி புத்துணர்ச்சியோடும், கருத்துச் சுதந்திரத்துடனும் பயில்வித்த வித்தகரும் இவரே.

பல பணிகளை நேர்த்தியாகச் செய்து, பல சாதனைகள் புரிந்து, தலைவர் மனதில் தனியிடத்தைப் பிடித்த பிரிகேடியர் ஆதவனே!  என்றென்றும் உங்கள் நினைவுகளைச் சுமந்து கொண்டு உங்கள் கனவு நனவாகும் வரை  உம் தடம் தொடர்வோம் .



கேணல் அகிலேஷ் ,   லெப் கேணல் ராஜேஷ் ,
லெப் கேணல் நளன்

பிரிகேடியர் ஆதவனோடு ஆனந்தபுரத்தில் அருகிருந்த பொறுப்பாளர்கள்    இவர்கள். ஆதவனால் பல்லாண்டுகளாக பயில்விக்கப்பட்ட பண்பாளர்கள் இவர்கள். பல போர் வீரர்களை வளர்த்தெடுத்து, தேசக்கடமை ஆற்றிய சேவகர்கள் இவர்கள். வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்து விடுகின்றன. அத்தனை அர்ப்பணமும், ஈகமும், தியாகமும் அவர்களின் வரலாறு முழுவதும் நிறைந்தே கிடக்கும். அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவர்களாகவே இவர்கள் செயலாற்றினார்கள்.

தேசவிடுதலைப் போரில் ஒரு  காலை இழந்திருந்த அகிலேசை தளபதி ஆதவன் அவர்கள் தளப்பணிக்காக அமர்த்திய போதும், “இல்லை அண்ணை நான் உங்களோடு சண்டைக்கு வாறன் , என்னாலை சண்டை பிடிக்க முடியும்.”எனக் கூறி, போட்டிருந்த பொய்க் காலுடன் களம் புகுந்தவன் .

தன்னை வளர்த்த தளபதியோடு இணைந்து தன் தேசத்தையும், தலைவரையும் காப்பாற்றப் போராடினான். பல்லாண்டுகளாக பல பணிகள் ஆற்றிய கேணல் அகிலேஷ் ஆனந்தபுரத்தில் விதையாகிப் போனான் .

அகிலேசுடனான எனது முதற்சந்திப்பு முள்ளியவளையில் ஒரு முகாமில் அகிலேசும் அவனது உற்ற தோழனும் அங்கு வந்திருந்தார்கள்.பார்ப்பதற்கு பெரியவர் பாவனையில் இருக்கும் இவனோடு, பழகியபின் புரியும் அவனுடைய குழந்தைத்தனமான பேச்சும் பணிவும், வயது வேறுபாடின்றி அனைவரையும் மதித்து நடக்கும் பண்பு மிக்கவன்.அவனுடைய போராட்ட வாழ்க்கையில் அதிக காலத்தை பிரிகேடியர் ஆதவன்/கடாபி அருகிருந்து பணி செய்தவன். இறுதி நாள் வரை அவனுடைய இறுதிக்கணம் வரை அவர் அருகிருந்தவன்.

மெல்லிய பேச்சுத் தடுமாற்றம் இழையோடும் இவன் பேச்சில் சுவாரசியமிருக்கும். பேசும் வேளையெல்லாம் கண்ணைச் சிமிட்டியபடியே பேசுவது அவனுடைய இயல்பு ஆதலால் ஒரு சிலர் பிழை நினைத்திருக்கவும் கூடும். என்னையே சிலர் கேட்டதுண்டு.ஆனால் அடுத்தவர் மனம்நோக இவன் வாழ்நாளில் என்றும் நடந்திருக்கமாட்டான். அப்படியொரு சாந்தம் குடிகொண்டவன். என்னை அன்பாக அவன் அழைக்கும் வார்த்தைக்காக என் மனம் இன்றும் ஏங்கி நிற்பது நீ அறிய வாய்ப்பில்லை.

பிரிகேடியர் ஆதவன் படுகாயமடைந்த நிலையில் அகிலேஷ் அவ்வணியை செவ்வனே வழிநடாத்தினான். அவர் அருகிருந்து அறிவுரை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அந்த வேளையில் தான் அது நடைபெற்றதாக ஏனைய தோழர்கள் சொன்னபோது உங்கள் இருவரின் கடைமைக்கு அப்பாற்பட்ட அன்பை பார்த்து வியந்து நின்றேன். எங்கிருந்தோ வந்த எதிரிரவை ஒன்று உன் நெற்றியை துளைத்துவிட ஆதவன் அண்ணா மடிமீது நீ சரிந்து வீழ்ந்ததாக! உனை ஊட்டி வளர்த்தவர்,உரிமையோடு ஏசுபவர், உணவு கூடி உண்டவரின் குடும்பமும் உன் உறவாய் ஏற்றிருந்த உந்தனை அணைத்தபடி அழுதாராம் அந்தத்தளபதி.

27.03.2009 அன்று நீயும் உன் பொறுப்பாளரும் பச்சைப் புல்வெளியூடாக இறுதிப்பயணம் வந்தீர்கள். உன் வீட்டில் சொல்லி வைத்து கோழிசமைத்து இருவரும் சேர்ந்து உன் அம்மாவின் கையால் கடைசிச்  சோறு உண்டதாக உன் துணைவி சொல்லி அழவே தெரிந்து கொண்டேன். யார் வீட்டிற்கும் அலுவலின்றி போகாத நீங்கள் இருவரும் அன்று நேசமாக அணைத்து விடை பெற்று சென்றதுவும் முன் ஏற்பாடான திட்டம் என்று பின்பு நாம் உணர்ந்து கொண்டோம். சிறு குழந்தைகள் என்றால் அகிலேஸ்மாமா  ஆச்சுமாமா ஆகிடுவார். அது அவனுடைய செல்லப் பெயர். அனைவருக்கும் பார்த்தவுடன் இவனை பிடித்துக் கொள்ளும் பணிவு மிக்கவன். ஆனால் கடமையில் கண்ணயராது உழைத்தவன்.

இவனுடைய பல பணிகள் இன்றுமென்ன இனியும் இனிவரும் காலங்களில் கூட வெளித்தெரிய வாய்ப்பில்லை. இவன் தன் விசுவாசமான பணியால் மட்டுமே தலைமையின் அருகு சென்றவன். அண்ணனே அகிலேசின் வேலை என்றுதான் கதைத்ததை என் காதால் கேட்டிருக்கிறேன்.  இரகசியம் காப்பதில் நீ மகா கெட்டிக்காரன். உன் மனைவிக்கும் கூட மூச்சு விட மாட்டாய். அண்ணனால் பெரிதும் விரும்பபட்டவர்களில்  நீ முக்கியமானவன்.

 கடல் நடுவில் ஒரு திட்டமிட்ட தாக்குதலுக்காக ஆதவனோடு நீ சென்றிருந்தாய், அங்கு திட்டத்துக்கு மாறாக எதிரி உலங்குவானூர்தி சடுதியாக மிக அண்மையில் தோன்றி தாக்குதலை ஆரம்பிக்க இருபகுதிக்கும் கடுஞ்சமர் மூண்டது. உடனடியாக பிரிகேடியர் ஆதவனின் கட்டளைக்கு, அகிலேஸ்   உலங்குவானுர்தி நோக்கி சற்றும் பதட்டம் இன்றி உந்து கணையை ஏவி விட உலங்குவானூர்தி வெடித்துச் சிதறியது. சற்றும் எதிர் பாராமல் கள நிலைமை மாறிவிட   இவர்கள் வெற்றியோடு தளம் திரும்பினார்கள். இந்த வரலாற்றுச் சாதனைக்கு கேணல் அகிலேஷ்தான்  சொந்தக்காரன் என்று யாரும் அறிய வாய்ப்பில்லை. அன்று மட்டும்  துணிந்து இவன் கணப்பொழுதில் அவ் உலங்கு வானுர்தியை அழித்திருக்காவிட்டால் அனைவரும் படகோடு மூழ்கும் நிலையே இருந்ததாக ஆதவன் பெருமையாக கூறிக்கொண்டார்.

பல சந்தர்பங்களில் அவர் அருகிருந்தும் , உன் கால் ஒன்றை  இழந்த பின்னும் சளைக்காது பணி செய்தவன். அவரைக் காப்பரனாய்க் காத்து நின்றவன். உன் அருகிலேயே அவரும் உறங்கியதை நீ அறிய வாய்ப்பு இல்லை. உங்கள் அனைவரையும் விட்டு வர மனமின்றி கண்டல் காட்டுக்குள் தன் கல்லறையை அமைத்துக் கொண்டார். இனி நீ அமைதியாக சேர்ந்துறங்கும்  உன் தோழர்களும் அங்குதான் உன்னருகில் துயில்கின்றார். அனைவரையும் இந்நாளில்  மனதிருத்தி வணங்குகிறோம்.

தமிழீழ விடுதலைப் போரில் பல களங்கள் கண்ட ராஜேஷ் களத்தில்  ஒருகண்ணை இழந்திருந்தார். கடமையை கண்ணியத்துடன் செய்யும் ஓர் அற்புத வீரனாகவும், பல போராளிகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்ந்தார். நீண்ட காலங்களாக தேசவிடுதலைப் போரில் பங்காற்றியவர், களங்களில் மட்டுமின்றி  தளங்களிலும், சிறப்புறப் பணியாற்றினார். தேசத் தலைவரைக் காக்கும் பணியிலும் பல வருடங்கள் ஈடுபட்டான்.

தமிழ்த் தேசத்தின் விடிவுக்காக அயராது உழைத்த லெப் கேணல் ராஜேஷ் ஆனந்தபுர பெருஞ்சமரில் வீர காவியமானான். இந்த வீரனை என்றென்றும் மனதில் இருத்தி இவன் தடம் தொடர்வோம்.

மூர்க்கத்தனத்தோடு முன்னேறிய இராணுவத்தைக் கொன்று குவித்து விதையானவன் இவன் .தன்னுடைய இரண்டு வயதுக் குழந்தையை சிங்கள அரக்கர்களின் விமானத்தாக்குதலுக்குப் பலிகொடுத்து, அத்துயரில் இருந்து மீழமுன்பே களம் நோக்கி விரைந்தவன் நளன். ஆனந்தபுரத்தில் நடந்த உக்கிரப் போரில்

தேச விடுதலைக்காக பல பணிகள் ஆற்றிய இவன் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பொறுப்பாளராக சில காலம் பணிபுரிந்தான். மிகவேகமாகவே அனைவரது தேவைகளையும் அனைவரது கோரிக்கைகளையும் உள்வாங்கி படையணியை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான். நிர்வாகப் பணிகளை அழகாக போராளிகளுக்குக் கற்று கொடுத்தான்.

அனைவராலும் விரும்பப்படும் பொறுப்பாளனாகச் செயலாற்றிய லெப் கேணல் நளன் அவர்களை என்றுமே மறக்க முடியாது .

இவர்களோடு   கப்டன் குட்டியருவி, கப்டன் இசைப்பிரியன், கப்டன் அமர்முரசு, கப்டன் நெடியவன், மேயர் ஈழச்செல்வன்  இவர்கள் எம் இனத்தின் இருள் நீக்கிகள் ,எம்மனங்களில் சுடர் விட்டெரியும் சுடர் மணிகள்.  தூக்கம், சோர்வு, உணவு என்று எல்லாம் மறந்து எந்நேரமும் இயங்கியவர்கள். ஆனந்தபுரத்தில் பிரிகேடியர் ஆதவனோடு இறுதிவரை உறுதியுடன் உழைத்தவர்கள். கட்டளைக்குக் கீழ்ப் பணிந்து அனைத்துக் கடினமான பணிகளையும் அர்பணிப்புடன் ஆற்றியவர்கள்.  இந்தத் தியாகச் செம்மல்களை என்றும் எம் மனங்களில் இருத்திப் பூசிப்போமாக.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us