ஈழம்

ஈழம்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

"தமிழீழத்தின் அன்னை" பார்வதி அம்மாவுக்கான இரங்கற் செய்தி - தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதியம்மா வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பேரன்னையின் பிரிவால் துயருறும் இவரின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பார்வதி அம்மாவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுக்கும் அறிக்கை.

‘தலைமைச் செயலகம் , 
த/செ/இ/செ/01/11 
தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம். 
20/02/ 2011.

அன்பான தமிழ் பேசும் மக்களே!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று (20/02/2011) வல்வெட்டித்துறையில் காலமானார். அன்னை பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய அந்தப் பெருவிருட்சம் இன்று கண்மூடித் துயில்கின்றது.

எமது தேசியத் தலைவரைப் பெற்றெடுத்த திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயாவும் பார்வதி அம்மாவும் தமது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் பேரவாவோடு இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியிருந்தனர். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தமது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்து வந்தனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு எமது தேசியத் தலைவரின் பெற்றோர் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த நிகழ்வு இன்றும் தமிழ்மக்களின் மனதில் ஆறாத துயராகவுள்ளது.

கணவரின் மறைவைத் தொடர்ந்து தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பார்வதியம்மா தனது சொந்த ஊரிலேயே தங்கியிருந்தார். மிகவும் நொடிந்து போன நிலையில் அவர் தனது இறுதிக்காலத்தை மருத்துவமனையிலேயே கழித்திருந்தார். கடந்த ஓராண்டாக பல சிரமங்களோடு வாழ்ந்து வந்த எமது தேசத்தின் பேரன்னை இன்று மீளாத் துயிலில் ஆழ்ந்துள்ளார்.

ஓர் ஒப்பற்ற விடுதலை வீரனை, தளபதியை, தலைவனை, வழிகாட்டியை தமிழினத்துக்குப் பெற்றெடுத்துத் தந்த பெருமை எமது தேசத்தின் பேரன்னைக்குரியதே. தனது சிறு பராயத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு விடுதலை அமைப்பைக் கட்டி வளர்க்கத் தொடங்கிய எமது தேசியத் தலைவரைப் புடம்போட்டு வளர்த்தவர் எமது தேசத்தின் பேரன்னையே ஆவார்.

இறுதிநேரம் வரை பல நெருக்கடிகளின் மத்தியிலும் எமது தேசத்தின் பேரன்னையின் நலன் பேணலில் அக்கறையெடுத்து உறுதுணையாகச் செயற்பட்ட அனைவருக்கும் இந்நேரத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, பேரன்னையின் பிரிவால் துயருறும் இவரின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

இராமு.சுபன், 
இணைப்பாளர், 
தலைமைச் செயலகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம். 


Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்