ஈழம்

ஈழம்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

புலம்பெயர் தேசங்களில் வழங்கப்படும் துரோகி பட்டியலின் பின்னணி என்ன? இம்ரான் பாண்டியன் படையணியின் ஊடக அறிக்கை.

எனது உயிரிலும் மேலாக நான் நேசிக்கும் தமிழீழ மக்களுக்கும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பூமிப்பந்தெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் நாம் எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு நெருக்கடி மிகுந்த வேளையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடான கருத்துக்களையும், பரப்புரைகளையும் தவிர்க்கவும், மக்களுக்கு எமது நிலைப்பாடு பற்றி தெளிவான விளக்கங்களையும் கொடுக்க வேண்டியிருப்பதனால் இப்பதிவு  முக்கியம் பெறுகின்றது.

தனிப்பட்ட நபர்களைச் சாடுவதோ அல்லது தனிமைப்படுத்துவதோ எமது விடுதலைப் போராட்டத்தின் நோக்கம் அல்ல. இருந்தபோதும் கூட தற்போது ஏற்பட்டிருக்கும் தவறான பரப்புரைகளை தகர்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்காலில் எமக்கு ஏற்பட்ட இராணுவப் பின்னடைவு ஒட்டு மொத்த விடுதலைப் போராட்டத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். அதற்காக விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டு விடுமா என்ன?

எமது மண் மீட்பிற்கான போராட்டம் ஒரு போதும் தடைப்படப் போவதில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சில குறுகிய சுயநல விரும்பிகள் முனைப்புக் காட்டுவது வெளிப்படையாகத் தெரிகின்றது. முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் வன்னிக்கும், புலம்பெயர் தமிழர் கட்டமைப்புக்குமான தொடர்புகள் சீரின்மையால் இதனைப் பயன்படுத்தி சில தனி நபர்கள் தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்து இன்று அது விஸ்பரூபம் எடுத்திருக்கின்றது. 
  இதன் வெளிப்பாடுதான் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் துரோகிகள் பட்டம் சூட்டும் நிகழ்வுகள். உண்மையில் துரோகிகள் யார் என்பதை அடையாளம் காணவேண்டிய பொறுப்பு மக்களுடையதே தவிர தனிநபர்களினதும், அவர்களினால் நடத்தப்படும் சில ஊடகங்களினதும் கடமையல்ல.


முள்ளிவாய்க்கால் பேரவல நாட்களில் அந்த மக்களையும், மண்ணையும் மீட்பதற்கு எம்முறவுகள் அள்ளிவழங்கிய பெருந்தொகை நிதி எங்கே போனது?. அந்நிதி தமிழீழத்தை நிச்சயமாகச் சென்றடையவில்லை. அப்படியாயின் அந்த நிதி தனி நபர்களிடம் எங்கோ முடங்கிக் கிடக்கின்றது.

அந்தநிதியை வெளியே காட்டாமல் பதுக்கி வைத்துக்கொண்டு இறுதிக்கட்டப் போரில் அநாதரவாக்கப்பட்ட மக்களுக்கோ, போராளிகளுக்கோ எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல் அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களுக்கான செயற்திட்டங்களை பேச்சளவில் கூட அறிவிக்காமல் கடந்த ஒன்றரை வருடங்களைக் காலங்கடத்தி. தமிழீழத் தேசிய நிதியைச் சூறையாடுவதையே குறிக்கோளாகக் கொண்டு தம்மை அனைத்துலக தொடர்பாளர்கள் என்று பறைசாற்றிக் கொண்டு. அதேநேரம் எமது தேசத்திற்காக ஏதாவது செய்ய முனைவோரையும், எமது போராட்டத்தின் அடுத்த படிநிலைச் செயற்பாடுகளைச் செய்ய முனையும் தேசாபிமானிகளையும், போராளிகளையும் துரோகிகள் பட்டம் சூட்டுவதிலேயே இவர்கள் குறியாக இருக்கின்றார்கள். 

உருத்திரகுமார் துரோகி. விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்கள் துரோகி. இடைக்கால தன்னாட்சியை உருவாக்கிய மதியுரைஞர் குழு துரோகி. இறுதிக்கட்டப் போரில் வெடிபொருட்கள் தீரும் வரை போராடி ஈற்றில் மக்களோடு மக்களாக வந்த போராளிகள் துரோகி. புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு நாட்டுக் கிளைகளாலும் சேகரிக்கப்பட்ட தமிழீழத் தேசிய நிதி சார்பான கணக்கறிக்கைகளைக் கேட்போர் துரோகி. உருப்படியான செயற்திட்டங்களைக் கொடுத்து இவர்களைச் செய்யச் சொன்னால் அவர்களும் துரோகி. இவர்கள் எதுவும் செய்யாதவிடத்து தாமே புதிய அமைப்புக்களை உருவாக்கி உருப்படியான தமிழர் நலத்திட்டங்களைச் செய்ய முனைவோரை அச்சுறுத்துவது, தடுப்பது அதுவும் சரிவராதவிடத்து அவர்களுக்குத் துரோகிப்பட்டம் கொடுப்பது. இதுதான் இவர்களது தேசியப்பணி ஆகிவிட்டது.

 இப்படியே எல்லாரையும் துரோகி என்றால் உண்மையில் யார் துரோகி. மக்களே சிந்தியுங்கள். இவர்கள் சொல்கின்ற துரோகிப் பட்டியலில் 98வீதான மக்கள் அடங்கிவிடுவர். அப்படியாயின் துரோகிகள் யார்? யார் மற்றவர்களைத் துரோகி என்கின்றானோ அந்த நபர்தான் உண்மையில் துரோகி. தம்முடைய இருப்பைத் தக்கவைக்கவும், தம்மைக் காத்துக் கொள்வதற்குமே இவ்வாறு எடுத்தவுடன் துரோகிகள் ஆக்கப்படுவதைக் காணமுடிகின்றது.  மக்களை முட்டாள்கள் ஆக்கியும், ஈழமக்கள் இரத்தம் சிந்தி உழைத்த தழிழீழத் தேசிய நிதியைச் சுருட்டி அதனூடே வாழ்பவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. இவர்களை மக்கள் இனங்காணாது விட்டால் இவர்கள் நினைப்பது போல் மக்களும் முட்டாள்கள் ஆகவே ஆகிவிட நேரிடும்.

  யாவரையும் துரோகிகள், சிங்களத்தின் புலனாய்வாளர்களாகச் செயற்படுகின்றனர் என மற்றவர்களுக்கு துரோகிகள் பட்டம் வழங்கி அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கும் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொண்டு அதனைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் நந்தகோபன் என்ற நபர் யார்? கேட்டுக் கொள்ளுங்கள் குறிப்பை.

 நந்தகோபன் வன்னியில் மூத்தபோராளி கஸ்ரோவின் உதவியாளர் மாத்திரமே. இறுதிக்கட்ட யுத்தம் வரை இவர் களமுனைகளுக்குச் சென்றதே கிடையாது. இராணுவத்துக்கெதிராக துப்பாக்கி ஏந்தி ஒரு ரவைகூட சுடாதவர். மூத்தபோராளி கஸ்ரோ அவர்களின் உதவியாளனாக மட்டும் நின்ற இவர் புலம்பெயர் தேசத்தில் வந்து எப்படிப் பெரும்புலியானர்?.

  மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த நந்தகோபன் எப்படி வெளியே வந்தார்?. மூத்த உறுப்பினர்கள் முதல் இறுதிக்கட்டச் சண்டை நடக்கும் போது போராட்டத்தில் இணைந்தவர்கள் வரை அனைவரையும் தனியாகப் பிரித்தெடுத்து, வெவ் வேறு இடங்களில் அடைத்து வைத்து சித்திரவதைகளுக்குள்ளாக்கி வரும் சிறிலங்கா அரசபடைகளும், சிங்கள அரசும் எவ்வாறு நந்தகோபனை வெளியில் விட்டனர்.

அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கஸ்ரோ அவர்களின் உதவியாளனாக இருந்த நந்தகோபனைக் கைது செய்திருந்தாலும், சில மாதங்களுக்குள்ளாகவே நாட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதித்தது ஏன்?

கவிகளின் மூலமும், இலக்கியங்கள் மூலமும் புரட்சியை ஏற்படுத்திய எமது ஆஸ்தான கவிஞராக இருந்த புதுவை இரத்தினதுரை அவர்களையே விட்டு வைக்காத சிறிலங்கா அரசு. விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான கஸ்ரோ அவர்களின் உதவியாளரான நந்தகோபன் சரணடைந்த பின்னர் எதுவித நடவடிக்கைகளுமின்றி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல சிறிலங்கா அரசு வழியமைத்துக் கொடுத்திருந்தது.

இவ்விடயத்தை உன்னிப்பாக நோக்கில் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை இவர்மூலம் கண்காணிக்கவும், அதனூடாக அதைச்சிதைக்கவும், அதில் பணியாற்றியோரை சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கைது செய்யவுமே சிறிலங்கா அரசு தனது கைக்கூலியாக நந்தகோபனை வெளியில் அனுப்பியிருக்கலாம் என்பது தற்போதைய அவரின் நடவடிக்கைகள் சுட்டிநிற்கின்றது.

நந்தகோபன் சரணடைந்திருந்தபோது முகாமில் இராணுவப் புலனாய்வாளர்களிடம் சேர்ந்திருந்ததும், ஏராளமான போராளிகளுக்குத் தெரியும். மூத்தபோராளி கஸ்ரோ அவர்கள் சரியான உடல் இயக்கம் இல்லாத நபர் என்பது யாவருக்கும் தெரியும். எனவே இறுதிக்கட்டங்களில் அவரைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்திவிட்டு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புச் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அழிக்கின்ற அல்லது நகர்த்துகின்ற பொறுப்பில் இந்த நந்தகோபன் என்பவரும், அறிவு என்பவருமே பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் தமது கடமையைச் சரிவரச் செய்யாது தங்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டு மக்களோடு சேர்ந்து சரணடைந்து வந்துவிட்டார்கள்.

இதனால் தான் விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆவணங்கள் முழுவதும் சிறிலங்கா படைகளால் விஸ்வமடுப்பகுதியில் வைத்து எடுக்கப்பட்டது. அவ்வாறு அவ் ஆவணங்கள் அனைத்தும் சிங்கள அரசிடம் செல்வதற்கு காரணகர்த்தாக்கள் இவர்கள் இருவருமே. இவர்களே இன்று அனைத்துலக செயலகத்தை வழிநடத்தும் பொறுப்பாளர்கள்.

சிங்கள அரசுக்கெதிராகச் செயற்பட்ட புலம்பெயர் தமிழர்களை இனங்காணுவதற்கு விஸ்வமடுவில் எடுக்கப்பட்ட அனைத்துலகச் செயலகத்தின் ஆவணங்களே போதுமாவை. புலம்பெயர் மக்களுக்குத் தெரியாத தீவிர விடுதலைச் செயற்பாட்டாளர்கள், உயர்மட்ட அரசியலாளர்கள், பொருளியலாளர்கள் என யாவருடைய விபரங்களும் இராணுவத்தினரிடம் உள்ளன. வெளியே யாருக்கும் தெரியாத விடயங்களை இராணுவத்திடம் அகப்பட வைத்துவிட்டு புலம் பெயர் தேசத்திற்கு வந்து மற்றவர்களைத் துரோகி என்று சொல்ல இந்த நந்தகோபனுக்கு எப்படி முடியும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவத்திடம் அகப்பட்டு அல்லது சரணடைந்து வெளியில் வந்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உடனடியாக பாரிய பொறுப்புக்கள் எதனையும் கொடுத்தது கிடையாது. அப்படி வந்தவர்கள் உடனடியாக பொறுப்புக்களை ஏற்றதும் கிடையாது. அப்படியிருக்க நந்தகோபன்; புலம்பெயர் தேசத்திற்கு வந்தவுடன் ஊடத்துறைப் பொறுப்பை எடுத்துக்கொண்டு ஏன் இப்படியான குழப்பங்களை விளைவிக்கின்றார்?. நந்தகோபனை நம்புவது எப்படி. கேபி ஒரு கைதி. அவர் பற்றி நாம் அலட்டத் தேவையில்லை.

அவர் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பது வெளிப்படை. அத்துடன் மக்கள் மத்தியில் அறியப்படாத கேபியை புலம்பெயர் மக்கள் மத்தியில் அறியச் செய்து அவரை ஒரு பெரிய நபர் ஆக்கியதும் இந்த ஊடகங்களும், நந்தகோபனுமே. கேபி குழு என்ற விடயத்தை கையிலெடுத்து மக்கள் மத்தியில் அவரைப் பெரிய சக்தியாகக் காட்டி. விளம்பரப்படுத்தி. தன்னுடைய நிலையை மறைப்பதற்காக ஏதோ தலைமைத்துவப் போட்டி இருப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பது இந்தஊடகங்களும், நந்தகோபனுமே.

  குறிப்பாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்ததன் பின் பல அறிக்கைகளை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதில் ஒன்று தான் இலங்கைப் படைகளால் 97,98,99 காலப்பகுதிகளில் நடாத்தப்பட்ட ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கைக்கெதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஒட்டுமொத்த தாக்குலையும் தாமே தலைமை தாங்கி நடத்தினேன் என்பது. இவ்வாறு இவர் தம்பட்டம் அடித்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அதனால் கருணாவின் தம்பட்டம் உடைந்து போனது. அதே பாணியில் கேபி விடயத்தையும் கையாண்டிருந்தால் கேபி மிகப்பெரிய சக்தி பற்றிய மாயை உருவாக்கியிருக்க வாய்ப்பேயில்லை. 


எனது அன்புக்கும் பாசத்துக்குமுரிய மக்களே! அனைத்துலகச் செயலகத்தின் தற்போதய பொறுப்பாளர்கள் எமது விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய ஏதாவது ஒரு செயற்திட்டத்தை கடந்த ஒன்றரை வருடங்களில் அறிவித்தார்களா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களைத் துரோகி என்பதும், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் பற்றி தவறான பரப்புரைகளை தமது ஊடகங்களான பதிவு, சங்கதி (புதிது), ஈழமுரசு, புலத்தில் (கனடா) ஆகியவற்றில் மேற்கொண்டு காலத்தை வீணடித்து தேசிய நிதியைச் சூறையாடுவதிலும், தங்களுடை இருப்பை உறுதிப்படுத்துவதிலுமே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

   இறுதிக்கட்டப் போரின்போது இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறி விடுதலை வேட்கையோடு இன்று இயங்கிக் கொண்டிருக்கும் போராளிகளையும், கட்டளைத் தளபதிகளையும் மதிக்காது அவர்களின் செயற்பாடுகளுக்கான வழங்கல்கள் எதனையும் செய்யாமல் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு காகிதத்திலும், இணையத்தளங்களிலுமே தமிழீழ விடுதலைப்போர் என்று கர்ச்சித்துக்  கொண்டு தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்குத் துரோகிப்பட்டம் வழங்குவதுதான் இந்த அனைத்துலகத் செயலக தற்போதைய பொறுப்பாளர்களின் பணியாகிப் போய்விட்டது.

உண்மையில் புலனாய்வு அமைப்புக்கள் ஊடுருவுவதென்றால் அது யாருக்கும் புலப்படாது. அதை சிங்கள அரசு பிரச்சாரப்படுத்தவும் மாட்டாது. புலனாய்வு என்பது எவருக்கும் தெரியாமலேயே இரகசியமாக நடத்தப்படும் வேலை. புலனாய்வாளர்கள் பற்றிய சரியான மதிப்பீடு தெரியாமல் சிங்கள அரசின் புலனாய்வு ஊடுருவல் என்ற பூச்சாண்டியைக் காட்டி இந்த நந்தகோபன் குழு புலம்பெயர் மக்களிடையே குழப்பம் விளைவிக்க முனைகின்றது.


பொதுவாக அனைத்துலக தொடர்பகத்தைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் ஒருசில பொறுப்பாளர்களே தவறானவர்கள் என்று குறிப்பிடுகின்றேன். ஆனால் அதில் உள்ள அனைத்துப் போராளிகளும் பிழையானவர்கள் அல்ல. அதேபோல் அனைத்துலக செயற்பாட்டுக் கிளைகள் எல்லாவற்றையும், அதன் எல்லாச் செயற்பாட்டாளர்களையும் பிழை என்றும் கூறவில்லை. இலங்கை அரசு உடைக்க நினைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசையும், புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்கள் அமைப்புக்களையும் இவர்கள் ஒற்றுமையாகச் செயற்படுவதைத் தடுக்கிறார்கள்.


அதாவது நாடுகடந்த அரசு. மற்றும் அனைத்துலக தொடர்பகம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாகச் செயற்படக்கூடாது என்பதே சிங்கள அரசின் திட்டமாகும். அதைத் தற்போது இந்த நந்தகோபன் குழு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து தெரிகின்றது நந்தகோபன் யாரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றார் என்பது. இந்நபரின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்ற உண்மையான போராளிகளும் தேசியச் செயற்பாட்டாளர்களும் இதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

  இவ்வாறு நந்தகோபன் குழுவினரால் பல தேசியச் செயற்பாட்டாளர்களும், மக்கள் கட்டமைப்புக்களும் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டு முடக்கப்படுவதோடு தமிழீழ விடுதலைப்போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கத்தில் புதிதாக உருவாக்கப்படுகின்ற கட்டமைப்புக்களை துரோகி கருணாவுடனும், கேபியுடனும், இலங்கைப் புலனாய்வுத் துறையினருடனும் முடிச்சுப் போடுகின்ற சூட்சுமம் இதுதான். அத்துடன் நந்தகோபனதும், சில தனிப்பட்ட நபர்களினதும் தமிழீழத் தேசிய நிதியைச் சூறையாடி மோசடி செய்த விடயங்களை அடுத்த மடலில் வெளியிடுகின்றேன். 

ஆகவே எத்தனை தடைகள் வரினும் தமிழீழ விடுதலைக்கான போராட்டம். மானிட இயங்கியல் விதியின் வழித்தடத்தைப் பின்பற்றி இயல்பாகவும், உறுதியாகவும் முன்னோக்கிச் செல்லும். இக்கால ஓட்டத்தில் பல அற்புதமான மனிதர்கள் வருவார்கள். போவார்கள். சங்கமிப்பார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் தனி மனிதர்களுக்கானதன்று. அது தமிழ்த் தேசிய இனத்திற்குச் சொந்தமானது. உண்மையான தேசியவாதிகள் யாராக இருந்தாலும் இதில் இணையலாம் செயற்படலாம், பணியாற்றலாம். இதற்கு யாரும் தடை போடமுடியாது. “நான் சாகலாம் நாங்கள் சாகமுடியாது” இலக்கை அடையும் வரை தொடர்ந்தும் போராடுவோம். 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
                                                                                                                                                                                                  ச.புலிச்சோழன்
நிர்வாகப் பொறுப்பாளர்
இம்ரான் பாண்டியன் படையணி

Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us