ஈழம்

ஈழம்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

வரலாறு படைத்த எம்மின தலைவன் பிரபாகரன்.

 மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக்கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்சமாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.



அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றினை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமையில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மையான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது. 


இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள்ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல்லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத்தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.


ராஜபக்சே சகோதரர்களின் அரசியலும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திரமாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காமலேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத்தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ்டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர்களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.


Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us