ஈழம்

ஈழம்

வெள்ளி, 17 ஜூன், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-02

அத்தியாயம் 02


அன்றிரவு ஸ்ரீபெரும்புதூரில்... ராஜிவ் வந்திறங்கிய நேரத்தில்...

இரவு 8.20 மணிக்கு அந்த விமானம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரி சாகர் இல்லாமல் வந்திறங்கினார் ராஜிவ் காந்தி.

சென்னையில் சாகரை ரிலீவ் பண்ணவேண்டிய புதிய பாதுகாப்பு அதிகாரி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காத்திருந்தார். அவர் ராஜிவ் காந்தியுடன் சென்று இணைந்து கொண்டார். பாதுகாப்புக் கடமையில் இருக்கும்போது அவர் தன்னுடன் வைத்திருக்க வேண்டிய கைத்துப்பாக்கி அவரிடமில்லை.

கைத்துப்பாக்கி, பழைய பாதுகாப்பு அதிகாரி சாகருடன் விசாகப்பட்டினத்தில் தங்கிவிட்டிருந்தது.

இந்தப் புதிய பாதுகாப்பு அதிகாரி, தன்னிடம் கைத்துப்பாக்கி இல்லை என்ற விஷயத்தை விமான நிலையத்தில் நின்றிருந்த யாரிடமும் சொல்லவில்லை. அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த தமிழக அரசின் காவல்துறைக்கும், இந்த விஷயம் தெரிவிக்கப்படவில்லை.

விமான நிலையத்தில் ராஜிவ் காந்திக்கு, வழமைபோல தமிழக அரசு காவல்துறையின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழக பொலீஸ் பாதுகாப்பு ராஜிவ் காந்தி தமிழகத்தைவிட்டு வெளியேறும்வரை இருக்கும்.

ஒருவேளை புதிய பாதுகாப்பு  அதிகாரியும் இதனால்தான், தன்னிடம் துப்பாக்கி இல்லாதது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

சாதாரண சமயங்களில் என்றால், அவரிடம் கைத்துப்பாக்கி இருக்கவில்லை என்ற விஷயமே அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது போய்விடும். ஆனால், அன்றைய தினம் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதால், அதன்பின் நடைபெற்ற புலன்விசாரணையின்போது இந்த விஷயம் வெளியாகிவிட்டது.

ஸ்ரீபெரும்புதூர். சென்னைக்கு அருகே,
கிராமங்களுடன் இணைக்கப்பட்ட,
பகட்டில்லாத ஒரு சிறுநகரம்.
தனது தனிப் பாதுகாப்பு அதிகாரியிடம் ஆயுதம் ஏதுமில்லை என்ற விஷயம், ராஜிவ் காந்திக்குத் தெரியப்படுத்தப் பட்டிருந்ததா என்று தெளிவாகத் தெரியவில்லை. அதுபற்றி ராஜிவ் காந்தி கொலைவழக்கு நீதிமன்றம் சென்றபோதும், யாராலும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

ஒருவேளை புதிய பாதுகாப்பு அதிகாரி அதைப்பற்றிக் கூறியிருந்தாலும் அதைக் காதுகொடுத்துக் கேட்கும் அளவில் ராஜிவ் காந்தி இருக்கவில்லை. விமானத்திலிருந்து இறங்கியதும் அவரைக் கட்சி முக்கியஸ்தர்களும், ஊடகவியலாளர்களும் சூழ்ந்து கொண்டனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்தே ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ராஜிவ் காந்தி பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கிருந்த சோபா ஒன்றில் அமர்ந்தவாறே, கிட்டத்தட்ட ஒரு மினி மீடியா கான்பிரன்ஸ் பாணியில் கேள்விகளுக்குப் பதிலளித்தார் அவர். இது சுமார் 10 நிமிடங்கள்வரை நீடித்தது.

அந்த 10 நிமிடங்கள்தான் ராஜிவ் காந்தியின் கடைசி மீடியா கன்பிரன்ஸாக அமையப்போகின்றது என்பதை, அதில் கலந்துகொண்ட மீடியா ஆட்கள் யாரும் அப்போது ஊகித்திருக்க முடியாது.

இந்த மீடியா கன்பிரன்ஸ், தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களால் வழமைபோல படமாக்கப்பட்டிருந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர், அந்த வீடியோக்களுக்கு ஏகக் கிராக்கி ஏற்பட்டது வேறு விஷயம். (சில நாட்களின்பின் புலனாய்வுக் குழுவினர் அந்த வீடியோக்கள் அனைத்தையும் தம்வசம் எடுத்துக் கொண்டனர்)

மினி பிரஸ் கான்பிரன்ஸ் முடிந்ததும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் அவரை உடனே கிளம்புமாறு அவசரப்படுத்தத் தொடங்கினார்கள். அவரது தமிழகச் சுற்றுப்பயணத்தின்போது, மிகவும் டைட்டான நிகழ்ச்சி நிரல் போடப்பட்டிருந்ததே அதற்குக் காரணம்.

கட்சிக்காரர்கள் புடைசூழ விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த ராஜிவ்காந்தி, அங்கே தயாராக நின்றிருந்த குண்டு துளைக்காத காரில் ஏறிக்கொண்டார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க வந்திருந்த மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனார் ஆகியோரும், அவருடன்  ஸ்ரீபெரும்புதூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ராஜிவ் காந்தியை ஏற்றிச்சென்ற கார் அணிவகுப்பு, நேரே ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்லவில்லை. செல்லும் வழியில் போரூர், பூந்தமல்லி ஆகிய இரு இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவதாக நிகழ்ச்சி நிரல் இருந்தது. அந்தப் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார்.

இவ்விரு இடங்களிலும், வித்தியாசமான சம்பவங்கள் ஏதும் நடைபெற்றிருக்கவில்லை. அவை வழமையான கட்சிப் பொதுக்கூட்டங்கள்தான்.

ராஜிவ் காந்தியைப் பேட்டிகாணவேண்டும் என்று  நியூயோர்க் டைம்ஸ், கல்ஃப் நியூஸ் ஆகிய இரு பத்திரிகைகளின் செய்தியாளர்கள், அவரது ஊடக ஒருங்கிணைப்பாளரிடம் ஏற்கனவே கேட்டிருந்தனர். ராஜிவ் காந்தி விமான நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்லும் வழியில், பேட்டிகளை வைத்துக் கொள்ளலாம் என அவர்களுக்குக் கூறப்பட்டிருந்தது.

இதனால் இவ்விரு செய்தியாளர்களும் அங்கு வந்திருந்தனர்.

மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியபோது, ராஜிவ் காந்திக்கு தமிழக கட்சி நிலவரங்கள் பற்றிய பிரீஃபிங் தேவைப்பட்டிருந்தது. இதனால், அவரது கார் பயணத்தின் முதல் பகுதியின்போது பேட்டி நடைபெறவில்லை.  போரூரில் பொதுக்கூட்டத்தில் ராஜிவ் காந்தி கலந்துகொண்டபின் காரில் ஏறும்போது, இவ்விரு செய்தியாளர்களும் அதே காரில் ஏற்றப்பட்டனர்.

காருக்குள் இட நெருக்கடி காரணமாக ராஜிவ் காந்தியின் காரிலிருந்த மரகதம் சந்திரசேகர் கீழிறங்கி, மற்றொரு காரில் ஏறிக் கொண்டார்.

ராஜிவ்காந்தியின் காரும், அதைப் பின்தொடர்ந்த மற்றைய கார்களும் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லத் தொடங்கின, அங்கே ராஜிவ் காந்திக்காக தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் காத்திருக்கிறார் என்ற விஷயம் தெரியாமலேயே!

ராஜிவ் காந்தியின் அன்றைய சுற்றுப் பயணத்தின்போது ஹைலைட்டாக அமைந்திருந்ததே ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம்தான். அங்கே ராஜிவ் காந்தி பேசவிருந்த மாபெரும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மரகதம் சந்திரசேகரின் ஆதரவாளரான ஏ.ஜே. தாஸ் என்பவர் செய்திருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அந்த நாட்களில் ஒரு நடுத்தர அளவிலான நகரம்.  நகரத்தைக் கடந்து செல்லும் நெடுஞ்சாலைக்கு மேற்கே, புறவழிச்சாலைச் சந்திப்புக்கு அருகே ஒரு கோயில் மைதானம் இருந்தது. அங்குதான் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழமையாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்குப் பொதுக்கூட்டங்களில் பெரியளவில் மக்கள் திரண்டு வருவதில்லை. ஆனால், அன்றிரவு விதிவிலக்கு. காங்கிரஸ் கட்சியின் ஜனரஞ்சகத் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி கலந்துகொள்வதால், பெருமளவில் மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

ராஜிவ்காந்தி பேச்சைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். சாலை நெடுகிலும் மக்கள் வெள்ளம். மாலை 6.30 மணியிலிருந்தே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள் நடைபெறும்போது, அவற்றுக்கென்று பொதுவான சில சிறப்பியல்புகள் உண்டு. கூட்டத்துக்கு வரும் மக்கள் அரசியல் பேச்சுக்களைக் கேட்கத்தான் வருகின்றார்கள். ஆனால், முக்கிய அரசியல் பேச்சுக்கள் தொடங்கும்வரை, வந்தவர்களைக் கட்டிப்போட வேண்டுமே… அதற்காக கலை நிகழ்ச்சிகள் அதே மேடையில் நடாத்தப்படும்.

ராஜிவ் காந்தி கலந்துகொண்ட பொதுக்கூட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. ராஜிவ்காந்தியின் வருகையை முன்னிட்டு சிறப்பு இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த இசையமைப்பானர்கள் சங்கர்-கணேஷில், கணேஷ் தனது இசைக்குழுவினருடன் அங்கு இசை நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருந்தார்.

மொத்தத்தில் அன்றிரவு அந்த இடமே ஏதோ திருவிழா நடைபெறும் இடம்போலத்தான் காணப்பட்டது. சாதாரண நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெட்ட வெளியாகக் கிடக்கும் அந்த மைதானத்தில் ஒளி வெள்ளம், காதைப் பிளக்கும் இசையின் ஓசை, கரைபுரண்டோடும் மக்கள் கூட்டம் என வித்தியாசமாக காட்சி அளித்தது.

இந்திரா காந்தி குடும்பம்.
மூவருமே அகால மரணம்!
என்ன ஒரு அதிஸ்டம்.
இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி படங்கள் வரைந்த பாரிய கட் அவுட்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளமாக நின்றன. அது தேர்தல் சமயம் என்பதால் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தப் பாரிய அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ராஜிவ் காந்தி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மட்டுமல்ல. வாக்காளர்களைக் கவரக்கூடிய தலைவர். தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராகக் கூடியவர் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதிலும் பரவலாக இருந்தது.

இதுதான் ராஜிவ் காந்தி வருவதற்குமுன் அங்கிருந்த சூழ்நிலை.

ராஜிவ் காந்தியின் கார், பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடத்துக்கு அருகே வந்து சேர்ந்தது. அந்த இடத்திலிருந்து சில மீற்றர் தொலைவில் இந்தியாவின் முன்னாள் பிரதமரும், ராஜிவ் காந்தியின் தாயாருமான இந்திரா காந்தியின்உருவச்சிலை ஒன்று இருந்தது.

லோக்கல் கட்சிக்காரர்களால், அந்தச் சிலைக்கு மாலை அணிவிக்கும்படி ராஜிவ் காந்தி கேட்டுக்கொள்ளப்பட்டார். அதையடுத்து, காரிலிருந்து இறங்கிய ராஜிவ், நேரே அந்தச் சிலை இருந்த இடத்துக்குச் சென்று, இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

இது ஒரு ஆச்சரியமான நிகழ்வுதான். எப்படியென்று பாருங்கள்.

காரிலிருந்து இறங்கி, மேடைக்குச் செல்லுமுன் அவர் கொல்லப்படப் போகின்றார். அதற்குமுன் தனது தாயாரின் சிலைக்கு மாலையிடுகிறார். அதாவது, கொல்லப்படச் செல்வதற்குப் போகும் வழியில், தாயாரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டே செல்கிறார். அந்தத் தாயார் கொல்லப்பட்டதும், தீவிரவாதத் தாக்குதலில்தான்! ஆச்சரியம்தான்!!

இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், மேடையை நோக்கிச் சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்லத் தொடங்கினார் ராஜிவ் காந்தி, அடுத்த சில நிமிடங்களில் வெடித்துச் சிதறப் போகின்றோம் எனத் தெரியாமலேயே…

(3ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)
விறுவிறுப்பு.கொம் 


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us