ஈழம்

ஈழம்

திங்கள், 13 ஜூன், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-01

அத்தியாயம் 1


பாதுகாப்பு அதிகாரியின் கைத்துப்பாக்கி

மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம்.

இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் இந்தத் தொடர் தொடங்குகின்றது. இந்திய நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டசபைக்கும் தேர்தலுக்காகத் திகதி குறிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பில் ஆழ்ந்திருந்த காலம். ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற வேகத்துடன் தலைவர்கள் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மற்றய தினங்களைவிட அன்றைய இரவு சென்னை விமான நிலையம் அதிக பரபரப்பாகக் காணப்பட்டது. காரணம் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அவர்களுடைய நட்சத்திர வேட்பாளருமான ராஜிவ் காந்தி அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பரபரப்பான விமான நிலையத்தில் காத்திருந்த இரு எதிரிகள்!

சென்னை விமான நிலையமே ஏதோ காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்ட மைதானம் போலக் காணப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழக முக்கிய தலைவர்கள் முதல் கிராமப் பக்கத்துக் குட்டிக் காங்கிரஸ் தலைவர்கள்வரை அனைவரின் தலைகளும் அங்கே தென்பட்டன. கட்சியின் தலைவர் வந்திறங்கும் நேரத்தில் அங்கே தலையைக் காட்டாவிட்டால் நாளைக்கே கட்சிக்குள் சிக்கலாகி விடுமல்லவா?

அங்கு 70 வயதைக் கடந்த மரகதம் சந்திரசேகர் காத்துக்கொண்டிருந்தார்.

இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அது மாத்திரமல்ல, அப்போது நடைபெறவிருந்த தேர்தலில் அவர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர். தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக ராஜிவ்காந்தி பேசவிருந்த இடங்களில் ஸ்ரீபெரும்புதூரும் ஒன்று.

மரகதம் சந்திரசேகருக்கு தமிழக காங்கிரஸ் அளவில் செல்வாக்குக் கொஞ்சம் அப்படியிப்படி இருந்தாலும் புதுடில்லி தலைமை மட்டத்தில் செல்வாக்கு அதிகம். காரணம் என்னவென்றால் ராஜிவ்காந்தியின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக இருந்தவர் மரகதம் சந்திரசேகர். இதனால் ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தியுடனும் நன்கு பரிச்சயமானவர்.

இந்தச் செல்வாக்கில்தான் அவருக்கு அந்தத் தள்ளாத வயதிலும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கட் கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு இருந்த முக்கியத்துவம் காரணமாகவே தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் இறுதிக் கட்டமாக அவரது தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் மேடையேறி அவருக்காகப் பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டிருந்தார் ராஜிவ் காந்தி.

இன்று 20 ஆண்டுகளின்பின் விறுவிறுப்பு.கொம் இணையத்தளத்தில் இந்தத் தொடரைப் படிக்கத் தொடங்கியுள்ள உங்களுக்குத் தெரிந்த ஒரு விஷயம் அன்று மரகதம் சந்திரசேகருக்கோ, ராஜிவ் காந்திக்கோ தெரிந்திருக்கவில்லை. கொஞ்சம் வில்லங்கமான அந்த விஷயம், அன்றிரவு ஸ்ரீபெரும்புதூரில் மேடையேறுமுன் ராஜிவ் காந்தி ஒரு மனித வெடிகுண்டால் கொல்லப்படப்போகின்றார்!

வாழப்பாடி ராமமூர்த்தியும் கருப்பையா மூப்பனாரும்
விமான நிலையத்தில் மரகதம் சந்திரசேகருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இரு பிரதான தலைவர்களான வாழப்பாடி ராமமூர்த்தி, ஜி.கே. மூப்பனார் (இருவருமே தற்போது உயிருடன் இல்லை) ஆகியோரும் காத்திருந்தனர். இந்த இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும் கட்சிக்குள் இரு வெவ்வேறு (எதிரெதிர்) கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். சுருக்கமாகச் சொன்னால் கட்சிக்குள் எதிரிகள்!

இது நடைபெற்ற காலப்பகுதியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளால் பிளவுபட்டிருந்தது (இன்றும் நிலைமையில் மாற்றமில்லை. கோஷ்டித் தலைவர்கள்தான் வேறு). அன்று தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி கோஷ்டி, ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆதரவு தெரிவித்தது. ஆனால், மூப்பனார் கோஷ்டி கூட்டணி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கும் யோசனையைக் கடுமையாக எதிர்த்தது.

இருந்தபோதும் டில்லியிலுள்ள காங்கிரஸ் மேலிடம் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தது.

கூட்டணி அமைந்தபின் தங்களுக்குள் அடிபட்டு என்ன செய்வது? இதனால் இரு கோஷ்டிகளும் தேர்தலை முன்னிட்டு ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டிருந்தன. இதனால் இரு கோஷ்டியினரும் அவற்றின் தலைவர்களும் அன்று ஒரே நேரத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர் (வழமையாக இவர் வரும் இடத்தில் அல்லது நேரத்தில் அவர் தலையைக் காட்ட மாட்டார்!)

அன்றிரவு சென்னைக்கு ராஜிவ் காந்தி வரவேண்டிய பின்னணி என்ன?

அதைத் தெரிந்துகொள்ளக் கொஞ்சம் பழைய கதையைச் சொல்வது அவசியமாகின்றது. இந்தத் தொடர் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லை. ஆட்சி அதிகாரம் எல்லாமே காமராஜர் காலத்துடன் கைமாறி திராவிடக் கட்சிகளிடம் சென்றிருந்தன.

தி.மு.க.வில் அண்ணாத்துரையிடம் ஆட்சி சென்று… அவரது மறைவின்பின் கருணாநிதியிடம் ஆட்சி சென்று… இடையே அன்றைய நடிகரான எம்.ஜி.ஆர். திடீரெனத் தொடங்கிய கட்சியிடம் ஆட்சி கைமாறி… தான் இறக்கும்வரை முதல்வராகவே இருந்துவிட்டுச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வைக் கைப்பற்றியிருந்தார் ஜெயலலிதா.

இதெல்லாம் நடைபெற்ற காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதைப் பற்றியே நினைத்துக்கூடப் பார்க்க முடிந்திருக்கவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் மாறிமாறிக் கூட்டணி வைத்துக்கொண்டு அவற்றின் தயவில் தமிழகத்தில் அரசியலில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி.

நாங்கள் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற ஒரு கனவு அன்றுமுதல் இன்றுவரை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அதற்கான ஒரு சோதனைக் களமாக (எம்.ஜி.ஆர் இறந்த பிறகு) 1988 89-ல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், படுதோல்வியைச் சந்தித்தது.

அதற்குப்பின் தனித்துப் பலப்பரீட்சை செய்வது என்ற விபரீத விளையாட்டில் இறங்கவில்லை காங்கிரஸ்.

இப்படியான சூழ்நிலையில்தான் இந்தத் தொடர் நடைபெற்ற காலப்பகுதியில் ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தது காங்கிரஸ். புதிய கூட்டணியும், தேர்தல் பிரச்சாரத்துக்காக ராஜிவ்காந்தியின் தமிழக வருகையும் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று ஊடகங்களால் பரவலாக எழுதப்பட்டது.

தமிழ்நாட்டில் போடப்பட்ட இரு தலைகீழ் கணக்குகள்

ஜெயலலிதாவுடனான கூட்டணிக்கு ஆதரவாக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி ஒருவிதமாக கணக்குப் போட்டிருந்தார். ஜெயலலிதாவுடனான கூட்டணிக்கு எதிரான கருப்பையா மூப்பனார் அதற்குத் தலைகீழான கணக்கைப் போட்டிருந்தார்.

“சென்னைக்கு வந்துபோனால்
ஓட்டு விழுவது நிச்சயம்”
தங்கள் கூட்டணி நிச்சயம் வெல்லும் என்ற நிலையில், ராஜிவ்காந்தி தமிழகம் வரத் தேவையில்லை என்று கூறினார் வாழப்பாடி. அதாவது தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது… காங்கிரஸ் ஜெயிக்க அதுவே போதும் என்று நிரூபிக்க விரும்பினார் அவர்.

வா.ரா. அப்படிச் சொன்னால் சும்மா விட்டுவிடுவாரா க.மூ?

ராஜிவ் காந்தி பிரச்சாரத்துக்கு வந்தால்தான் கூட்டணி ஜெயிக்க முடியும் என்று வெளிப்படையாகவே கூறினார் அவர். கூட்டணி ஜெயிக்கத்தான் போகிறது. அந்த வெற்றி அ.தி.மு.க.வால் கிடைத்ததாக இல்லாமல் ராஜிவ் காந்தியின் பிரச்சாரத்தால் கிடைத்ததாக இருக்கட்டுமே என்பது அவரது நிலைப்பாடு.

இதற்கிடையே மரகதம் சந்திரசேகரும் ராஜிவ் காந்தி தமிழகம் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். ராஜிவ் காந்தி தமிழகம் வந்து ஸ்ரீபெரும்புதூரில் மேடையேறி அவருக்காகப் பிரச்சாரம் செய்தால் தான் சுலபமாக ஜெயித்து விடலாம் என்பது அவரது கோணம். இதுதான் ராஜிவ் காந்தியின் அன்றைய தமிழக வருகைக்கான அரசியல் பின்னணி.

பாதுகாப்பு வளையம் (சில ஓட்டைகளுடன்)

விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குச் சற்று தொலைவில் மாநில பொலிசாரின் சிறப்புப் பிரிவு பொலிசார் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைவிட சிவில் உடையில் மாநில உளவுப் பிரிவினரும் (கியூ பிரான்ச்) மத்திய உளவுப் பிரிவினரும் கட்சிக்காரர்களுடன் கட்சிக்காரர்களாகக் கலந்துபோய் நின்றிருந்தனர்.

ராஜிவ்காந்தி அப்போது பிரதமராக இல்லாதபோதிலும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் இலக்கில் அவர் இருந்ததால் உயர்நிலைப்பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் விடுதலைப் புலிகளின் தாக்குதல் இலக்கில் ராஜிவ் காந்தி இருப்பதாக அப்போது இந்திய உளவு அமைப்புகள் பெரிதாகக் கருதியிருக்கவில்லை.

இந்தியாவுக்குள் இருந்த காஷ்மீர் தீவிரவாதிகள் போன்ற அமைப்பினரின் தாக்குதல் இலக்கில் ராஜிவ் காந்தி இருப்பதாகவே அப்போது இந்திய உளவு அமைப்புகள் கருதியிருந்தன.

எங்கிருந்து சென்னைக்கு வந்தார் ராஜிவ்?

ராஜிவ் காந்தி அன்றிரவு சென்னை விமான நிலையத்துக்கு வருவது டில்லியிலிருந்து நேரடியாக வருவதாகத் திட்டமிடப்பட்டிருக்கவில்லை. காரணம் அவர் ஏற்கனவே நாடுதழுவிய தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியிருந்தார். தமிழகத்துக்கு வருவதற்குமுன் அருகிலுள்ள ஆந்திர மாநிலத்தில் அவரது பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கே விசாகப்பட்டினத்தில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிவிட்டுத் தமிழகம் வருவதாகவே ஏற்பாடு.

இதனால் சென்னை விமான நிலையத்துக்கு ராஜிவ்காந்தியை ஏற்றிவரும் விமானம் விசாகப்பட்டினத்தில் இருந்தே வரவேண்டியிருந்தது. ராஜிவ் காந்தி டில்லியிலிருந்து நேரடியாகச் சென்னைக்கு வந்ததாகச் சில ஊடகங்கள் குழப்பியிருந்தன. அது தவறான தகவல்.

சென்னை விமான நிலையத்தில் 21ம் திகதி இரவு ராஜிவ் காந்தியை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு முதல் தினமே (20ம் திகதி) அவர் டில்லியிலிருந்து புறப்பட்டு விட்டிருந்தார். அவர் பயணித்தது வழமையாக டில்லியிருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் விமானமல்ல. காங்கிரஸ் கட்சி சார்பில் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த தில்லி விமானப்பயிற்சி கிளப்பின் விமானத்தில்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று வந்துகொண்டிருந்தார் அவர்.

20ம் திகதி டில்லியிலிருந்து அந்த விமானத்தில் புறப்பட்டு, அங்கிருந்து முதலில் ஒரிசா மாநிலம் சென்றபின், ஆந்திராவுக்குச் சென்று, தமிழ்நாடு வந்து, அங்கிருந்து கர்நாடகா சென்று பிரசாரத்தை முடித்துக்கொண்டு 22ம் திகதி டில்லி திரும்ப வேண்டும் என்பதே ராஜிவ்காந்தியின் பயணத் திட்டம். அதுவரை அந்த விமானமும் அவருடனேயே இருக்குமாறு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

21ம் திகதி சென்னைக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து ராஜிவ்காந்தியின் விமானம் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களில் அவரது தனிப் பாதுகாப்பு அதிகாரியும் ஒருவர்.

தனிப் பாதுகாப்பு அதிகாரியின் கைத் துப்பாக்கி

ராஜிவ் காந்தியின் பாதுகாப்புக்காக அவருடன் ஒரு தனிப் பாதுகாப்பு அதிகாரியும் அவர் செல்லுமிடமெல்லாம் கூடவே செல்லுமாறு அவரது பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தந்த மாநிலங்களில் கொடுக்கப்படும் விசேட பாதுகாப்புகளைவிட மேலதிகமாக இந்தத் தனிப் பாதுகாப்பு அதிகாரி செயற்படுவார். அவரிடம் ஒரேயொரு கைத் துப்பாக்கி மாத்திரமே இருக்கும்.

இங்குள்ள மற்றொரு விஷயம் இந்தத் தனிப் பாதுகாப்பு அதிகாரி எப்போதும் ஒரே நபரல்ல. பாதுகாப்பு அதிகாரி மாறிக்கொண்டே இருப்பார்.

டில்லியிலிருந்து ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு ராஜிவ்காந்தி சென்றபோது உடன் சென்றிருந்த பாதுகாப்பு அதிகாரியின் பெயர் ஒ.பி. சாகர். ராஜிவ் காந்தி ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்திறங்கியவுடன் இந்த அதிகாரி பாதுகாப்புப் பொறுப்பை மற்றொரு அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார்.

புதிய அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பதில் ஓ.பி. சாகர் தன்னிடமுள்ள கைத் துப்பாக்கியைப் புதிய பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைப்பது என்பதும் அடங்கியுள்ளது. அதாவது ராஜிவ் காந்திக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் நேரத்தில்தான் குறிப்பிட்ட அதிகாரியிடம் ஆயுதம் இருக்கும். பாதுகாப்புக் கடமை முடிந்த பின்னரோ அல்லது கடமை ஆரம்பிக்கும் முன்னரோ ஆயுதம் இருக்காது.

சென்னை பழைய விமான நிலையம் (அன்றைய தோற்றம்)

இதை ஏன் விலாவாரியாகச் சொல்கிறோமென்றால் 21ம் திகதி இரவு சென்னை வந்திறங்கிய ராஜிவ் காந்தியை வரவேற்ற புதிய பாதுகாப்பு அதிகாரி தனது கைத் துப்பாக்கி இல்லாத நிலையில்தான் அவருடன் செல்லப் போகின்றார். இதுதான் இந்தியத் தரப்பில் நடைபெற்ற பாதுகாப்புக் குளறுபடி நம்பர் 1.

இது எப்படி நடந்தது?

ராஜிவ் காந்தி சென்னைக்கு வருமுன் ஒரிசா மாநிலத்துக்குச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தோம். ஒரிசா மாநிலத்தில் புபனேஸ்ர் நகரில் (ஒரிசாவின் தலைநகரம்) தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசியிருந்தார். அங்கிருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் சென்று அங்கும் பொதுக்கூட்டங்களில் பேசினார்.

விசாகப்பட்டினத்தில் இறுதிப் பொதுக்கூட்டத்தில் ராஜிவ் பேசி முடிந்தவுடன் அவரும் அவரது குழுவினரும் விசாகப்பட்டினம் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டனர். அங்குதான் ராஜிவ் குழுவினரை ஏற்றிவந்த தனியார் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாமே திட்டமிட்டபடி நடந்தன.

விசாகப்பட்டினம் விமான நிலையத்தை அடைந்தபோது அவரை ஏற்றிச் செல்லவேண்டிய விமானமும் புறப்படத் தயாராக இருந்தது. விமானிகளும் தயாராக இருந்தனர். விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ராஜிவ் வந்த தனி விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது விமான நிலையத்தின் சாதாரண பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட்டிருக்கவில்லை.

பொதுவாக வி.ஐ.பி. பாதுகாப்பு கொடுக்கப்படும்போது சம்மந்தப்பட்ட வி.ஐ.பி. பயணிக்கும் விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திலும் அதைச்சுற்றி பாதுகாப்புப் படையினரை நிறுத்திப் பாதுகாப்புக் கொடுப்பது வழக்கம். அதேபோல விமானத்தைச் செலுத்தும் விமானிகளும் ஒருவித கண்காணிப்பு வளையத்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் வெளியே சென்றுவரலாம். ஆனால் கண்காணிப்பு இருக்கும்.

விமான நிலையத்தில் தரித்து நிற்கும் நேரத்தில் அந்த விமானத்துக்குள் யாராவது ஏறி வெடிகுண்டு வைத்துவிடலாம் அல்லது விமானத்தின் என்ஜின்களில் குளறுபடி செய்துவிடலாம் என்பதற்காகவே இந்த நடைமுறை.

திடீரென விமானத்தில் கோளாறு!

இந்தக் காலப்பகுதியில் ராஜிவ் காந்தி பதவியில் இல்லாதிருந்த காரணத்தாலோ என்னவோ அப்படியான விசேட பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. இதுவும் கொலை நடந்தபின் புலனாய்வாளர்களுக்குச் சில சந்தேகங்களை ஏற்படுத்தியது. காரணம் டில்லியிலிருந்து புபனேஸ்வருக்கும் அங்கிருந்து விசாகப்பட்டினத்துக்கும் எதுவிதக் கோளாறுமின்றி வந்திருந்த விமானம் சென்னைக்குப் புறப்படுமுன் பறக்க முடியாதபடி கோளாறு இருப்பதாக விமானிகளால் அறிவிக்கப்பட்டது.

ராஜிவ் காந்தி விமானத்தில் ஏறி அமரும்வரை விமானத்திலிருந்த கோளாறு கண்டுபிடிக்கப்படவில்லை. ராஜிவ்வும் அவரது குழுவினரும் ஏறி அமர்ந்து விமானம் புறப்படத் தயாரானபோதுதான் விமானத்தின் என்ஜின் இயங்குவது நிறுத்தப்பட்டு விமானத்தில் கோளாறு இருப்பதாக ராஜிவ்வுக்குச் சொல்லப்பட்டது.

ராஜிவ் காந்தியே ஒரு முன்னாள் எயார் இந்தியா விமானியாக இருந்தவர். இதனால் விமானத்தில் ஏற்படக்கூடிய கோளாறுகள் பற்றிய அறிவு அவருக்கு இருந்தது.

குறிப்பிட்ட இந்த விமானத்தைச் செலுத்திய பிரதான விமானியின் பெயர் சந்தோக். அவர் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் இயங்கவில்லை என்பதால் பறக்க முடியாது எனத் தெரிவித்தார். இதையடுத்து ராஜிவ் காந்தி தானே நேரடியாக விமானத்தின் கொக்பிட்டுக்குச் சென்று அதன் சாதனங்களைப் பழுதுபார்க்க முயன்றார். ஆனால் அவராலும் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனத்தைச் சரிசெய்ய முடியவில்லை.

இதையடுத்து ராஜிவ் காந்தி அன்றிரவு விசாகப்பட்டினத்திலேயே தங்கிவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்படியே நடந்திருந்தால் அன்றிரவு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களில் ராஜிவ் காந்தி கலந்துகொண்டிருக்க முடிந்திராது. அன்றிரவு அவர் கொல்லப்பட்டிருக்கவும் முடியாது!

ராஜிவ் காந்தி அன்றிரவு தங்குவதற்காக அரசு சுற்றுலா விடுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரையும் அவரது குழுவினரையும் ஏற்றிக்கொண்டு சுமார் 10 வாகனங்கள் அரசு சுற்றுலா விடுதியை நோக்கிப் புறப்பட்டன. ராஜிவ் காந்திக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக கைத்துப்பாக்கி சகிதம் இருந்த மெய்ப்பாதுகாவலர் அதிகாரியும் ராஜிவ் காந்தியுடன் சுற்றுலா விடுதியை நோக்கிப் புறப்பட்டார்.

இந்த மெய்ப்பாதுகாவலர் அதிகாரியின் பெயர் சாகர்.


அதே காரில் சாகர் ஏன் செல்லவில்லை?

இங்குள்ள முக்கிய விஷயம் என்ன தெரியுமா? ராஜில் காந்தி சென்ற வாகனத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் சாகர் ஏற்றப்படவில்லை. அந்த வாகனத் தொடரணியின் தொடக்கத்தில் சென்ற வாகனம் ஒன்றில் சாகர் ஏற்றிச் செல்லப்பட்டார். ராஜிவ் காந்தி சென்ற வாகனம் வாகனத் தொடரணியின் நடுப்பகுதியில் சென்றது.

இந்த வாகனத் தொடரணி விசாகப்பட்டினம் வவீதிகளில் சுற்றுலா விடுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விமான நிலையத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு நடந்தது. அங்கிருந்த விமானப் பொறியாளர்கள் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனக் கோளாறைச் சரி செய்துவிட்டனர். விமானியும் அதை இயக்கிப் பார்த்து சரியாக வேலை செய்வதாக கிளியரன்ஸ் கொடுத்துவிட்டார்.

இந்தத் தகவல் வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருந்த ராஜிவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இருப்பதுபோன்ற செல்போன் வசதிகள் அந்த நாட்களில் இருக்கவில்லை. இதனால் விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்த பொலிஸ் கன்ட்ரோல் ரூமில் இருந்து பொலிஸ் வயர்லெஸ் மூலம் ராஜிவ்காந்தி சென்றுகொண்டிருந்த வாகனத்தில் இருந்த வயர்லெஸ் சாதனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானம் பழுதுபார்க்கப்பட்ட தகவலை அறிந்துகொண்ட ராஜிவ் காந்தி விசாகப்பட்டினத்தில் அன்றிரவு தங்கும் எண்ணத்தைக் கைவிட்டார். முன்பு திட்டமிட்டபடி சென்னைக்குச் செல்லப்போவதாகக் கூறி தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை விமான நிலையத்தை நோக்கித் திருப்புமாறு கூறினார்.

இப்படியான சூழ்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு நடைமுறையுடன் சென்றுகொண்டிருக்கும் ஒரு வாகனத் தொடணியில் செய்யவேண்டிய நடைமுறை என்னவென்றால் வாகனத் தொடரணியின் முன்னால் சென்றுகொண்டிருக்கும் வாகனத்துக்கு (பைலட் வாகனம்) இந்தத் தகவல் முதலில் தெரிவிக்கப்பட வேண்டும். அதையடுத்து வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருக்கும் சகல வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும். அதன்பின் எந்த மாற்றுப் பாதையால் வாகனத் தொடரணி செல்லப்போகின்றது என்ற விபரம் தொடரணியின் தொடக்கத்திலிருந்த வாகனத்துக்குத் தெரியப்படுத்தி அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையால் செல்ல வேண்டும். இதுதான் எங்குமுள்ள நடைமுறை.

அன்றிரவு விசாகப்பட்டினத்தில் ராஜிவ் காந்தியை ஏற்றிச் சென்ற தொடரணியில் இந்த நடைமுறை காற்றில் விடப்பட்டது.

சடுதியாக ஒரு திசைதிருப்பல்

ராஜிவ் காந்தி தனது வாகனத்தை விமான நிலையத்தை நோக்கித் திருப்புமாறு கூறியதும் அவரது வாகனம் திசை மாறி விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையில் ஓடத் தொடங்கியது. அவரது வாகனத்துக்கு பின்னால் வந்த மற்றய வாகனங்களும் இந்த வாகனத்தைப் பார்த்துப் பின்தொடர்ந்தன.

ஆனால்…

வாகனத் தொடரணியில் ராஜிவ் காந்தியின் வாகனத்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு இந்தத் திசை திருப்பல் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. விளைவு? முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் சுற்றுலா விடுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. அந்த வாகனங்களில் ஒன்றில்தான் ராஜிவ் காந்தியின் மெய்ப்பாதுகாப்பு அதிகாரி சாகர் தனது துப்பாக்கியுடன் சென்றுகொண்டிருந்தார்.

அடுத்த விஷயம் என்னவென்றால் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் சுற்றுலா விடுதியை அடைந்து நிறுத்தும்வரை தமக்குப் பின்னால் மிகுதி வாகனங்கள் (தாம் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருந்த ராஜிவ் காந்தியின் வாகனம் உட்பட) தம்மைப் பின்தொடரவில்லை என்பதே தெரிந்திருக்கவில்லை!

ராஜிவ் காந்தி கடைசியாக விமானமேறிய
விசாகப்பட்டினம் விமான நிலையம்

விமான நிலையத்துக்கு ராஜிவ்காந்தி திரும்பி வந்து பழுதுபார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி அமர்ந்தபோதுதான் அவருடன் பயணிக்க வேண்டிய மெய்ப்பாதுகாவல் அதிகாரி சாகர் அங்கே இல்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர் சுற்றுலா விடுதிவரை சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருக்கும் விஷயமும் தெரிய வந்தது.

சாகர் விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார் என்ற விஷயம் தெரிந்திருந்தும் ராஜிவ் காந்தியை ஏற்றிக்கொண்டு சென்னைக்குப் பறக்கத் தயாராக இருந்த விமானம் அவருக்காகக் காத்திருக்கவில்லை!

மெய்ப்பாதுகாவலர் அதிகாரி இல்லாமலேயே ராஜிவ் காந்தி சென்னையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். சென்னை விமான நிலையத்தில் புதியதொரு மெய்ப்பாதுகாவல் அதிகாரி ராஜிவ் காந்தியின் வருகைக்காகக் காத்திருந்த போதிலும் அந்த அதிகாரி ராஜிவ் காந்தியின் பாதுகாப்புக்காகத் தன்னுடன் கொண்டு செல்லவேண்டிய கைத் துப்பாக்கி சாகருடன் விசாகப்பட்டினத்திலேயே தங்கிவிட்டது.

இந்த முக்கிய பாதுகாப்புக் குளறுபடியை ஏன் புலன்விசாரணையின்போது கூட யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை? இது சாதராணமாக நடைபெற்ற தவறா அல்லது இதன் பின்னால் யாரோ திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தார்களா? துப்பாக்கியுடன் கூடிய தனிப் பாதுகாப்பு இல்லாமல் ராஜிவ் காந்தி அன்றிரவு சென்னையில் நடமாடவேண்டும் என்று யாரோ திட்டமிட்டுச் செயற்படுத்திய சதியா இது? இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரை தெளிவான பதில் இல்லை!

இதுதான் தனது கடைசி விமானப்பயணமாக இருக்கப்போகின்றது என்று கற்பனைகூடச் செய்திராத ராஜிவ் காந்தியை ஏற்றிக்கொண்டு கிளம்பிய அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இரவு 8.20க்கு தரையிறங்கியது.
(2ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)



விறுவிறுப்பு.கொம் 

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us