ஈழம்

ஈழம்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-07

அத்தியாயம்-07


கார்த்திகேயன் காட்சிக்குள் வருகிறார்...

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திதான் என்பது உறுதிப் படுத்தப்பட்டு 12 மணி நேரமாகியும், கொலையை புலனாய்வு செய்யப்போவது யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. இந்தக் கட்டத்தில், கொலை எப்படி நடந்தது என்பதும் தெரியாது. கொலை செய்தது யார் என்பதும் தெரியாது. “குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்” என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் தெரியாது.

கொலை பற்றிய புலனாய்வு நடவடிக்கைகளை மத்திய அரசே செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொண்டது, தமிழக அரசு. அப்போது தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கவில்லை. தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி நடைபெற்றது.

கொல்லப்பட்ட ராஜிவ் காந்தி, இந்தியாவின் முன்னாள் பிரதமர். காங்கிரஸ் கட்சியின் தலைவர். சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் நடக்கவிருந்த தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றினால், மீண்டும் பிரதமராகும் வாய்ப்பைக் கொண்டிருந்தவர். (காங்கிரஸ் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று கிட்டத்தட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் கூறியிருந்தன)

இதனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம், நாட்டின் மிக முக்கியமான குற்றவியல் நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகளை, நாடு முழுவதுமே கூர்ந்து கவனிக்கும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதனால், யாருடைய கையில் புலனாய்வை ஒப்படைப்பது என்ற விவாதம் மத்திய அரசு அதிகார மட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.

மே மாதம் 22ம் தேதி, காலை 11 மணி.

ஆந்திர மாநிலம், ஹைதராபாத் நகரில் இருந்த ஒரு இல்லத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை மேற்கொண்டார், மத்திய பாதுகாப்புப் படையின் அன்றைய இயக்குநர் ஜெனரல் கே.பி.எஸ்.கில். அப்போது, கொலை நடைபெற்று கிட்டத்தட்ட 12 மணி நேரமாகியிருந்தது.

தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்ட இல்லம், தென்னக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் (ஐ.ஜி.) குவாட்டர்ஸ். அந்த இல்லத்தில் வசித்தவர், டி.ஆர். கார்த்திகேயன். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தமிழர். தென்னக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமையகம் ஹைதராபாத்தில்தான் அப்போது இருந்ததால், அதன் ஐ.ஜி. கார்த்திகேயனும் ஹைதராபாத்தில் வசிக்க வேண்டியிருந்தது.

மத்திய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரலின் அழைப்பு வரும் முன்னரே, ராஜிவ் காந்தி தமிழகத்தில் வைத்துக் கொல்லப்பட்ட சேதி, பத்திரிகைகள் வாயிலாக கார்த்திகேயனுக்குத் தெரிந்திருந்தது.

இதனால், அவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்தைப் புலனாய்வு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், புலனாய்வுக்காக, சி.பி.ஐ.யின் ஒரு பகுதியாக சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட் உள்ளதாகத் தெரிவித்தார்.

“சிறப்புப் புலனாய்வுக்கு குழுவுக்கு உங்களையே தலைவராக நியமிக்க சி.பி.ஐ. விரும்புகிறது. உங்களுக்குச் சம்மதமா?” என்று கேட்டார்.

தயங்கிய கார்த்திகேயன், இது பற்றி யோசிக்க அவகாசம் கேட்டார். அத்துடன் அந்த தொலைபேசி உரையாடல் முடிவுக்கு வந்தது. அடுத்த சில நிமிடங்களில் கார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்தவர் சி.பி.ஐ.யின் அன்றைய இயக்குநர் விஜய் கரன். அவரும், இதையே வலியுறுத்தினார்.

“மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகிய இரு தலைவர்களும் கொல்லப்பட்டபோது, கொலையாளிகள் சம்பவ இடத்திலேயே கைது பிடிபட்டனர். இதனால், சாட்சியங்கள் திரட்டுவதும் புலனாய்வு மேற்கொள்வதும் சற்று எளிதாகவே இருந்தது. ஆனால், ராஜிவ் காந்தி கொலை அந்த மாதிரியானதல்ல. கொலையாளிகள் யார் என்ற அடையாளமே தெரியவில்லை” என்று, கார்த்திகேயனிடம் தெரிவித்திருந்தார்.

இந்த உரையாடலின்போது ஒரு முக்கிய விஷயத்தையும் தெரிவித்தார், சி.பி.ஐ.யின் அன்றைய இயக்குநர் விஜய் கரன். “ராஜிவ் காந்தியைக் கொலை செய்தது யார் என்பதையோ, அதில் ஏதாவது அமைப்புக்கு சம்மந்தம் உள்ளதா என்பதையோ பற்றிய ஊகங்களைக் கூட, நமது உளவு அமைப்புகளால் தர முடியவில்லை” என்பதே அந்த முக்கிய விஷயம்.

ஆனால் அதே தினத்தில், அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த சுப்ரமணியம் சுவாமி, “விடுதலைப் புலிகள் அமைப்பால்தான் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்” என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்! அதைவது, இந்திய உளவு அமைப்புகளால் ஊகம்கூட செய்ய முடியாத ஒரு விஷயம், சுப்ரமணியம் சுவாமிக்குத் தெரிந்திருந்தது!

இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் சம்மதித்தார் டி.ஆர். கார்த்திகேயன்.

மறுநாளே, ஹைதராபாத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்ட கார்த்திகேயன், மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் போய் இறங்கினார். (சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்ட முறையான அறிவிப்பு இந்திய அரசாங்கத்திடமிருந்து மே 24ம் தேதிதான் வெளியானது. அதற்கு ஒரு தினம் முன்னரே சென்னை சென்று விட்டார் அவர்)

இது நடைபெற்ற காலப்பகுதியில், தமிழக காவல்துறையின் தலைவராக இருந்தவர் பி.பி. ரங்கசாமி. ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒட்டுமொத்தப் பொறுப்பு அதிகாரியான (ஐ.ஜி.) இருந்தவர், ஆர்.கே. ராகவன். இவர்கள் இருவரும், காவல்துறை தடய அறிவியல் நிபுணர்களுடன் சேர்ந்து, குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் சில தடயங்களை ஏற்கனவே சேகரித்திருந்தனர்.

சென்னையில், சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிரதான அலுவலகமாகச் செயற்பட, தமிழக அரசு, ‘மல்லிகை’ என்ற அரசு மாளிகையை ஒதுக்கிக் கொடுத்தது.

‘மல்லிகை’ நீண்ட காலமாகப் பூட்டிக் கிடந்ததால் மோசமான நிலையில் இருந்தது. அலுவலகத்திற்காகவோ, குடியிருப்பதற்காகவோ இந்தக் கட்டடத்தை எவரும் விரும்பாத காரணத்தாலேயே அப்படி இருந்தது. காரணம், அதற்கு முன் அங்கு குடியிருந்தவர்கள், ராசியில்லாத கட்டடம் என்று அதை ஒதுக்கி விட்டிருந்தனர்.

ராசியில்லாத ‘மல்லிகையில்’ இருந்தே இயங்கத் தொடங்கியது, ராஜிவ் காந்தி கொலையைத் துப்பறிய நியமிக்கப்பட்ட, சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக்குழு.

இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்படுவதற்கு முன், தமிழக தடய அறிவியல் சோதனைக் கூடத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ராஜிவ் காந்தி கொலை நடந்த இடத்தை அலசியிருந்தனர். அந்த நாட்களில் தமிழக தடய அறிவியல் துறையின் இயக்குநராக இருந்தவர் பேராசிரியர் டாக்டர் பி. சந்திரசேகர்.

கொலை நடைபெற்ற இடத்தில் கிடைத்த முதல் நிலைத் தடயங்களைக் கைப்பற்றியிருந்த அவர்கள், அவற்றை ஆராய்ந்து ஒரு பிரீலிமினரி ரிப்போர்ட்டைத் தயாரித்திருந்தனர். இந்த ரிப்போர்ட், சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் கொடுக்கப்பட்டது. அதுதான், ராஜிவ் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவின் கைகளில் கிடைத்த முதலாவது ஆவணம்.

இந்த ஆவணத்தில், முக்கியமாக இருந்தவை, ராஜிவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றிய இவர்களது ஆய்வுகள். அந்த ரிப்போர்ட் என்ன சொன்னது?

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு, அவரது உடல் வீழ்ந்து கிடந்த இடத்துக்கு அருகே, கந்தலாகிப் போன நீல நிறத் துணி ஒன்று காணப்பட்டது. அந்தத் துணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதன் காரணம், குறிப்பிட்ட நீலத் துணியுடன் மின் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததை தடய அறிவியல் நிபுணர்கள் அவதானித்தனர்.

இந்த நீல நிறத் துணி லேப்புக்கு கொண்டு செல்லப்பட்டு ஆராயப்பட்டது. அப்போது, அது ஒரு துணி பீஸ் அல்ல என்பது தெரியவந்தது. வெளிப்பார்வைக்கு ஒரே துணிப் பகுதி போலத் தெரிந்த அது, 3 அடுக்குகளாக, ஒரு வெள்ளைத் துணி, அதற்கு மேல் 2 நீல நிறத்துணிகள் என்று, ஒரு ‘துணி பெல்ட்’ போல தைக்கப்பட்டிருந்தது.

துணி பெல்ட்டை ஒட்டுவதற்காக டேப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மின் ஒயர்கள் துணிக்குள் மறைந்து இருக்கும் படியாக தைக்கப்பட்டிருந்தன. துணி பெல்ட்டுடன், பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத் துணித் துண்டுகளும், ப்ராவின் ஒரு பகுதியும் ஒட்டிய நிலையில் காணப்பட்டன. அத்துடன், துணியுடன் மனிதச் சதைத் துண்டும் காணப்பட்டது.

அங்கே கிடைத்த துணித் துண்டுகளை ஒன்றிணைத்துப் பார்த்தபோது, இடுப்பு பெல்டுடன் கூடிய ‘வெஸ்ட் ஜாக்கெட்’ என்பது தெரியவந்தது.

இவ்வளவு விபரங்களும் கிடைத்ததில் இருந்து, வெடித்த குண்டு, ஒரு பெண்ணின் உடலில் இணைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்திருந்தது. அந்தப் பெண் கொல்லப்பட்ட நேரத்தில், பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான ஆடை அணிந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் வரக்கூடியதாக இருந்தது.

சம்பவ இடத்தில் உயிரிழந்த 15 பேரில், ஒரு பெண்ணின் உடல் மாத்திரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அவரது உடல் பகுதி கிட்டத்தட்ட முழுமையாக சிதறி விட்டிருந்தது. வலது கை குண்டுவெடிப்பில் துண்டு துண்டாகப் பிரிந்து சற்றுத் தொலைவில் கிடந்தது. பிரிந்து கிடந்த உடல் உறுப்புகளில் ‘சிறு குண்டுகள்’ பாய்ந்த ஓட்டைகளும், தீயில் கருகிய அடையாளங்களும் காணப்பட்டன.

சிதறிக்கிடந்த உடல் உறுப்புகள் மீது ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத் துணித் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருந்தன.

சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளும், 9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரியின் சில பகுதிகளும், எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களுக்கான வெள்ளை நிற ஒயர்களும், 2 ஸ்விட்சுகளும் கிடைத்தன.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உடல்களிலில் இருந்து நூற்றுக்கணக்கான சிறு குண்டுகள் எடுக்கப்பட்டன. சிதைந்து கிடந்த உடல் உறுப்புகள் ரசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. உடல் உறுப்புக்களில் கிடைத்திருந்த சிறு குண்டுகளும் சோதனை செய்யப்பட்டன.

இந்தச் சோதனைகளின் முடிவில், ராஜிவ் காந்தியைக் கொல்வதற்காக வெடிக்க வைக்கப்பட்டது மிக வீரியமான பிளாஸ்டிக் வெடிகுண்டு என்பதும், அதில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருள் ஆர்.டி.எக்ஸ். என்பதும் தெரியவந்தது.

ஆர்.டி.எக்ஸ்., பொதுவாக ராணுவ ரீதியான பாவனைக்கு உபயோகிக்கப்படுவது. தமிழகம் போன்ற இடத்தில் சுலபமாகக் கிடைக்காத பொருள் அது. அதைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிப்பதற்கு, திறமையும், பயிற்சியும் தேவை.

கிடைத்த விபரங்களில் இருந்து, வெடிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டு எந்த வகையில் செட் செய்யப்பட்டிருந்தது என்பதை, முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்திருந்தது. அதன் மெக்கானிசம், தடயவியல் நிபுணர்களை திகைக்க வைத்தது.

சுமார் அரை கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். அடங்கிய வெடிகுண்டு, இடுப்பு பெல்ட்டில் மறைத்து வைக்கப்பட்டு, வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் பத்தாயிரம் சிறு குண்டுகள் கலக்கப்பட்டிருந்தன. சிறு குண்டுகள் ஒவ்வொன்றும் ஒரேயளவாக, 0.2 மில்லி மீற்றர் விட்டம் கொண்டவையாக இருந்துள்ளன. வெடிகுண்டுடன் இணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் டெட்டனேட்டருடன், 9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரி, 2 சுவிட்சுகளுடன் இணைக்கப்பட்டிருந்தன.

ஒரு சுவிட்சை அழுத்தியதும் பலத்த ஓசை, தீப்பிளம்புடன் குண்டு வெடிக்கும். அத்துடன் பத்தாயிரம் சிறு குண்டுகளும் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்து, எதிரில் இருப்போரின் உடல் பூராவும் ஊடுருவிவிடும். ஒரே இடத்தில் தாக்காமல், இருதயம், நுரையீரல், மூளை என்று மனித உடலின் முக்கிய பாகங்கள் அனைத்திலும் சிறு குண்டுகள் வேகமாகத் துளைத்துச் செல்லதால், உடனடி மரணம் சம்பவிக்கும்.

இந்த ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டை, ஒரு பெண் தனது உடையில் மறைத்து வந்து எளிதாக இயக்கியுள்ளார்.
ராஜிவ் காந்திக்கு முன்னே வந்த அந்தப் பெண், ராஜிவ் நின்றிருந்த இடத்தில் இருந்து, நேருக்கு நேராக தன்னை நிறுத்திக் கொண்டதை முதலில் உறுதி செய்து கொண்டிருக்க வேண்டும்.  அதன்பின், வெடிகுண்டை இயக்குவதற்கான சுவிட்சை அவர் அழுத்தியிருக்க வேண்டும்.

நேருக்கு நேராக நின்று இயக்கப்பட்டதால், அந்தக் குண்டு ராஜிவ் காந்தியின் முகத்திலும், நெஞ்சுப் பகுதியிலும் வெடிக்கும் வகையில் இருந்துள்ளது. ராஜிவ் காந்தியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் சிசிலியா சிரில், அவரது உடலில் 22 காயங்கள் காணப்பட்டதாகக் கூறியுள்ளார்.

ராஜிவ் காந்தியின் போஸ்ட்மோர்ட்டம் ரிப்போர்ட் கூறுவது என்ன என்பது, அடுத்த பராவில் தரப்பட்டுள்ளது. சென்சிட்டிவ்வான வாசகர்கள், அதைப் படிப்பதைத் தவிர்க்கவும்.

ராஜிவ் காந்தியின் மண்டை ஓடு வெடித்து, உட்பகுதி பாதுகாப்பற்ற நிலைக்கு சென்றிருந்தது. மூளைப்பகுதி, முகத்தின் தசைகள், உதடு, மூக்கு, இரு கண்கள் ஆகியவை சேதமடைந்திருந்தன. தாடை எலும்புகள் நொறுங்கியிருந்தன. கருகிப்போன மார்பில் பல இடங்களில் ஆழமான காயங்கள் காணப்பட்டன. அடிவயிற்றில் குறுக்கும் நெடுக்குமாகக் கண்டபடி கீறல்கள் இருந்தன. ஈரலும், வயிற்றின் உட்பகுதிகளும் அப்படியே வெளியே வந்துவிட்டன. இடது புற நுரையீரலைக் காணவில்லை. வலது கைப் பெருவிரலும், ஆள்காட்டி விரலும் சிதைந்திருந்தன. உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடல் முழுவதும் சிறு குண்டுகள் பாய்ந்திருந்தன.

(8ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)







நன்றி
விறுவிறுப்பு.கொம்


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us