அத்தியாயம் 04
வெடிகுண்டுடன் கூட்டத்துக்கு வந்திருந்த ஐவர் அணி!
சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட லதா கண்ணன், பொலிசாரின் அனுமதிபெற்ற மற்றையவர்களோடு சேர்ந்து கொள்ளச் சென்றார். அந்தப் பகுதியை நோக்கி அவர் நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து கனத்த கண்ணாடியுடன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சல்வார் கமீஸ் அணிந்து, சந்தன மாலையுடன் ஒரு பெண்ணும் கூடவே சென்றார்.
இந்தப் பெண்ணை கூட்டத்துக்கு வந்திருந்த பலர் கவனித்திருந்தனர். சில நொடிகளுக்கு முன்தான் லதா கண்ணனுடன் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தார். அவருடன் ஹரிபாபு என்ற புகைப்படக்காரரும் காணப்பட்டார். ஹரிபாபு என்ற பெயர் அங்கிருந்த சிலருக்குத் தெரிந்திருந்தது. காரணம், அங்கிருந்த பல பத்திரிகையாளர்களுக்கும் புகைப்படக்காரர்களுக்கும் அறிமுகமான நபர் அவர்.
இவர்களுடன் சேலை அணிந்த இரு பெண்களும், வெள்ளை குர்தா பைஜாமா அணிந்து முகத்தில் தடித்த கண்ணாடி அணிந்த ஆண் ஒருவரும் காணப்பட்டனர்.
இவர்களுக்கும் லதா கண்ணனுக்குமிடையே எப்படிப் பரிச்சயம்? அதைத் தெரிந்துகொள்ள சில நிமிடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.
தாஸிடம் அனுமதி பெறுவதற்காக லதா கண்ணன் காத்திருந்தார் அல்லவா? அப்போதுதான் இந்த ஐவர் அணி அவரை அணுகியது. அங்கு கூடியிருந்த கட்சிப் பிரமுகர்களிடையே மிக எளிதாக லதா கண்ணன் நடமாடுவதை அவர்களால் காண முடிந்தது.
லதா கண்ணனுக்கு லோக்கல் காங்கிரஸ் ஆட்களிடையே செல்வாக்கு இருப்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
அதைத் தெரிந்துகொண்டபின், சேலை அணிந்த இரு பெண்களில் ஒருவர் லதா கண்ணனை முதலில் அணுகினார். “என்னுடன் வந்துள்ள நண்பர் ஒருவர், ராஜிவ்காந்திக்கு மாலை அணிவிக்க விரும்புகிறார். நீங்கள்தான் அதற்கு அனுமதி பெற்றுத் தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இவர் நண்பர் என்று குறிப்பிட்டது, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத்தான்.
“சரி. உங்க நண்பரை எனக்கருகே நிற்கச் சொல்லுங்க. நான் ட்ரை பண்ணுகிறேன்” என்றார் லதா கண்ணன்.
இந்த கண்ணாடி அணிந்த பெண் நண்பரின் உடலில்தான் வெடிகுண்டு இருந்த விஷயம் லதா கண்ணனுக்குத் தெரிந்திருக்கவில்லை!
லதா கண்ணனும், கோகிலாவும் சற்று தொலைவில் மற்றவர்களுடன் காத்திருந்தபோது கண்ணாடி அணிந்த பெண்ணும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். அவருடன் வந்த மற்ற இரு பெண்களும், இந்தப் பெண்ணருகே நிற்காமல் விலகிக் கொண்டனர். அந்த இரு பெண்களும், அங்கிருந்து விலகி, மேடையருகே சென்றனர். அங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டனர்.
இவர்களுடன் வந்திருந்த புகைப்படக்காரர் ஹரிபாபு, தனது கமெராவை எடுத்தார். பொதுக்கூட்ட நிகழ்ச்சியைப் படம் எடுப்பதற்காக வேறொருவரிடமிருந்து இரவல் வாங்கி வந்திருந்த ‘சினான்’ காமெரா அது.
இந்தக் கட்டத்தில், ஹரிபாபு தனது கமெராவை இயக்கி, முதல் போட்டோவை எடுத்தார்.
இந்த நேரத்தில், வெள்ளை குர்தா பைஜாமா அணிந்த ஆண், சற்றுத் தள்ளி நின்றுகொண்டார். அவரது கையில் சிறிய நோட்டும் பேனாவும் வைத்திருந்தார். பார்ப்பதற்கு இவரும் அங்கு வந்திருந்த மற்றய பத்திரிகை நிருபர்களில் ஒருவரைப் போலவே காணப்பட்டார்.
ஹரிபாபு, பெண்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கிப் படம் எடுத்தார். அவருக்கு அறிமுகமான, சேலை அணிந்த இரு பெண்களையும் போட்டோ எடுத்தார். அவர்கள் அணிந்திருந்த சேலைகளின் கலரால் அடையாளம் காணும் வகையில், பெண்கள் பகுதியில் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தனர்.
இந்த ஐந்து பேர் அணி துல்லியமான திட்டத்துடனே வந்திருந்தனர். அவர்களது திட்டப்படி, வெவ்வேறாகப் பிரிந்து, வெவ்வேறு இடங்களில் பொசிஷன் எடுத்திருந்தனர்.
வெடிகுண்டை உடலில் அணிந்திருந்த பெண் மேடைக்கு அருகே, ராஜிவ் காந்தி நடந்து வரப்போகும் பாதையருகே நின்றிருந்தார். மற்றைய மூவர், அந்தப் பெண்ணிடமுள்ள வெடிகுண்டு வெடித்தால், அதனால் பாதிப்பு ஏற்படாத அளவான தூரத்தில் நின்று கொண்டனர். போட்டோகிராபர் ஹரிபாபு மாத்திரம் இங்கும் அங்கும் நகர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.
இவர்கள் இப்படி பொசிஷன் எடுத்து நின்றுகொண்டதை, கூட்டத்திலிருந்த யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை…
கூட்டத்தில் கலந்திருந்த உளவுப் பிரிவினர் உட்பட!
இப்போது, ராஜிவ் காந்தி மேடைக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில் நின்றிருந்தார். அவரைச் சுற்றி, மற்றைய பெண் பொலிசார் நின்றிருந்தனர். இவர்கள் நின்றிருந்த இடத்துக்கு அருகே கூட்டம் நிரம்பி வழிந்தது.
கட்சித் தொண்டர்கள் கடைசி முயற்சியாக தாஸிடம் கெஞ்சிக்கொண்டிருந்தனர். தங்களையும் ராஜிவ் காந்தி அருகில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஆளாளுக்கு தாஸை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
தாஸால் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டவர்கள், மேடைக்கு அருகில் கும்பலாக நின்றிருந்தனர். அனுமதிக்கப்பட்டோர் பட்டியலை வைத்திருந்த பொலிசார், ஒரு சிலரை மட்டுமே வெடிகுண்டு டிடெக்டர் கருவியால் சோதனை செய்தனர். அதுவும் ஆண்களை மாத்திரமே!
கூட்டம் நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக, அனுமதி அளிக்கப்படாத நபர்களும் சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில் நிற்பது தெளிவாகத் தெரிந்தது.
அனுமதி அளிக்கப்படாத நபர்களை அங்கிருந்து அகற்ற வேண்டியது கூட்ட அமைப்பாளரின் (தாஸின்) பொறுப்பு என பொலிசார் கருதினர். ஆனால், கட்சி விவகாரங்களில் மூழ்கியிருந்த தாஸ், அனுமதிக்கப்பட வேண்டியோர் பட்டியலை பொலிசாரிடம் கொடுத்துவிட்டதோடு தனது வேலை முடிந்துவிட்டது என்று நினைத்தார்.
பட்டியலில் இல்லாதவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டியது பொலிசாரின் பொறுப்பு என்றும் நினைத்திருந்தார் அவர்.
இப்படியான இழுபறி நேரத்தில்தான், அந்த இடத்துக்கு ராஜிவ் காந்தி வந்து இறங்கினார். மேடை இருந்த திசையை நோக்கி நடந்து வரத் தொடங்கினார்.
ராஜிவ்காந்தி வந்துவிட்டார் என்றதும் இசைநிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
“ராஜிவ்காந்திக்கு அருகே செல்ல பர்மிஷன் எடுத்தவங்க, இந்தப் பக்கமா வாங்க. மேடைக்கு அருகே சிவப்புக் கார்ப்பெட் பகுதியில் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்து நில்லுங்க” என்று தாஸ் சத்தமாக அறிவித்தார். ஆனால் அவரது குரலையும் மீறி, அந்த இடத்தில் ஒரே இரைச்சலாக இருந்தது.
மேடை இருந்த பகுதியருகே குழப்பமாக இருந்தது. இதனால், அனுமதி பெறாதவர்களும் ராஜிவ் காந்தியை நெருக்கமாகப் பார்க்க நினைத்து, அப்பகுதியை நோக்கி நெருக்கியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.
அவர்களைத் தடுப்பதற்கு அங்கிருந்த சொற்ப எண்ணிக்கையிலான போலீஸ், ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.
சற்று தொலைவில் ராஜிவ் காந்தி தெரிவதை, மேடைப் பகுதியில் இருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது. அவர் மேடையை நோக்கி நடந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.
(5ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)
நன்றி
விறுவிறுப்பு.கொம்
விறுவிறுப்பு.கொம்