ஈழம்

ஈழம்

திங்கள், 27 ஜூன், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம் 03

அத்தியாயம் 03


தாஸின் கையிலிருந்த பட்டியலில், கோகிலாவின் பெயர்!

பொதுக்கூட்ட மேடைக்கு முன்னால் இருந்த சிவப்புக் கம்பள விரிப்பின் இருபுறமும் சவுக்குக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் அரசியல் கூட்டங்களில் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சிதான். வி.ஐ.பி.களை பொதுமக்கள் நெருங்காதபடி அமைக்கப்படும் தடுப்பு அது.

சிவப்புக் கம்பள விரிப்பில் ராஜிவ் காந்தி நடந்து வரும்போது, அவரை நெருக்கத்தில் காண்பதற்கு தடுப்பு வேலிக்கு அப்பால் பொதுமக்கள் பலர், இடிபட்டுக் கொண்டு நின்றிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சி மிக்க தலைவராக ராஜிவ் காந்திதான் அப்போது இருந்தார்.

தடுப்பு வேலிக்கு உள்ளே, மேடையின்  கீழ் சிவப்புக் கம்பளம் விரித்திருந்த பகுதியில், குறிப்பிட்ட கட்சிப் பிரமுகர்கள் சிலர் ராஜிவ் காந்தியை வரவேற்க நின்றுகொண்டிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டும் அவருக்கு மாலை அணிவிக்க முடியும் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது..

அதன்பின், பொதுக்கூட்டம் தொடங்குவதாக இருந்தது.

ராஜிவ் காந்தி, இன்னமும் சிறிது நேரத்தில்...
அங்கிருந்த நிலைமையைப் பார்த்தால், கூட்டம் முடிய நீண்ட நேரம் ஆகும்போலத் தோன்றியது. கூட்டம் இன்னும் தொடங்கவில்லை. ராஜிவ் காந்தி இன்னமும் மேடைக்கு வந்து சேரவில்லை.

மேடையிலிருந்த சில அடி தொலைவில் நின்றிருந்த தாஸ், கூட்ட ஏற்பாடுகளை மும்முரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். இந்த தாஸ் யாரென்பதைக் கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.

தாஸ் லோக்கல் ஆள். அந்த ஏரியா காங்கிரஸ்காரர்களை நன்கு அறிந்தவர். கடும் பாதுகாப்புக்குரிய, தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், அவரருகே யாரெல்லாம் வரலாம் என்பதை உள்ளூர் பிரமுகர்களின் யோசனைப்படிதான், பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிப்பது வழக்கம்.

இதனால், ராஜிவ் காந்தியை நெருங்கி மாலை அணிவிக்க வேண்டிய ஆட்களை ஸ்கிரீன் பண்ணும் வேலையை அவரிடம் ஒப்படைத்திருந்தது போலீஸ்.

தாஸ்தான், அன்றிரவு  ராஜிவ் காந்தியை வரவேற்கவுள்ளோர் பட்டியலைப் பார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது. சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில், கையில் பட்டியலுடன் நின்று கொண்டிருந்தார் அவர்.

தாஸ் கிளியர் பண்ணினாலும், ராஜிவ் காந்தியை நெருங்கிவிட முடியாது. தாஸ் ஒப்புதல் அளித்த, பிரமுகர்களின் பட்டியலை போலீஸ் டபுள்-செக் பண்ண வேண்டும். அதன்பின் அவர்களைச் சோதனையிட்ட பின்னரே, ராஜிவ் காந்தியை நெருங்க அனுமதிக்கப்படுவர்.

பட்டியலில் உள்ளவர்களைச் சோதனையிட்டு, ராஜிவ்காந்திக்கு அருகில் அனுமதிக்கும் பொறுப்பு, ஒரு சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

பொதுக்கூட்டப் பகுதியின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றிருந்தவர், இந்திய பொலிஸ் சர்வீசில் அனுபவம் வாய்ந்த ஆர்.கே. ராகவன். இது நடைபெற்ற காலத்தில் அவர், தமிழக பொலிஸ் துறையின் ஐ.ஜி.யாக இருந்தார்.

ஸ்ரீபெரும்புதூருக்கும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் ராஜிவ்காந்தி மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரப் பயணத் திட்டம், தமிழக போலீஸ் துறைக்கு மே 17 ம் தேதிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, தமிழ்நாடு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியிருந்தது. தமிழ்நாடு உளவுப்பிரிவும் விரிவான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியிருந்தனர்.

மே 20ம் தேதி, கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ராஜிவ்காந்தி அருகே பிரமுகர்களை அனுமதிக்கும் பணி ஒப்படைக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு உதவியாக, வெடிகுண்டுச் சோதனைக் கருவிகளுடன் (மெட்டல் டிடெக்டர்)  இரு போலீஸார் நிறுத்தப்பட வேண்டும் என்றும் முடிவாகியது.

சுருக்கமாகச் சொன்னால், பலத்த முன்னேற்பாடுகளின் பின்னரே அன்றிரவு பொதுக்கூட்டம் நடைபெறவிருந்தது. பொதுக்கூட்டப் பாதுகாப்புப் பணியில் 300க்கும் மேற்பட்ட பொலிசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா.

அவரும், பெண் பொலிசார் ஒருவரும் சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியைக் கண்காணிக்க நிறுத்தப்பட்டிருந்தனர். ஆண் பொலிசார், பெண்களைச் சோதனையிடுவதில்லை. எனவே, பெண்கள் கூட்டத்தைச் சோதனையிடும் பொறுப்பு இரு பெண் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அனுசுயாவிடம், ராஜிவ் காந்தியைக்கு அருகே செல்லவுள்ள பெண்களின் உடலைத் தொட்டுச் சோதனையிட வேண்டும் என்று, தெரிவிக்கப்படவில்லை. உடலைத் தொடாமல் சோதனையிட, இவர்களுக்கு  மெட்டல் டிடெக்டர் கருவிகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை!

ஒட்டுமொத்த பாதுகாப்புக்குப் பொறுப்பான பொலிஸ் ஐ.ஜி. ராகவன்,மேடையருகே நின்றிருந்தார். நின்ற இடத்திலிருந்தே அவர், சுற்றிலும் தனது பார்வையைச் செலுத்திக்கொண்டிருந்தார். அவரது முகத்தில் அதிருப்தி தெரிந்தது. மற்ற பொலிஸ் அதிகாரிகளும் திருப்தியாக இல்லை.

காரணம், இவர்கள் எதிர்பார்த்த விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை.

போலீஸ் கூறிய விதத்தில், சவுக்குக்கட்டை தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கவில்லை. ராஜிவ் காந்தி நடந்துவரும் இடத்துக்கு மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தது தடுப்பு வேலி. போலீஸ் தரப்பிலிருந்து ஏதேனும் யோசனை சொன்னாலும், அதைக்கேட்கும் மனநிலையில் அன்றிரவு, கட்சித் தொண்டர்கள் இல்லை.

ஒரு பக்கம் இசை மழை, மறுபக்கம் ஒளிவெள்ளம். இவற்றுக்கிடையே மேடையருகே நின்றிருந்த தாஸிடம் தங்களை ராஜிவ்காந்திக்கு அருகே அனுமதிக்குமாறு ஏராளமான பிரமுகர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தாஸை நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஏரியா காங்கிரஸ்காரர்கள் தாஸிடம், தங்களது பெயர்களையும் பட்டியலில் சேர்க்குமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு வேண்டுகோள் விடுத்தவர்களில் ஒருவர், லதா கண்ணன்.

லதா கண்ணன், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரல்ல. அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட லதா பிரியகுமாருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துவந்த கட்சித் தொண்டர் இவர்.

பொதுக்கூட்டத்துக்கு லதா கண்ணனுடன், அவரது மகள் கோகிலாவும் வந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் லதா கண்ணன். மே மாதத் தொடக்கத்தில் லதா கண்ணன் தனது தந்தையால் தமிழில் எழுதப்பட்டு, மகள் கோகிலாவால் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த ஒரு கவிதையை ராஜிவ்காந்திக்கு அனுப்பி வைத்திருந்தார். அதற்கு ராஜிவ் காந்தியிடமிருந்து பதில் ஏதும் வந்திருக்கவில்லை.

பின்னாட்களில் லதா பிரியகுமார்

இப்போது ராஜிவ் காந்தி நேரில் வருவதால், அந்தக் கவிதையை ராஜிவ்காந்திக்கு கோகிலா வாசித்துக்காட்ட வேண்டும் என விரும்பினார் லதா கண்ணன். ஆனால், இவருக்கு தாஸைத் தெரியாது.

ஏ.கே. தாஸிடம் தன்னையும் தனது மகளையும் அறிமுகப்படுத்தி, ராஜிவ்காந்தியை சந்திக்க அனுமதி பெற்றுத்தர யாராவது வர மாட்டார்களா எனக் காத்திருந்தார் அவர்.

லதா கண்ணன் யாருக்காகத் தேர்தல் பணியாற்றுகிறாரோ அந்த வேட்பாளர் லதா பிரியகுமார் அங்கு இரவு 9.15 மணிக்கு வந்து சேர்ந்தார்.

இதையடுத்து ராஜிவ்காந்தி முன் கவிதை வாசிப்பதற்கு கோகிலாவை அனுமதிக்குமாறு ஏ.கே. தாஸிடம் லதா பிரியகுமார் சிபாரிசு செய்தார். அதையடுத்து, லதா கண்ணனின் மகள் கோகிலாவின் பெயர், தாஸின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

ராஜிவ் காந்தியைக் கொன்றதாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டுதாரியான தனு, இந்தக் கோகிலாவின் அறிமுகத்துடனேயே ராஜிவ் காந்தியை இன்னும் சிறிது நேரத்தில் நெருங்கப் போகிறார்!


லதா கண்ணன், மற்றும் கோகிலா ஆகிய இருவரின் பெயர்களைப் பட்டியலில் சேர்த்தபின், லதா பிரியகுமார்,  மேடையிலிருந்து விலகி  இந்திராந்தி சிலை அமைந்திருந்த இடத்துக்குச் சென்றுவிட்டார். மேடையருகே அவர், அதன்பின் வரவில்லை.

ராஜிவ் காந்தி அன்றிரவு கொல்லப்பட்டபின், விசாரணைகளின்போது இந்த லதா பிரியகுமார் என்ற பெயர் அடிக்கடி அடிபட்டது. இவர் வேறுயாருமல்ல, மரகதம் சந்திரசேகரின் மகள்தான். மரகதம் சந்திரசேகரின் வற்புறுத்தல் காரணமாகவே அன்றிரவு பொதுக்கூட்டத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்குச் சம்மதித்திருந்தார்.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், கொலை விசாரணை நடைபெறத் தொடங்கியவுடனே இந்த இருவரது பெயர்களும் பரவலாக அடிபட்டன. மரகதம் சந்திரசேகர், 1991ல் எம்.பி.யானபின் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.(2001ல் இறந்துவிட்டார்)

அவரது மகள் லதா பிரியகுமார், ராஜிவ் கொலை விசாரணை நடைபெற்ற காலத்தில் அரசியலில் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்தார். அதன்பின் அவருக்கு, அடுத்த தேர்தலில் (1996) தனது தாயாரின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தத் தேர்தலில் லதா, தி.மு.க. வேட்பாளரான டி.நாகரத்னத்திடம் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வாக்குக்களால் தோல்வியடைந்தார்.

ராஜிவ் காந்தியின் கொலை விசாரணை முடிந்து வழக்கு நடைபெற்றபோது, தாய்-மகள் இருவரது பெயர்களும் சார்ஜ் ஷீட்கள் எதிலும் தென்படவில்லை.

கோகிலாவின் பெயருக்கு தாஸ் ஒப்புதல் அளித்ததும், போலீஸ் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெற்றது. போலீஸ் பட்டியலில் அவரது பெயர், ‘அனுமதிக்கப்பட்டவர்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தப்பட்டியலில் 23 பெயர்கள் இருந்தன. கோகிலாவை தவிர அனைவரும் ஆண்கள். அவர்களில் மூவர் மேடையில் ராஜிவ்காந்திக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள்  சிவப்புக் கம்பள விரிப்புப் பாதையில் ராஜிவ்காந்தி மேடைக்குச் செல்லும்போது அவரைச் சந்தித்து வணக்கம் செலுத்துவதற்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தனது முயற்சியில் வெற்றிபெற்ற லதா கண்ணன், பொலிசாரின் அனுமதிபெற்ற மற்றையவர்களோடு சேர்ந்து கொள்ளச் சென்றார். அந்தப் பகுதியை நோக்கி அவர் நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து கனத்த  கண்ணாடியுடன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சல்வார் கமீஸ் அணிந்து, சந்தன மாலையுடன் ஒரு பெண்ணும் கூடவே சென்றார்.

இந்தப் பெண்ணின் உடலில்தான் வெடிகுண்டு இருந்தது!

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us