ஈழம்

ஈழம்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கரும்புலி நிலவனின் ஒரு வரலாற்றுப் பதிவு.

மாதம் ஒரு முறை நடக்கும் துளசிராம் இலக்கிய வட்டத்திற்குச் சென்ற போது நிலவனைச் சந்தித்திருக்கிறேன். அவனை நான் பெரிது படுத்தியதில்லை. சக போராளி என்ற மதிப்பை மாத்திரம் கொடுத்தேன். அதற்கு மேல் என்னத்தைச் செய்ய முடியும்.
அவனுடைய வரலாறு சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்றேன்.  அதை  முழுமையானது என்று சொல்ல முடியாது. துண்டுகளாகச் சில செய்திகள் வாய்வழியாக கிடைத்தன. அவற்றைப் பொருத்தி எழுதுகிறேன். வரலாறு என்று தலைப்பிட்டாலும் துணுக்குகள் என்றால் மிகப் பொருத்தம்.

துளசிராம் மட்டக்களப்புப் போராளி. இலட்சியத்திற்காக உயிரீகம் செய்த மாவீரன். எழுத்தில் வல்லவனான இந்த மாவீரன் நினைவாக இந்த இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. அனேகமான சந்திப்புக்கள் உழவனூர் நவம் அறிவு கூடத்தில் நடக்கும்

விழுப்புண் அடைந்த மாற்றுத் திறனாளிகளாக மாற்றப்பட்ட போராளிகளுக்கான நவம் அறிவு கூடம் தெரிவு செய்யப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. நாங்கள் நடத்திய இலக்கிய அலசல்கள் அவர்களுக்கு தேவைப் பட்டது. எங்களிலும் கூடிய ஆர்வத்தை அவர்கள் காட்டினார்கள்.

நிலவன் கவிதைகள் புனைவான், எழுச்சிப் பாடல்களைப் பாடுவான் புத்தகங்கள் பற்றிப் பிறர் பேசுவதைக் கேட்டபின் விமர்சனக் கேள்விகளைக் கேட்பான். அவனிடம் சிறந்த அறிவு மண்டலம் இருந்தது. அவன் ஏன் மேற் படிப்பை நிறுத்திவிட்டு போராட்ட வாழ்வுக்கு வந்தான் என்று தெரியவில்லை.

ஆனையிறவுப் போரில் வீரச்சாவு அடைந்த பிறகு தான் அவன் கரும்புலி அணியைச் சேர்ந்தவன் என்பது வெளிச்சமாகியது. எங்கள் பார்வையில் மிகச் சாதாரணமானவன் மிக உயர்ந்த இடத்திற்குப் போய்விட்டான். கரும்புலிகள் இறந்த பிறகு தான் வெளிப்படுவார்கள். அதற்கு முன்பு அவர்களை இனங் காண முடியாது.

நிலவன் வேவுப் புலியாகவும் திறமையைக் காட்டியவன்.  மாங்குளம் இராணுவ கட்டுப்பாட்டுக் காட்டில் வேவு பார்க்கும் போது ஒரு சிங்களப் படையாளைச் சந்தித்தான். காட்டின் ஊடாக பத்து கிலோமீற்றர் தூரம் ஓடிச் சென்று திரும்பும்படி அந்தப் படையாளுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

அவன் செய்த ஏதோ குற்றத்திற்காக இந்த தண்டனையை அவன் ஓடி நிறைவேற்றினான். நிலவனும் அவனுக்குப் பேச்சுக் கொடுத்தபடி சேர்ந்து ஒடினான். எனக்கும் உன்னைப் போல் தண்டனை என்று சொல்லி நிலவன் அந்தப் படையாளுக்குச் சிரிப்பூட்டினான்.

அவனோடு சேர்ந்து ஒடிக்கொண்டு மாங்குளம் படை முகாமுக்குள் நுளைந்தான். முகாமுக்கு வழங்கல்களுடன் வந்த உலங்கு வானூர்தியைக் கண்ட நிலவன் அதைச் சுட்டு வீழ்த்தி விட்டுக் காட்டுக்குள் தப்பிச் சென்று மறைந்தான்.

ஆனையிறவுப் படை முகாம் வெற்றித் தாக்குதலுக்குத் தேவையான தரவுதிரட்டும் பணியை நிலவன் மேற்கொண்டான். முகாமுக்குள் நுளைந்து படையாட்களுடைய படுக்கையில் படுத்துறங்கி, அவர்களுடைய உணவைத் தின்று பிடிபடாமல் தரவுகளைத் திரட்டினான்.

இப்படிப் பல தீரமிகு பணிகளில் அவன் ஈடுபட்டதாக அரசல்  புரசலாகக் கதைகள் பேசப்படுகின்றன. அவன் யார், எந்த ஊரவன், உறவினர்கள் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அவன் அவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. கேட்டால் மழுப்பல் பதில் கிடைத்ததாகவும் சொன்னார்கள்.

இரு வருடங்களுக்கு முன்பு கிழக்குப் பல்கலைக் கழகப் பெண் விரிவுரையாளர் ஒருவருடன் பேசும் போது போராளிகளின் கவித்திறம் பற்றி அலசினோம். அப்போது துளசிராம் வட்டம் பற்றியும் நிலவன் பற்றியும் குறிப்பிட்டேன். ”தம்பி” என்று பெருங்குரலில் அழுதபடி அவர் மயக்கம் அடைந்தார்.

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்......
பாடல்...



Image Hosted by ImageShack.us

விதுரன் ஈழம் பிரஸ்.



இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us