சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா ஏற்படுத்திய திருப்பம்!
ராஜிவ் கொல்லப்படுவதற்கு சற்று முன், அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோ (கடந்த அத்தியாயம்), ஹிந்து நாளிதழில் வெளியானதுதான், இந்த கொலை வழக்கில் ஏற்பட்ட முதலாவது திருப்பம். சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கும் முன்பே, போட்டோ வெளியாகிவிட்டது.
ராஜிவ் காந்தியின் வருகைக்காக மூன்று பெண்கள் காத்து நிற்கும் அந்த போட்டோ வெளியானது, சி.பி.ஐ.யை உலுக்கித்தான் விட்டது. அந்த போட்டோவில் இருந்த மூன்று பெண்களும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தனர். இதனால், போட்டோவின் முக்கியத்துவம் உடனடியாக உணரப்பட்டது.
தமிழக காவல்துறையினரிடமிருந்த 10 போட்டோக்களின் நெகட்டிவ் பிலிம் ரோல்களையும், போட்டோ எடுக்க உபயோகிக்கப்பட்ட கேமராவையும் பெற்றுக் கொண்டது சி.பி.ஐ.
தமக்குக் கிடைத்த போட்டோக்களை சி.பி.ஐ. ஒவ்வொன்றாக ஆராயத் தொடங்கியது.
முதலாவது போட்டோவில், லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி ஆகியோருக்கு நடுவே, யார் என்று அடையாளம் காணப்படாத பெண், நின்றிருந்தார். மனித வெடிகுண்டு என்று ஹிந்து பத்திரிகையால் சந்தேகம் கிளப்பி விடப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சற்று தொலைவில், பைஜாமா-குர்தா அணிந்த மற்றொரு நபர் நின்றிருந்தார்.
போட்டோவில் இருந்த மூன்று பெண்களும் இறந்துவிட்டனர். ஆனால், அதில் நின்றிருந்த நான்காவது நபரான ஆண், சம்பவம் நடந்த இடத்தில் இறந்து போனவர்கள் பட்டியலில் இல்லை. காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் அவர் காணப்படவில்லை. யார் அந்த நபர்?
பிலிம் ரோலில் இருந்த முதலாவது போட்டோவே, இரு முக்கிய மர்மங்களை ஏற்படுத்தி விட்டது.
லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி ஆகியோருக்கு நடுவே நின்றிருந்த பெண், மற்றும் அதே போட்டோவில் இருந்த ஆண் ஆகிய இருவரின் அடையாளமும் தெரியவில்லை என்பது முதலாவது மர்மம். அந்த ஆண், கொல்லப்பட்ட மர்மப் பெண்ணுடன் தொடர்புடைய நபரா? இது, இரண்டாவது மர்மம்.
கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், இந்த முதலாவது போட்டோவை ஹோல்டில் வைத்துக்கொண்டு, மற்றைய ஒன்பது போட்டோக்களையும் ஆராய்ந்தது சி.பி.ஐ.
இரண்டாவது போட்டோவில், பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியில் இருந்தவர்கள் காட்சியளித்தனர்.
மூன்றாவது போட்டோவில் சினிமா இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், காங்கிரஸ் ஆதரவாளரும், காண்ட்ராக்டருமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த மூன்று போட்டோக்களும், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு முன் எடுக்கப்பட்டிருந்தன.
நான்காவது போட்டோவிலிருந்து எட்டாவது போட்டோ வரையில், ராஜிவ் காந்தி வருகை, பொதுமக்களைப் பார்த்து அவர் கையசைத்தது, காங்கிரஸ் தொண்டர்கள் பலர் ராஜிவ் காந்திக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்தது ஆகியவை காணப்பட்டன.
ஒன்பதாவது போட்டோவில், ராஜிவ் காந்தியிடம் கோகிலவாணி (கோகிலா) கவிதை வாசித்துக் காண்பிப்பது பதிவாகியிருந்தது. அது நடைபெற்ற ஓரிரு நிமிடங்களிலேயே குண்டு வெடித்திருந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.
அந்த வகையில், ராஜிவ் காந்தியை கடைசியாக உயிருடன் எடுக்கப்பட்ட போட்டோ, அந்த ஒன்பதாவது போட்டோதான்!
இந்த போட்டோவில், பச்சை, ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் பெண், ராஜிவ் காந்தியை நோக்கி நகர்ந்து வந்தது தெரிந்தது.
பத்தாவது போட்டோ, குண்டுவெடிப்பையே காட்டியது.
ராஜிவ் காந்தியும், மற்றையவர்களும் உயிரிழந்த அந்த விநாடி, ஹரிபாபுவின் கேமராவில் பத்தாவது போட்டோவாகப் பதிவாகியிருந்தது. அந்த விநாடியில், போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஹரிபாபுவும், அவரது கேமரா பதிவு செய்த அதே குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்.
எனவே, அதுதான் அந்த பிலிம்ரோலில் இருந்த இறுதிப் படம்.
ராஜிவ் கொலை சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன. அது நடைபெற்ற காலத்தில், தற்போது உள்ளதுபோல, எல்லோருடைய கைகளிலும் கைக்கடக்கமான கேமராக்கள் கிடையாது. இதனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிமிடத்துக்கு முன்னால், வரிசையாக எடுக்கப்பட்ட போட்டோக்கள், ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட இந்த 10 போட்டோக்களும்தான்!
பொதுக்கூட்டத்தை கவர் பண்ண வந்திருந்த பத்திரிகை கேமராமேன்கள், பிரதான மேடைக்கு அருகே, மற்றொரு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த மேடைக்கு கொடுக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பு, கூட்டத்தின் தள்ளுமுள்ளில் அறுந்து போகவே, அவர்கள் யாரும் போட்டோ எடுத்திருக்கவில்லை.
ஹரிபாபு எடுத்த போட்டோக்களைவிட, சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் இசைக்குழுவுடன் வந்த மற்றொரு போட்டோகிராபர் 6 போட்டோக்களை எடுத்திருந்தார். ஆனால், அந்த 6 போட்டோக்களில், ஒரேயொரு போட்டோ மத்திரமே குண்டு வெடிப்புக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தது. அதுவும், இசைக்குழுவின் பக்கமாக எடுக்கப்பட்டிருந்தது.
ஹரிபாபு எடுத்த போட்டோக்கள், ராஜிவ் காந்தியையும், அவருடன் கொல்லப்பட்டவர்களையும், குண்டு வெடித்த சரியான இடத்தையும் மையப்படுத்தி, ‘குண்டு வெடிக்கப் படுவதற்கு முன்பே’ எடுக்கப்பட்டிருந்தன. இதனாலேயே, இந்த போட்டோக்கள் புலனாய்வாளர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பின.
இந்த போட்டோக்களில் இருப்பவர்கள் பற்றி தெரிய வேண்டுமானால், குண்டு வெடித்த அந்த நிமிடத்தில், ஸ்பாட்டில் இருந்த மற்றையவர்களிடம் விசாரிக்க வேண்டும். அந்த இடத்தில் மிக அருகில் நின்றிருந்தவர்களில் குண்டுவெடிப்பில் இறந்து போகாதவர்கள், நிச்சயம் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருப்பார்கள் என்ற கோணத்தில் இதை அணுகியது, கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு.
(புலனாய்வு நடைபெற்று 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், கார்த்திகேயன் கடந்தவாரம் தெரிவித்துள்ள முக்கிய கருத்து)
(“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” இவ்வாறு ராஜிவ் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகித்த டி.ஆர்.கார்த்திகேயன் கூறியிருக்கிறார்.
இவரது கூற்று, இந்த விவகாரம் பற்றி வெளியே உள்ள எதிரான கருத்தின் வீரியத்தை, குறைக்கும் வகையில் உள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு முதல், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல தரப்பினரும் கோரிவரும் நிலையில், இந்த விவகாரம் பற்றிய இரண்டாவது கருத்து ஒன்றும் சமீப காலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதித்தவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்ட வேண்டியது அவசியமில்லை என்றும் உள்ளது இந்த இரண்டாவது கருத்து. இதே கருத்துடன் பிரபல நாளிதழ் தினமலரில் வெளியான ஒரு கட்டுரை பலத்த எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது.
அப் பத்திரிகையின் பிரதிகளை நீதிமன்றத்தின் முன் எரிக்கும் போராட்டம் ஒன்றும் கோபமடைந்த வக்கீல்களால் நடாத்தப்பட்டது.
இப்படியான சூழ்நிலையில்தான் இந்த வழக்குப் பற்றி மற்றைய யாரையும்விட மிக நன்றாக அறிந்த டி.ஆர்.கார்த்திகேயன், “இந்த மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.
தற்போது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூவரையும் கைது செய்ததே, டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வுக் குழுதான். ராஜிவ் கொலை மர்மத்தைக் கண்டு பிடித்ததாக மத்திய அரசினால் கூறப்படுபவர்களும், இதே குழுதான்.
அந்த வகையில், ராஜிவ் கொலை வழக்கில் நிஜமான குற்றவாளிகள் யார், இந்த மூவருக்கும் ராஜிவ் கொல்லப்பட்டதில் உள்ள சம்மந்தம் எவ்வளவு, இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்த ஆதாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டன, அந்த ஆதாரங்கள் எப்படிக் கிடைத்தன என்ற விபரங்கள் அனைத்தும் மிக நன்றாகத் தெரிந்த நபரும், டி.ஆர்.கார்த்திகேயன்தான்!
நிருபர்களுக்கு கருத்து தெரிவித்த டி.ஆர்.கார்த்திகேயன், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. நான் எனது கடமையை செய்தேன். தற்போது அரசாங்கம் தனது கடமையை செய்யட்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.
1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது, ராஜிவ் காந்திதான் என்பது உறுதிப் படுத்தப்பட்டு 12 மணி நேரமாகியும், கொலையை புலனாய்வு செய்யப்போவது யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. யாருடைய தலைமையில் புலனாய்வுக் குழுவை அமைப்பது என்ற குழப்பமே தாமதத்துக்கான காரணம்.
அதன்பின் இந்த விசாரணையில் டி.ஆர்.கார்த்திகேயன் எப்படிக் கொண்டுவரப்பட்டார் என்பதைத் தெரிந்து கொண்டால்தான், தற்போது அவரது கூற்றுக்கு வேல்யூ அதிகம் இருப்பதை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். கடந்த வாரம் வெளியிட்ட ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ தொடரின் 7ம் அத்தியாயத்தின் பெயரே, ‘கார்த்திகேயன் காட்சிக்குள் வருகிறார்’ என்பதுதான்.
அதை ஒருமுறை படித்துப் பாருங்கள். டி.ஆர்.கார்த்திகேயன் யார் என்பது புரியும்!)
சிறப்புப் புலனாய்வுக்குழுவைச் சேர்ந்த ஒரு அணியினருடன், கார்த்திகேயனும் சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குதான், குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்த அதிஷ்டம், அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தவர்களில் ஒருவராக இருந்தார், அனுசுயா.
ராஜிவ் காந்தியின் பொதுக்கூட்டத்துக்காக பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு, ஸ்பாட்டில் நின்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா பற்றி, கடந்த அத்தியாயங்களில் எழுதியிருந்தோம். அதில், ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்:
….கோகிலாவுக்கு பின்னால் நின்றிருந்த கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், ராஜிவ்காந்தியை நோக்கி அடியெடுத்து வைத்தார். வரிசையில் நிற்காமல், பின்னாடி நின்றிருந்த பெண் ஒருவர் மாலையுடன் முன்னே வருவதைக் கவனித்து விட்டார் சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா. உடனே வேகமாகச் செயற்பட்ட சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க முயன்றார்.
சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா செய்ய முயன்றதைச் செய்திருந்தால், அன்று கதையே மாறியிருக்கும். ஆனால், விதி வேறு விதமாக இருந்தது. கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க வேண்டாம் என ராஜிவ்காந்தி சைகை காட்டினார்.
ஒரு கணம் தாமதித்த அனுசுயா, ராஜிவ் காந்தியின் உத்தரவை ஏற்று, அந்தப் பெண்ணைத் தடுக்காமல் இரண்டு அடிகள் பின்னால் எடுத்து வைத்து, நின்று கொண்டார்.
அடுத்த நிமிடமே, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், மனித வெடிகுண்டாக மாறி வெடித்துச் சிதறினார்!
நாம் முன்பு குறிப்பிட்ட அதே அனுசுயாதான் இவர். ராஜிவ் காந்தியின் உத்தரவை ஏற்று, மனித வெடிகுண்டாக வந்த பெண்ணில் இருந்து விலகி இரண்டு அடிகள் பின்னால் எடுத்து வைத்து, நின்று கொண்ட காரணத்தாலேயே உயிர் தப்பியிருந்தார் சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா.
ஆனால், குண்டுவெடிப்பில் படுகாயமடைந்திருந்தார்.
சென்னை, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த அவரது முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. வலது கையில் 3 விரல்களை இழந்துவிட்ட நிலையில் காணப்பட்டார் அவர்.
அப்படியிருந்தும் அவரால், நடந்த சம்பவங்களைத் தெளிவாகவும், கோர்வையாகவும் கூறக்கூடியதாக இருந்தது. அது போலிஸ் பயிற்சியில் பெற்ற அவரது உஷார் தன்மை காரணமாக இருக்கலாம்.
ஹரிபாபு எடுத்த முதல் போட்டோவை அவரிடம் காட்டினார் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன். அந்த போட்டோவில் இருப்பவர்கள் பற்றி அனுசுயாவுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டார்.
சம்பவ இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்குச் சற்று முன்னர்தான், பைஜாமா-குர்தா அணிந்த நபரும், சல்வார் கமீஸ் பெண்ணும், இளம் போட்டோகிராபரும் சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில் ஒன்றாக நின்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததாக அனுசுயா நினைவு கூர்ந்தார்.
இதில் சந்தேகம் உள்ளதா என்று, அவரிடம் மீண்டும் மீண்டும் அதுபற்றிக் கேட்கப்பட்டது. அப்போதும் அவர் தான் கூறிய தகவலை உறுதிப்படுத்தினார்.
புலனாய்வின் முக்கியக் கட்டத்தில், அனுசுயா தெரிவித்த இந்த தகவல்தான், அதுவரை குழப்பமாக, வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்த புலனாய்வை, ஒரு திசையில் திருப்பியது.
அனுசுயா தெரிவித்த தகவலில் இருந்து, மனித வெடிகுண்டாக வந்து வெடித்த சல்வார் கமீஸ் பெண்ணும், பைஜாமா-குர்தா அணிந்த நபரும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டது புலனாய்வுக் குழு. அவர்களால் அழைத்து வரப்பட்ட நபர்தான், போட்டோகிராபர் ஹரிபாபு என்பதும் புரிந்தது.
இதுதான் ராஜிவ் கொலை வழக்கில் கிடைத்த முதலாவது பிரேக்கிங் பாயின்ட்.
இதற்கிடையே, ஹரிபாபு எடுத்த பத்து போட்டோக்களில் முதலாவது போட்டோவை ஹிந்து பத்திரிகை வெளியிட்டிருந்தது என்று கூறினோமல்லவா? அந்த போட்டோவை ஹிந்து பத்திரிகையில் பார்த்த சென்னை பத்திரிகையாளர் ஒருவர், அதிர்ந்து போனார். காரணம், அவருக்கு அது தொடர்பாக மற்றொரு முக்கிய விஷயம் தெரிந்திருந்தது.
உடனே, புலனாய்வுக் குழுவினரைத் தொடர்பு கொண்டார் அந்த பத்திரிகையாளர். அவர் கூறிய தகவல், கேஸின் அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தியது!
(10ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)
நன்றி.
விறுவிறுப்பு.கொம்